Published:Updated:

லஞ்சத்துக்கு எதிராக தேனி தியாகி மகன்!

லஞ்சத்துக்கு எதிராக தேனி தியாகி மகன்!
பிரீமியம் ஸ்டோரி
News
லஞ்சத்துக்கு எதிராக தேனி தியாகி மகன்!

கடுகடு கலெக்டர்லஞ்சம்

லஞ்சத்துக்கு எதிராக தேனி தியாகி மகன்!

ஞ்சம் கொடுக்க மறுத்த ஒருவரின் நேர்மைப் பயணத்தில் எத்தகைய இடையூறுகளும் வரும் என்பதற்கு தேனி, கொடுவிலார்பட்டியைச் சேர்ந்த சுதந்திரப்போராட்டத் தியாகி இராமசாமி நாயுடுவின் மகன் ரவீந்திரனின் அனுபவமே சாட்சியாக இருக்கிறது.  கடமலைக்குண்டு நரியூத்தில் அரசு நடுநிலைப்பள்ளியில் மூத்த ஆசிரியராக பணியாற்றும் ரவீந்திரன் மற்றும் அவரது சகோதரருக்கு அவரது தந்தை, நிலத்தை உயில் எழுதி வைத்துள்ளார். தன் பெயரில் உள்ள உயிலை பட்டாவாக மாற்றுவதற்கு ரவீந்திரன் விண்ணப்பித்தார். அதன்பிறகு என்ன நடந்தது என்று அவரிடம் கேட்டோம்.

“பட்டா மாறுதல் கேட்டு தேனி தாசில்தாருக்கு பதிவுத்தபாலில் பிப்ரவரி 2015-ல் மனுக்கொடுத்தேன். முறைப்படி விசாரித்து பட்டா மாற்றித் தருவதாக நோட்டீஸ் அனுப்பினார்கள். அதன்படி விசாரனை முடிந்ததும் தாசில்தாரிடம் கேட்டபோது, பட்டா செக்‌ஷனில் இருக்கும் கிளார்க் ஜெய் ஜவான் என்பவரிடம் வாங்கிக்கொள்ளுங்கள் என்றார். ஜெய் ஜவான் இருக்கையில் சசி என்பவர் அமர்ந்திருந்தார். ‘உங்களுக்கு பட்டா கொடுக்கக் கூடாது என்று புகார் வந்துள்ளது. அதை மீறி கொடுக்க வேண்டும் என்றால் ஐம்பதாயிரம் ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும்’ என்றார். அவர் ஜெய்ஜவானின் புரோக்கர் என்பது தெரிந்தது. ஒரு அரசு அலுவலரின் சீட்டில் உட்கார்ந்து கொண்டு இன்னொருவர் எப்படி லஞ்சம் கேட்கமுடியும்? என்று எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. உடனடியாக தாசில்தாரிடம் முறையிட்டேன். அவர், ஜெய் ஜவானை எச்சரித்து, புரோக்கர் சசியை வெளியே அனுப்பினார்.

இந்தக் காரணத்தால், எனக்கு பட்டா கொடுக்க கூடாது என்று ஃபைலில் ஜெய்ஜவான் எழுதி விட்டார். தாசில்தாரிடம் மீண்டும் முறையிட்டேன். ஆவணங்கள் அடிப்படையில்  கொடுக்கலாம் என்று ஆணையாகப் பிறப்பித்து மறுபடியும் ஜெய் ஜவானுக்கு அனுப்பினார். அடுத்தவாரமே தாசில் தார் அங்கிருந்து பணி மாறுதல் செய்யப்பட்டார். என்னிடம் பேசிய ஜெய் ஜவான், ‘இப்பொழுது தாசில்தார் நிலையைப் பார்த்தாயா? நீ எப்படி பட்டா வாங்குகிறாய் என்று பார்ப்போம்’ என்றார்.

லஞ்சத்துக்கு எதிராக தேனி தியாகி மகன்!

ஜெய் ஜவான் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் வெங்கடாசலத்திடம் மனுக் கொடுத்தேன். ஆர்.டி.ஓ விசாரணை செய்து ரிப்போர்ட் அனுப்ப உத்தரவு போட்டார். விசாரனை ஏதும் நடக்கவில்லை. எனவே, சென்னையில் உள்ள வருவாய் நிர்வாக ஆணையருக்குப் புகார் அனுப்பினேன். ஜெய் ஜவானை பணி மாறுதல் செய்தார்கள். ஆனால், ஒரே மாதத்தில் மீண்டும் ஜெய் ஜவான் வந்துவிட்டார். ‘எனக்கும் கலெக்டருக்கும் ஆயிரம் லிங்க் இருக்கு. அமைச்சர் வரை எனக்குத் தொடர்பு இருக்கு. நீ இந்த ஜென்மத்தில் பட்டா வாங்க முடியாது’ என்று ஜெய் ஜவான் கூறினார்.

கடந்த மாதம் 18-ம் தேதியில் தேனி ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் வாரிசுகளின் குறைதீர்ப்பு முகாமில் கலெக்டர் வெங்கடாசலத்திடம் மனுக் கொடுத்தேன். ‘பட்டா மாறுதலுக்கு லஞ்சம் கேட்குறாங்க. புகார் கொடுத்த என்மீதுதான் நடவடிக்கை எடுக்குறாங்க. லஞ்சம் வாங்குபவர் உங்க பெயரைப் பயன்படுத்தி வருகிறார்’ என்றேன். நான் கொடுத்த மனுவை என் முகத்தில் தூக்கி எறிந்து, ‘ஆமாய்யா அப்படித்தான் செய்வேன். நீ என்ன புடுங்க முடியுமோ அதப் புடுங்கு’ என்றார் கோபமாக. அடுத்த நாள் இது செய்தியாக வந்ததோடு, வாட்ஸ் அப்பில் வைரலாக பரவியது.

லஞ்சத்துக்கு எதிராக தேனி தியாகி மகன்!

இதனால் ஆத்திரமடைந்த கலெக்டர் வெங்கடாசலம், ஜெய் ஜவானை பணி செய்ய விடாமல் நான் தடுத்ததாகவும். கத்தியைக் காட்டி மிரட்டி, கொலை செய்ய முயன்றதாகவும் என் மீது வழக்குப்போடச் சொல்லியிருக்கிறார். என் வீட்டுக்கு போலீசார் வந்தனர். நான் எஸ்கேப் ஆகி மதுரை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றேன். கலெக்டர் உத்தரவின் பேரில், என்னை பள்ளியில் இருந்து சஸ்பெண்ட் செய்தனர். சஸ்பெண்டை ரத்து செய்யச்சொல்லி, மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டேன். ஜெய் ஜவான் லஞ்சம் கேட்ட வீடியோ, மிரட்டிய ஆடியோ, கலெக்டர் என்னிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட வீடியோ, ஆடியோ என்று அனைத்தையும் இணைத்தேன். ஆகஸ்ட் 4-ம் தேதி மனுவை விசாரித்து நீதிபதி டி.ராஜா, ‘கலெக்டர், அரசின் பிரதிநிதி. ஏன் இவ்வளவு மோசமாக நடந்து கொள்கிறார். மோசமான ஆட்சியர்களால் நாடு மோசமான நிலையில் இருக்கிறது’ என்று வருத்தப் பட்டவர், சஸ்பெண்ட்டை ரத்து செய்தார். இன்னமும் எனக்கு மிரட்டல் வருகிறது. கடந்த ஒரு மாத காலமாக நானும் என் குடும்பத்தாரும் நிம்மதி இன்றி தவிக்கிறோம்” என்று வேதனையோடு முடித்தார்.

இது குறித்து தேனி மாவட்ட கலெக்டர் வெங்கடாசலத்திடம் கேட்டபோது, “அவர் குடும்பச் சொத்தை உடன் பிறந்த பெண்களுக்குத் தராமல் அபகறிக்கப் பார்க்கிறார்.அதற்கு மாவட்ட நிர்வாகம் எப்படி துணைபோகும்? நீதிமன்றம் சென்று சொத்துப்பிரச்சனையை முடிக்கச்சொல்லி சொல்லியாச்சு. யாரும் அவரிடம் லஞ்சம் கேட்கவில்லை. நான் கல்வி அதிகாரியை தூண்டிவிட்டு  நடவடிக்கை எடுக்கச்  சொல்லவில்லை.அவர் மீது துறை ரீதியாகத்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. நான் தலையீடு செய்யவில்லை. அவர் என்னிடம் மோதல் போக்கை கடைபிடிக்கிறார். நான் இனிதான்  அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று இருக்கிறேன்” என்றார்.

-சண்.சரவணக்குமார், படங்கள்; வீ. சக்தி அருணகிரி, வி.சதிஷ்குமார்.