
இணைந்த கைகள்... உயர்ந்த கரைகள்!

இயற்கையைச் சிதைத்தால் அதன் எதிர்விளைவு என்னவாக இருக்கும் என்பதைத்தான் கடும்வறட்சி, ஆழிப்பேரலை, பெருமழை, புயல் என்பது உள்ளிட்ட பேரழிவுகளின் வாயிலாக இயற்கை நமக்குச் சுட்டிக்காட்டிக் கொண்டேயிருக்கிறது. இப்படித்தான் கடந்த ஆண்டின் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், தூத்துக்குடி எனக் கடலோர மாவட்டங்களைப் புரட்டிப்போட்டது பெருமழை. வரலாறு காணாத பெருமழைதான் காரணம் என்று சொல்லப்பட்டாலும்... காலங்காலமாக மழை நீரை ஏந்திப்பிடித்துத் தக்கவைத்துக் கொண்டிருந்த நீர்நிலைகளை ஆக்கிரமித்ததும் அவற்றைப் பராமரிக்காமல் விட்டதும்தான் முக்கியக் காரணங்கள் என்பதை நாம் மறுக்க முடியாது.
அந்த மழைநாட்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளில் உடனடியாகப் பங்கெடுத்துப் பல்வேறு பணிகளை ஆற்றிய விகடன் குழுமம்... இப்பாதிப்புகள் இனி வருங்காலங்களில் நிகழக் கூடாது என தொலைநோக்குடன் யோசித்தபோது உருவானதுதான், ‘நிலம்... நீர்... நீதி!’ எனும் திட்டம். விகடன் குழுமத்தின் அறப்பணிகளை மேற்கொண்டுவரும் வாசன் சாரிட்டபிள் டிரஸ்ட் மூலம் இப்பணி முன்னெடுக்கப்பட்டு, ஒரு கோடி ரூபாய் விகடன் குழுமம் மூலம் ஒதுக்கப்பட்டது. எப்போதும் இப்படிப்பட்ட பணிகளில் விகடனுடன் கைகோக்கத் தயாராக இருக்கும் வாசகர்களும் இணைந்துகொள்ள... மொத்த நிதி இரண்டே கால் கோடியைத் தாண்டியது.

முதற்கட்டமாக நீரியல் நிபுணர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அடங்கிய ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டு, சென்னை அருகேயுள்ள வண்டலூர் தொடங்கி, வாலாஜாபாத் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வரையிலான பகுதிகளில் உள்ள ஏரிகள், ஆறுகள் மற்றும் கால்வாய்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதையடுத்து, ‘பெரும்பாலான நீர்நிலைகள் பராமரிப்பின்றியே கிடக்கின்றன. இவற்றில் சிலவற்றை, நிலம்... நீர்... நீதி திட்டத்தின் மூலமாகச் சீரமைப்போம். இதை ஒரு முன்மாதிரி திட்டமாக நாம் செயல்படுத்தினால், அரசாங்கம் மற்றும் பிற அமைப்புகள் தமிழகம் முழுக்க உள்ள நீர்நிலைகளைச் சீரமைக்க வாய்ப்புண்டு. அப்படிச் சீரமைக்கப்பட்டால், அடுத்தடுத்த பருவமழைக் காலங்களில் வெள்ள ஆபத்தும் இல்லாமலிருப்பதோடு, பாசனத்துக்கும், குடிநீருக்கும் உள்ள பிரச்னை தீரும்’ என்று முடிவெடுக்கப்பட்டது.
கரைகள் உயர்ந்த கரசங்கால் குட்டை!

இதன்படி, ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றுள்ள அமைப்புகளோடு கைகோத்து, சென்னை, வண்டலூர், ஒரகடம் பகுதிகளில் சில குளங்கள் மற்றும் ஏரிகளின் சீரமைப்புப் பணிகளைக் கையில் எடுத்துள்ளோம். இந்த அமைப்புகளில் ஒன்றான ‘இ.எஃப்.ஐ’ அமைப்பின் மேற்பார்வையில் மண்ணிவாக்கம் அருகேயுள்ள கரசங்கால் கிராமத்தில் 20 ஆண்டுகளாகப் பராமரிப்பற்ற நிலையில் இருந்துவந்த ‘கருமக்குட்டை’ 3 லட்ச ரூபாய் செலவில், தூர்வாரி கரைகளை உயர்த்திப் பலப்படுத்தும் பணி முழுமையாக முடிந்துள்ளது.

அடுத்தகட்டமாக குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம், சாலமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட நரியம்பாக்கம் ஏரி (71 ஏக்கர்), சிறுமாத்தூர் ஏரி (140 ஏக்கர்) மற்றும் அம்மன் குளம் ஆகிய நீர்நிலைகள் சீரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு உள்ளன. நரியம்பாக்கத்தில் சுமார் 60 ஏக்கர் நிலத்தில் விவசாயம் நடக்கிறது. கடந்த 40 ஆண்டுகளாகப் போதிய பராமரிப்பின்றி இருந்து வந்த நரியம்பாக்கம் ஏரியின் கரை, கடந்தாண்டு பெய்த கனமழையில் உடைந்து, தண்ணீர் வீணாகியது. அடுத்த மழைக்கு ‘தண்ணீர் தேங்குவது கடினம்’ என்கிற சூழலில், ஜூலை 11-ம் தேதி முதல், தூர்வாரி சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அடையாறு ஆற்றின் உபநிலவடிப் பகுதியாக இருக்கும் இந்த ஏரியை ஆக்கிரமிப்பு செய்யாதவாறு, சாலை ஓரத்தில் 500 மீட்டர் நீளத்துக்குத் தற்போது கரை எழுப்பப்பட்டு வருகிறது. பழுதடைந்த மதகுகளைச் சீரமைக்கவும், ஏரிக்குள் தண்ணீர் தேங்குவதற்கு வசதியாகக் குழிகள் எடுக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. கரையைப் பலப்படுத்தி மரங்களை நடும் பணியும் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

அடுத்து, தமிழகப் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் சாலமங்கலம் ஏரியைச் சீரமைக்கும் பணியைக் கையில் எடுத்துள்ளோம். இதுகுறித்து கடந்த பிப்ரவரி மாதமே தமிழக பொதுப்பணித் துறை செயலாளருக்குக் கடிதம் அளித்திருந்தோம். தேர்தல் காரணங்களால் அது தள்ளிப்போனது. புதிய அரசு பதவியேற்றவுடன் தமிழக முதல்வருக்கு ஏரிகள் சீரமைப்புக் குறித்துக் கடிதம் எழுதியிருந்தோம். இதையடுத்து முதல்வரின் வழிகாட்டுதலுக்கு இணங்க, பொதுப்பணித் துறையினரின் ஆலோசனைப்படி 103 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள சாலமங்கலம் ஏரியைத் தேர்ந்தெடுத்துள்ளோம். தூர்வாரும் பணிகள் விரைவில் தொடங்கிவிடும்.

சீரமைக்கப்படும் ஏரிகளின் கரைகளைப் பாதுகாக்கும் பொருட்டும்; பறவைகள், மனிதர்கள் பயன்பெறும் வகையிலும் பாரம்பர்ய மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. இதற்கிடையில் சாலமங்கலம், நரியம்பாக்கம் ஏரி மூலம் பாசனம் பெறும் விவசாயிகள், பொதுமக்கள் மத்தியில் குழுக்களை உருவாக்கி அந்தந்த ஏரிகளை அவர்களே தொடர்ந்து பாதுகாக்கும் வகையிலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
‘நிலம்... நீர்... நீதி!’ திட்டத்தின் கீழ் நடைபெற்றுவரும் நீர்நிலைகள் சீரமைப்புப் பணிகள் குறித்தும், அவற்றின் முன்னேற்றம் குறித்தும் அவ்வப்போது உங்களுடன் விகடன் குழும இதழ்கள் மூலமாகவும், இணையதளத்தின் மூலமாகவும் பகிர்ந்துகொள்வோம்.
- த.ஜெயகுமார், படங்கள்: தே.அசோக்குமார்
ஆக்கிரமிப்புக்கு எதிரான ஆயுதம்!

நிலம்... நீர்... நீதி! மற்றும் தஞ்சை மாவட்ட தகவல் உரிமை சட்ட ஆர்வலர்கள் இயக்கத்தோடு சேர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள குளம், குட்டை, ஊருணி, தாங்கல், ஏரி, கண்மாய் ஆகிய நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக அரசுக்கு அனுப்ப வேண்டிய விண்ணப்பப் படிவத்தை வழங்கி வருகிறோம். இதைப் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட பகுதி வட்டாட்சியருக்கு பொதுமக்களே வழங்க வேண்டும். நெய்வேலி புத்தகக் காட்சி, கோவை கொடீசியா வேளாண் கண்காட்சி, அரியலூர் புத்தகக் காட்சி, விழுப்புரம், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் நடைபெற்ற குறைதீர்ப்பு முகாம் என்று பல இடங்களில் இதுவரை 5,500 விண்ணப்பப் படிவங்கள் பொதுமக்களிடம் நேரிடையாக வழங்கப்பட்டுள்ளன. விகடன் இணையப் பக்கத்திலிருந்து 1,142 படிவங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 50-க்கும் மேற்பட்டவர்கள் மனுக்களை அரசாங்கத்துக்கு அனுப்பிவிட்டு, நகலை நமக்கு அனுப்பியுள்ளனர். தஞ்சை மாவட்டத் தகவல் உரிமைச் சட்ட ஆர்வலர் இயக்கத்துக்கு தொடர்ந்து தொலைபேசியில் விசாரித்த வண்ணமும் உள்ளனர்.
விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்ய: https://www.vikatan.com/other/nilam-neer-neethi/