Published:Updated:

வீசப்படும் கல்... வெடிக்கும் பெல்லட்...

வீசப்படும் கல்... வெடிக்கும் பெல்லட்...
பிரீமியம் ஸ்டோரி
News
வீசப்படும் கல்... வெடிக்கும் பெல்லட்...

என்ன நடக்கிறது காஷ்மீரில்?வன்முறை

வீசப்படும் கல்... வெடிக்கும் பெல்லட்...

"காஷ்மீரில் திரும்பிய பக்கம் எல்லாம் ராணுவத்தினரின் தலைகள்தான் தெரிகின்றன. பிரச்னைக்குரிய இடங்களில் மட்டுமல்லாமல், அமைதி நிலவும் இடங்களிலும் ராணுவப்படைகள் உள்ளன. அவர்களைப் பற்றி அறிந்து கொள்வதற்காக வந்துள்ளோம் எனத் தெரிந்ததும் எங்களிடம் அமைதியாகவும் அன்பாகவும் அந்த மக்கள் பேசினார்கள். ‘நீங்கள் இந்தியாவில் இருந்து வருகிறீர்களா?’ என்று அவர்கள் கேட்டதும் நாங்கள் அதிர்ந்துபோனோம்” என்கிறார் சமூகப்பணி மாணவியான மீனா.

‘மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோஷியல் வொர்க்’ கல்லூரியில் சமூகப் பணித் துறையில் இரண்டாம் ஆண்டு படித்துவரும் மீனா, ‘இ்ன்டென்ஷிப்’க்காக காஷ்மீர் சென்றார். கடந்த மே முதல் ஜூன் வரை ஒரு மாத காலம் அங்கு தங்கியிருந்து பலதரப்பினரிடமும் உரையாடி ஆவணம் ஒன்றைத் தயார் செய்துள்ளார். காஷ்மீரில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்து மீனா திரட்டிய ஆதாரங்கள் அடிப்படையில், காஷ்மீரைச் சேர்ந்த மனித உரிமைகள் அமைப்பு ஒன்றின் (Human rights law on network) வழக்கறிஞர்கள் மூலமாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரத் திட்டம் உள்ளதாம். மீனாவை சந்தித்தோம்.

‘‘காஷ்மீர் மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது?”

வீசப்படும் கல்... வெடிக்கும் பெல்லட்...

“நம் மாநிலத்தில் அரசாங்கத்தை எதிர்த்துப் போராடுபவர்களை தீவிரவாதிகள், கிளர்ச்சியாளர்கள், போராளிகள் என குறிப்பிடுகிறோம். ஆனால் அங்கு, அரசுக்கு எதிராகப் போராடுபவர்களை ‘மிலிட்டைன்ஸ்’ என்கிறார்கள். மிலிட்டைன்ஸுக்கும் ராணுவத்துக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் நடக்கின்றன. துப்பாக்கி, வெடிகுண்டுச் சத்தங்களில் அந்த மக்கள் வாழப் பழகிக்கொண்டார்கள். காஷ்மீர் மக்களில் ஒவ்வொருவருக்கும் நம்முடைய ராணுவம் மீது கடும் கோபமும், உச்சக்கட்ட வெறுப்பும் இருப்பதைப் பார்க்க முடிந்தது. ஒவ்வொருவருக்கும் கசப்பான, துயரமான அனுபவங்களை ராணுவம் தந்துள்ளது. அங்கு நடக்கும் மனித உரிமை மீறல்கள் பற்றிய உண்மைகள் வெளியில் சொல்லப்படுவது இல்லை. அதை எல்லாம் இந்திய மீடியாக்கள் உங்களுக்குக் காட்டுவதில்லை என்பது எங்களுக்குத் தெரியும் என்று அந்த மக்கள் விரக்தியாகச் சொல்கிறார்கள்.”

‘‘அந்த மக்களின் கோரிக்கை என்ன?”

வீசப்படும் கல்... வெடிக்கும் பெல்லட்...

‘‘ ‘நாங்கள் தனி இனம், எங்களுக்கு தனி நாடு’ என்று அவர்கள் நினைக்கிறார்கள். ‘பிரிட்டீஷ் அரசிடம் இருந்து இந்தியா சுதந்திரம் வாங்க 200 வருடங்களுக்கு மேல் ஆனது. இந்தியாவிடம் இருந்து எங்களுக்கு எப்போது விடுதலை கிடைக்கும்? இன்று இல்லை என்றாலும்.. எங்களின் எதிர்கால தலைமுறையினர் விடுதலைக் காற்றைச் சுவாசிப்பார்கள்’ என்றும் சொல்கிறார்கள். அந்த மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் பொறுப்பு மத்திய அரசுக்கும் இந்திய அரசியல் தலைவர்களுக்கும் இருக்கிறது!”

‘‘பெல்லட் துப்பாக்கிச் சூடு விவாகரம் பற்றிய விவரங்களைச் சேகரித்தீர்களா?”

வீசப்படும் கல்... வெடிக்கும் பெல்லட்...

‘‘அங்கு நடக்கும் மனித உரிமை மீறல்களில் முக்கியமானது பெல்லட் துப்பாக்கிச் சூடு. பெல்லட் துப்பாக்கியால் ஒருவரைச் சுட்டால், ஒரே நேரத்தில் 500-600 சிறிய வகைக் குண்டுகள் உடலைத் துளைக்கும். அந்தக் குண்டுகள், எலும்புகளையும்கூட ஊடுருவிச் செல்லும். பெல்லட் குண்டுகளால் ஏராளமான பெண்களும், குழந்தைகளும் கண்பார்வையை இழந்திருக்கிறார்கள். பலர் மரணம் அடைந்திருக்கிறார்கள். பெல்லட் துப்பாக்கிகள் பயன்படுத்தப்படுவதற்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். ஆனால் அரசு, இதைப் பற்றி கருத்துச் சொல்ல மறுக்கிறது. தங்கள் கோரிக்கைகளுக்காக வீதியில் இறங்கிப் போராடுபவர்கள் மீது ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான அவசியமே இல்லை. தேவைப்பட்டால், பெல்லட் துப்பாக்கி போன்ற பயங்கர ஆயுதங்களுக்குப் பதிலாக கண்ணீர் புகைக்குண்டு, தண்ணீர் பீய்ச்சி அடித்தல் போன்றவற்றைப் பயன்படுத்தலாமே. அதுபோன்ற அணுகு முறைகள்தான், அந்த மக்களிடம் மன மாற்றத்தை ஏற்படுத்தும்.”

‘‘கல்வீச்சுகள் நடப்பதால்தான், துப்பாக்கிச்சூடுகளை நடத்த வேண்டி உள்ளது என்று சொல்லப் படுகிறதே?”

வீசப்படும் கல்... வெடிக்கும் பெல்லட்...

‘‘ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மதிய வேளையில் மத்திய அரசுக்கு தங்களின் எதிர்ப்பைக் காட்டும்விதமாக, ஒரு சுவர் மீது கற்களை எரிகிறார்கள் மக்கள். அப்போது எல்லாம், பெல்லட் துப்பாக்கிகள் மூலம் ராணுவத்தினர் சுடுகிறார்கள். இளைஞர்கள் தொடர்ந்து காணாமல் போய்க் கொண்டே இருக்கிறார்கள். அதாவது, காணாமல் ஆக்கப்படுகிறார்கள். 1990-ம் ஆண்டு முதல் இப்போது வரை 12 ஆயிரம் ஆண்கள் காணாமல் போய் இருக்கிறார்கள் என்று  ஒரு புள்ளிவிவரம் உள்ளது. இந்தப் பிரச்னையை ஆராய்வதற்காகவே, ஏ.பி.டி.பி (Association of parents of disappeared people) என்ற அமைப்பு அங்கு இயங்கி வருகிறது. அந்த அமைப்பின் நிறுவனராக இருப்பவர், பர்வீனா. அவருடைய இரண்டு குழந்தைகள் காணாமல் போய்விட்டார்கள். அப்போதுதான், பர்வீனா ஏ.பி.டி.பி என்ற அமைப்பை ஆரம்பித்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு, குனன், புஷ்பூரா என்ற இரு கிராமங்களில் இருந்த அனைத்துப் பெண்களையும் ராணுவனத்தினர் பாலியல் வல்லுறவு கொண்ட அராஜகங்களும் நடந்தன. இப்போது, நிறைய பிணங்கள் ஊருக்குள் புதைக்கப்படுகின்றன. அவை யாருடைய உடல்கள் என்பது பற்றிய விவரங்கள், மக்களுக்குச் சொல்லப்படுவதே இல்லை. சமீபத்தில், புர்ஹான் வானி என்பவரை ராணுவம் சுட்டுக்கொன்றது. அவருடைய இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.”

‘‘ராணுவத்தின் பதில் என்ன?”

‘‘ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி வோங் டூவிடம் பேசியபோது, அவர் சொன்னார். ‘அதிகாரத்தை, விடுதலையை இந்த மக்கள் பெறவேண்டும் என்றால், போராட்டங்களை நிறுத்திவிட்டு, படித்து குடிமைப்பணிகளுக்கான தேர்வுகளை எழுதி வெற்றி பெற்று அதிகாரிகளாக வர வேண்டும். அப்போதுதான், மக்களின் நிலையை மாற்ற முடியும்’ என்றார். இந்திய அரசாங்கம் அங்கிருக்கும் ராணுவத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பதே ஒட்டுமொத்த காஷ்மீர் மக்களின் கோரிக்கை.”

ஒரு பக்கம் தீவிரவாதிகளை உள்ளே இறக்கிவிடும் பாகிஸ்தான்... இன்னொரு பக்கம், ஒட்டுமொத்த காஷ்மீர் மக்களையே தீவிரவாதிகளாகப் பார்க்கும் இந்திய அரசு, அந்த மக்களின் வாக்குகளுக்காக உணர்ச்சியைத் தூண்டிவிடும் காஷ்மீர் அரசியல்வாதிகள்... இவர்கள் மூவருக்கும் இடையே அந்த மக்கள் சிக்கிக்கொண்டு பெரும்
துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள். காஷ்மீரிகளைக் காப்பாற்றுவது என்பது, இந்தியாவைக் காப்பாற்றுவது. இந்தியா என்பது வெறும் நிலம் மட்டுமல்ல... மக்களும்தான்.

- கே.அபிநயா