இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு என்ன எதிர்பார்ப்பு இருக்குமோ அதைவிட அதிக எதிர்பார்ப்பின் உச்சத்தில் உலகமே இருந்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் இந்த இரு நபர்களின் சந்திப்பை உலகமே அதீத கவனத்துடன் கவனித்து வந்தது. உலகின் ட்ரம்ப்-கிம் நாள் இது என்று சமூக வலைதளங்கள் ஆர்ப்பரிக்கத் துவங்கிவிட்டன.
இன்றைய காலை சிங்கப்பூருக்கு பலத்த பாதுகாப்பு நிறைந்ததாகவும் உலகத்தின் கண்கள் முழுவதும் சிங்கப்பூரை நோக்கியதாகவும் அமைந்தன, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஷங்க்ரி லா ஹோட்டலிலும், வடகொரிய தலைவர் செயின்ட் ரெஜிஸ் ஹோட்டலிலும் தங்கியிருந்தனர். இந்த இரண்டு ஹோட்டல்களும் சிங்கப்பூரின் முக்கியமான பகுதியில் அமைந்துள்ளன. சிங்கப்பூர் நேரப்படி காலை 8:30 மணிக்கு இருவரும் தங்களது ஹோட்டலில் இருந்து சந்திப்பு நிகழும் சென்டோசா ஹோட்டலுக்கு கிளம்பினர். சரியாக 9 மணிக்கு இருவரும் கைகொடுத்து பரஸ்பரம் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.
பதவியிலிருக்கும் அமெரிக்க அதிபர் ஒருவர் வடகொரிய தலைவரை சந்திப்பது இதுவே முதல்முறையாகும். இந்த சந்திப்பின்போது 13 நொடிகள் இருவரும் கைகுலுக்கினர். இந்த சந்திப்பின்போது பத்திரிகையாளர்களைச் சந்தித்த இருவரும் தங்கள் சந்திப்பு குறித்த கருத்துகளை பகிர்ந்துகொண்டனர்.
`` கிம்மை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இருநாடுகளுக்குமிடையே நல்ல உறவு நீடிக்கும். அதில் எனக்கு எந்த சந்தேகமுமில்லை'' - ட்ரம்ப்
இருநாடுகளுக்குமிடையே பல்வேறு கருத்துவேறுபாடுகள், சண்டைகள் இருந்துவந்தன. ஆனால், அதையெல்லாம் இன்று தாண்டிவிட்டோம். அதற்கு சாட்சி நாங்கள் இன்றைக்கு இங்கு இருக்கிறோம்'' - கிம் ஜாங் உன்
இந்த சந்திப்புக்குப் பின் இருநாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தங்களுக்காக சந்திப்புக்காக இருவரும் அங்கிருந்து கிளம்பினர்.
எமோஷன் ஆன டென்னிஸ் ரோட்மேன்!
முன்னாள் அமெரிக்க கூடைப்பந்து வீரர் டென்னிஸ் ரோட்மேன் சிங்கப்பூர் சென்றுள்ளார். காரணம் கிம் ஜாங் உன் மிகப்பெரிய கூடைப்பந்து விளையாட்டின் ரசிகராம். இந்த சந்திப்புக்காக சிங்கப்பூர் வந்துள்ளதாக தெரிவித்தார். ``ட்ரம்ப் என்னை தொடர்புகொண்டார். அவர் என்னைப் பற்றி பெருமையாக கூறியது மகிழ்ச்சியளிக்கிறது. இன்றைய நாள் ட்ரம்ப்-கிம்மின் நாள், உலகின் நாள், இது என்னுடையது அல்ல'' என்றார். இந்த பேட்டின்போது டென்னிஸ் ரோட்மேன் எமோஷனலாகி அழுதுவிட்டார்.
சிங்கப்பூர் நேரப்படி ட்ரம்ப் - கிம் சந்திப்பு:
காலை 9 மணி:
ட்ரம்ப் - கிம் பரஸ்பர சந்திப்பு
காலை 9:15 மணி:
அமெரிக்க - வடகொரிய அதிகாரிகளுடன் தலைவர்கள் புதிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை
காலை 11:30 மணி:
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் இருவரும் மதிய உணவு அருந்தினர்.
மாலை 4:00 மணி:
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பத்திரிகையாளர்களைச் சந்திக்கிறார்.
நேரடி ஒளிபரப்பை பார்த்த தென்கொரிய அதிபர்:
தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் வீடியோ நேரடி ஒளிபரப்பு மூலம் ட்ரம்ப்-கிம் சந்திப்பைக் கண்டார். மேலும் இந்த சந்திப்பு மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
சந்திப்புக்காக மாறிய சிங்கப்பூர்:
இவர்களது சந்திப்பு சிங்கப்பூரில் நடைபெறுவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டன. தலைவர்கள் தங்குமிடம், சந்திப்பு நிகழுமிடம் அனைத்தும் அமெரிக்க, வடகொரிய பாதுகாப்பு அதிகாரிகளின் முழு கட்டுப்பாட்டுக்குள் வந்தன.
சந்திப்பு நிகழும் பகுதியில் ஆயுதங்கள், ஸ்பீக்கர்கள், ட்ரோன் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன. ஜூன் 14-ம் தேதி வரை இந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகள் அமலில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
விமானப் போக்குவரத்து 3 நாள்களுக்கு குறைக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக ரன்- வேயில் விமானங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. விமானங்கள் குறைந்த வேகத்தில் பறக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளன. விமானப்போக்குவரத்து தாமதமாகும் என்று பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இருநாடுகளுக்குமிடையேயான பேச்சுவார்த்தைக்குப் பின் இருவரும் மதிய உணவு அருந்தினர்.
சந்திப்பு நடைபெற்ற ஹோட்டல்
மதிய உணவின் மெனு:
ஸ்டார்டர்:
* அவகோடா சாலட்டுடன் பழைமை வாய்ந்த ப்ரான் காக்டெயில்
* தேனுடன் கலந்த மாங்காய் துருவல்கள் மற்றும் ஆக்டோபஸ்
* ஓய்சென் எனும் வேகவைக்கப்பட்ட கொரியன் வெள்ளரி
உணவு வகைகள்:
* உருளைக்கிழங்கு டாஃபினோய்ஸுடன் பரிமாறப்பட்ட பீஃப், ப்ரோகோலினி மற்றும் ரெட் ஒயின் சாஸ்.
* ஸ்வீட் & சோர் போர்க், யங்சோஹூ ப்ரைடு ரைஸ், சில்லி சாஸ்.
* டேஜூ ஜோரிம் மீன் மற்றும் முயல், ஆசிய காய்கனிகள்
டெஸர்ட்:
* டார்க் சாக்லேட் டார்ட்லெட் கனாச்சே
* செர்ரியுடன் கூடிய ஹாஜென்டாஸ் வென்னிலா ஐஸ்க்ரீம்
* ட்ராபிசெனே
இவர்கள் சந்திப்பின்போது அணுஆயுதங்களைக் கைவிடுவது, வடகொரியா மீதான தடைகளை நீக்குவது குறித்த பேச்சுகள் இடம்பெற்றிருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல்களை இன்று 4 மணிக்கு (இந்திய நேரம் 1:30 PM) நடக்கும் சந்திப்பில் இவர்கள் தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வரலாற்று சந்திப்பு இவ்வளவு அமைதியாக நடைபெற்றதை உலகமே பாராட்டி வருகிறது. இவர்களின் ஒப்பந்த விவரங்கள் மேலும் சுவரஸ்யத்தையும் விவாதங்களையும் எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.