இரானில் மீன்பிடித்த சம்பளத்தைக் கேட்டதால் ஆத்திரம் அடைந்த படகு உரிமையாளர் தமிழக மீனவர்கள் 21 பேரைத் துரத்தியடித்துள்ளார். இதையடுத்து இரான் நாட்டு சாலை ஓரத்தில் மீனவர்கள் தவித்து வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்க மங்கலம் துறை, கடியப்பட்டணம் போன்ற மீனவ கிராமங்களைச் சேர்ந்த 8 மீனவர்கள், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 7 பேர், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 6 பேர் என மொத்தம் 21 மீனவர்கள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இரான் நாட்டுக்கு மீன்பிடித் தொழிலுக்குச் சென்றனர். இரான் நாட்டின் நகிதக்கி என்னும் இடத்தில் சவுதி அரேபியாவை சேர்ந்த முகமது சலா என்பவரின் விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்றுவந்தனர். கடந்த 6 மாதங்களாக மீன்பிடித் தொழில் செய்ததற்கான சம்பளத்தைப் படகு உரிமையாளர் வழங்கவில்லை எனவும், சரிவர உணவு கொடுக்காமல் கொடுமைப்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 18-ம் தேதி 21 மீனவர்களும் படகு உரிமையாளரிடம் சம்பளம் கேட்டுள்ளனர். சம்பளம் கொடுக்க மறுத்த படகு உரிமையாளர் மீனவர்களை அவர்கள் தங்கியிருந்த அறையிலிருந்து வெளியேற்றியிருக்கிறார். மேலும் அவர்களது பாஸ்போர்ட்டையும் வாங்கி வைத்திருக்கிறார் படகு உரிமையாளர்.
இதனால் 21 மீனவர்களும் இரானில் நடுரோட்டில் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பின் பொதுச் செயலாளர் சர்ச்சிலைத் தொடர்புகொண்ட மீனவர்கள் தங்களது பாஸ்போர்ட் மற்றும் அடையாள ஆவணங்கள் அனைத்தும் படகு உரிமையாளரிடம் இருப்பதாகவும், எனவே இரான் போலீஸார் தங்களைக் கைது செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இரானில் தவிக்கும் மீனவர்களை மீட்டு தமிழகம் அழைத்து வர வேண்டும் என இந்திய தூதரகத்துக்கு தெற்காசிய மீனவர் தோழமை கூட்டமைப்பு பொதுச் செயலாளர் சர்ச்சில் கோரிக்கை விடுத்துள்ளார்.