
ஜெ. ஆன்மாவின் ஸ்டேட்மென்ட்?
சமாதியில் அமர்ந்து தியானம் இருந்த முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., ‘‘அம்மாவின் ஆன்மா என்னைப் பேசவைத்தது’’ என்று களேபரத்தைத் தொடங்கிவைத்தார். இப்போது, திருவாரூரைச் சேர்ந்த சாமியார் ஒருவர், ‘அம்மாவின் ஆன்மா’ தன் மூலம் பேசுவதாக அடுத்த அத்தியாயத்தை ஆரம்பித்திருக்கிறார்.
ஜெயலலிதா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல், அவரது மரணம் வரை மர்மம் தொடர்ந்து நீடித்துவரும் நிலையில், ஜெ. ஆன்மா தன்னிடம் பேசியதாகச் சொல்லும் திருவாரூர் ஸ்ரீமகரிஷி சாமியார் கோவிந்தராஜ் என்பவர், ‘தன்னுடைய சொத்துகள், அரசுடமை ஆக்கப்பட வேண்டும், தீபா வழியில் அ.தி.மு.க-வை வழிநடத்த வேண்டும்’ என்று ஜெ. ஆன்மா கோரிக்கை வைத்தாகச் சொல்கிறார். இப்படி, தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சாமியார் கோவிந்தராஜைத் தொடர்புகொண்டு பேசினோம். ‘‘ஜெ. ஆன்மா பேசும்போது உங்களை நிச்சயம் தொடர்புகொள்கிறேன்’’ என்று இணைப்பைத் துண்டித்துவிட்டார்.

அதேநாளில், இரவு 11 மணி அளவில் சாமியாரிடம் இருந்து நமக்கு போன் அழைப்பு. ஜெயலலிதாவிடம் இருந்து போன் என்பதுதான் சரியாக இருக்கும். ‘‘தியானத்தில் இருக்கிறேன். ஜெயலலிதா ஆன்மா என்னிடம் பேசுகிறது...’’ என்றுபரபரப்பாகப் பேச ஆரம்பித்தார்.
‘‘என் அன்பு தமிழ் மக்களே, நான் இந்த உலகத்தைவிட்டுச் சென்றுவிட்டேன். நான் வணங்கிய ஆண்டவனை நான் இறந்த பிறகுதான் பார்த்தேன். நான் செய்த பூஜைகள் என் ஆன்மாவுக்கு வலுச்சேர்த்துள்ளன. தமிழ் மக்களால், எனக்குக் கிடைத்த புண்ணியத்தை நான் மறக்கமாட்டேன். நான் இறந்துவிட்டேன் என்று அறியாமல் நீங்கள் எனக்குச் செய்த பூஜைகள் என் ஆன்மாவுக்குக் கிடைத்துவிட்டது. நான் உங்களைவிட்டுப் பிரியவில்லை. மக்களோடு ஒருவராகவும், மனதுக்குள் ஒருவராகவும் இருந்துகொண்டிருக்கிறேன். உங்கள் உணர்வை நான் அறிகிறேன். என்னுடைய உணர்வை வேறொருவர் மூலம் நீங்கள் அறிவீர்கள். தமிழகம் முழுவதும் யாருக்கெல்லாம் என்னைப் பிடிக்கிறதோ, அவர்கள் மூலம் உண்மைகளைச் சொல்லிக் கொண்டே இருப்பேன்.
இந்தியா முழுவதும் 33 இடங்களில் என்னுடைய சொத்துகள் பதிவு செய்யப்படாமல் உள்ளன. 19 இடங்கள் கோயமுத்தூர் பக்கத்தில் உள்ளன. (பதிவு செய்யப்படாத சொத்துகள் என்றால்?) நான் இறந்த பிறகு, 13 சொத்துகள் 75 நாட்களில் பதிவு செய்யப்பட்டுவிட்டன. நான் இறந்த பிறகு, மூன்று சொத்துகள் சர்ச்சையில் உள்ளன. 17 சொத்துகள் பதிவு நிலையில் இல்லாமல் உள்ளன. எம்.ஜி.ஆருக்குப் பிடித்த நரிக்குறவர்கள், ஏழை குடும்பங்களுக்கு ஐந்து சொத்துகளும், கேரளாவில் உள்ள கோயிலுக்கு இரண்டு சொத்துகளும், திருப்பதி ஏழுமலையானுக்கு ஒரு சொத்தும் பதிவுசெய்யப்படாத நிலையில் உள்ளன. தமிழ்நாட்டில் நான் பிரியமாகச் செல்லும் மூன்று கோயில்களுக்கும், என்னுடைய இந்தச் சொத்துகளின் பத்திரங்களை, பதிவுசெய்யப்பட்ட என்னுடைய லாக்கரில் வைத்துள்ளேன். சந்தர்ப்பம் வரும்போது, அதை, ஓ.பி.எஸ் அறிந்து திறந்து சொத்துகளை ஒப்படைக்க நேரிடும். என்னுடைய போயஸ் தோட்டத்தையும், பதிவு செய்யப்படாத சொத்துகள் அனைத்தையும் அரசுடமை ஆக்க வேண்டும். தீபாவுக்கு அரசியல் அனுபவங்களை எல்லாம் கொடுத்து, சோனியா மறைமுகமாக இயக்கியதுபோல, இந்த தமிழகத்தை இயக்க வேண்டும். அனுபவம் பெற்ற பிறகு அந்தப் பட்டத்தை அமைத்துக்கொடுக்கவும்’’ என்று தன்னுடைய ரூபத்தில் ஜெ. ஆன்மா பேசுவது போல அந்த சாமியார் பேசினார். மூச்சுவிட நேரம் தராமல் மேலும் பல அதிர்ச்சிகளை அவர் அடுக்க ஆரம்பித்தார்.

‘‘கடந்த பிப்ரவரி 10-ம் தேதி, ஓ.பி.எஸ்., தீபா இருவரும் ஓரணியில் சேர்வார்கள் என்று ஜெ. ஆன்மா என்னிடம் சொன்னது. அதேபோல, சொத்துக் குவிப்பு வழக்கில், கடந்த 16-ம் தேதி சசிகலாவுக்கு வரும் தீர்ப்புக்கு முன்பே, அவருக்கு மூன்று ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை கிடைக்கும் என்று ஜெ. ஆன்மா என்னிடம் சொன்னது. ஜெ. ஆன்மா என்னிடம் சொன்னதெல்லாம் பலித்துவிட்டது. இப்போது, ஜெ. ஆன்மா என்ன சொன்னது தெரியுமா? இன்னும் மூன்று மாதங்களில் தமிழ்நாட்டில் ஆட்சி கலைந்துவிடும். மறுபடியும் அ.தி.மு.க-தான் ஆட்சி அமைக்கும். ஓ.பி.எஸ் தலைமையில்தான் ஆட்சி அமையும்’’ என்றார் சாமியார்.
ஜெ. மரணம் குறித்த சந்தேகங்களை அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி, சாமியார்களும் கிளப்ப ஆரம்பித்துவிட்டார்கள்.
ஆவிகளோடு பேசுவதாக நிறையப்பேர் கதைவிடுவார்கள். ஆனால், இது ஆன்மா சீஸன்!
- ஏ.ராம்