
குடிமராமத்து செய்யப்போகும் அரசுக்குக் கேள்வி
குடிக்கவே தண்ணீர் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் வறட்சி நிலவுகிறது. இதில், விவசாயம் செய்ய தண்ணீருக்கு எங்கே போவது? ஆறு, ஏரி, குளம், வாய்க்கால் என நீர் ஆதாரங்களின் அவசியத்தை இப்போதுதான் தமிழக அரசு உணர்ந்துள்ளது. மழைநீரை திறம்படச் சேமிக்கவும், நீர்வள ஆதாரங்களை மேம்படுத்தவும், நீர்நிலைகளை மீட்டெடுக்கவும், பண்டைய ‘குடிமராமத்து’ திட்டத்துக்குப் புத்துயிர் அளிக்க அரசு திட்டமிட்டுள்ளது. குடிமராமத்துக்கு, இந்த மார்ச் மாதத்தில் 100 கோடி ரூபாயும், வரும் ஏப்ரல், மே மாதங்களில் 300 கோடி ரூபாயும் செலவிட இருக்கிறார்கள்.

இந்தத் தலைமுறைக்குக் ‘குடிமராமத்து’ என்ற வார்த்தையே புதிதாக இருக்கும். மக்கள், தாங்கள் பயன்படுத்தும் நீர்நிலைகளைத் தங்கள் உழைப்பால் பராமரித்து நல்ல நிலையில் பாதுகாக்கும் ‘மக்கள் திட்டம்’ இது. நம் முன்னோர்கள் காலத்து நடைமுறை. ஒவ்வொரு பகுதியிலும், அங்குள்ள நீர்நிலைகளைப் பயன்படுத்துவோரைக் கொண்டு பாசன சபைகள் அமைக்கப்படும். ஏரிகள், குளங்கள், மதகுகள், நீர்வழி வாய்க்கால்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை அந்தந்தப் பகுதிகளில் உள்ள பாசன சபைகளே பராமரிக்கும். இதற்கென பாசன சபைகள் சார்பில் பணியாளர்களும் நியமிக்கப்பட்டிருப்பார்கள். அவர்களுக்கு ‘அமஞ்சி வேலையாட்கள்’ என்று பெயர். சோழ மன்னர்கள், குடிமராமத்து முறையில் முன்னோடிகளாக இருந்தனர். 1,665 வாய்க்கால்கள், 36 ஆறுகள் என சுமார் 30 ஆயிரம் கி.மீ பாசனப் பரப்பைக் கொண்ட காவிரி டெல்டா முழுவதும் குடிமராமத்து முறையில்தான் பராமரிக்கப்பட்டது.
“மன்னர்கள் காலத்தில் கிராம சபைகளுக்கு மிகுந்த அதிகாரம் இருந்தது. ஆங்கிலேயர்கள் உள்ளே வந்தபிறகு, நீர்நிலைகள் அனைத்தும் அரசுக்குச் சொந்தமாக்கப்பட்டன. மக்களின் அதிகாரம் பிடுங்கப்பட்டது. சுதந்திரத்துக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தவர்களும் நீர்நிலைகள் பற்றி பெரிதாக அக்கறைக் கொள்ளவில்லை. அவ்வப்போது கொஞ்சம் மராமத்து செய்வதும், பிறகு விட்டுவிடுவதுமாக நீர்நிலைகளைக் கைவிட்டு விட்டார்கள். புதிய நீர்நிலைகளையும் உருவாக்கவில்லை. தற்போது மிகவும் இக்கட்டான நிலையில், மீண்டும் குடிமராமத்து முறையைக் கொண்டு வந்துள்ளார்கள். ஆனால், இதில் பல சிக்கல்கள் உள்ளன’’ என்கிறார் வேளாண் அறிஞரும் சூழலியலாளருமான பாமயன்.

தொடர்ந்து, ‘‘அந்தக் கால குடிமராமத்து முறையில், மக்களிடம் அதிகாரம் இருந்தது. நீர்நிலைகள், மக்களின் கட்டுப்பாட்டில் இருந்தன. இப்போது கிராமங்களில் இருக்கும் குளங்கள் கூட, ஊருணி புறம்போக்கு என்ற பெயர்களில் வருவாய்த் துறையின் கீழ் கொண்டுவரப்பட்டு விட்டன. குளத்தில் இருந்து ஒரு பிடி மண் எடுத்தால்கூட வழக்குப் போடுகிறார்கள். கிராம சபைக்கு வேலையே இல்லை. பொதுமக்களிடம் இருந்து பணி, பணம் மற்றும் உழைப்புப் பங்களிப்பு மட்டுமே கோரப்படுகிறது. கர்நாடகாவில் கிராம சபையே நேரடியாகப் பராமரிப்புப் பணிகளில் ஈடுபடுகிறது. நீர்நிலைகளில் சேகரிக்கப்படும் வண்டல் மண்ணை ஓரிடத்தில் குவித்து வைத்துவிடுவார்கள். மக்கள் அதை எடுத்துச்சென்று தங்கள் வயல்களில் உரமாகப் பயன்படுத்துவார்கள். அங்கு, பணிகளை கண்காணிக்கும் பொறுப்பு மட்டுமே அரசினுடையது. இங்கே நீர்நிலைகளில் கிடைக்கும் மண்ணுக்குப் பெரும் போட்டி இருக்கிறது. அதைக் காசாக்கத் தொடங்கி விட்டார்கள். அதற்காக அளவு கடந்து தோண்டி நீர்நிலைகளை வீணாக்கி விட்டார்கள்.
குடிமராமத்துத் திட்டத்தை கிராம சபையிடம் தந்தால்தான் வெற்றி கிடைக்கும். 10 லட்ச ரூபாய்க்கும் குறைவான மதிப்பீட்டில் வரும் பணிகளை மட்டும் விவசாய சங்கங்கள், பாசன சபைகள், ஆயக்கட்டுத்தாரர்களுக்குக் கொடுப்போம் என்கிறார்கள். `10 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட பணிகள், வழக்கமான கான்ட்ராக்ட் நடைமுறைப்படி செய்யப்படும்’ என்கிறார்கள். இதனால் பெரிய பயன்கள் விளையப் போவதில்லை” என்கிறார் பாமயன்.
தஞ்சை காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமல்நாதனிடம் பேசினோம். “நூறு நாள் வேலை உறுதி அளிப்புத் திட்டம் என்றெல்லாம் கூறுகின்றனர். அந்தத் திட்டத்தில் ஏரிகளைத் தூர்வாருவதாகச் சொல்கிறார்கள். ஆனால், கடந்த காலங்களில் 365 நாட்களும் குடிமக்களே நீர்நிலை களில் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டனர். ஊருணி, ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் குடிமராமத்தின்போது தூர்வாரப்பட்ட மண்ணைக் கொண்டுதான் அந்தக் காலத்தில் கோயில்கள் கட்டப்பட்டன. குடிமராமத்துப் பணிகள், 1963-ம் ஆண்டு வரை செம்மையாக நடந்தன. நீர்நிலைகள் பராமரிப்பில் அரசியல் நுழைந்த பிறகு, எல்லாம் ஒப்பந்தக்காரர்கள் கையில் போனபிறகு, குடிமராமத்து முறை இல்லாமல் போய்விட்டது. ஒப்பந்தக்காரர்களை விலக்கி வைத்துவிட்டு, மக்களைக் கொண்டு செம்மையாகச் செய்தால் நீர்நிலைகளில் மிகக் குறைந்த அளவிலான மழைநீரைக் கூட சேமிக்க முடியும். பல நீர்நிலைகளில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன. 1950-ம் ஆண்டுக்கு முன்பு உள்ள வருவாய் பதிவேடுகளைப் பார்த்து, அதன்படி ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்நிலைகளைப் பராமரிக்க வேண்டும்” என்றார் அவர்.

“இதில் மக்களின் பங்களிப்பு என்பது, 10 லட்சம் ரூபாய்க்குக் குறைவான பணிகளில் 10 சதவிகித மதிப்பீட்டுத் தொகையை பணமாகவோ, பொருளாகவோ அல்லது உழைப்பாக வழங்குவது மட்டும்தான். ஏற்கெனவே, சாகுபடி இல்லாமல் விவசாயிகள் தவித்து வருகிறார்கள். இங்கே பாசன சபைக்கென்று எந்த நிதியும் கிடையாது. மக்களிடம்தான் வசூல்செய்ய வேண்டும். அது கூடுதல் சுமையாக இருக்கும். நீர்நிலைகளைப் பராமரிக்க ஆண்டுக்கு ஒருமுறை, ஒரு ஹெக்டேருக்கு 250 ரூபாய் என்ற அளவில் மத்திய அரசு நிதி வழங்கும். பாசனதாரர்கள் 250 ரூபாய் தருவார்கள். அதைக்கொண்டு பராமரிப்புப் பணி நடக்கும். மத்திய அரசு தரவேண்டிய இந்த நிதி இரண்டு ஆண்டுகளாக வந்து சேரவில்லை. இந்த நிலையில் மக்களிடம் இருந்து பங்களிப்பு கோருவது சரியில்லை. முழு நிதியையும் ஒதுக்கி, கிராம சபையையே முழுப்பணியையும் செய்ய வைக்க வேண்டும். அதை அரசோ, வருவாய்த் துறையோ கண்காணிக்கலாம்...” என்கி றார் சூழலியாளர் அறச்சலூர் செல்வம்.

தமிழக அரசின் முன்னாள் தலைமைப் பொறியாளர் வீரப்பனிடம் பேசினோம். “1970-க்குப் பின்னர், ஏரிகள் பராமரிப்பில் அக்கறையற்ற தன்மை இருந்தது. நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்தன. ஆனால், இப்போது பல்வேறு தன்னார்வக் குழுக்கள் சார்பில் சில ஏரிகள் முறையாகப் பராமரிக்கப்படுகின்றன. குறிப்பாக விகடன் குழுமத்தின் சார்பில் படப்பை அருகில் ஏரிகள் தூர்வாரப்பட்டுள்ளன. இப்போது குடிமராமத்து செய்வதாக அரசு சொல்வது நல்ல திட்டம்தான். ஆனால், அரசு ஒதுக்கும் நிதி போதுமா என்ற கேள்வி எழுகிறது. குடிமராமத்துப் பணிகளின்போது ஏரி, குளங்களில் உள்ள வண்டல் மண்ணை இலவசமாக எடுத்துக்கொள்ள விவசாயிகளுக்கு அனுமதி அளிக்கலாம். அரசியல் வாதிகளின் குறுக்கீடுகளை அனுமதிக்கக் கூடாது. அதே போல நூறு நாள் வேலைத் திட்டத்தில் குடிமராமத்துப் பணிகளைச் செய்யக்கூடாது. அதில் 10 சதவிகிதப் பணிகள்கூட முறையாக நடப்பது இல்லை. போலியாக வருகைப் பதிவேடு தயாரித்து முறைகேடுகள் நடக்கின்றன” என்றார்.
சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் நீர்வள நிபுணர், பேராசிரியர் ஜனகராஜனிடம் பேசினோம். “குடிமராமத்து என்பது ஒரு மக்கள் இயக்கம். ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன்பு ஏரிகளை மக்கள் பராமரித்தனர். பசுமைப் புரட்சியின்போது கிணற்றுப் பாசனம் பரவலாக வந்தது. அப்போதுதான் ஏரிகளுக்கு ஆபத்து வந்தது. இப்போது ஏரிகளில் பேருந்து நிலையங்கள், நீதிமன்றங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், தொழிற்பேட்டைகள் இவையெல்லாம்தான் இருக்கின்றன. குடி மராமத்து செய்யப்போகும் அரசு, இவற்றையெல்லாம் என்ன செய்யப்போகிறது? ஏரியின் வரத்துக் கால்வாய், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் தண்ணீர் எப்படி வரும்? மற்றபடி, குடிமராமத்து என்பது மாற்றத்துக்கான விஷயம்தான்” என்றார் அவர்.
நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்திருப்பது அரசும், அரசியல்வாதிகளும் தான். இதையெல்லாம் அகற்றாமல் குடிமராமத்து செய்வது, முழுப்பலனைத் தராது.
- வெ.நீலகண்டன், கே.பாலசுப்பிரமணி
படம்: மீ.நிவேதன்