
‘பாலியல் வன்புணர்வு செய்வோம்!’ - கருத்துக்கு எதிராக காமுகன் அவதாரம்
‘தேசபக்தர்’களின் பாலியல் மிரட்டல்
ஏதோ ஒரு பொது விஷயத்தைப் பற்றி உங்களுக்கு ஒரு கருத்து இருந்து, அதைப் பொதுவெளியில் சொல்வது என்பது, கிட்டத்தட்ட தூக்குக் கயிற்றை முத்தமிடுவதற்கு சமம். அதிலும், பெண்ணாக இருந்து கருத்தைச் சொல்வது, இன்னும் ஆபத்து. கருத்தைப் பிடிக்காதவர்கள், கோபம் கொண்டு என்ன செய்வார்கள்? ‘பாலியல் வன்புணர்வு செய்யவோம்’ என பகிரங்கமாகவே மிரட்டலாம். கருத்து சுதந்திர தேசத்தில், ஆளும்கட்சியின் ஆசியோடு செயல்படும் மாணவர் அமைப்பு ஒன்று, குர்மெஹர் கவுரை இப்படித்தான் மிரட்டியிருக்கிறது.

நடந்தது இதுதான்! டெல்லியில் உள்ள ராம்ஜஸ் கல்லூரி விழா ஒன்றுக்கு, ஜவஹர்லால் நேரு (ஜே.என்.யூ) பல்கலைக்கழக மாணவர் அமைப்பைச் சேர்ந்த உமர் காலீத்தை தலைமை தாங்க அழைத்துள்ளனர். விழாவுக்கு உமர் காலீத் வருவதை, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின்கீழ் இயங்கும் மாணவர் இயக்கமான ஏ.பி.வி.பி கடுமையாக எதிர்த்தது. கடந்த வருடம், அப்சல் குரு நினைவு அஞ்சலியில் கலந்துகொண்டதற்காக, ஜே.என்.யூ மாணவர் பேரவையின் தலைவரான கன்ஹயா குமாருடன் சேர்ந்து, தேச விரோத வழக்கில் கைது செய்யப்பட்டவர் காலீத். அதனாலேயே அவர் வருகையை எதிர்த்தது, ஏ.பி.வி.பி. இதனால், அந்த விழா கைவிடப்பட்டது. இதை எதிர்த்து டெல்லி பல்கலைக்கழக மாணவர்களும், ஜே.என்.யூ மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களையும் பத்திரிகை யாளர்களையும் ஏ.பி.வி.பி அமைப்பினர் தாக்கினர்.
இதைக் கண்டித்து மாணவர்கள் பலர், சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பதிவிட்டனர். அவர்களில் ஒருவர்தான், குர்மெஹர் கவுர். டெல்லி பல்கலைக்கழக மாணவியான இவர், தன் ஃபேஸ்புக் பக்கத்தில், ஏ.பி.வி.பி அமைப்பை எதிர்த்து பதிவிட்டிருந்தார். இதையடுத்து, அவருக்கு பாலியல் வன்புணர்வு மிரட்டல் மெசேஜ்கள் நூற்றுக்கணக்கில் வர ஆரம்பித்தன. அதற்கு அஞ்சாத அவர், தன் பின்னணியைச் சொன்னார். அதன்பின் பல பிரபலங்களே அவரைத் திட்ட ஆரம்பித்தனர்.

கார்கில் போரில் உயிரிழந்த கேப்டன் மன்தீப் சிங்கின் மகள், குர்மெஹர் கவுர். தந்தை இறக்கும்போது இவருக்கு இரண்டு வயது. அப்போது முதல், தந்தையை இழந்த ஏக்கத்துடன் இருந்தவர், போரும் அமைதியும் தொடர்பான சிந்தனைகளுடனும் வளர்ந்தார். போர்களில் கொல்பவர்கள் மற்றும் கொல்லப்படுகிறவர்கள் பற்றிய தெளிவுக்கு வந்தார். ‘என் தந்தையை பாகிஸ்தான் கொல்லவில்லை, போர் கொன்றது. எனக்குக் கோபமில்லை. நான் அமைதியை விரும்புகிறேன்’ என்ற தனது தெளிவான கருத்தை அவர் பதிவாக வெளியிட்டதும் எதிர்ப்புகள் வலுத்தன. பி.ஜே.பி எம்.பி-யான பிரதாப் சிம்ஹா, தாவூத் இப்ராஹிமுடன் குர்மெஹரை ஒப்பிட்டார். ‘தாவூத் ஒரு போலீஸ்காரரின் மகன்; குர்மெஹர் ஒரு ராணுவ அதிகாரியின் மகள். என்ன செய்வது?’ என அவர் பொங்கியெழுந்தார். மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு, குர்மேஹருக்கு வந்த மிரட்டல்கள் பற்றி கவலையே படவில்லை. அவர், குர்மேஹரை இன்னும் ஆவேசமாகத் திட்டினார். ‘தேசபக்தி’யைக் காட்டச் சொல்லி எச்சரித்தார். கிரிக்கெட் வீரர் வீரேந்திர ஷேவாக்கோ, ‘நான் 300 ரன்கள் அடிக்கவில்லை, என் பேட்தான் அடித்தது’ என்று சொல்லி, ‘என் தந்தையை பாகிஸ்தான் கொல்லவில்லை, போர் கொன்றது’ என்ற கருத்தை நக்கல் செய்தார். குத்துச்சண்டை வீரர்

யோகேஷ்வர் தத், இன்னும் ஒரு படி மேலே போய் ஹிட்லர், பின்லேடன் போன்றவர்களோடு குர்மெஹரை ஒப்பிட்டார். ‘‘போராட்டத்துக்குச் சென்ற எங்கள் கல்லூரி மாணவிகள் பலர் காயங்களோடு திரும்பி வந்தார்கள். அவர்களுக்கு நேர்ந்த அனுபவங்கள் என்னை யோசிக்க வைத்தன. ஏ.பி.வி.பி அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள், இந்தப் பெண்களைத் தாக்கியதோடு மட்டுமின்றி, ‘இனிமேல் இப்படிப் போராட வந்தீர்கள் என்றால், உங்களை பாலியல் வன்புணர்வு செய்துவிடுவோம்’ என மிரட்டியிருக்கிறார்கள். இதைக் கேட்டு எழுந்த கோபத்தில் என் கருத்தைப் பதிவிட்டேன். அதனால், எனக்கு கொலை மிரட்டல், பாலியல் வன்புணர்வு அச்சுறுத்தல் விடுக்கும் மெசேஜ்கள் வந்தன. நாங்கள் படிக்கும் வளாகம், வன்முறைகள் இல்லாத, சுதந்திரமான, பாதுகாப்பான இடமாக இருக்க வேண்டும் என ஆசைப்படுவதில் என்ன தவறு? ஒரு பெண்ணாக என் கருத்தைச் சொல்லக்கூட எனக்கு உரிமை இல்லையா?” என்று கேட்கிறார் குர்மெஹர்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, ‘‘ஐதராபாத், டெல்லி என எல்லா இடங்களிலும் பல்கலைக்கழகங்கள், முற்போக்கு சிந்தனையாளர்களால் நிறைந்துள்ளன. இதைப் பொறுக்க முடியாத பி.ஜே.பி தரப்பினர், அங்கெல்லாம் வன்முறையைப் பரப்புகிறார்கள். டெல்லி பல்கலைக்கழகம், ஜே.என்.யூ-வில் ஏ.பி.வி.பி செல்வாக்கு பெறாதது, அவர்களுக்குக் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பெண்ணுக்குத் தனிப்பட்ட முறையில் மிரட்டல் விடுத்திருப்பது கண்டனத்துக்குரியது. அந்த வீரப் பெண்மணி அதை அஞ்சாமல் எதிர்கொண்டுள்ளார்” என்றார்.
கடந்த ஆண்டு கன்ஹயா குமாரை ஒரு தலைவனாக இந்தியாவுக்கு அடையாளம் காட்டினார்கள். இந்த ஆண்டு, குர்மெஹர் கவுர்.
- நந்தினி சுப்பிரமணி