அலசல்
சமூகம்
Published:Updated:

பன்றிக்காய்ச்சல் ரிட்டர்ன்ஸ்... பதறும் தமிழகம்!

பன்றிக்காய்ச்சல் ரிட்டர்ன்ஸ்... பதறும் தமிழகம்!
பிரீமியம் ஸ்டோரி
News
பன்றிக்காய்ச்சல் ரிட்டர்ன்ஸ்... பதறும் தமிழகம்!

பன்றிக்காய்ச்சல் ரிட்டர்ன்ஸ்... பதறும் தமிழகம்!

ப்போலோவில் ஜெயலலிதா அட்மிட் ஆனதில் ஆரம்பித்து, சசிகலாவின் சிறைவாசம் வரையில் கடந்த ஐந்து மாதங்களாகத் தமிழகத்தில் நிலவும் அசாதாரணமான அரசியல் சூழலால்... சமூகத்தின் சீரியஸான பல விஷயங்கள், கவனமோ, அக்கறையோ பெறாமல், பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டன. அவற்றில் ஒன்றுதான், பன்றிக்காய்ச்சல் பாதிப்பு.

பன்றிக்காய்ச்சல் ரிட்டர்ன்ஸ்... பதறும் தமிழகம்!

2009-ம் ஆண்டு, ஹெச்1என்1 (H1N1) என்ற வைரஸ் கிருமியால் ஏற்பட்ட இந்தக் காய்ச்சலின் பிறப்பிடம் மெக்சிகோ. அப்போது, உலகம் முழுவதும் இந்தக் காய்ச்சல் பரவியது. “பன்றிக் காய்ச்சல் பான்டமிக் (உலகம் முழுக்க பரவும்) நிலையைக் கடந்துவிட்டது. இனி வரும் காலங்களில் இது பருவகால காய்ச்சல் மட்டுமே” என்று உலக சுகாதார நிறுவனம், 2010-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிவித்தது. இந்தியாவில், 2015-ல் மட்டும் இந்த நோயின் பாதிப்புக்கு ஆளானவர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள். உயிர்பலி 600-ஐத் தொட்டது.

 “பன்றிக்காய்ச்சல் என்பது பருவகால காய்ச்சல்தான்... பொதுமக்கள் பயப்படத் தேவையில்லை” என்று அரசுத் தரப்பு அறிக்கைகள் வருகின்றன. ஆனால், பன்றிக்காய்ச்சலால் பலியாகும் மக்களின் எண்ணிக்கையோ, நாள்தோறும் அதிகரித்து வருகிறது. திருச்சி அரசு மருத்துவமனையில், கடந்த ஒரு மாதத்தில் 20 பேரும், கோவையில், கடந்த இரண்டு மாதங்களில் 18 பேரும் பலியாகி உள்ளனர். கடந்த பிப்ரவரி 27-ம் தேதி மட்டுமே திருச்சியில் மூன்று பெண்கள் பன்றிக்காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர். 

பன்றிக்காய்ச்சல் ரிட்டர்ன்ஸ்... பதறும் தமிழகம்!

திருச்சி அரியமங்கலத்தைச் சேர்ந்த நான்கு வயது குழந்தையான ஜீவானந்தத்தை பன்றிக் காய்ச்சலுக்குப் பலி கொடுத்துவிட்டு பரிதவிக்கிறார்கள் பெற்றோர். ஜீவானந்தத்தின் சிரிப்பு சத்தம் கேட்டுக் கொண்டிருந்த வீட்டில் இப்போது அழுகைக்குரல் மட்டுமே கேட்கிறது. மரணத்தின் கொடுந்துயரத்தோடு இருக்கிறது அந்தக் குடும்பம். அவர்களின் வீட்டு வாசலில் திறந்த நிலையில் சாக்கடை ஓடுகிறது. அந்தப் பகுதியின் கவுன்சிலராக இருந்தவருக்கு சொந்தமானது என்று சொல்லப்படும் பன்றிகள் பண்ணை ஒன்று அருகில் உள்ளது. “மூணு குழந்தைகள். ரெண்டாவது பையன்தான் ஜீவானந்தம். எல்.கே.ஜி படிச்சுகிட்டிருந்தான். துறுதுறுன்னு இருப்பான். எங்க குடும்பத்துல எல்லோருக்கும் அவன் ரொம்ப செல்லம். அன்னைக்கு ஸ்கூலுக்குப் போயிட்டு வந்தான். சாயந்திரத்தில இருந்து காய்ச்சல் ஆரம்பிச்சது. சாதாரண காய்ச்சல்னு நினைச்சு பக்கத்துல இருக்கற தனியார் மருத்துவமனையில சேர்த்தோம். அங்கே யாருமே சரியா பார்த்துக்கலை. எந்த டெஸ்டும் எடுக்கவில்லை. வேற ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கூட்டிட்டு போன‌ப்போதான், ‘பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருக்கு. ஜி.ஹெச்-க்குக் கொண்டுபோங்க’னு சொன்னாங்க. அங்கே போனப்போ, ‘நோய் முத்திடுச்சு’னு டாக்டர்கள் கையை விரிச்சுட்டாங்க. அந்த வார்த்தையிலே, அவன் உயிர் போகறதுக்கு முன்னாலயே நாங்க செத்துட்டோம்” என சொல்லிவிட்டு உடைந்து அழுகிறார் ஜீவானந்தத்தின் தந்தை சுரேஷ்.

 “ஐந்து நாட்கள் வெச்சிருந்து புள்ளையைப் பொட்டலமா கட்டிக்கொடுத்துட்டு, ‘ரொம்ப நேரம் வச்சிருக்காதீங்க; நோய் தொத்திக்கும்’னு சொன்னாங்க. நான் பெத்த குழந்தைகிட்ட இருந்தே என்னையக் காத்துக்க வேண்டிய நிலைமையை என்னன்னு சொல்றது? இரண்டு நாளைக்கு முன்னாடியே கூட்டிட்டுப் போயிருந்தா குழந்தை பிழைச்சிருக்கும்னு டாக்டர் சொன்னாரு. பத்து மாசம் சுமந்து பெத்த குழந்தையை, ரெண்டு நாள் அலட்சியத்தால பலி கொடுத்துட்டு நிக்கிறனே” என்று சொல்லி அழும் ஜீவானந்ததின் தாய் சுசிலாவுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லாமல் நின்றோம்.

“ஜீவானந்தம் இறந்த பிறகு இரண்டு நாட்களுக்கு வந்து கொசு மருந்து அடிச்சாங்க. அவ்வளவுதான். இங்கே குப்பைக் கழிவுகளைக் கொட்டறாங்க. குப்பைக் கிடங்குல தீப்பிடிச்சா நச்சுப்புகையைத் தான் சுவாசிக்க வேண்டியிருக்கு. குளிர்காலத்தில் பன்றிக் காய்ச்சல் பரவுது. யாராவது செத்தால்தான் இந்தப் பக்கம் அரசாங்கத்தின் பார்வை திரும்புது. நாங்களும் வேற வழியில்லாம இப்படியே வாழப் பழகிட்டோம்” என விரக்தியுடன் சொல்கிறார்கள் அந்தப் பகுதி மக்கள்.

சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கரிடம் பேசினோம். “இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் பன்றிக் காய்ச்சலுக்காக 26 பரிசோதனை மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. 14 லட்சம் டேமிஃப்ளூ மாத்திரைகள் கையிருப்பில் உள்ளன. தனியார் மருத்துவமனைகள் கேட்கும்பட்சத்தில், இந்த மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படும். மருத்துவத் துறையைச் சேர்ந்தவர் களுக்கும் நோய்த் தாக்குதல் ஏற்படாமலிருக்க, ‘என் 95’ முகமூடிகள் வழங்கப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி கலெக்டர்களுக்கு அறிவுரைகள் வழங்கப் பட்டுள்ளன. தேவையின்றி மக்கள் பீதி அடைய வேண்டாம். முன்னெச்சரிக்கையோடு இருங்கள்” என்ற அறிவுரையோடு முடித்துக்கொண்டார். 
 மனித உயிர்களைப் பறிக்கும் பன்றிக்காய்ச்சல் போன்ற நோய்களைத் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசுத் தரப்பில் எடுப்பதும், இந்த நோய் தொடர்பான விழிப்பு உணர்வு பிரசாரத்தை தேவையான அளவுக்கு மேற்கொள்வதும் அவசர அவசியம்.

- க.தனலட்சுமி, ச.ஆனந்தப்பிரியா
படங்கள்: என்.ஜி.மணிகண்டன், அ.சரண்குமார்

பன்றிக் காய்ச்சலைத் தவிர்க்க...

ரு நாளைக்குக் குறைந்தபட்சம் 20 முறையாவது கைகளைக் கழுவுங்கள்.
குழந்தைகளுக்குக் கைக்குட்டை கொடுங்கள்.
காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக அரசு மருத்துவமனையை அணுகுங்கள்.
சுயமருத்துவம், பன்றிக் காய்ச்சலை வீரியமாக்கும். எனவே, அதைத் தவிருங்கள்.

பன்றிக்காய்ச்சல் ரிட்டர்ன்ஸ்... பதறும் தமிழகம்!

எப்படிப் பரவுகிறது?

சென்னையைச் சேர்ந்த பொதுந‌ல மருத்துவர் மஞ்சுளா ரங்கநாதனிடம் பேசினோம். “ஆரம்பத்தில் பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவிவந்த இந்தக் காய்ச்சல், தற்போது முழுக்க முழுக்க மனிதர்களிடமிருந்து மட்டுமே பரவுகிறது. கடந்த காலங்களைவிட, தற்போதுள்ள வைரஸின் வீரியம் சற்று குறைந்ததுதான். ஆனாலும் சளி, இருமல், தொண்டை வலி, காய்ச்சல் என அறிகுறிகள் அனைத்தும் பொதுவானதாக இருப்பதால், ‘சாதாரண வைரஸ் காய்ச்சல்தானே’ என்று பலர் அலட்சியமாக இருந்துவிடுகிறார்கள். அதனால், ஏற்படும் காலதாமதம்தான் மரணம்வரை கொண்டுபோய்விடுகிறது. 20 சதவிகிதம் மட்டுமே காற்று, நீர் மூலமாக இந்த நோய் பரவுகிறது. நோய்க் கிருமி படிந்துள்ள இடங்களைத் தொட்டுவிட்டு, கைகளைக் கழுவாமல் உடலின் மற்ற பாகங்களைத் தொடுவதால் இன்னும் அதிக அளவில் பரவுகிறது. கைகளை ஒழுங்காகக் கழுவினாலே 80 சதவிகித நோய்த் தாக்குதலில் இருந்து காத்துக்கொள்ளலாம். பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் ‘டேமிஃபுளூ’ மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், ஹெச்1என்1 வைரஸை உறுதிசெய்யாமல் இந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்ளக்கூடாது. எந்தக் காய்ச்சலாக இருந்தாலும் மருத்துவமனைக்குச் சென்றுவிடுங்கள். மூன்று நாட்களுக்கும் மேல் காய்ச்சல் தொடர்ந்தால் ‘நேசல் ஸ்வாப்/ த்ரோட் ஸ்வாப்” எனப்படும் மூக்கு, தொண்டை பரிசோதனைகளைச் செய்து, தேவையான சிகிச்சையைப் பெற வேண்டும்” என்றார்.