அலசல்
சமூகம்
Published:Updated:

“அள்ள மட்டும் நாங்களா?” - சமூகத்தை அறையும் கேள்வி

“அள்ள மட்டும் நாங்களா?” - சமூகத்தை அறையும் கேள்வி
பிரீமியம் ஸ்டோரி
News
“அள்ள மட்டும் நாங்களா?” - சமூகத்தை அறையும் கேள்வி

“அள்ள மட்டும் நாங்களா?” - சமூகத்தை அறையும் கேள்வி

நம் வீட்டுக் கழிப்பறைதான். நாம் மட்டுமே பயன்படுத்துவதுதான். ஆனால், செருப்பு அணிந்துதான் போகிறோம். முடிந்ததும் சோப்புப் போட்டு கை கழுவுகிறோம். கிருமிநாசினிகள் போட்டு கழிப்பறையைச் சுத்தம் செய்கிறோம். நமக்கு அது சுத்தமாக இருக்க வேண்டும். ஆனால், நம் ஒவ்வொருவரின் வீட்டுக் கழிப்பறையிலிருந்தும் வெளியேறும் மனிதக் கழிவுகளை, மலக்குழிக்குள் இறங்கி சுத்தம் செய்யும் தொழிலாளர்கள் பற்றி என்றைக்குமே நாம் கவலைப்பட்டதில்லை. அந்தக் குற்ற உணர்வு, ‘கக்கூஸ்’ ஆவணப்படத்தைப் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் நிச்சயம் வரும்.

வழக்கறிஞரும், சமூக செயற்பாட்டாளருமான திவ்யா இயக்கியுள்ள ‘கக்கூஸ்’ என்ற ஆவணப்படம், பிப்ரவரி 26-ம் தேதி சென்னையில் திரையிடப் பட்டது. இந்த ஆவணப்படம், சீரியஸான பல கேள்விகளை நம் முன் வைக்கிறது.  

“அள்ள மட்டும் நாங்களா?” - சமூகத்தை அறையும் கேள்வி

இது குறித்து திவ்யாவிடம் பேசினோம். “மனிதக்கழிவுகளை மனிதர்களே அகற்றுவதைத் தடைசெய்யும் சட்டம், 1993-ல் கொண்டு வரப் பட்டது. கையால் மலம் அள்ளும் தொழிலாளர் களைப் பணி அமர்த்துவதையும், உலர் கழிப்பிடங்கள் கட்டப்படுவதையும் இந்தச் சட்டம் தடைசெய்தது. ஆனால், மலத்தை கையால் அள்ளும் கொடுமை இன்னும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. மலக் குழிக்குள் இறங்கி சுத்தம் செய்யும்போது, விஷவாயு தாக்கி துப்புரவுத் தொழிலாளர்கள் உயிரிழப்பதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்தத் துப்புரவுத் தொழிலாளர்கள் அனைவரும், சமூக-பொருளாதார ரீதியில் ஒடுக்கப்பட்டவர்கள் என்பது மிகப்பெரிய சமூகக்கொடுமை. மதுரையில், அரசு அலுவலகங்களில், அரசு ஊழியர் அந்தஸ்துடன் துப்புரவுத் தொழில் செய்பவர்கள் எந்த சாதிப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்ற விவரங்களைத் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாகக் கேட்டோம். மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் ஆகியோரும் இந்தப் பணியில் இருப்பதாகத் தகவல் கொடுத்தனர். அவர்களின் மாதச்சம்பளம் ரூ.15 ஆயிரம். இதில், ஒரு மோசடி நடக்கிறது. துப்புரவுத் தொழிலாளர்களாக வேறு சமூகத்தினர் இருந்தபோதிலும், அவர்கள் துப்புரவு வேலை செய்வது இல்லை. தங்களுக்குப் பதிலாக, தலித் சமூகத்தினரை துப்புரவு வேலையைச் செய்யச் சொல்லிவிட்டு, அவர்களுக்கு மாதம் ஐயாயிரம் ரூபாயை மட்டும் கொடுக்கிறார்கள். இந்த மோசடி, அதிகாரிகளுக்குத் தெரிந்தும், அவர்கள் அதை வேடிக்கைப் பார்க்கிறார்கள்.

துப்புரவுப் பணியில் உள்ள தொழிலாளர்கள் மரணம் அடைந்தால், அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். ஆனால், அந்த இழப்பீட்டுத் தொகையில் கமிஷன் எடுத்துக்கொண்டு, மீதியைத்தான் சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்குக் கொடுக்கிறார்கள். இந்தக் கேவலத்தை எந்த வகையில் சேர்ப்பது? சம்பளம் வாங்க ஒரு வர்க்கம், நாற்றக்குழிக்குள் இறங்கி தினம் தினம் நரகத்தில் தவிக்க இன்னொரு வர்க்கம் என்கிற அநியாயமும் அரங்கேறிக்கொண்டிருக்கிறது.
 மதுரையில், 2015 அக்டோபரில், மலக்குழிக்குள் இறங்கிய துப்புரவுத் தொழிலாளர்கள் இரண்டு பேர் மரணம் அடைந்தனர். அதில், ஒரு தொழிலாளியின் பிணத்தின் மீது விழுந்து அவரது மனைவி அழுதுபுரண்டு கதறினார். அந்தக் காட்சி நம்மை செருப்பால் அடித்ததுபோல இருந்தது. நீதி கிடைக்காத இந்த மரணங்களுக்கு நியாயம் சேர்க்கவே, இது பற்றி ஒரு ஆவணப்படம் எடுக்க வேண்டும் என்று முடிவுசெய்தேன்” என்று துப்புரவுத் தொழிலாளர்களின் பிரச்னைகளை ஆதங்கத்துடன் விவரித்தார்.  

 கையில் பணமோ, கேமரா உள்ளிட்ட கருவிகளோ இல்லாத நிலையில், பல சவால்களுடன் இந்த ஆவணப்படத்தை எடுத்த அனுபவத்தை நம்முடன் பகிர்ந்துகொண்டார் திவ்யா. 

“அள்ள மட்டும் நாங்களா?” - சமூகத்தை அறையும் கேள்வி

“முழுக்க முழுக்க மக்களின் ஆதரவால் இந்த ஆவணப்படத்தை எடுத்தேன். நான் முன்பின் அறிந்திராத முகநூல் நண்பர்கள்தான், எனக்கு கேமரா, மைக் போன்ற கருவிகளைக் கொடுத்து உதவினார்கள். எழுத்தாளர் பாஷா சிங்கின் ‘தவிர்க்கப்பட்டவர்கள்’ என்ற புத்தகம் எனக்குப் பேருதவியாக இருந்தது. பாஷா சிங், துப்புரவுத் தொழிலாளர்கள் குறித்து 15 வருடங்களாகச் சேகரித்த தரவுகளை, அந்தப் புத்தகத்தில் பதிவு செய்திருந்தார். இந்தப் படத்தை எடுத்து முடிக்க ஒரு வருடம் ஆனது. 22 துப்புரவுத் தொழிலாளர்களின் குடும்பங்களைச் சந்தித்தேன். கேமராவை தூக்கிக்கொண்டு போனதும், யாரும் உடனடியாகப் பேச முன்வரவில்லை. பழகிப் பழகி அவர்களின் நன்மதிப்பையும் நம்பிக்கையையும் பெற்ற பிறகுதான், பேச ஆரம்பித்தார்கள். ‘உங்க வீட்ல இருக்குற குப்பையைதான் வீதியில கொட்டுறீங்க. அதுவரைக்கும் அது தீட்டு இல்ல. நாங்க தொட்ட உடனேதான் அது தீட்டாகுதா?’னு ஒரு அம்மா என்னிடம் கேட்டார்கள். குப்பைக்கே இப்படி என்றால், மனிதக்கழிவுகளுக்கு?

‘இது நாகரிகமான சமூகம்’ என்று சொல்லிக் கொள்கிறோம். 104 செயற்கைக்கோள்களை ஒரே நேரத்தில் விண்ணில் ஏவி... உலக சாதனை என்று பெருமைப்பட்டுக்கொள்கிறோம். ஆனால், மனிதர்களின் மலத்தை மனிதர்களே கையால் அள்ளும் கொடுமையை, இந்தச் சமூகம் எந்தவித குற்ற உணர்வும் இல்லாமல் கடந்துசெல்கிறதே...’’ என்று ஆதங்கப்படுகிறார் திவ்யா.

 இந்த ஆவணப்படத்தில் ஒலிக்கிற, “பேள மட்டும் நீங்க... அள்ள மட்டும் நாங்களா?” என்ற பாடல், நம் செவிளில் ஓங்கி அறைவதுபோல இருக்கிறது.

- பொன்.விமலா
ஓவியம்: ஹாசிப்கான்