கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகமே முடங்கியுள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் ஊரடங்கும் நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்தனர், தொழில்கள் முடங்கின.
இந்தநிலையில், கொரோனா நோய்த்தொற்று கட்டுக்குள் வராத நிலையிலும் வேறுவழியின்றிப் படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு விடுபட்ட தேர்வுகள் நடத்தப்படாமல் உள்ளன. அதேசமயம் பத்தாம் வகுப்பு தேர்வு நடத்த எதிர்க்கட்சிகள் உள்ளிட்டவை கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது.
அப்போது அக்டோபர், நவம்பர் மாதங்களில் கொரோனா நோய்த்தொற்று இன்னும் தீவிரமாக இருக்கும் என்பதால் இப்போதே தேர்வுகளை நடத்தி முடிப்பதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் பத்தாம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்ததோடு நடத்தப்படாமலே அனைத்து மாணவர்களும் தேர்ச்சிபெற்றதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதேசமயம் கேரளாவில் கடந்த மே 26 முதல் மே 30-ம் தேதிவரை எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுவிட்டன. பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி தேர்வுகளில் 13 லட்சம் மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.

இந்த மாதம் இறுதியில் தேர்வு முடிவுகள் வெளியாகும் எனக் கேரளக் கல்வித்துறை அறிவித்துள்ளது. ``தேர்வுகள் முடிந்து 14 நாள்கள் கடந்த பிறகும் மாணவ மாணவிகள் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை" எனக் கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். சாதாரணமா கொரோனா அறிகுறி தெரிய 14 நாள்கள் ஆகும் என்பதால் 14 நாள்களுக்குப் பிறகு அமைச்சர் தாமஸ் ஐசக் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தத் தகவலைப் பகிர்ந்துள்ளார்.
கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, ``கொரோனா நோய்த்தொற்று காலத்திலும் மாநிலத்தில் பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி தேர்வுகள் எந்தப் பாதிப்பும் இல்லாமல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. 14 நாள்களுக்கு முன்பு 13 லட்சம் மாணவ மாணவிகள் பொதுத்தேர்வை எழுதினார்கள். அதில் எந்த மாணவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.

அந்தத் தேர்வுகள் அனைத்தும் மிகவும் கவனமுடன் திட்டமிட்டு நடத்தப்பட்டன. அனைத்து வகுப்பறைகளும் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தப்பட்டன. அனைவருக்கும் மாஸ்க் வழங்கப்பட்டன. கட்டாய தெர்மல் ரீடிங் எடுக்கப்பட்டன. தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டது. இவற்றால்தான் ஆபரேஷன் சக்ஸஸ் ஆனது" எனப் பெருமிதத்துடன் பகிர்ந்துள்ளார் அமைச்சர் தாமஸ் ஐசக்.