
வாழும் சமூகத்துக்குப் பங்களிப்பு செய்யாதவர்கள் மக்கள் இல்லை, மாக்கள்!வழக்கறிஞர் அஜிதா
அப்பா அடிக்கடி சொன்ன வரி இது. அப்பா பி.வி.பக்தவச்சலம், காலம் முழுவதும் மனித உரிமைத்தளத்தில் இயங்கியவர். என்கவுன்டருக்கு எதிராகப் போராடியவர். அவரது செயல்பாட்டை முடக்குவதற்குத் தேசத்துரோக வழக்கெல்லாம் போட்டார்கள். அவர் தீவிர இடதுசாரி சிந்தனையுள்ளவராக இருந்ததால் வீடே எனக்குக் கற்கும் களமாகத்தான் இருந்தது. எப்போதும் வீட்டில் தோழர்கள் நிறைந்திருப்பார்கள். வீடு முழுவதும் புத்தகங்கள் இருக்கும். வார்த்தைகளும் வரிகளும்தான் என்னை வளர்த்தெடுத்தன.
1980-களில் தேவாரம் தலைமையிலான காவல்துறை, வட ஆற்காடு, தர்மபுரி மாவட்டங்களில் 24 தீவிர இடதுசாரித் தோழர்களை என்கவுன்டர் செய்தது. அப்போது, மக்கள் உரிமைக் கழகத்தின் மாநிலத் தலைவராக இருந்தார் அப்பா. அந்த அமைப்பு, என்கவுன்டர் கொலைகளுக்கு எதிராகப் பெரும் சட்டப்போராட்டத்தையும், மக்கள் திரள் போராட்டங்களையும் நடத்தியது. சுவாமி அக்னிவேஷ். தார்குண்டே போன்ற அகில இந்திய அளவிலான மனித உரிமைப் போராளிகள் பலரையும் ஒருங்கிணைத்து, உண்மை அறியும் குழு அமைத்து விசாரணை நடத்த, அப்பா காரணமாக இருந்தார். விசாரணை அறிக்கையை வெளியிட்ட தருணத்தில், அப்பாவைக் கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.

அப்போது நான் 6-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். மிகவும் சிரமமான காலகட்டம் அது. வீட்டில் சாப்பாட்டுக்குக்கூட கஷ்டம். காவல்துறை எப்போதும் எங்களைப் பின் தொடர்ந்தபடி இருக்கும். அதனால் உறவினர்கள்கூட எங்கள் வீட்டுக்கு வருவதை நிறுத்திவிட்டார்கள். 40 நாட்கள் கழித்து அப்பா விடுதலையானார். உறவினர்கள் பலரும் ‘‘இதெல்லாம் உங்களுக்குத் தேவையா?’’ என்று அவரிடம் கேட்டார்கள். அப்பா அப்போதும் சொன்னார்... “வாழும் சமூகத்துக்குப் பங்களிப்பு செய்யாதவர்கள் மக்கள் இல்லை, மாக்கள்... நான் மனிதனாகவே வாழ விரும்புகிறேன்!’’
சமீபத்தில் என்னை மிகவும் சிந்திக்கவைத்த, என் அரசியல் மற்றும் சமூகப் பார்வையில் திருத்தத்தையும், புரிதலையும் உருவாக்கிய இன்னொரு வரியைப் பற்றியும் நான் பதிவுசெய்ய வேண்டும். ‘குறிப்பிட்ட ஒரு `வகைமாதிரி’யை நிர்பந்தப்படுத்தாமல் இருந்தால், எதையும் சொல்வதற்கான தைரியம் வரும்!’
இது, பாலியல் தொழிலாளி நளினி ஜமீலா, தன் வாழ்க்கை வரலாற்று நூலில் சொன்னது. குளச்சல் மு.யூசுப் அதை தமிழ்ப்படுத்தி இருந்தார். பெண்ணியமும் முற்போக்கும் பேசுகிறவர்கள்கூட, ஒரு பெண் பாலியல் தொழிலாளியின், அல்லது மூன்றாம் பாலினமாக இருக்கக்கூடிய ஒரு திருநங்கையின் வாழ்க்கையில் இறங்கி, அவர்களின் பிரச்னைகளைப் பார்ப்பது இல்லை. அவர்களின் பிரச்னைகளுக்கு அடிப்படை இந்த சமூகம்தான் என்கிற புரிதல் இருப்பது இல்லை. அதை அப்பட்டமாக வெளிப்படுத்துகிற நூல் அது.
‘பெண் இப்படித்தான் இருக்க வேண்டும், இதைத்தான் பேச வேண்டும், இங்கேதான் செல்லவேண்டும்’ என்றெல்லாம் கருத்தாக்கங்களை வைத்திருக்கிறது சமூகம். அதற்கேற்ற வகைமாதிரிகளை உருவாக்கிக்கொண்டே இருக்கிறது. நல்ல பெண், நல்ல ஆண், நல்ல மாணவன், நல்ல மாணவி என்பதுபோன்ற வகைமாதிரிகளை உருவாக்கி, முன்னுதாரணமாக நிறுத்துகிறார்கள். இதனால், சுயமரியாதையுள்ள, தனித்தன்மை கொண்ட இளைய தலைமுறை உருவாக முடியாது.
பள்ளிகளில் கேள்வி கேட்காதவன், நல்ல மாணவன். அவன்தான் அங்கே வகைமாதிரி. கேள்வி கேட்டால் அவன் கெட்ட மாணவன். புறக்கணிக்கப்படுவான். ஆனால், இப்படி உருவாக்கப்படும் வகைமாதிரிகள், தங்கள் எல்லையைக் கடந்து ஓர் அடிகூட கூடுதலாக எடுத்துவைக்க முடியாது. யாரெல்லாம் இந்த வகைமாதிரிகளுக்குள் அகப்படவில்லையோ, அவர்கள்தான் மாற்றங்களை உருவாக்குபவர்களாக இருக்கிறார்கள். காந்தி, அம்பேத்கர், பெரியார் எல்லாம் அதுமாதிரியான வகைமாதிரிகளில் இருந்து தப்பியவர்கள். எல்லோரும் கோயிலுக்கு முடி காணிக்கை செலுத்திக்கொண்டிருந்தபோது, ‘திரும்பி வளரும்னுதானே முடியைக் கொடுக்குறே... சுண்டு விரலைக் கொடுத்துப் பாரேன்’ என்று பெரியார் சொன்னதுதான் மாற்றத்துக்கான அடிப்படை.
வகைமாதிரிகளையே உருவாக்கிக்கொண்டிருப்பதால்தான், இங்கே மாற்றங்கள் நிகழவே இல்லை. 120 கோடி பேர் வாழ்கிற நம் நாட்டில், மக்களின் வாழ்க்கையில் மாற்றங்களை நிகழ்த்தக்கூடிய 10 விஞ்ஞானிகள்கூட உருவாவதில்லை. ஆனால், வகைமாதிரிகளாக மாணவர்களைச் சுருக்காத ஜப்பான் போன்ற குட்டி நாடுகளில் ஒவ்வோர் ஆண்டும் நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகள் உருவாகிறார்கள்.
மத்தியில் பி.ஜே.பி அரசு வந்த பிறகு, இப்படி வகைமாதிரிகளை உருவாக்கும் வேலை தீவிரமாக நடந்து வருகிறது. இஸ்லாமியர்கள் என்பவர்கள் பிரச்னைக்குரியவர்கள்... போராடுபவர்கள் எல்லாம் நாட்டுப்பற்று இல்லாதவர்கள்... இயற்கை வளங்களைப் பாதுகாக்கப் போராடும் பழங்குடி மக்கள் வளர்ச்சிக்கு எதிரானவர்கள்... பெரும்பான்மை வாதத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் குற்றவாளிகள்... இப்படி வகைமாதிரிகளை உருவாக்கிக்கொண்டே இருக்கிறார்கள். பொதுவெளியில் மட்டுமல்ல... கல்வி நிறுவனங்கள், குடும்பங்கள், நீதிமன்றங்கள் என எல்லா இடங்களிலும் இது இருக்கிறது. வகைமாதிரிகள் இல்லாத தனித்தன்மை மிக்க சமூகம் மட்டும்தான் எதிர்காலத்தில் வலுப்பெற்று நிற்கும். அதைத் தன் வாழ்க்கை அனுபவங்களின் ஊடாக அற்புதமாக, அந்த வரியில் சொல்லியிருக்கிறார் நளினி ஜமீலா. நான் இப்போது அதிகம் உச்சரிக்கும் வரி அதுதான்.
- வெ.நீலகண்டன்
படம்: சொ.பாலசுப்ரமணியன்