
சுப.வீரபாண்டியன்

பக்குடுக்கை நன்கணியார் என்ற புலவர் எழுதிய, ஏழு வரி புறநானூற்றுப் பாடலின் இறுதியில் வரும் வரி இது. கல்லூரிக் காலத்தில் பாடப் புத்தகத்தில் பத்தோடு பதினொன்றாகப் படித்ததுதான். ஆனால், இன்று வரைக்கும் என் இதயத்தைவிட்டு அகலாத, தினமும் என் நினைவில் வந்து போகிற, வாழ்வோடு பொருத்திப் பார்க்கிற, வழிகாட்டுகிற வரியாக இதைத்தான் சொல்வேன்.
‘ஓர் இல் நெய்தல் கறங்க...’ என்று தொடங்கும் அந்தப் பாடல், வாழ்வின் யதார்த்தத்தை முழுமையாகப் படம் பிடித்துக்காட்டுகிறது. `இயற்கை எப்படிப்பட்டது என்றால், ஒரு வீட்டில் சாவுப்பறை ஒலிக்கும்... அதே தெருவில் இன்னொரு வீட்டில் திருமண முழவு ஒலிக்கும். இதற்காக அதையோ, அதற்காக இதையோ நிறுத்த முடியாது. திருமண வீட்டில், மணமகள் தலையெங்கும் பூச்சூடி இருப்பாள். சாவு வீட்டில் கணவனை இழந்த பெண், சூடிய பூக்களை எல்லாம் பறித்து கண்களில் நீர் தளும்ப நிற்பாள். என்ன செய்வது இந்த உலகத்தைப் படைத்தவன், பண்பே இல்லாதவனாக இருக்கிறானே’ என்று நீள்கிறது அந்தப் பாடல்.

இந்த இறுதி வரியில்தான் வாழ்க்கைக்கான தத்துவம் பொதிந்திருக்கிறது. ‘இந்த உலகம் கொடுமையானதுதான். ஆனால், அதற்குள் இருக்கும் இனிமையான வற்றைக் காணப் பழக வேண்டும். இந்த உலகத்தில் இன்பமும் துன்பமும் கலந்தே இருக்கும். அதற்காக துன்பத்தை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது’ என்கிறது இந்த வரி.
ஓஷோ ஓர் இடத்தில் கேட்பார்... “ரோஜா செடியில் முட்கள் இருக்கின்றன என்று சொல்வது உண்மை. அதற்காக ரோஜாவைப் பார்க்காமல் முள்ளையே பார்த்துக்கொண்டிருப்பவன் முட்டாள் இல்லையா?”
நானும் சில நேரங்களில் முள்ளை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தவன்தான். என்னை ரோஜாவைப் பார்க்கவைத்தது, மேற்கண்ட புறநானூற்று வரிதான்.
எவ்வளவு பெரிய வாழ்க்கையும் மரணத்தில் தான் முடியும். என்றால், இந்த வாழ்க்கையை இனிமையானது என்று எப்படிச் சொல்ல முடியும்? அதே நேரத்தில், மரணமே இல்லாத வாழ்வையும் யாரும் பரிந்துரைக்க முடியாது. `சாகாவரம் போல் சோகமுண்டோ... தீராக் கதையைக் கேட்பார் உண்டோ’ என்று ‘உத்தம வில்லன்’ படத்தில் கமல்ஹாசன் ஒரு பாடலை எழுதியிருப்பார். கதை முடியும் என்ற நம்பிக்கையில்தான் எல்லோரும் கதை கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். கதை முடியாது என்றால், ஒருவரும் கேட்கப்போவதில்லை. மரணம் துயரமானது. மரணமில்லாப் பெருவாழ்வு அதனினும் துயரமானது. இதைப் புரிந்தால், வாழ்க்கை இலகுவாகிவிடும்.
இத்தனை ஆண்டுகால அரசியல், சமூக, குடும்ப வாழ்க்கையில் நானும் பல துயரங்களைக் கடந்திருக்கிறேன். அந்தக் காலக்கட்டங்களில் எல்லாம் துன்பத்தில் அமிழ்ந்து போய்விடாமல் என்னை மீட்டு வழிகாட்டியதும், ‘உன் துன்பம் ஒன்றும் பெரிதில்லை, உன்னிலும் பெரும் துன்பத்தைப் பலர் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்’ என்று யதார்த்தத்தைப் புரியவைத்து, வாழும் நம்பிக்கையை விதைத்ததும் இந்த வரிகள்தான்.
நிறைய வாசிக்கிறேன். நிறையப் பேசவும் செய்கிறேன். பலர் பேசுவதையும் கேட்கிறேன். ஏராளமான வார்த்தைகளும் வரிகளும் என்னைக் கடந்து சென்றபடி இருக்கின்றன. எப்போதேனும் அவை வாழ்க்கையோடு பொருந்திப்போவதும், முடிவுகளை மாற்றுவதும், வாழ்க்கையைப் புரட்டிப்போடுவதும் உண்டு. ஆனால், பக்குடுக்கை நன்கணியாரின் மேற்கண்ட இந்த வரியை, தினமும் பலமுறை என் மனம் அசைபோடுகிறது. இது, எல்லாவற்றோடும் பொருந்தியும் போகிறது.
இந்த வரியை பலரிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறேன். ஒருமுறை, ஐயா கலைஞரிடம் பேசிக்கொண்டிருந்த வேளையில் இந்த வரியைப் பற்றி சொன்னேன். நான் கடைசி இரண்டு வரியைச் சொன்னபோது, அவர் பாடலின் முதல் வரியைச் சொல்லி, `அந்தப் பாட்டின் இறுதியில் வருமே, அதுதானேய்யா’ என்று கேட்டு சிறப்பித்துப் பேசிக் கொண்டிருந்தார்.
மருத்துவமனையிலிருந்து கலைஞர் வீட்டுக்கு வந்த பிறகு, தளபதி ஸ்டாலின் என்னை அழைத்துச் சென்றார். ‘`அப்பா... சுப.வீ வந்திருக்காருப்பா... உங்ககிட்ட இலக்கியம் பேசணும்னு வந்திருக்கார்’’ என்றார். கலைஞர் என்னை நிமிர்ந்து பார்த்தார். அவரால் பேச முடியவில்லை. ‘என்னைப் போல பல்லாயிரம் பேரைப் பேசவைத்த கலைஞரால் பேச முடியவில்லையே’ என்று நினைத்தபோது வேதனையாக இருந்தது. அப்போதும் எனக்கு நினைவுக்கு வந்தது, பக்குடுக்கை நன்கணியாரின் ‘இன்னா தம்ம இவ்வுலகம் இனிய காண்க இதன் இயல்புணர்ந் தோரே’ வரிதான்!
- வெ.நீலகண்டன்
படம்: பா.காளிமுத்து