மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஒரு வரி ஒரு நெறி - 4

ஒரு வரி ஒரு நெறி - 4
பிரீமியம் ஸ்டோரி
News
ஒரு வரி ஒரு நெறி - 4

மனுஷ்ய புத்திரன்

‘மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல்!’

ஜி.நாகராஜனின் இந்த வரியை சுமார் இருபதாண்டுகளுக்கு முன்பு முதன்முதலாகப் படித்தேன். மனிதர்களின் இருப்பு மற்றும் வாழ்வு குறித்து சொல்லப்பட்ட மிகச் சிறந்த வரிகளில் இதுவும் ஒன்று, இதைப் படித்ததும் சட்டென மனதில் ஒரு வெளிச்சம் பரவியது. திரும்பத் திரும்பப் படித்தேன். அதுவரை எனக்கு பதில் தெரியாத பல கேள்வி களுக்கு அந்த வரி பதில் தந்தது. ஆம், மனிதன் மகத்தானவன் தான்; அவனுடைய அத்தனை சிறுமைகளைத் தாண்டியும் அவன் மகத்தானவனே.

மனிதர்களைப் புனிதர் களாகக் கட்டமைக்கும் காலம் ஒன்று இருந்தது. அந்தப் புனிதம் அவர்களின் செயல்களாலும் சிந்தனைகளாலும் நம்பிக்கை களாலும் உருவாகிறது; அல்லது உருவாக்கப்படுகிறது. ஆனால், அந்தப் புனித பிம்பங்கள் ஒரு நொடியில் தகர்ந்து விடுகிறது. ஒரு குற்றச்சாட்டினாலோ அல்லது ஓர் அவதூறினாலோ கூட தகர்ந்து விழுந்துவிடுகிறது. யாரை நாம் கொண்டாடி னோமோ, அவர்களை ஒரே ஒரு சந்தேகத்தின் பேரில், அல்லது குற்றச்சாட்டின் பேரில், குப்பையில் எறியத் தயங்குவதில்லை. அந்த மனிதன் ஒரு மகத்தான தலைவனாக இருக்கலாம், மகத்தான கலைஞனாக இருக்கலாம், மகத்தான விளையாட்டு வீரனாக இருக்கலாம், மகத்தான போராளியாக இருக்கலாம். அவன் அந்த மகத்தான அடையாளத்தைப் பெறுவதற்குத்  தன் வாழ்க்கையையே பணயம் வைத்திருக்கலாம். ஆனால் அவனது ‘சல்லித்தனம்’ என்று சொல்லப்படும் ஏதோ ஒரு சிறுமையின் பொருட்டு அவனது அத்தனை மகத்துவங் களையும் காலில் போட்டு மிதிக்க வேண்டுமா?

ஒரு வரி ஒரு நெறி - 4

இது புகழ்பெற்ற மனிதர் களுக்கு மட்டுமல்ல, எளிய மனிதர்களுக்கும் பொருந்தும். மனிதர்களை நல்லவர்கள், மோசமானவர்கள் எனப் பிரிக்கும் அளவுகோல்கள் வாழ்க்கையில் எல்லா மட்டங்களிலும் கடுமையாக வரையறுக்கப்படுகிறன, வற்புறுத்தப்படுகின்றன. திடீரென உங்கள் வரையறை களுக்கு அப்பால் ஓர் ஆணோ, பெண்ணோ நடந்து கொண்டால், உடனடியாக அவர்களைத் தண்டிக்க ஆயத்தமாகிவிடுகிறீர்கள்; சமூக விலக்கம் செய்துவிடத் துடிக்கிறீர்கள். ஆனால் நாம் எந்தச் சிறுமைகளுக்காக  பிறரைத் தண்டிக்கவும் நிந்திக்கவும் துணிகிறோமோ, அதை நாம் வாழ்க்கையில் ஒருமுறைகூட செய்ய ஆசைப்பட்டது இல்லையா? அல்லது, அதைச் செய்ய துணிச்சலும் வாய்ப்பும் இல்லாததாலேயே, நாம் அவர்களைவிட மேலான வர்கள் ஆகிவிடுவோமா?

சல்லித்தனத்தை நாம் ஏற்கவேண்டும் என்பதில்லை. ஆனால், குறைந்தபட்சம் புரிந்து கொள்ள வேண்டும். ஒருவர் மீதான உயரிய எண்ணம் என்பது, ஒரு குறிப்பிட்ட துறையில் அவரின் சாதனை களோடு தொடர்புடையது. ஆனால், ஒரு மனிதனின் அனைத்து ஆசாபாசங்களும் ரகசிய விருப்பங்களும் அந்தச் சாதனைகளுக்குள் மறைந்து விடுமா? மனிதன் உண்மையில் தனது உன்னதங்களுக்கும் சிறுமைகளுக்கும் நடுவே போராடிக்கொண்டே இருக்கிறான்.

இன்றைய சமூக ஊடகங் களின் காலத்தில், எந்த மகத்தான மனிதனையும் ஒரு சல்லிப்பயலாகக் காட்டிவிட முடியும்; அவனது மொத்த வாழ்க்கையையும் ஒரு சல்லித் தனமாகச் சுருக்கிவிட முடியும். ஒரு புகைப்படமோ, ஒரு குரல் பதிவோ, வீடியோ பதிவோ, போதும்... ஒருவரை சிலுவையில் தொங்கவிட! ஒட்டுமொத்த சமூகமுமே யாரையாவது தினமும் சிலுவையில் தொங்க விட வெறியுடன் அலைந்து கொண்டிருக்கிறது. சல்லிப்பயல் களைத் தண்டிக்கும் சல்லிப்பயல்களின் உலகம்.

ஒட்டுமொத்த சமூகமும் ஒருவர் மீது கல் எறியும்போது, அந்த மனிதன் மீது நான் சற்று பரிவு காட்டவே விரும்புகிறேன். ஏனென்றால், ‘அந்தக் கல்லெறிகிற தருணம் மட்டுமே அல்ல, அந்த மனிதனின் வாழ்வு’ என்று நம்புகிறேன். சல்லித்தனமான மனிதர்களுக் கும் சில மகத்தான தருணங்கள் இருந்திருக்கும்தானே? அப்படி சிந்திக்கத் தொடங்கினால்தான் நாம் நீதியுள்ளவர்களாக நடந்துகொள்ள முடியும்.

மனிதர்களை அவர்களது குறைபாடுகளுடன் நேசிப்பதற்கு மகத்தான அன்பு ஒன்று வேண்டும். மனிதர்கள் வீழ்ச்சியடைகிறபோது - அது எதிரியாக இருந்தால்கூட உங்கள் மனதில் சஞ்சலம் வர வேண்டும். ஏனென்றால், வெற்றி - தோல்விகளுக்கு அப்பால் புரிந்துகொள்ளவும் நேசிக்கவும் ஒன்று இருக்கிறது. இந்த உலகமே கைவிட்டுவிட்ட ஒருவனுக்காக யாராவது ஒருவர் இருக்கத்தானே வேண்டும்?

நமது சல்லித்தனங்கள் நாமே உருவாக்கிக்கொண்டவை அல்ல. காலமும் சமூகமும் அவற்றை எந்நேரமும் நம்முள் விதைத்துக்கொண்டே இருக்கின்றன. அவற்றைக் கடப்பதில்தான் நமது மகத்துவங்கள் இருக்கின்றன.

நானும் ஒரு மகத்தான சல்லிப்பயல்தான்.

- வெ.நீலகண்டன்