மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஒரு வரி ஒரு நெறி - 5

ஒரு வரி ஒரு நெறி - 5
பிரீமியம் ஸ்டோரி
News
ஒரு வரி ஒரு நெறி - 5

கீதா இளங்கோவன்

“உன்னால் முடியும்... போய்ச் செய்!”

ப்போது நாங்கள் திருப்பூரில் இருந்தோம். அப்பா, நகராட்சியில் எழுத்தராக வேலை செய்தார். நான் நகராட்சிப் பள்ளியில் படித்தேன். இயல்பாகவே எனக்குத் தாழ்வு மனப்பான்மை இருந்தது. சரளமாக ஆங்கிலம் பேச வராது. எளிமையாகவே உடை உடுத்துவேன். தனியார் பள்ளி மாணவர்கள் பேசுகிற மொழியும் பாவனையும் என்னை மேலும் ஒடுங்கிப் போகச்செய்யும். தயங்கிப் பின்வாங்கி நிற்பேன். அப்போதெல்லாம் அம்மா சொல்வது, இந்த வரியைத்தான். இன்றைக்கும் அந்த வரியை அதே உறுதியோடும் நம்பிக்கை யோடும் என்னை நோக்கிப் பிரயோகித்துக்கொண்டே இருக்கிறார் அம்மா.

தாய்மை, கனிவு என எல்லா அம்மாக்களையும் போலத்தான் அவரும். ஆனால், மிகவும் கண்டிப்பானவர். பரிதாப மெல்லாம் பார்க்க மாட்டார். ‘எனது அனுபவம் உனக்குப் பொருந்தாது. உன் அனுபவமே உன்னை வழிநடத்தும்’ என்று சொல்லிக் களத்தில் இறக்கிவிடுவார். ‘எதைச் செய்தாலும் உன் மேல் நம்பிக்கை வைத்துச் செய்... உன்னால் முடியும்’ என்பார். அந்த வார்த்தைகள் மந்திரமாக மனதில் தங்கிவிட்டன.

அம்மா பெயர் பிரேமாவதி. ஆணோ, பெண்ணோ... பிள்ளைகள் சுயஅறிவுடனும் சுயசெயல்திறனுடனும் வளர வேண்டும் என்று திட்டமிட்டு எங்களை வளர்த்தார் அம்மா. இன்று நினைத்துப்பார்க்கும் போது புரிகிறது... என்னைவிட அம்மா என் மேல் நிறைய நம்பிக்கை வைத்திருந்தார் என்பது.

பள்ளியில் இருந்து  போட்டிகளில் பங்கேற்க என்னை அனுப்புவார்கள். தயக்கமும் பதற்றமுமாகக் கிளம்புவேன். `உன்னால் முடியும்... போய்ச் செய்’ என்று அம்மா சொல்லி அனுப்புவார். பரிசோடு திரும்புவேன். பத்தாம் வகுப்புத் தேர்வு. நன்றாகப் படிப்பேன் என்றாலும் பெரிய எதிர்பார்ப்புகள் ஏதும் இல்லை. `நிச்சயம் நீ முதல் மதிப்பெண் எடுப்பாய். உன்னால் முடியும்... போய்ச் செய்’ என்று வழியனுப்பி வைத்தார். பள்ளி அளவில் முதல் மதிப்பெண் பெற்றேன். பள்ளியில் மாணவர் மன்றத் தேர்தல் நடந்தது. ஒரு பிரிவு என்னை வேட்பாளராக நிறுத்தியது. வழக்கம் போலவே என் தாழ்வு மனப்பான்மை என்னைத் தடுத்தது. அம்மா இந்த வரிகளைச் சொன்னார். தேர்தலில் வெற்றி பெற்று மாணவர் தலைவர் ஆனேன். என் ஆளுமைத்தன்மைக்கு அடித்தளமாக இருந்தது அந்தத் தேர்தல்தான்.

ஒரு வரி ஒரு நெறி - 5

படிப்பை முடித்த பிறகு, `ஸ்பைஸஸ் இந்தியா’ இதழில் ஆசிரியராகச் சேர்ந்தபோதும் சரி... அங்கிருந்து மத்திய பத்திரிகைத் தகவல் அலுவல    கத்துக்கு மாறியபோதும் சரி... எல்லா தருணங்களிலும் என்னைத் தயக்கம் சூழ்ந்தே இருந்தது. அம்மாதான், தன் வார்த்தைகளால் அதை உடைத்தார். குடும்பத்தின் முதல் தலைமுறைப் பட்டதாரியாக, முதல் மத்திய அரசு ஊழியராக என்னை வார்த்தெடுத்தது அம்மாவின் அந்த வரிகள்தான்.

மாதவிடாய் பற்றி பேசுவதே அவமானம் அல்லது அசிங்கம் என்று கருதுகிற இந்தப் பொது வெளியில், அதுபற்றி பெண்களைப் பேசவைத்து ஆண்களுக்காக ஓர் ஆவணப் படம் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியபோது நான் முதன்முதலில் விவாதித்ததும் அம்மாவிடம்தான். அதில் எனக்கே நிறைய தயக்கங்கள் இருந்தன. மற்றவர்கள் எப்படி அதுபற்றி பேசுவார்கள் என்பதைவிட, நான் எப்படி அதைப்பற்றி மற்றவர்களிடம் பேசப் போகிறேன் என்ற கேள்வியே வழக்கம்போல என்னை சூழ்ந்து நின்றது. அம்மா அப்போதும் சொன்னார்... `இதை நீதான் செய்ய முடியும். உன்னால் முடியும்... போய்ச் செய்’.

`மாதவிடாய்’ ஆவணப் படத்தை எடுத்துவிட்டு, திரையிடுவதிலும் தயங்கி நின்றேன். அந்தத் தருணத்தில் திருப்பூரில் எல்லா உறவினர் களும் கூடும் ஒரு நிகழ்வு நடந்தது. `முதலில் அவர்கள் மத்தியில் படத்தைத் திரையிடு. அவர்கள் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்று பார்த்து விட்டு பிறகு முடிவுசெய்’ என்று அம்மாதான் வழிகாட்டினார். ஆண்கள், பெண்கள் வேறுபாடில்லாமல் படம் பார்த்துவிட்டு, அதை ஒரு பொது விவாதமாக்கினார்கள். அதன்பிறகுதான் இதைப் பொது வெளிக்குக் கொண்டுவரும் தைரியம் வந்தது. அந்தப் படம் நிகழ்த்திய விளைவுகளுக்குப் பிறகு, இப்போது குழந்தைகள் மத்தியில் தீண்டாமைக் கொடுமைகள் பற்றிய உரையாடலைத் துவக்கும் வகையில் இரண்டு ஆவணப்படங்களை எடுத்து முடித்திருக்கிறேன்.

கல்லூரியில் என் சீனியரான தோழர் இளங்கோவனை நான் இணையராகத் தேர்வுசெய்த போதும், அம்மா தயக்கம் இல்லாமல் எங்களை ஏற்றுக் கொண்டார்கள். குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் என்று முடிவெடுத்து, தனித் துவமான ஒரு வாழ்க்கையை நாங்கள் வாழ்கிறபோதும், எங்கள் மீதான பெருமிதம் குறையாமல் எங்களை ஏற்றுக் கொள்கிறார்கள்.

இன்றைக்கும் நான் பொதுவெளியில் தயக்கம் நிறைந்தவளாகவே நிற்கிறேன். அதே வரிகளைக் கொண்டுதான் அம்மா என்னை உடைத்துச் செதுக்குகிறார். அம்மா அருகில் இல்லாத நேரங்களில், அம்மாவின் குரலில் எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன், `உன்னால் முடியும்... போய்ச் செய்’!

- வெ.நீலகண்டன்

படம்: தி.குமரகுருபரன்