
ஒரு வரி ஒரு நெறி - 6 - “குழந்தைகளைக் கொண்டாடுவோம்!”
‘ஆயிஷா’ நடராஜன்
எனக்கு அறிவியலில் ஆர்வம் அதிகம். குறிப்பாக, இயற்பியலில். அத்துறை சார்ந்தே எதிர்காலத்தை அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற லட்சியத்தோடுதான் படித்தேன். பி.எஸ்சி. இயற்பியல் முடித்ததும், நான் எதிர்பார்த்த மாதிரியே ஒரு வேலை அமைந்தது. கரூரில், பஸ் பாடி பில்டிங் செய்யும் நிறுவனம் ஒன்றில் வேலை. அந்தத் துறையில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதுதான் அப்போது என் இலக்கு.
கல்லூரிப் பருவத்திலேயே எழுத்து தொற்றிக்கொண்டது. நிறைய படிக்கவும் தொடங்கி விட்டேன். கவிதைகள், சிறுகதைகள் என இதழ்களுக்கு எழுதவும் ஆரம்பித்தேன். ஆனால் குழந்தைகள் மற்றும் கல்வி பற்றிய என் பார்வை சராசரியாகவே இருந்தது. அதுகுறித்து நான் கூடுதலாக எதையும் சிந்திக்கவில்லை. `குழந்தைகள் தனித்த மனதுடையவர்கள், அவர்களுக்கும் உரிமைகள் உண்டு’ என்பது போன்ற புரிதல்கள் அப்போது எனக்கு இல்லை.
அது 1986 என நினைவு. கரூரில், ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் அங்குள்ள அரசு நூலகத்துக்குச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தேன். அப்படி ஒருநாள் என் தேடலில் கிடைத்த புத்தகம்தான், மாண்டிசோரி அம்மையார் எழுதிய `குழந்தைகளைக் கொண்டாடுவோம்’. நூலின் தலைப்பே என்னை ஈர்த்தது. இதுவரை நான் அறிந்திராத ஏதோவொரு புதுவெளி அந்த நூலுக்குள் இருப்பதை உணர்ந்தேன். பரபரவென விரல்கள், பக்கங்களைப் புரட்டத் தொடங்கின. என் எண்ணங்களை மட்டுமல்ல... வாழ்க்கையையே அந்தப் புத்தகம் புரட்டிப் போட்டு விட்டது. அன்று தொடங்கி இன்று வரைக்கும் குழந்தைகளைக் கொண்டாடுபவனாகவே நான் திரிந்து கொண்டிருக்கிறேன்.

அதுவரை பார்த்த வேலையை உடனடியாக ராஜினாமா செய்துவிட்டு, ஆசிரியன் ஆனேன். குழந்தைகளுடனேயே என் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளத் தொடங்கினேன். அதன்பிறகு என் எழுத்துகளில் எல்லாம் குழந்தைகளே இருந்தார்கள். வேறு திசையில் பயணித்துக்கொண்டிருந்த என்னை, ஆசிரியன் ஆக்கி, என் எழுத்தின் போக்கை மாற்றி, தொடர்ந்து குழந்தைகளின் உரிமைக்காகக் குரல் கொடுக்கச் செய்தது, குழந்தைகளின் வாழ்க்கையையே திரும்பித் திரும்பிப் பார்க்க வைத்தது... இப்படி எல்லாவற்றுக்கும் காரணமாக இருந்ததும் இருப்பதும் `குழந்தைகளைக் கொண்டாடுவோம்’ என்கிற அந்த வரிதான்.
படிக்கும்போது கல்லூரி விடுமுறைக் காலங்களில் பகுதிநேர ஆசிரியனாக வேலை செய்திருக்கிறேன். அறிவொளி இயக்கத்திலும் பங்காற்றி இருக்கிறேன். ஆனாலும், முழுநேர ஆசிரியராக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் வந்ததில்லை. ஆனால், அந்த வரியை உள்வாங்கிக்கொண்டே ஒரே ஆண்டில், என்னை நான் முழுமையான ஆசிரியராக மாற்றிக்கொண்டு விட்டேன்.
`குழந்தைகளைக் கொண்டாடுவோம்’ புத்தகத்தின் முதல் பக்கத்திலேயே மாண்டிசோரி அம்மையார் குறிப்பிடுவார்... `ஒரு நாடு, குழந்தைகளை எப்படி நடத்துகிறது என்பதை வைத்து, அந்த நாட்டின் ஜனநாயகத் தன்மையைப் புரிந்துகொள்ள முடியும்.’ குழந்தைகளைப் பொருட்டாகக் கருதுகிற சமூகம், அவர்களுக்கு சுதந்திரம் வழங்கி இயல்பாக நடத்துகிற சமூகம், சிறப்பான ஜனநாயகத் தன்மையைக் கொண்டிருக்கிறது என்று புரிந்துகொள்ளலாம்.
குழந்தைகளை `பெரும் சுமைகள்’ என்கிறான், ஹிட்லர். “எனக்கு 14 வயது ஆகும்வரை என் பெயரே `ஷட்டப்’ என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன்” என்று கூறுகிறார் சார்லி சாப்ளின்.
நம் சமூகமும் அப்படித்தான் இருக்கிறது. நம் பள்ளிகளும் சரி, வீடுகளும் சரி... எழுந்து நின்று பேச எத்தனிக்கிற குழந்தைகளை `ஷட்டப்’ என்று சொல்லி உட்கார வைக்கின்றன. பள்ளியில், `கையைக் கட்டு, வாயைப் பொத்து’ என்றுதான் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்கவே ஆரம்பிக்கிறார்கள். ‘குழந்தைகள் பேசுவதும், கேள்வி கேட்பதும் தவறு’ என்று வலிய ஒரு கருத்தாக்கத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். வகுப்பறைகள் குழந்தைகளை மிரட்டி, தங்களுக்கேற்றவாறு வளைத்து போதிக்க முயல்கின்றன,
அண்மையில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் மத்தியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றேன். அங்கே குழந்தைகளுக்கு `ஐயோ’ என்று கத்துவதற்குப் பயிற்சி கொடுத்தேன். இதைக் கத்தக்கூட கற்றுத் தரவில்லை நம் குழந்தைகளுக்கு. ஒருவன் காலை மிதிக்கிறான்... ஒருவன் பெண் குழந்தையைத் தொட முயற்சிக்கிறான் என்றால் கத்துவதற்குக்கூட குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்காத சமூகமாகத்தான் நாம் இருக்கிறோம்.
இந்தப் புரிதலை எல்லாம் எனக்கு அளித்து, என்னை குழந்தைநேயப் பண்பாளனாக, குழந்தைகளுக்கான எழுத்தாளனாக, குழந்தைகளை நேசிக்கும் ஆசிரியனாக... இன்னும் சொல்லப்போனால், நடராஜனாக இருந்த என்னை `ஆயிஷா’ நடராஜனாக மாற்றியது மாண்டிசோரி அம்மையார் எழுதிய ‘குழந்தைகளைக் கொண்டாடுவோம்’ என்ற ஒற்றை வரிதான்.
- வெ.நீலகண்டன்
படங்கள்: தேவராஜ்