
“இந்தச் சமூகம் அவ்வளவு சாதாரணமா நம்மை வாழ விடாது!”பிரித்திகா யாஷினி
சாதி மாறிக் காதலித்து, சமூகத்தின் எதிர்ப்பால் எங்கோ ஒரு மூலையில் அடையாளம் தொலைத்து வாழ்கிறவர்கள்... திறமை இருந்தும், முயற்சிகள் செய்தும், ஏதோ காரணத்தால் தோல்வியைத் தழுவுகிறவர்கள்... பணம் இல்லாத ஒரே காரணத்தால் படிக்க இயலாதவர்கள்... கணவனை இழந்து வாழும் இளம் விதவைகள்... இப்படி எத்தனையோ மனிதர்கள் இந்த வரியைக் கடந்தே வந்திருப்பார்கள். ஏன்... எல்லோருமே ஏதோ ஒரு சூழலில், ஒரு திடீர் நெருக் கடியில், இந்த வரியை மனதில் உருட்டியிருப்பார்கள்.
‘இந்தியாவிலேயே முதல்முறையாக சப்-இன்ஸ்பெக்டராகத் தேர்வு செய்யப்பட்ட திருநங்கை’ என்ற பெருமையோடு என் கனவு நிஜமாகி இருக்கிறது. என் கனவு கானல் நீராகுமோ என்று அச்சப்பட்ட ஒரு நள்ளிரவில்... ‘புறக்கணிப்பு’ என்ற அதிபயங்கர ஆயுதத்தோடு இந்தச் சமூகம் என்னைத் துரத்தி, வாழ்வின் விளிம்பில் கொண்டு நிறுத்திய அந்தத் துயர்மிகு நொடியில்... கணக்கில்லாமல் வழிந்த என் கண்ணீரை காற்று குடித்துக்கொண்டிருந்த வேளையில்... என் தோழி பானு, கொஞ்சமும் சலனமில்லாமல் சொன்னாள், ‘‘இந்தச் சமூகம் அவ்வளவு சாதாரணமா நம்மை வாழவிடாது பிரித்தி...”

எத்தனை சத்தியமான வார்த்தைகள். அதுவும், பிறப்பால் புறக்கணிக்கப்படும் திருநங்கைகளுக்கு!
மற்ற திருநங்கைகளுக்கு நிகழ்வதைப் போல, என் வீட்டில் பெற்றோர் என்னைக் கொடுமைப் படுத்தவில்லை. ஆனால், அவர்களால் அந்த திடீர் மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மனநல மருத்துவரிடம் அழைத்துப் போனார்கள். அந்த டாக்டரோ, எனக்குப் பைத்தியப் பட்டம் கட்டினார். மாற்றுப் பாலினம் பற்றி டாக்டருக்கு நான் வகுப்பு எடுக்க வேண்டியதாயிற்று. என் பெற்றோரின் மனநெருக்கடியைப் புரிந்துகொண்ட தருணத்தில், வீட்டைவிட்டு வெளியேறினேன்.
‘திருநங்கைகள் அவர்களாக விருப்பப்பட்டுதான் பாலியல் தொழில் செய்கிறார்கள், பிச்சை எடுக்கிறார்கள்’ என்று எல்லோரையும் போலவே நானும் அதுவரை நினைத்திருந்தேன். என் அத்தனை எண்ணங்களையும் அடியோடு புரட்டிப் போட் டது, சென்னை. கல்லூரியில் படிப்பைத் தொடர முடியாத அளவுக்குப் புறக் கணிப்புகள். எப்படி என் வீட்டிலிருந்து நானாக வெளியேறி னேனோ, அதைப்போலவே இந்தச் சமுதாயத்தில் இருந்தும் என்னை, தானாகவே விலக்கிக் கொள்ள வைத்தார்கள். நான் சந்தித்த பெரும்பாலான திருநங்கைகள், பாலியல் தொழில் செய்யவும், பிச்சை எடுக்கவும்தான் வழிகாட்டினார்கள். அவர்கள் மீது தவறு கிடையாது. அவர்களைக் குறைசொல்லவும் முடியாது. அதைவிட்டால் திருநங்கைகள் உயிர்வாழ வேறு எந்த நாதியும் இல்லாத சூழலை இந்தச் சமூகம் கட்டமைத்து வைத்திருக்கிறது. ‘எல்லா திருநங்கைகளும் விழும் பாழும் கிணற்றுக்குள் விழுந்துவிடக்கூடாது’ என்பதில் மட்டும் உறுதியாக இருந்தேன். அது சாத்தியம் என்று ஆணித்தரமாக நம்பினேன்.
முதன்முதலில் ஒரு பெண்கள் விடுதியில் வார்டனாக வேலை பார்த்தேன். வெறும் 3,000 ரூபாய் சம்பளம். மாடு மாதிரி அத்தனை வேலைகளையும் செய்யவேண்டும். ஆனால், நான் அங்கு தங்கக்கூடாது! நினைத்துப் பாருங்கள். இந்தச் சம்பளத்தை வைத்துக்கொண்டு எப்படி வாழ்வது? அந்த வேலையில் என்னால் வெகுகாலம் தாக்குப் பிடிக்கமுடியவில்லை. ‘நான் படித்த படிப்பு இருக்குடா...’ என்று ஆவேசமாக, என் சான்றிதழ் களைத் தூக்கிக்கொண்டு கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்கினேன். என்னைப் பெண் என்று நினைத்துப் பல்லைக் காட்டியவர்கள், சான்றிதழ்களில் இருந்த பெயரைப் பார்த்ததும் முகத்தைச் சுளித்துக் கொண்டு ‘‘அப்புறமா கால் பண்றோம்’’ என்று துரத்திவிட்டார்கள்.
நிர்கதியாக நின்றபோது, சில திருநங்கைகள் அறிவுரை சொன்னார்கள். ‘‘இது நாறப்பய சமூகம். நம்மளை நாமளா வாழவிட மாட்டானுங்க. நாங்க எல்லாம் இப்படி முட்டி மோதி மூக்கு உடைபட்டுதான் இந்தச் சாக்கடைக்குள்ள வந்து விழுந்துருக்கோம். பெத்தவங்களே நமக்கு எதிரியா இருக்கும்போது, யாரோ மூணாவது மனுஷங்க மட்டும் நம்மளை ஆதரிப்பாங்களா? நாங்க சொன்னப்பவே எங்க கூட வந்திருந்தா, இந்நேரம் நீ மகாராணி மாதிரி இருந்திருப்ப” என்றார்கள்.
ஒரு நாள் இரவில், வாழ்க்கையின் விளிம்பில் நின்று அழுது புலம்பிக்கொண்டிருந்தேன். அப்போது தான் என் தோழி பானு, ‘‘இந்தச் சமூகம் அவ்வளவு சாதாரணமா நம்மை வாழவிடாது’’ என்று சொன்னாள். அந்த வரி, எனக்குள் மின்னலைப் போல ஊடுருவியது. அதுவரை என் வாழ்வில் நடந்த அத்தனை நிகழ்வுகளையும் பிரதிபலிப்பதாக அந்த ஒரு வரி இருந்தது. அந்த வரியிலிருந்து எனக்குள் ஒரு பெருங்கோபம் பிறந்தது. ‘இந்தச் சமூகம் என்னை வாழ விடாதா? அதையும் பார்க்கிறேன். நான் வாழ்ந்து காட்டுவேன்’ என வெறியோடு போராட ஆரம்பித்தேன். புறக்கணிக்கும் இந்தச் சமூகத்தில், எனக்காகப் போராடி நீதி பெற்றுக்கொடுத்த வழக்கறிஞர் பவானி போன்றவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பது புரிந்தது. பெயர் மாற்றம், காவல்துறைத் தேர்வு என என் வாழ்வில் சில முன்னேற்றங்களை, அந்த வரியின் வாயிலாகத்தான் அடைந்தேன். ‘வாழ்ந்து காட்டுவேன்’ எனப் போராடாமல் இருந்தால், இந்தச் சமூகம் அவ்வளவு சாதாரணமாக நம்மை வாழவிடாது.
சந்திப்பு: எம்.புண்ணியமூர்த்தி
படம்: க.தனசேகரன்