மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஒரு வரி... ஒரு நெறி! - 8 - “வாயில இருக்கு வழி!”

ஒரு வரி... ஒரு நெறி! - 8 -  “வாயில இருக்கு வழி!”
பிரீமியம் ஸ்டோரி
News
ஒரு வரி... ஒரு நெறி! - 8 - “வாயில இருக்கு வழி!”

கவிஞர் அ.வெண்ணிலா

ப்பா அடிக்கடி சொன்ன வரி இது. இப்போது என் பிள்ளைகளிடம் நான் அடிக்கடி சொல்லும் வரியும் இதுதான். நாளை என் பிள்ளைகள் அவர்களுடைய பிள்ளைகளுக்குச் சொல்லும் வரியாகவும் இது இருக்கலாம். சிறு வயதில் இருந்தே என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது என்றாலும், வாழ்க்கையின் போக்கில் அப்படியே பொருந்திப்போகிற வரியாக இதை உணரத் தொடங்கியது 18 வயதில்தான்.

சென்னைப் பல்கலைக் கழகத்திற்குச் செல்ல வேண்டி இருந்தது. சென்னை வடக்கா, தெற்கா என்று தெரியாது. கையில் 50 ரூபாயைக் கொடுத்து, “வாயில இருக்கு வழி... போயிட்டு வா!” என்றார் அப்பா. அதிகம் பேசாத பெண்... பத்து, இருபது கிலோ மீட்டருக்கு அப்பால் பேருந்தில் பயணித்துப் பழகாதவள்... எவ்வித அச்சமும் தயக்கமும் இல்லாமல், `போய்ப் பழகு’ என்று அனுப்பி வைத்ததுதான், இன்று என் எல்லாப் பயணங்களுக்கும் அடிப்படையாக இருக்கிறது.

‘பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும்... இதெல்லாம் அவர்களின் கடமைகள்’ என சராசரிக் குடும்பங்களில் வகுத்து வைக்கப்பட்டிருக்கும் எந்த இலக்கணங்களும் எங்கள் வீட்டில் இருந்ததில்லை. அப்பாவின் அளவுக்குப் பக்குவப்படாத உறவுகள் எல்லோருக்கும், எங்கள் குடும்பம் சற்று மிரட்சி தரும். காதுபடவும், படாமலும் பேசுவார்கள். அப்பா தெளிவாகச் சொல்வார்... “யாரு எதைப் பேசினாலும் உன் நியாயத்தைப் பேசு... வாயில இருக்கு வழி!”

விமர்சனங்களைக் கேட்டுக்கொண்டு அமைதியாக வருவதை அப்பா விரும்ப மாட்டார்.

ஒரு வரி... ஒரு நெறி! - 8 -  “வாயில இருக்கு வழி!”

அப்பாவின் சிந்தனைகளும், விவேகமும், வேகமும், பிறரைக் கையாளும் லாகவமும் இன்று வரை எனக்கு மிகப்பெரும் படிப்பினைகளாக இருக்கின்றன. அம்மாவை ஆதிக்கம் செய்வார். ஆனாலும் அதில் ஒரு தோழமையும் நெருக்கமும் இருக்கும். வெறும் வார்த்தையில் இதைக் கடந்து விடமுடியாது. அப்பாவுக்கும் அம்மாவுக்கும் தனித்தனி சிந்தனைகள் இருந்தன. அது, அவர்களின் அன்பையும் அன்னியோன்யத்தையும் பாதிக்கவே இல்லை.

அப்பா பெயர், அம்பலவாணன். திராவிட இயக்கத்தில் தீவிரமாக இயங்கியவர். அதிகபட்சம் 100 கிலோ மீட்டருக்கு மேல் பயணித்து இராதவர். அமெரிக்க அரசியலையும், உலக பொருளாதாரத்தையும் ஆதாரம் காட்டிப் பேசுவார். அந்த அளவுக்கு வாசிப்பில் ஊறியவர். நிறைய எழுதவும் செய்தார். பெண் சுதந்திரம், பெண்ணியம் என்பதையெல்லாம் வெறும் வார்த்தைகளாக இல்லாமல், எங்களுக்கு வாழ்க்கையாகக் காட்டினார். 20 வயதில், நண்பரோடு சேர்ந்து நடத்திய சிற்றிதழுக்குப் பணம் கொடுப்பார். புத்தகம்போடுவதற்குப் பணம் கேட்டால், சீட்டுப் போட்டு எடுத்துத் தருவார். ‘திரும்ப வருமா... இது தேவையா?’என எந்தச் சிந்தனையும் அப்பாவிடம் இருந்ததில்லை.

சராசரியான குடும்ப வாழ்க்கை மீது எனக்கு நிறைய கேள்விகள் இருந்தன. நம்முடைய கனவுகள், சிந்தனைகளை எல்லாம் இன்னொரு சகஜீவிக்காக விட்டுக்கொடுக்க வேண்டுமா என்ற கேள்வி, எனக்குத் திருமணத்தின் மீது வெறுப்பை உருவாக்கி இருந்தது. என்னை முற்றுமுழுதாக சகித்துக்கொண்டு என் போக்கில் இயங்க அனுமதிக்கிற அப்பா போன்ற ஆண்கள் அரிதோ என சந்தேகித்தேன். முருகேஷ் அந்த எண்ணத்தைத் தகர்த்தார். அப்பாவின் இன்னொரு வடிவாக அவரைக் கண்டேன். என்னைப் போலவே பெரியாரை முழுமையாக ஏற்றுக் கொண்டவர். அந்தக் கொள்கைக்கு உட்பட்டே மணம் முடிக்கத் திட்டமிட்டோம். தாலி இல்லாமல், மந்திரம் இல்லாமல் இருவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டு சக பயணியாக இணைந்தோம். சடங்குகள் இல்லாத அந்தத் திருமணம், உறவுகளை அதிரவைத்தது.அப்போது எழுந்த விமர்சனங்களுக்கெல்லாம் தீர்வு, `வாயில இருக்கு வழி’தான்.

திருமணம், எங்கள் எந்த இயல்பையும் மாற்றவில்லை. எந்தச் சூழலிலும் முருகேஷ் எனக்கான முடிவுகளை எடுப்பதில்லை. அதேபோல் முருகேஷையும் முடிவுகளால் நான் ஆதிக்கம் செய்வதில்லை. எங்கள் பிள்ளைகளும் அதே சுதந்திரத்தோடு வளர்கிறார்கள்.

2007-ல் அப்பா இறந்து விட்டார். அவருடைய இறுதி ஊர்வலத்தில் நானும் நடந்தேன். பாதி வழியிலேயே திரும்பி விடுவேன் என்று உறவுகள் எதிர்பார்த்தார்கள். ஆனால், மயானம் வரைக்கும் சென்றேன். இறுதியில் அப்பாவுக்கு நானே இறுதிச் சடங்குகள் செய்தேன். கோபமுற்ற சில உறவினர்கள் பாதி வழியிலேயே திரும்பி விட்டார்கள். சிலர் முணுமுணுத்தார்கள். எல்லோருடைய கேள்விகளுக்கும் என்னிடம் பதில் இருந்தது. ‘என் அப்பா அவர். என் சுய உணர்வோடு என்னை வளர விட்டார். என் கவிதைகளைக் கொண்டாடினார். என் போக்கிலும் செயலிலும் மகிழ்ந்தார். ‘பெண்’ என்று சொல்லி இயல்பான என் சிறகுகளை அவர் எப்போதும் முறித்துப்போடவில்லை. பிறர் முறிக்க முயன்றபோதும் அனுமதிக்கவில்லை. இறுதி நிகழ்வை நான் செய்ய வேண்டும் என்பதே அப்பாவின் விருப்பமாக இருந்திருக்கும்.’

அப்பாதான் சொல்லிக் கொடுத்தார்... “வாயில இருக்கு வழி!”

சந்திப்பு: வெ.நீலகண்டன்
படம்: கா.முரளி