மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஒரு வரி... ஒரு நெறி! - 10 - “உன்னை யாரும் எதுவும் செய்ய முடியாது!”

ஒரு வரி... ஒரு நெறி! - 10 - “உன்னை யாரும் எதுவும் செய்ய முடியாது!”
பிரீமியம் ஸ்டோரி
News
ஒரு வரி... ஒரு நெறி! - 10 - “உன்னை யாரும் எதுவும் செய்ய முடியாது!”

கவிதா முரளிதரன்

‘ஊடகம்தான் எனக்கான துறை’ எனப் பள்ளிக்கூடக் காலத்திலேயே முடிவுசெய்திருந்தேன். என் பெரியப்பா டி.என்.கோபாலன் அப்போது ‘பயனியர்’ நாளிதழில் இதழியலாளராகப் பணியாற்றிக்கொண்டிருந்தார். நான் கல்லூரியில் படித்தபோது, ஒருநாள் பெரியப்பா அலுவலகத்தில் கொண்டுபோய்விட்டார் அப்பா. அந்த அலுவலகம், சென்னையின் பார்சன் காம்ப்ளெக்ஸில் ஒற்றை அறையில்தான் இயங்கிக்கொண்டிருந்தது. பல பத்திரிகையாளர்களும் வந்துபோகும் அங்குதான் இதழியலுக்கான அடிப்படைகளையும் வாழ்க்கையின் அடிப்படைகளையும் கற்றுக்கொண்டேன்.

கொஞ்சம் கொஞ்சமாகப் பத்திரிகையாளர் சந்திப்புகளுக்கு செல்லும் வரை என்னை வளர்த்துக்கொண்டேன். ஒருகட்டத்தில், இதழியல் துறையைவிட்டே வெளியேறி விடலாமா என்று நினைக்க வைத்த சம்பவம் ஒன்று நடந்தது.மூத்த பத்திரிகையாளர் ஒருவர், வரம்பு மீறி சில வார்த்தைகளைப் பேசினார். கடுமையான அதிர்ச்சியிலும் குழப்பத்திலும் இருந்த நான், பெரியப்பாவின் அலுவலகத்தை அடைந்த பிறகு வெடித்து அழுதேன். நான் சொன்ன விஷயத்தைக் கேட்டு பெரியப்பா பெரிதாகச் சிரித்தார். அது என்னை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கொஞ்சம் தண்ணீர் கொடுத்து என்னை ஆசுவாசப்படுத்திய பிறகு அவர் சொன்ன வார்த்தைகள்: ‘‘உன்னை யாரும் எதுவும் செய்துவிட முடியாது. துப்பாக்கி முனையில்கூட உன்னை யாரும் எதுவும் செய்துவிட முடியாது.”

ஒரு வரி... ஒரு நெறி! - 10 - “உன்னை யாரும் எதுவும் செய்ய முடியாது!”

அந்த நொடியில், அந்த வார்த்தைகள் உண்மையில் எனக்கு பெரும் நம்பிக்கையைத் தந்தன. ‘இதழியல் துறையை விட்டு வெளியேறக் கூடாது’ என்ற வைராக்கியத்தையும் தந்தன. ‘வாசிப்பும் அரசியல் தெளிவும் இருந்தால், பெண்களை யாரும் எதுவும் செய்ய முடியாது’ என்று பெரியப்பா நம்பினார். அவர் எனக்கு அளித்த இதழியல் பயிற்சியும், எங்களது தொடர்ச்சியான உரையாடல்களும் என்னை அதை நோக்கியே செலுத்தின. பாடப்புத்தகங்களைத் தாண்டி எதையும் பெண்கள் வாசிப்பதை ஒரு குற்றவுணர்வோடு அணுகும் சூழலிலிருந்து வந்த எனக்கு, அந்தப் பயிற்சி பல தெளிவுகளைத் தந்தது.

பெண்கள் எழுதுவதற்கு எழும் எதிர்ப்பைப் போலவே, வாசிப்பதற்கும் சமூகம் பல கட்டுப்பாடுகளை நுட்பமாக விதித்து இருக்கிறது. நாளிதழ்களையும் வார இதழ்களையும் மிகுந்த ஆர்வத்தோடு வாசிக்கும் என் அம்மா, காலையில் பத்திரிகைகள் வீட்டுக்கு வந்தவுடன் எடுத்துவைத்துக்கொண்டு உட்கார முடியாது. எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு, தனக்காகக் கொஞ்சம் நேரம் கண்டுபிடித்துத்தான் அவற்றை வாசிக்க வேண்டியிருக்கிறது. பலநேரங்களில் அதற்குள் அடுத்த இதழ் வந்துவிடும். சமீபத்தில் சென்னை வந்திருந்த என்னுடைய மாமியாரின் கண்ணில், வீட்டிலிருந்த `வடகரை’ நாவல்பட்டது. பகலில் நேரம் கிடைக்காமல், நள்ளிரவுகளில் மற்றவர்களின் தூக்கத்தைத் தொந்தரவு செய்யாத சின்ன விளக்கொளியில்தான் அந்த நாவலை அவர் வாசித்து முடித்தார்.

வாசிக்கும் பெண்கள், கேள்விகளை எழுப்புகிறார்கள். அதனாலேயே,  அவர்களைக்  ‘குடும்பப்பொறுப்பு இல்லாதவர்கள்’ என்று முத்திரை குத்தி முடக்கப் பார்க்கிறது சமூகம். அவர்களைக் குற்றவுணர்வுக்கும் ஆளாக்குகிறது. பெண்கள் திரைப்படம் பார்ப்பதோ, அல்லது  வேறு  எந்தப்  பொழுதுபோக்கையும் மேற்கொள்வதோ கூட சமூகத்தில் இப்படியொரு பதற்றத்தை ஏற்படுத்துவது இல்லை. இந்த முத்திரைகளுக்குப் பயந்து, ரகசியமாகவும் நள்ளிரவுகளிலுமே பெண்கள் வாசித்துக் கொண்டிருக்கிறார்கள். தொடர்ச்சியாகவும் சரியாகவும் வாசிக்கும் பெண்கள், அரசியல்ரீதியான தெளிவையும் பெறுகிறார்கள். அப்போது ‘அவர்களை யாராலும் எதுவும் செய்துவிட முடியாது’ என்பதுதான் பெரியப்பாவின் நம்பிக்கையாக இருந்தது. அவரின் அந்த வார்த்தைகளைப் பிடித்துக்கொண்டு தான் பல மிரட்டல்களையும், அச்சங் களையும் கடந்து வந்திருக்கிறேன்.

2000-களின் தொடக்கத்தில் சங்கர மட நிர்வாகத்தின் கீழ் இருக்கும் ஒரு கல்லூரியில் வெளிப்படையாக இருந்த சாதிரீதியான பாகுபாடுகளைப் பற்றி எழுதிய கட்டுரைக்குப் பிறகு வந்த வசவுகளையும் மிரட்டல்களையும் எதிர்கொள்ளவும், 2008-ல் இலங்கையில் போர் நடந்த சூழலில் தனியாகப் பயணித்த 10 நாட்களில் எதிர்கொண்ட நெருக்கடிகளிலிருந்து மீளவும் தேவையான ஆன்ம பலத்தை அந்த வார்த்தைகள் எனக்குத் தந்திருக் கின்றன. இடையிலும் அதற்குப் பிறகும் கூட பல சம்பவங்கள், பல நெருக்கடிகள்.

ஊடகத் துறையில் ஆர்வம் இருக்கும் இளம்பெண்கள் பலர் என்னைச் சந்திக்க வருவார்கள். பயம் காரணமாக ஊடகத்துறைக்கு வரத் தயக்கம் காட்டும் மாணவிகளைப் பல தருணங்களில் சந்திக்கிறேன். அவர்களுக்கு எல்லாம் நான் அந்த வார்த்தைகளையே ஒரு பாலபாடமாகக் கையளிக்கிறேன். ‘உங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது!’

சந்திப்பு: வெ.நீலகண்டன்
படம்: ஆ.முத்துக்குமார்