மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கடல் தொடாத நதி - 10 - 12 பி

கடல் தொடாத நதி - 10 - 12 பி
பிரீமியம் ஸ்டோரி
News
கடல் தொடாத நதி - 10 - 12 பி

அன்னக்கிளி ஆர்.செல்வராஜ்

கடல் தொடாத நதி - 10 - 12 பி

வாழ்க்கையில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும் முக்கியப் புள்ளியாக ஒரு பஸ்ஸைக் காட்டும் ‘12பி’ படம் உங்களுக்கு நினைவிருக்கும். என் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டதும் ஒரு 12பி.

சென்னையின் எல்டாம்ஸ் ரோட்டில் நான் தங்கியிருந்த வீட்டின் எண் அது. மாடியில் மேன்ஷன் போன்ற அமைப்பில் நிறைய ரூம்கள் இருக்கும். சினிமா தொடர்புடைய பல மனிதர்கள் அங்கே இருந்தனர்.

இரவு நேரங்களில் எழுதுவேன்... படிப்பேன். பகலில் என்னைத் தேடி சினிமா நபர்கள் வருவார்கள். சினிமா டிஸ்கஷன்களுக்குப் போவேன். எந்த நேரமும் மனம் தளராத முயற்சியில் இருந்த என்னை ஒருவர் கவனித்தபடி இருந்தார். அவர், அந்த வீட்டின் உரிமையாளர். அவர் என்னைப் பற்றி விசாரித்து ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார். அவருடைய மகளை எனக்கு மணம் முடித்துத் தருவதற்கான முடிவு.

சினிமா சான்ஸ் தேடும் பல நபர்கள் தங்கும் வீட்டின் சொந்தக்காரியே எனக்குச் சொந்தமாகிற சந்தோஷத்தில் மிதந்தேன். கல்யாண ஏற்பாடுகள் வேகமாக நடந்தன. என் சார்பாக அப்போது கல்யாண வேலைகளை எடுத்துப் போட்டுக்கொண்டு செய்தவர், ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த  பத்திரிகை நண்பர் ஒருவர். மண்டபம் புக் செய்வது, பத்திரிகை அடிப்பது, சமையல்காரர் ஏற்பாடுசெய்வது, மளிகைக் கடைக்கு ஆர்டர் கொடுப்பது என எல்லா வேலைகளையும் அவரே செய்தார்.

பத்திரிகை அச்சடித்து வந்ததும் யார் யாருக்கெல்லாம் பத்திரிகை அனுப்ப வேண்டும் எனக் கேட்டு அவரே எழுதினார். அப்படி ஒரு நண்பர்.

கடல் தொடாத நதி - 10 - 12 பி

மயிலாப்பூரில் திருமணம். காலையில் இருந்து அவருடைய வருகைக்காகக் காத்திருந்தேன். அவர் வரவே இல்லை. ‘இதோ வந்துவிடுவார்... அதோ வந்துவிடுவார்’ என நேரம் ஓடிக்கொண்டிருந்தது. டென்ஷன் அதிகமாகிக்
கொண்டே போனது. அவருக்கு என்ன ஆனதோ என்ற தவிப்பு... பதற்றத்தை மனத்துக்குள் அடக்கியபடி, மணக்கோலத்தில் அப்படியே வாசலுக்கு வந்து நிற்கிறேன். அப்போது, அந்த நண்பர் சர்வசாதாரணமாக அவருடைய ஸ்கூட்டரில் எங்கோ போய்க்கொண்டிருக்கிறார். ஓடிப்போய் நிறுத்தினேன்.

‘‘எங்கே போனீர்கள்... நேற்றில் இருந்து தவித்துக்கொண்டிருக்கிறேன்’’ என்றேன்.

‘‘என்ன விஷயம்?’’ என்று கேட்டார் சாதாரணமாக.

‘‘என்ன விஷயமா... இன்று என் கல்யாணம். நினைவில்லையா?’’

‘‘நினைவிருக்கிறது.’’

‘‘பிறகு ஏன் வரவில்லை?’’

‘‘நீதான் எனக்குப் பத்திரிகையே வைக்கவில்லையே?’’

‘ஒரு சொல் வெல்லும்... ஒரு சொல் கொல்லும்’ என்பார்கள். அப்படியே ஸ்தம்பித்துப் போய்விட்டேன். ‘அவர்தானே எல்லா வேலைகளையும் ஆரம்பத்தில் இருந்து எடுத்துச் செய்கிறார்... அவர்தானே பத்திரிகையே அடித்துக்கொண்டு வந்தார்... அவர்தானே எல்லோருக்கும் அனுப்பினார்’ என்று நினைத்தது எவ்வளவு பெரிய தவறு!

ஜப்பான் மீது அணுகுண்டு போடுவதற்கு முன் அமெரிக்க ராணுவத்தினர் விமானத்தில் இருந்தபடி, விமானதள கன்ட்ரோல் ரூமில் இருந்த ஜப்பானிய அதிகாரியிடம் கேட்டனராம்.

‘‘பணிந்து போகிறீர்களா? அல்லது, அணுகுண்டை வீசட்டுமா?’’

விமானதளத்தில் இருந்த ஜப்பானிய அதிகாரியால், உடனடியாக முடிவெடுக்க முடியவில்லை. ‘‘அவகாசம் வேண்டும். குண்டு வேண்டாம்’’ என்றார் அவர்.

ஜப்பானிய மொழியை மொழிபெயர்த்துச் சொல்வதற்கு அமெரிக்க விமானத்தில் இருந்தவர், இப்படி மாற்றிச் சொல்லிவிட்டார்: ‘‘அவகாசம் வேண்டாம்... குண்டு வேண்டும்.’’

இந்தத் தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பதற்குள் நான் போகவில்லை. ‘ஒரு சொல் ஒரு நாட்டையே அழிப்பதற்குப் போதுமானதாக ஆகிவிடும்’ என்பதற்கு உதாரணமாகச் சொல்லப்படும் கதை இது.

கல்யாணத்துக்கான எல்லா வேலைகளும் அந்த நண்பர் மூலமாக நடந்ததால், உடனே மீதிப் பணத்தை செட்டில் செய்ய வேண்டிய நெருக்கடி. சமையல்காரர், மந்திரம் ஓதுபவர், மளிகைக் கடைக்காரர் எல்லோரையும் இன்னும் சில மணி நேரத்தில் செட்டில் செய்து அனுப்ப வேண்டும். நண்பர்கள் இளையராஜா, பாஸ்கர் எல்லாம் மண்டபத்திலே இருந்தார்கள். பணம் ஏதாவது இருக்கிறதா எனக் கேட்டால், பரிசளிக்க எடுத்துவந்த எவர்சில்வர் டம்ளரை எடுத்துக் காட்டினார்கள். கல்யாண மனநிலையே போய்விட்டது. செம டென்ஷன். ஒருவழியாகக் கொஞ்சம் பணம் செட்டில் செய்துவிட்டு வீட்டுக்கு வந்தேன். என் அம்மா, அப்பாவைக் குரோம்பேட்டை வீட்டில் கொண்டுபோய்விட வேண்டும். டாக்ஸியை அழைத்தால், 60 ரூபாய் கேட்கிறான். அப்போதெல்லாம் கிண்டி வரைக்கும்தான் சென்னை லிமிட். நகர எல்லையைத் தாண்டுவதால், 60 ரூபாய்க்குக் குறைய மாட்டேன் என அடம்பிடித்தான். வழக்கமாக 40 ரூபாய்க்கு வருவார்கள். கல்யாண அவசரத்தைப் புரிந்துகொண்டு ரேட்டை ஏற்றுகிறான் என்பது புரிந்தது. ‘சரி, வா’ எனக் கிளம்பினேன். கையில் 50 ரூபாய்தான் இருந்தது. குரோம்பேட்டை போனதும் அங்கிருந்த என் செட்டு ஆட்களிடம் 40 ரூபாயைக் கொடுத்து, ‘‘60 ரூபாய் கேட்கிறான். 40 ரூபாய்தான் வழக்கமா எல்லோரும் கொடுக்கறது’’ என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் போய்விட்டேன். அந்த ஆட்கள் என்ன பண்ணினார்களோ... டிரைவர் 40 ரூபாயோடு போயே போய்விட்டார்.

கடல் தொடாத நதி - 10 - 12 பி

நான் எலெக்ட்ரிக் ரயிலைப் பிடித்து மாம்பலத்தில் இறங்கி, அங்கிருந்து பஸ் பிடித்து எல்டாம்ஸ் ரோட்டுக்கு வந்து சேர்ந்தேன். வந்தால், மதுரையில் இருந்து வந்த உறவினர்கள் ஊருக்குக் கிளம்ப நின்றார்கள். அவர்களை வழியனுப்ப வேண்டுமே?

பெண் வீட்டினர், மாப்பிள்ளை சாப்பிடுவதற்காக வெள்ளித் தட்டையும் வெள்ளிக் கிண்ணத்தையும் கொண்டுவந்து வைத்துவிட்டுப் போனார்கள். அப்போது என் பக்கத்தில் கவிஞர் முத்துலிங்கம் இருந்தான். ஒன்றாம் வகுப்பில் இருந்து உடன் படித்த நண்பன். அந்தத் தட்டையும் கிண்ணத்தையும் ஒரு பேப்பரில் சுருட்டிக்கொடுத்து, விற்றுவிட்டுவரச் சொன்னேன். ‘கல்யாணம் ஆன சில நிமிடங்களிலேயே இப்படிச் செய்யலாமா’ என்ற அதிர்ச்சி அவனுக்கு. 850 ரூபாய் விலையுள்ள அவற்றை 650 ரூபாய்க்குத்தான் விற்க முடிந்தது. ஊருக்குப் போக இருந்த உறவுகளுக்கு டிக்கெட்டுக்கும் சாப்பாட்டுக்கும் காசு கொடுத்து அனுப்பிவிட்டு, ஒரு ஃபுல் பாட்டில் வாங்கிக்கொண்டு அறைக்கு வந்து அப்படியே நாற்காலியில் சாய்ந்தேன். மனதெல்லாம் அலை அலையாக அன்று முழுதும் நடந்த அத்தனை சம்பவங்களும் ஓடின.

என் மனைவி சாவித்திரியின் உறவுப் பையன் ஒருவன் வந்தான். ‘‘இரண்டு க்ளாஸ் கொண்டுவா’’ என்றேன். ‘ஒரு ஆள்தானே இருக்கிறார்; எதற்கு இரண்டு டம்ளர் கேட்கிறார்’ என்ற குழப்பம் அவனுக்கு. இரண்டு டம்ளர்களிலும் சரக்கை நிரப்பினேன். ஒரு டம்ளரை எடுத்து, அந்தப் பையனிடம் கொடுத்து, அதை என் மனைவியின் தந்தையிடம் கொடுக்கச் சொன்னேன்.

பிராந்தி டம்ளரைக் கொடுத்தனுப்பியதற்கு என் மாமனார் ஒன்றும் சொல்லவில்லை. வாங்கிக் குடித்துவிட்டு கிளாஸைக் கொடுத்தனுப்பினார். இரண்டாவதாக இன்னொரு கிளாஸ் கொடுத்தனுப்பினேன். அதையும் குடித்துவிட்டு, ‘போதும்’ என்று சொல்லுமாறு பையனிடம் சொல்லி அனுப்பினார். திருமணம் ஆன முதல் நாளிலேயே என்னை அவருக்கும் அவருக்கு என்னையும் புரிந்து போய்விட்டது.

சந்திப்பு: தமிழ்மகன்

(ரீல் அல்ல ரியல்)

செக் புக்!

னக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது. என் பெற்றோரும், மாமனார், மாமியாரும்தான் எனக்குக் கடவுள். அவர்களின் படங்கள்தான் நான் வழிபடும் கடவுளின் படங்கள். ‘நாம் உருவானதற்குப் பெற்றோர்கள் காரணம். நாம் வளர்வதற்குப் புத்தகங்கள் காரணம்’ என்கிறார் ஓர் அறிஞர். பெற்றோருக்கு அடுத்தபடியாக நான் நேசிப்பது புத்தகங்களைத்தான். அதன் பிறகுதான் நண்பர்கள், உறவுகள் எல்லாமே!

என் அப்பாவுக்கு ஓர் ஆசை இருந்தது. அதை நிறைவேற்ற முடியாமல் போனதில் எனக்கு வருத்தம் உண்டு. ‘செக்கில் கையெழுத்துப் போட்டு பணம் எடுக்க வேண்டும்’ என்பதுதான் அந்த ஆசை. என்னிடம் நேரடியாகச் சொல்லியிருக்கலாம். யாரிடமோ சொல்லி, அவர் இறந்த பிறகுதான் என் காதுக்கு வந்து சேர்ந்தது. எத்தனை சுலபமான ஓர் ஆசை. அதை நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது. 10 பேங்குகளில் அக்கவுன்ட் ஆரம்பித்து, 10 செக் புத்தகங்கள் வாங்கித் தந்திருக்கலாமே எனப் பதைக்கிறது இப்போது.