மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஒரு வரி... ஒரு நெறி! - 13 - “எதுவும் சுலபமில்லை... ஆனாலும், எல்லாமே சாத்தியம்தான்!”

ஒரு வரி... ஒரு நெறி! - 13 - “எதுவும் சுலபமில்லை... ஆனாலும், எல்லாமே சாத்தியம்தான்!”
பிரீமியம் ஸ்டோரி
News
ஒரு வரி... ஒரு நெறி! - 13 - “எதுவும் சுலபமில்லை... ஆனாலும், எல்லாமே சாத்தியம்தான்!”

சாந்தி விளையாட்டு வீராங்கனை, பயிற்சியாளர்

இது ஹிட்லர் சொன்ன வரி. இந்த வரியை மட்டும் வாசிக்காமல் போயிருந்தால், எப்போதே அடையாளமற்றுப் போயிருப்பேன். எல்லாத் துயரங்களையும் அவமானங்களையும் புறக்கணிப்புகளையும் கடந்து என்னை வாழச்செய்வது, போராடச்செய்வது, இன்னும் இன்னும் என உழைக்கத் தூண்டுவது, இந்த வரிதான்.

12-ம் வகுப்பு படித்தபோது, ஹிட்லரின் போர் யுக்திகள் பற்றிய ஒரு புத்தகத்தில் பார்த்த இந்த வரி, பளீரென மனதுக்குள் நுழைந்து அமர்ந்துகொண்டது. வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும் இந்த வரி உருவாக்கிய தாக்கம் அழுத்தமானது. மிகுந்த ஏற்ற இறக்கங்களை மிகக் குறைந்த காலத்திலேயே கடந்தவள் நான். ‘இந்தியாவின் மகள்’ எனக் கொண்டாடியவர்கள், அடுத்த சில தினங்களில் பாதாளத்தில் தூக்கி எறிந்தார்கள். என் ஆன்மா பலவந்தமாகக் கொலை செய்யப்பட்டது. அப்போதெல்லாம் என்னை ஆற்றுப்படுத்தி வாழத் தூண்டியது இந்த வரிதான்.

புதுக்கோட்டைக்குப் பக்கத்தில் இருக்கிற கத்தக்குறிச்சி என்ற சிற்றூரில் பிறந்தவள் நான். செங்கற்சூளையில் வேலை செய்து கிடைக்கும் ஊதியத்தில்தான் குடும்பம் ஓடியது. சூளைகளில் மண் குழைத்து, கல் வடித்து, சுட்டு அடுக்கித்தான் என் பால்யம் கழிந்தது. மூன்று தங்கைகள், ஒரு தம்பி என பெரிய குடும்பத்தில் என்னை மட்டும் சிரமப்பட்டுப் படிக்க வைத்தார் என் அப்பா. 

ஒரு வரி... ஒரு நெறி! - 13 - “எதுவும் சுலபமில்லை... ஆனாலும், எல்லாமே சாத்தியம்தான்!”

என் பதிமூன்றாவது வயதில் எனக்குள் இருந்த விளையாட்டு வீராங்கனையைக் கண்டுபிடித்தார், வல்லத்திராக்கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளியின் விளையாட்டு ஆசிரியர் பழனிவேல். அப்போது தொடங்கிய ஓட்டம்... பள்ளி, கல்லூரி என எல்லாக் களங்களிலும் ஓடினேன். பல்கலைக்கழகங்களின் அளவில் பல சாதனைகளைப் பதிவுசெய்தேன். என்னை ‘தமிழகத்தின் பி.டி.உஷா’ என்று அழைப்பார்கள். 12 சர்வதேச மெடல்களைப் பெற்றேன். 2006-ல் தோஹாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டி, ஒரு முடிவில் என்னை நிறுத்தியது. அத்லெட்டிக்கில் முதல் பதக்கம் வென்ற தமிழ்ப்பெண்ணாக மகிழ்ச்சியை உணரக்கூட விடாமல் என்னைச்சுற்றி பெரும் சதிவலை பின்னப்பட்டது. என்ன நடக்கிறது, ஏன் நடக்கிறது என எந்தக் கேள்விக்கும் எனக்குப் பதில் கிடைக்கவில்லை. முற்றிலுமாகக் கைவிடப்பட்டேன்.

நம்பிக்கையூட்டி எழுப்பிவிட்டது ஹிட்லரின் அந்த வரி. எங்கிருந்து ஓட்டத்தைத் தொடங்கினேனோ, அதே இடத்துக்கு மீண்டும் வந்தேன். மீண்டும் அதே செங்கற்சூளை. ஆனாலும், நான் முடங்கிப்போகவில்லை. ஒரு கட்டத்தில் என் குரல் சமூகத்தின் காதுகளில் விழுந்தது. ஒரு தொண்டு நிறுவனம், செங்கற்சூளையில் இருந்து என்னை மீட்டு குடிசைப் பகுதிக் குழந்தைகளுக்குப் பயிற்சி அளிக்கும் பணியை அளித்தது. சூளையின் வெம்மையில் இருந்தும், ஆற்றாமையில் இருந்தும், எனக்கு விடுதலை கிடைத்தது.

ஊடகங்கள் எனக்கான நியாயத்தைப் பேசத் தொடங்கின. அதன் விளைவாக அரசு என்மீது கவனம்கொண்டது. பெங்களூரில் பயிற்சியாளருக்கான படிப்பில் சேர்க்கப்பட்டேன். இப்போது சென்னை நேரு ஸ்டேடியத்தில் அத்லெட்டிக் கோச்சாக இருக்கிறேன். மீண்டும் உயிர்த்தெழுந்திருக்கிறேன். காரணம், ஹிட்லர். அவர் சொன்ன அந்த வரி. அது கொடுத்த சக்தி. 

என் பட்டனுபவங்கள் எனக்கு சில விஷயங்களை உணர்த்துகின்றன. விளையாட்டுத் துறையில் ஒருவர் ஜெயிக்கவும், நீடிக்கவும் திறமை மட்டும் போதாது. சாதி, மதம், பணம், அரசியல் என ஏகப்பட்ட காரணிகள் இருக்கின்றன. இங்கு திறமைக்குக் குறைவே இல்லை. சின்னச் சின்ன கிராமங்களில்கூட மிகச் சிறந்த உடற்திறன் கொண்ட இளைஞர்கள் இருக்கிறார்கள். உலகத்தின் ஆகப் பெரிய வீரர்களோடு ஒப்பிடும் திறன் மிக்க வீரர்கள் இங்கே உண்டு. ஆனால், அவர்களுக்கெல்லாம் வாய்ப்புக் கிடைக்கவில்லை. அவர்களுக்காக யாரும் பேசுவதே இல்லை.

அநீதி இழைக்கப்பட்ட, அங்கீகாரம் மறுக்கப்பட்ட ஒரு வீராங்கனையாக எனக்குச் சில பொறுப்புகள் இருக்கின்றன. திறன்மிக்க இளைஞர்களை உருவாக்கி உலக அரங்கில் ஓடச் செய்ய வேண்டும். குடிசைப் பகுதிகளிலிருந்தும்,கிராமங்களிலிருந்தும் திறமைசாலிகளைக் களத்துக்குக் கொண்டு வர வேண்டும். அவர்களுக்கு வெளிச்சம் தர வேண்டும். நான் தொடாத தூரங்களை அவர்கள் தொட வேண்டும்.இப்போது தமிழகத்தில் அதற்கான நற்சூழல் நிலவுகிறது. மாவட்டத்துக்கு மாவட்டம் விளையாட்டு விடுதிகள் திறக்கப்பட்டுள்ளன. திறன் வாய்ந்த பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். நிறைய நிதி ஒதுக்கீடும் வழங்கப்படுகிறது.

இப்போது என்னிடம் 45 வீரர்கள் பயிற்சி பெறுகிறார்கள். நாங்கள் நிர்ணயித்திருக்கும் இலக்கு 2024. அது இந்தியாவின் ஆண்டாக இருக்கும். ஆசிய விளையாட்டுப் போட்டியிலும், ஒலிம்பிக் போட்டியிலும் என் வீரர்கள் ஓடுவார்கள். கைநிறைய மெடல்களோடு இந்தியாவுக்குத் திரும்புவார்கள்.

அதற்குள், எனக்கும் நியாயம் கிடைத்துவிடும். என்னிடம் இருந்து பறிக்கப்பட்ட ஆசிய விளையாட்டுப் போட்டியின் வெள்ளிப் பதக்கம் மீண்டும் எனக்குக் கிடைக்கும். நான் தீர்க்கமாக நம்புகிறேன். ‘எதுவும் சுலபமில்லை... ஆனால், எல்லாமே சாத்தியம்தான்!’

சந்திப்பு: வெ.நீலகண்டன்
படம்: சொ.பாலசுப்பிரமணியன்