மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஒரு வரி... ஒரு நெறி! - 15 - “நீயெல்லாம் யார்கிட்டப் போய் சீரழியப் போறியோ!”

ஒரு வரி... ஒரு நெறி! - 15 - “நீயெல்லாம் யார்கிட்டப் போய் சீரழியப் போறியோ!”
பிரீமியம் ஸ்டோரி
News
ஒரு வரி... ஒரு நெறி! - 15 - “நீயெல்லாம் யார்கிட்டப் போய் சீரழியப் போறியோ!”

பாலபாரதி சி.பி.எம் முன்னாள் எம்.எல்.ஏ

‘‘நான் பிறந்தது பின்தங்கிய விவசாயக் குடும்பம். அப்பெல்லாம் கூட்டுக் குடும்பமா வாழறதை பலமா நெனச்சாங்க. அந்த மாதிரியான குடும்பங்கள்ல நிறைய குழந்தைகள் இருப்பாங்க. எல்லோருக்கும் வீட்டு வேலைகளைப் பிரிச்சுக் கொடுப்பாங்க. எனக்கும் அப்படியொரு வேலை வரும். அடுப்பு ஊதுற வேலை. விறகு அடுப்பில் ஊதுகுழலால ஊதிட்டே இருக்கணும். அடுப்பு ஊதுறது அவ்வளவு சாதாரணமான வேலையில்ல. மூச்சுப்பிடிச்சு ஊதணும். அப்படி ஊதும்போது அடுப்பில் இருந்து புகை கிளம்பி கண்ணுல பரவும். எரிச்சலால் கண்ணுல தண்ணீர் வடியும். இருமல் வரும். இதையெல்லாம் பொறுத்துக் கிட்டு சமையல் முடிக்கிற வரைக்கும் அடுப்பை ஊதிக்கிட்டே இருக்கணும். கூட்டுக் குடும்பங்கள்ல வீட்டு வேலை, தோட்ட வேலை ரெண்டையும் பெண்களே செய்யணும். பங்காளிச் சண்டை வந்தா முதல்ல அடி வாங்குறதும் பெண்ணாத்தான் இருப்பா.

ஒரு வரி... ஒரு நெறி! - 15 - “நீயெல்லாம் யார்கிட்டப் போய் சீரழியப் போறியோ!”

ஆனா, நான் அடுப்பு ஊதுற வேலையில இருந்து தப்பிச்சு ஓடிடுவேன். அப்போ வீட்டுல இருக்கிற பெண்கள் ‘நீயெல்லாம் யார்கிட்டப் போய் சீரழியப் போறியோ’ன்னு சொல்லுவாங்க. திருமணம் வரைக்கும் இந்த வார்த்தை கிராமத்துப் பெண்களைத் துரத்திட்டே இருக்கும். ‘திருமணத்துக்குப் பின் மாமியார் வீட்டில் போய் கஷ்டப்படப் போகிறாய்’ என்ற அர்த்தத்தில் இந்த வார்த்தை சொல்லப்பட்டது. அன்றைக்குப் பெண்கள் செய்த வீட்டு வேலைகள் சாதாரணமானவை அல்ல. கிணற்றில் இறங்கித் தண்ணீர் எடுத்து வரணும். கம்பு, சோளம் குத்தணும். ஆட்டுறது, அரைக்கிறது, துவைக்கிறதுன்னு பெண்கள் கடுமையா உழைச்சாங்க. கிராமங்கள்ல திண்ணைப் பிரசவம் நடக்கும். அந்தப் பிரசவத்தில் அதிக ரத்தப்போக்கு காரணமா உயிரையேவிட்ட பெண்கள் இருக்காங்க. அவங்க நினைவா கிராமங்கள்ல சுமைதாங்கிக் கற்கள் வைப்பாங்க. அந்தக் கற்களை இன்னிக்கும் கிராமங்கள்ல பார்க்கலாம். இன்னொரு பக்கம் குடும்பப் பிரச்னையால பெண்கள் கிணற்றில் விழுந்து தற்கொலை பண்ணிக்கிற சோகங்களையும் பார்த்திருக்கேன். `ஒரு பெண்ணுக்குக் குடும்பத்துக்குள் இத்தனை கஷ்டங்களா’ என மனதில் பயம் ஏற்பட்டது. இந்த மாதிரியான குடும்ப அமைப்புல மாட்டிக்கக் கூடாதுன்ற எண்ணம் அப்பவே எனக்குள்ளே உறுதியாயிடுச்சு.  எல்லோரும் சமையல் கத்துக்கச் சொல்லி வற்புறுத்துன காலத்துல நான் கிணற்றில் நீச்சல் கத்துக்கப் போனேன். சைக்கிள் ஓட்டக் கத்துக்கிட்டேன். புத்தகங்கள் படிக்கிறதுல ஆர்வமா இருப்பேன். `பெண்களை மிக மோசமாக அடிமைப்படுத்தக் கூடியது, அதே சமயத்தில் சலிப்பூட்டக் கூடியது சமையல் வேலை’ என்று லெனின் தன்னோட புத்தகத்தில் சொல்லியிருந்தார். அந்தக் கருத்து என்னை ரொம்ப ஈர்த்தது. `பெண் முதலில் சமையல்கட்டிலிருந்து விடுதலை அடைய வேண்டும்’ என்று எனக்குள் ஆழமாகப் பதிந்தது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நான் எம்.எல்.ஏ ஆன பிறகு என்னைப் பேட்டி எடுக்க வர்றவங்க தோட்டத்தில், வீட்டில்னு பலவிதமா போட்டோ எடுப்பாங்க. கடைசியில் சமையல்கட்டுல வேலைசெய்யுற மாதிரி போட்டோ எடுக்கணும்னு கேட்பாங்க. எனக்குச் சிரிப்பா வரும். பெண்ணைச் சமையல் வேலையோடும், சமையலோடும் தொடர்புபடுத்திப் பார்க்கிற மனநிலை இன்றைக்கும் ஆழமா இருக்கு. தனி மனுஷியா வாழறது எனக்குச் சமையல்கட்டிலிருந்து விடுதலை கொடுத்திருக்கு. நான் என் அண்ணன் குடும்பத்தோட இருக்கிறேன். வீட்டில் இருக்கும்போது நான் சமைக்கிறதில்லை. கட்சி வேலைகள், போராட்டங்கள் என வெளியிடங் களுக்குப் போகும்போது சமைக்கிற கட்டாயம் எனக்கில்லை. குடும்ப அமைப்புக்குள் இருந்திருந்தால் கணவனுக்காக, குழந்தைக்காக என்று சமைத்திருக்க வேண்டிய கட்டாயம் இருந்திருக்கும். இப்போ என்னை யாரும் சமைக்கச்சொல்லி கட்டாயப்படுத்த முடியாது. `நீயெல்லாம் யார்கிட்டப் போய் சீரழியப் போறியோ’ என்ற வார்த்தைகளை இப்போ நினைச்சாலும் சிரிப்புதான் வருது.

பெண்களுக்கு எவ்வளவோ திறமைகள் இருக்கு. திருமணத்துக்குப்பின் தன் திறமையை பல பெண்கள் வெளிப்படுத்த முடியாம போயிடுது. குடும்பம், ஆண் - பெண் சமத்துவத்தை ஏத்துக்கிற இடமா மாறணும். இன்னிக்குப் பெண்களுக்கு நம்பிக்கை தரும்விதமா குடும்ப அமைப்பு இல்லை. குடும்ப அமைப்பில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டியிருக்கு. இந்த மாற்றம் கல்வித்திட்டத்திலிருந்து தொடங்கணும். குழந்தை வளர்ப்பில் வெளிப்படணும்.  குடும்பங்கள்ல ஒரு காலத்தில் மாமியார் கொடுமை வலிமையா இருந்தது. பெண்களுக்கு எதிரா மாமியார் செய்த வேலையை, இன்னிக்குப் பொருளாதார நெருக்கடி செய்யுது.  

பொது வாழ்க்கைக்கு இடையூறா இருக்குங்கிற தால நான் திருமணம் செய்துக்கலை. நான் ஒரு குடும்பத்தை ஏற்கவில்லையே தவிர, பல குடும்பங்கள்ல பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்காகப் போராடிட்டுத்தான் இருக்கேன். இனி எந்தப் பெண்ணும் யார் கிட்டயும் போய் சீரழியக் கூடாதுங்கிற வேகமே என்னை இயக்குகிறது!’’

சந்திப்பு: யாழ் ஸ்ரீதேவி
படம்: வீ.சிவக்குமார்