ஒரு வரி... ஒரு நெறி! - 16 - “இழப்பதற்கு ஒன்றுமில்லை... உன் அடிமைச் சங்கிலியைத் தவிர!”

சி.மகேந்திரன், சி.பி.ஐ. தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர்
இன்று இந்தச் சமூகம் பார்க்கும், புரிந்து கொள்ளும் மகேந்திரனாக நான் இருப்பதற்கு இந்த வார்த்தைகள்தான் காரணம். இந்த வார்த்தைகள்தான் என் வாழ்க்கைக்கு வெளிச்சம் பாய்ச்சின. இந்த 64 வயதிலும் என்னைத் தொடர்ந்து இயக்குகின்றன. அடக்குமுறைக்கு எதிராகத் தீவிரமாகப்போராடத் தூண்டுகின்றன.
இந்த வரி எனக்கு அறிமுகமானபோது, நான் தஞ்சாவூர் செல்வராஜ் பள்ளியில், 9-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். ‘நேர் நேர் தேமா... நிரை நேர் புளிமா’ என்று வகுப்பெடுத்துக் கொண்டிருந்த என் தமிழாசிரியர் சண்முகானந்தம், அந்த இலக்கணத்தின் ஊடாகச் சொல்லிய வரி, “இழப்பதற்கு ஒன்றுமில்லை... உன் அடிமைச் சங்கிலியைத் தவிர!”
உண்மையில், எனக்கு அப்போது அந்த வார்த்தைகளின் அடர்த்தியான அர்த்தம் புரியவில்லை. விடுதலைக்கான வார்த்தைகள் என்ற அளவில் மட்டும் புரிந்து கொண்டேன்.

பிறகு புகுமுக வகுப்பு (பி.யூ.சி) சேர்ந்தேன். அந்த நேரத்தில்தான் எனக்கு கம்யூனிசம் அறிமுகமானது. அப்போதுதான் தெரிந்தது... ‘இந்த வரி, கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையில், மார்க்ஸாலும், ஏங்கல்ஸாலும் கையாளப்பட்ட வரி’ என்று. பிறகு ஆசிரியர் சண்முகானந்தத்தைத் தேடிச் சென்று சந்தித்து, தொடர்ந்து உரையாடல் நிகழ்த்தத் தொடங்கினேன். அவர்தான் அந்த வார்த்தைகளுக்குள் பொதிந்துள்ள ஆழமான அர்த்தத்தை, ஒடுக்குமுறையின் குருதி படிந்த நீண்ட வரலாற்றுடன் பொருத்தி விளக்கினார். இவை ‘விடுதலை வெளிச்சத்துக்கான வார்த்தைகள்’ என்று புரிய வைத்தார். உலகத் தலைவர்களை அறிமுகப்படுத்தினார்.
அதன்பின், சுதந்திரப் பெருவெளியை நோக்கிய என் தேடல் அதிகமானது. என்னுடைய வாசிப்புகள், பயணங்கள், செயல்பாடுகள் என அனைத்தும் இந்த வரியிலிருந்து புதிதாகத் தொடங்கின. நான் பார்க்கும் அனைத்தையும், வேறு வடிவத்தில் புரிந்துகொள்ளத் தொடங்கினேன்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர்கள் அமைப்பான மாணவர் பெருமன்றத்தில் இணைந்து, முழு நேர அரசியல் செயற்பாட்டாளராக மாறியபிறகு, தேசங்களின் வரலாறுகளைப் படித்தேன். தேசத்தின் எல்லைகள் கடந்து, உலகம் முழுவதும் வல்லாதிக்கம் மக்களைத் தன் கட்டுக்குள் வைத்திருக்கிறது. நமக்கே தெரியாமல் வெவ்வேறு வடிவங்களில், புதிது புதிதான அடிமைச் சங்கிலிகளால் நம்மைக் கட்டிப்போட்டு இருக்கின்றன. பொருள் குவிப்பது ஒன்றே ஆதிக்க சக்திகளின் நோக்கம். ஒவ்வொரு காலகட்டத்திலும், மக்கள் இந்தச் சங்கிலிக்கு எதிராக வெடித்து எழுந்துகொண்டே இருக்கிறார்கள் என்று தெரிந்துகொண்டேன். அந்தச் சங்கிலியை உடைப்பதற்கான பணியில், உத்வேகத்துடன் செயல்படத் தொடங்கினேன். இன்றும் தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறேன்.
ஒரு வரி, அதைச் சொல்லிக்கொடுத்த ஆசிரியர், அதிலிருந்து வேறு பரிமாணத்துக்குச் சென்ற மகேந்திரன்... இந்த மூன்று கதாபாத்திரங்கள் மூலம் நீங்கள் இன்னொரு விஷயத்தையும் புரிந்துகொள்ளலாம். பள்ளியோ, கல்லூரியோ, அப்போதெல்லாம், ‘வகுப்பறை’ என்பது உரையாடலுக்கான இடமாக இருந்தது. ஆசிரியர்கள் பாடப் புத்தகங்களைக் கடந்து, சமூகம், அரசியல், இலக்கியம் என்று பல்வேறு விஷயங்களை மாணவர்களுடன் விவாதித்தனர். மாணவர்களின் நியாயமான சமூகப் போராட்டங்களுக்குத் துணை நின்றனர். மணல் கொள்ளை, தவறான அரசியல் கொள்கை, சாதிய அடக்குமுறை ஆகியவற்றுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் இன்றைய செயற்பாட்டாளர்கள் யாரிடமும் நீங்கள் பேசிப் பாருங்கள். அவர்களுக்குள் இந்தச் சமூக அக்கறை ஊற்றெடுப்பதற்குக் காரணமாக ஒரு ஆசிரியர் இருந்திருப்பார். அப்படிப்பட்ட ஆசிரியர்களால்தான், எல்லாவற்றையும் பற்றிச் சிந்திக்கும் ஒரு ஆரோக்கியச் சமூகம் உருவானது.
ஆனால், இப்போது நிலை அப்படியா இருக்கிறது? வணிகமயமான கல்வி, மாணவர் களை மனப்பாடம் செய்யும் எந்திரமாக மட்டும் மாற்றிவிட்டது. அவர்களுக்கும் ஆசிரியருக்கும் உள்ள உணர்வுபூர்வமான தொடர்பைத் துண்டித்துவிட்டது. இப்படியான கல்விச் சூழலில் படித்து, ஆளாகி வரும் ஒரு தலைமுறைக்கு, இந்தச் சமூகம், அதன் பிரச்னைகள் குறித்து எந்தப் பிரக்ஞையும் இல்லை. சமூகத்தோடு ஒட்டாமல் அவர்கள், உதிரி மனிதர்களாக நிற்கிறார்கள். இந்தச் சூழல், தனிமனிதர்களான அவர்களுக்கும், அவர்களால் இந்தச் சமூகத்துக்கும் பெரும் ஆபத்தை உண்டாக்கிவிடும்.
புத்தகக் கல்வி அவசியம்தான். அதைவிட முக்கியமானது, சமூகம் குறித்த கல்வி. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அதற்கான இடங்களாக இப்போது பள்ளிகள் இல்லாமல் போய்விட்டன. வணிகமயமான பள்ளிகள் தங்களின் ஆன்மாவை இழந்து, எந்த உரையாடலும் இல்லாத இடங்களாக மாறிவிட்டன. வெறும் செங்கல்லாக, சிமென்ட்டாக, அடிமைக்கூடாக, சங்கிலி பூட்டப்பட்டுப் பரிதாபமாக அவை நிற்கின்றன.
சந்திப்பு: மு.நியாஸ் அகமது
படம்: மீ.நிவேதன்