
ரவிக்குமார், விடுதலைச் சிறுத்தைகள் முன்னாள் எம்.எல்.ஏ
‘‘கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வங்கிப் பணியில் இருந்தவாறே மார்க்ஸிய அரசியலில் ஈடுபட்டிருந்த நேரத்தில்தான், சே குவேரா பற்றிய ஆங்கில நூல் ஒன்றில் இந்த வரியைப் படித்தேன். இதைப் படித்தபோது நான் சொல்ல விரும்பிய ஒரு வாக்கியமாகவே அதை உணர்ந்தேன்.
1985-ம் ஆண்டு புதுச்சேரிக்கு மாற்றலாகி வந்து சில நாட்கள் கழித்து, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் கடைக்குப் போயிருந்தேன். அங்குதான் ‘எர்னஸ்டோ சே குவேரா’ என்ற லாவ்ரெட்ஸ்கி என்பவர் எழுதிய அந்த நூல் கண்ணில் பட்டது. அந்த நூலில் சே குவேராவின் அற்புதமான புகைப்படங்களும் இடம்பெற்றிருந்தன. அதை வாங்கி வந்து ஒரே மூச்சில் படித்து முடித்து விட்டு, குருதி கொதிப்பேறி திரிந்த நாட்கள் இப்போதும் நினைவில் இருக்கின்றன.
1990-ம் ஆண்டு. ரஷ்யாவிலும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் நாம் கனவில்கூட எண்ணிப் பார்த்திராத மாற்றங்கள் நடந்து கொண்டிருந்த நேரம். ரஷ்யாவில் கோர்ப்பசேவால் மேற்கொள்ளப்பட்ட பெரிஸ்த்ரோய்கா (மறுக் கட்டமைப்பு), க்ளாஸ்நாஸ்ட் (வெளிப்படைத்தன்மை)போன்ற சீர்திருத்தங்களைப் புரிந்துகொள்ளவோ விளக்கவோ முடியாமல் கம்யூனிஸ்ட் கட்சிகளும் அமைப்புகளும் திணறிக் கொண்டிருந்தன. மண்டல் குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டதையொட்டி ஆத்திரமடைந்த பா.ஜ.க, பாபர் மசூதி பிரச்னையைக் கிளப்பி நாடெங்கும் வகுப்புவாதப் பதற்றத்தை அதிகரிக்கச் செய்துகொண்டிருந்தது.

அந்த நேரத்தில் நானும், அ.மார்க்ஸ், பொ.வேல்சாமி ஆகியோரும் தத்துவார்த்த விவாதங்களை முன்னெடுப்பதற்காகப் பத்திரிகை ஒன்றைத் துவக்க முடிவுசெய்தோம். அதற்கு ‘நிறப்பிரிகை’ என்று பெயரிடப்பட்டது. அந்தப் பத்திரிகைக்கான முத்திரை வாசகமாக நான் சூட்டியதுதான் ‘செயல்... அதுவே சிறந்த சொல்’. ‘தி பெஸ்ட் வேர்ட் ஈஸ் ஆக்ஷன்’ என்ற ஆங்கில வாசகம்தான், சே குவேராவுக்குப் பிடித்தமான ஒரு வரி. அதை எழுதியவர், லத்தீன் அமெரிக்காவின் புகழ்பெற்ற கவிஞரும் கியூபாவின் சுதந்திரப் போராளியுமான ஜோஸ் மார்ட்டி. சே குவேராவை சுவரொட்டிகளாகவும், டி-ஷர்ட்டுகளாகவும் மாற்றித் தமது புரட்சிகரக் கடமையைப் பலர் நிறைவேற்றிக்கொண்டபோது, நானோ அவருக்குப் பிடித்தமான வாசகத்தைத் தமிழ்ச் சூழலில் அறிமுகப்படுத்தினேன்.
சொல்வதும் ஒரு வினைதான் என்றபோதிலும், செயலையும் சொல்லையும் எதிரெதிர் நிலையில் வைத்துதான் நாம் புரிந்து கொள்கிறோம். தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் செல்வாக்கு பெற்றபோது அதன் வளர்ச்சியைப் பார்த்து எரிச்சலுற்றவர்கள், ‘சொல் - செயல்’ என்ற வகைப்பாட்டை ‘பேச்சு - எழுத்து’ என்ற முரண்பாடாக மாற்றினார்கள். திராவிட அரசியலை மேடைப் பேச்சு, அடுக்கு மொழி என அவர்கள் கேலி செய்து ஒதுக்கினார்கள். ‘பேச்சின் எந்தச் சாயலும் இல்லாத எழுத்தே இலக்கியம்’ என்ற ஒரு புனிதக் கோட்பாட்டை உருவாக்கினார்கள். எழுத்தை அறிவோடும், பேச்சைப் பாமரத்தனத்தோடும் அடையாளப்படுத்தினார்கள். அதையே தமிழ்ச் சிற்றிதழ்ச் சூழலின் கருத்தியலாக அவர்கள் கட்டமைத்தார்கள். ‘திராவிட இயக்கச் சார்பு கொண்டவர்கள் படைத்தவை எதுவும் இலக்கியமே இல்லை’ என்று தீர்ப்பெழுதினார்கள்.
அந்தக் கலாசார மேட்டிமைத்தனத்தை உடைக்க விரும்பிய எனக்கு, இந்த வாசகம் ஒரு ஆயுதமாகத் தெரிந்தது. போராட்டக் களங்களுக்குள் நவீனச் சிந்தனைகளின் கூர்மையையும், விவாத அரங்குகளுக்குள் களச் செயல்பாடுகளின் உக்கிரத்தையும் கொண்டுசெல்ல, ‘செயல்... அதுவே சிறந்த சொல்’ என்ற புரிதலே அடிப்படை.
தலித் பிரச்னைகளுக்கு விளக்கம் சொல்கிற சிந்தனையாளராக மட்டுமே நிற்காமல், கட்சி அரசியலுக்குள் நான் கால் பதிப்பதற்கும், எனது செயல்பாடுகளைச் சாதி அரசியலுக்கு அப்பால் எடுத்துச் செல்வதற்கும் இந்த வாசகம்தான் காரணமாக அமைந்தது. மற்ற பகுதிகளைப் போல, மக்கள் பிரச்னைகளுக்காகக் குரல்கொடுக்கும் ‘பொதுநிலை அறிவாளிகள்’ எனும் மரபு தமிழ்நாட்டில் வலுவாக உருப்பெறவில்லை. பிரபலமான எழுத்துக்கும் ஆழமான படைப்புக்கும் இடையிலான வித்தியாசம் அழிக்கப்பட்டு, தமிழ் இலக்கிய உலகம் மீண்டும் எதிர் நவீனத்துவவாதிகளின் கைகளில் சிக்கிக்கொண்டு விட்டது.
அதுபோலவே, தமிழ்நாட்டு அரசியல் என்பது சிந்தனைக்குத் தொடர்பே இல்லாத பிற்போக்கு வாதிகளின் பிடியில் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறது. ‘எல்லாவற்றையும் சந்தேகி’ என்பது கார்ல் மார்க்ஸுக்குப் பிடித்தமான வாசகம். ‘படிப்பவர்களைச் சந்தேகி’ என்பது அரசியல் கட்சிகளின் அறிவிக்கப்படாத விதி. சுயமாகச் சிந்திப்பவர்கள் எந்தக் கட்சிக்கும் தேவைப்படுவதில்லை.
‘செயல்... அதுவே சிறந்த சொல்’ என்ற வாசகத்தைத் தமிழ்ச் சிந்தனையுலகில் உயிர்த்தெழ வைப்பதன்மூலமே பொதுநிலை அறிவாளிகள் உருவாக வழிவகுக்க முடியும். அத்தகைய அறிவாளிகளின் அதிக அளவிலான பங்கேற்பு மட்டும்தான் தமிழக அரசியலை வகுப்புவாத ஆபத்திலிருந்து காப்பாற்றும், பிம்ப வழிபாட்டுச் சீரழிவிலிருந்தும் அதை மீட்டெடுக்கும்.
சந்திப்பு: கதிர்பாரதி