மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஒரு வரி... ஒரு நெறி! - 18 - ‘எல்லா தருணங்களிலும் வரைந்து கொண்டே இரு!’

ஒரு வரி... ஒரு நெறி! - 18 -  ‘எல்லா தருணங்களிலும் வரைந்து கொண்டே இரு!’
பிரீமியம் ஸ்டோரி
News
ஒரு வரி... ஒரு நெறி! - 18 - ‘எல்லா தருணங்களிலும் வரைந்து கொண்டே இரு!’

டிராட்ஸ்கி மருது, ஓவியர்

என் தந்தை மருதப்பன் டிராட்ஸ்கியவாதி. ‘டிராட்ஸ்கியிசம்’ என்பது கம்யூனிசத்தின் ஒரு கொள்கை நிலைப்பாடு. அதன் மீதுள்ள பிடிப்பால்தான் எனக்கு ‘டிராட்ஸ்கி மருது’ என்று பெயர் வைத்தார் அப்பா. தொடக்கத்தில் தீவிர காந்தியவாதியாக இருந்தார். 14 வயதிலேயே காந்தியைச் சந்திக்க வார்தா ஆசிரமத்துக்குச் சென்று, அங்கேயே ஓராண்டு தங்கியிருந்தார். அங்கிருந்த யாரோ ஒருவர், ‘வீ்ட்டுக்கு ஒற்றைப் பிள்ளை’ என்று அறிந்து திரும்பவும் மதுரைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.

1940-களில் இலங்கையில் பிரிட்டிஷ் ஆட்சி நடந்தபோது, மார்க்சிஸ்ட் லங்கா கட்சித் தலைவர்கள் கொல்வின் ஆர் டிசில்வா, என்.எம்.பெரேரா ஆகியோர் தமிழகத்தில் அரசியல் தஞ்சம் அடைந்து மதுரையில் தங்கியிருந்தார்கள். அவர்களோடு ஏற்பட்ட தொடர்பும் நட்பும் அப்பாவை டிராட்ஸ்கியவாதியாக மாற்றியது.

வீட்டில் ஏராளமான புத்தகங்கள் இருக்கும். அப்பாவுக்கு ஓவியக்கலை மீதும், சிற்பக் கலை மீதும் தெளிவான அறிவும் ஈடுபாடும் இருந்தது. நிறைய வாசிப்பார். ரசிப்பார். வீட்டையே ஒரு கலைக்கூடம் போல வைத்திருந்தார். வரவேற்பரையில் பிரமாண்டமான சுபாஷ் சந்திர போஸ், ரவீந்திரநாத் தாகூர் படங்கள் மாட்டப்பட்டிருக்கும். வாசலில், ஹெரால்டு காப்பியிங் வரைந்த, ஐந்து கண்டத்துக் குழந்தைகளையும் வாரி அணைத்தபடியான இயேசுவியின் ஓவியம் இருக்கும்.

ஒரு வரி... ஒரு நெறி! - 18 -  ‘எல்லா தருணங்களிலும் வரைந்து கொண்டே இரு!’

இப்படியான சூழலில் பிறந்ததாலோ என்னவோ, பள்ளிக் காலத்திலேயே வரைய ஆரம்பித்து விட்டேன். என் ஆர்வத்தைக் கண்ட அப்பா, சுயமாக வரைகலை நுட்பத்தைப் புரிந்துகொண்டு பயிற்சி பெறும் வகையில், நிறையப் புத்தகங்களை வாங்கித் தந்தார். ஹென்றி ஹெய்சரின் ‘How to draw and paint’ புத்தகத்தில்தான் அந்த வரி இருந்தது. ‘எல்லாத் தருணங்களிலும் வரைந்து கொண்டே இரு’ என்ற நேரடிப் பொருளைத்தான் நான் அதில் கண்டேன். ஆனால், அப்பா எனக்கு அந்த வரியை வாசித்துக் காண்பித்து, “இதுதான் உனக்கான மந்திரம்” என்று சொன்னார். “காலம் உனக்காகக் காத்திருக்காது. இதுதான் உன் எதிர்காலம் என்று முடிவெடுத்து விட்டால் ஒரு துளி நேரத்தைக் கூட வீணாக்காதே... உழைத்துக்கொண்டே இரு!” என்றார் அப்பா. காலப்போக்கில், அவர் சொன்ன பொருள் எனக்கு விளங்கியது.

‘ஓவியத்துக்கு மட்டுமல்ல... வாழ்க்கைக்கும் அதுதான் மந்திரம்’ என்பதை  அறிந்து கொண்டேன். ‘நீ எதை நோக்கிச் செல்ல விரும்புகிறாயோ, அந்தச் செயலை அயராது செய்... அந்த இலக்கின் மேல் முழுமையான காதலை வை... அந்தச் செயலைச் செய்துகொண்டே இரு... உழைப்பைச் செலுத்திக் கொண்டே இரு...’ இப்படி வெறுமனே ஓவியருக்கான குறியீடாக இல்லாமல், அன்றாட வாழ்க்கைக்கான அத்தனை வழிமுறைகளும் அதற்குள் பொதிந்திருப்பதை உணர்ந்தேன். எந்தத் துறை சார்ந்தும், எந்தச் செயல் சார்ந்தும் இந்த வரியை உள்வாங்கமுடியும்.

1967-ல் தமிழ்நாட்டை இந்தி எதிர்ப்பு மனநிலை ஆட்கொண்டிருந்தது. அப்போது எனக்கு 19 வயது. மிகவும் உத்வேகமாகச் செயல்பட்ட காலம். சட்டமன்றத் தேர்தல் வந்தது. காங்கிரஸ் மீது கடும் கோபம் நிலவிய தருணம். தி.மு.க-வுக்கு ஆதரவாகச் செயல்பட்டோம். “இது மாதிரியான வெளி சாதாரணமாகக் கிடைத்து விடாது. Sketch at all time. இந்தச் சூழலைப் பயன்படுத்து... போ! கிடைக்கும் இடத்தில் எல்லாம் வரைந்து பழகு’’ என்றார் அப்பா. மதுரையைச் சுற்றி 500 இடங்களில் தி.மு.க-வுக்கு ஆதரவாகவும், காங்கிரஸை எதிர்த்தும் கார்ட்டூன் வரைந்து பேனர் வைத்தேன். 20 அடிக்கு 15 அடி சுவர்களில் ஓவியங்கள் வரைந்தேன். அதில்தான் என் கைகள் திருந்தின.

பள்ளிக் காலத்திலேயே, ‘ஓவியம் சார்ந்தே நம் எதிர்காலம்’ எனத் தீர்க்கமாக முடிவெடுத்து விட்டேன். அது தொடர்பான தேடலில் சென்னை ஓவியக் கல்லூரியைக் கண்டடைந்தேன். அங்கும் நான் இந்த மந்திரத்தை மறக்கவில்லை. ஒவ்வொரு நொடியும் வரைந்து கொண்டே இருந்தேன். தேடிக்கொண்டே இருந்தேன். உழைத்துக் கொண்டே இருந்தேன். என் கற்றல்கள் பெரும்பாலும் இயற்கையைச் சார்ந்தே இருந்தன. சுய முனைப்பிலேயே பல தரிசனங்களைக் கண்டடைந்தேன். ‘இது போதும்’ என்ற நிறைவு இன்றளவும் எனக்கு வந்ததே இல்லை. காரணம், Sketch at all time.

கடந்த 30 ஆண்டுகளில் நான் சந்தித்த ஓவியம் சார்ந்த, திரைப்படம் சார்ந்த, அனிமேஷன் சார்ந்த அத்தனை மாணவர்களிடமும் இந்த வரியைச் சொல்லியிருக்கிறேன். அதன் உள்ளீடான பொருளை விரித்தும் காட்டியிருக்கிறேன். என்னைப் போலவே பலரும் அந்த வரியை விடாப்பிடியாக பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

Sketch at all time என்ற அந்த மந்திர வரி, என் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றியிருக்கிறது. இன்றும் என் செயல்பாடுகளால் எனக்குக் கிடைக்கிற பாராட்டும்,  மற்றவர்களுக்குக் கிடைக்கிற மகிழ்ச்சியும் இந்த வரியை நினைவூட்டிக்கொண்டே இருக்கின்றன.

சந்திப்பு: வெ.நீலகண்டன்
படம்: கே.ராஜசேகரன்