தமிழக அளவில் மாற்றுத் திறனாளிகளுக்கான சதுரங்கப் போட்டியில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் வெற்றி பெற்று முதலிடத்தைப் பிடித்தார்.

சென்னையை அடுத்த ஆவடி வேல்டெக் பல்கலைக்கழகத்தில் பார்வையற்றோர்களுக்கான 6-வது மாநில அளவிலான சதுரங்கப் போட்டிகள் கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்று வந்தன. இதில் சென்னை காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுமார் 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொண்டனர். 10 வயது முதல் 50 வயது வரைக்கும் உட்பட்ட வீரர்கள் இப் போட்டியில் கலந்துகொண்டனர். கடந்த இரண்டு நாள்களாகப் போட்டிகள் நடைபெற்று வந்தன. இப்போட்டியின் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.

இதில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் முதலிடத்தைப் பிடித்து வெற்றி பெற்றார். இவருக்குச் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையன் 6,000 ரூபாய் காசோலை மற்றும் வெற்றிக் கோப்பையை வழங்கினார். மேலும், இந்தோனேசியாவில் நடைபெறும் ஒலிம்பிக் செஸ் போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ளதால் தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என மாரிமுத்து கோரிக்கை வைத்தார்.
மேலும், போட்டியில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 10 இடங்களைப் பிடித்த போட்டியாளர்களுக்கும் சான்றிதழ் மற்றும் பதக்கங்களையும் வழங்கினார். இதில் வேல்டெக் நிறுவனர் ரங்கராஜ் மற்றும் டி.என்.பி.சி.எ. கிளப்பின் தலைவர் யசோதா பிரபு ஆகியோர் கலந்துகொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்குப் பதக்கம் வழங்கும் நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.