சமூகம்
தொடர்கள்
Published:Updated:

மதுவிலக்குக்குப் பிறகுதான் கல்யாணம்! - டெல்லியில் போராடும் டேவிட்ராஜ்

மதுவிலக்குக்குப் பிறகுதான் கல்யாணம்! - டெல்லியில் போராடும் டேவிட்ராஜ்
பிரீமியம் ஸ்டோரி
News
மதுவிலக்குக்குப் பிறகுதான் கல்யாணம்! - டெல்லியில் போராடும் டேவிட்ராஜ்

மதுவிலக்குக்குப் பிறகுதான் கல்யாணம்! - டெல்லியில் போராடும் டேவிட்ராஜ்

தினம் தினம் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை அடித்து நொறுக்கி எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள் நம் பெண்கள். இதேநேரத்தில், மதுவிலக்குக் கோரி டெல்லியில் தனி ஒருவனாகப் போராடி வருகிறார், தமிழக இளைஞர் டேவிட்ராஜ்.

கன்னியாகுமரி ஆற்றூரைச் சேர்ந்த இவர், மே 1-ம் தேதியிலிருந்து டெல்லி ஜந்தர் மந்தர் சாலையில், மதுவிலக்குக் கோரிக்கைப் பதாகையை ஏந்தியபடி அமைதிவழிப் போராட்டத்தைத் தொடர்கிறார். தேசிய வாள் சண்டை விளையாட்டு வீரரான டேவிட்ராஜிடம் பேசினோம்.

“2008-ம் ஆண்டு புனே ராணுவ விளையாட்டு அகாடமியில் பணிக்குச் சேர்ந்தேன். என் அப்பா மதுவுக்கு அடிமையானதால், குடும்பத்தில் நிறையப் பிரச்னைகள். அதனால், மதுவுக்கு எதிராகப் போராடும் உறுதியான முடிவை எடுத்து வேலையை ராஜினாமா செய்தேன். ‘நல்ல வேலையை விடுகிறாயே... உனக்கு என்ன பைத்தியமா?’ என உறவினர்கள் திட்டினார்கள்.

மதுவிலக்குக்குப் பிறகுதான் கல்யாணம்! - டெல்லியில் போராடும் டேவிட்ராஜ்

‘மது ஒழிப்புப் போராளி’ சசிபெருமாள் அய்யா இறந்தபோது நடந்த போராட்டத்தில் என்னைக் கைது செய்த போலீஸ், பலமாகத் தாக்கியது. இதில், முதுகெலும்பு பாதிப்புக்கு உள்ளானது. திருச்சியில் நடைபெற்ற மதுவுக்கு எதிரான போராட்டத்தின்போது என்னையும், என் நண்பர்களையும் தேசத் துரோக வழக்கில் கைது செய்துவிட்டார்கள். நியாயமான போராட்டத்துக்காக தேசவிரோத வழக்கில் கைது செய்தது அவமானமாகவும் மனவேதனையாகவும் இருந்தது. கோபத்தில், தேசிய அளவிலான விளையாட்டு சான்றிதழ்கள் அனைத்தையும் கிழித்து எறிந்துவிட்டேன்.

மதுவுக்கு எதிரான போராட்டம் தமிழகத்தில் தீவிரமானபோதும் பெரிய பலன் எதுவும் இல்லை. அதனால்தான் டெல்லி ஜந்தர் மந்தருக்குக் கிளம்பி வந்துவிட்டேன். முதலில் தனியாகத்தான் போராடினேன். இப்போது என்னுடைய போராட்டத்துக்குப் பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

சில தினங்களுக்கு முன் எனக்கும் என் காதலிக்கும் நிச்சயதார்த்தம் நடைபெறுவதாக இருந்தது. ஊருக்குக் கிளம்பி வரச் சொன்னார்கள். ‘மதுவிலக்கு அமலாகும் வரையில் இந்த இடத்தைவிட்டு வரமுடியாது’ என உறுதியாகச் சொல்லிவிட்டேன். என் காதலியிடமும் தெரிவித்தேன். அவளும் என்னைப் புரிந்துகொண்டு காத்திருப்பதாகச் சொல்லியிருக்கிறாள். நிச்சயம் மதுவிலக்கு வரும். அப்போது நானும் அவளும் திருமணம் செய்துகொள்வோம். ஒருவேளை எனக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், அது மதுவை ஒழிப்பதற்கான போராட்டத்தைக் கொழுந்துவிட்டு எரியச் செய்யும் தீப்பொறியாக மாறும்” என்று வார்த்தைகளில் அழுத்தம் கொடுத்து முடிக்கிறார் இந்த லட்சிய இளைஞர்!

- ஜெ.அன்பரசன்