
மாட்டிறைச்சி விவகாரம்... கோர்ட் சொன்னது ஒன்று... அரசு செய்தது வேறொன்று!

‘உச்ச நீதிமன்றம் போட்ட உத்தரவின் அடிப்படையில்தான் இறைச்சிக்காக விலங்குகளை விற்கத் தடைவிதித்து அறிக்கை வெளியிட்டோம்’ என மத்திய அரசு சொல்கிறது. ஆனால், ‘சந்தைகளில் இறைச்சிக்காக விலங்குகளை விற்கக் கூடாது’ என்று ஒருபோதும் உச்ச நீதிமன்றம் கூறவில்லை. உச்ச நீதிமன்றம் அப்படி என்னதான் சொன்னது? அந்த வழக்குகள்தான் என்ன? ஜல்லிக்கட்டுக்குத் தடை வாங்கிய மனுதாரர்களில் ஒருவரான கௌரி மௌலேகி என்பவர்தான் இதற்காகவும் முதலில் வழக்கைத் தொடர்ந்தவர். இவர் மத்திய அமைச்சர் மேனகா காந்தியின் ஆலோசகர். மேனகா காந்தி நடத்தும் ‘People for Animal (PFA) என்கிற தொண்டு நிறுவனத்தின் நீண்டகால உறுப்பினர். அந்த அமைப்பு மூலம்தான் ஜல்லிக்கட்டுக்குத் தடைவாங்கினார். இதுவரை விலங்குகள் நலன் காக்க 45 வழக்குகளைப் பல்வேறு நீதிமன்றங்களில் தொடர்ந்துள்ளார்.
‘மாட்டுச் சந்தைகளை முறைப்படுத்த வேண்டும்’ என்று கேட்டு கடந்த 2014-ம் ஆண்டு இவர் போட்ட வழக்குதான், மத்திய அரசின் இந்தச் சர்ச்சைக்குரிய முடிவுக்குக் காரணம். இந்த வழக்கின் பின்னணியில் இருப்பது, காதிமாய் கோயில். இந்தக் கோயில் பீகார் மாநில எல்லை அருகே நேபாள நாட்டில் உள்ளது. இந்தக் கோயிலில் நடைபெறும் திருவிழா, உலகம் முழுக்கப் பிரபலம். எருமை மாடுகளைப் பலி கொடுப்பதுதான் திருவிழாவின் முக்கிய வழிபாடு. மாடு, ஆடு, பன்றி, கோழி, புறா ஆகியவையும் பலியிடப்படும். 300 ஆண்டுகளாக இந்த வழிப்பாட்டு வழக்கம் இருக்கிறது. கடந்த 2009-ம் ஆண்டில் மட்டும் ஐந்து லட்சம் கால்நடைகள் பலியிடப்பட்டன. கோயிலைச் சுற்றி ஐந்து கி.மீ சுற்றளவுக்கு இந்தப் பலி வழிபாடு நடக்கும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். (பல ஆண்டுகளாகவே கடும் விமர்சனங்கள் எழுந்ததன் விளைவாக, வரும் 2019 முதல் விலங்குகளைப் பலியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.)

‘இந்தத் திருவிழாவில் பலியிடுவதற்காக எந்த வித உரிமமும் இல்லாமல் முறைகேடாக இந்தியாவிலிருந்து லட்சக்கணக்கில் கால்நடைகள் கடத்தப்படுவதைத் தடை செய்ய வேண்டும்’ என்கிற கோரிக்கையுடன் கடந்த 2014-ம் ஆண்டு ஒரு மனுவை உச்ச நீதிமன்றத்தில் கௌரி மௌலேகி தாக்கல் செய்தார். அந்த வழக்கை தற்போது தலைமை நீதிபதியாக இருக்கும் ஜெ.எஸ்.கேஹரும், நீதிபதி அருண் மிஸ்ராவும் விசாரித்து இடைக்கால உத்தரவுகளைப் பிறப்பித்தனர். ‘1992-ம் ஆண்டின் வெளிநாட்டு வர்த்தக சட்டப்படி, உரிய லைசென்ஸ் இல்லாமல் கால்நடைகளை நேபாளத்துக்கு ஏற்றுமதி செய்ய அனுமதிக்கக் கூடாது. மத்திய அரசு உடனடியாகப் பீகார், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தி ஒரு முடிவை எடுக்க வேண்டும்’ என்பதுதான் அந்த உத்தரவு.
அதன்படியே நடவடிக்கை எடுத்து, கால்நடைக் கடத்தல் அந்த ஆண்டு தடுக்கப்பட்டது. ‘இதேபோல நிரந்தரமாகக் கடத்தலைத் தடுக்க, விதிமுறைகளை வகுக்க கண்டறிய வேண்டும்’ என மீண்டும் உத்தரவிட்டது நீதிமன்றம். இதற்கிடையே 2015-ம் ஆண்டு மற்றொரு வழக்கும் உச்ச நீதிமன்றத்துக்கு வந்தது. ‘அகில பாரத் கிருஷி கோ சேவா’ என்கிற பசு பாதுகாப்பு அமைப்பு, ‘உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஒடிசா, பீகார் ஆகிய மாநிலங்களில் இருந்து மாடுகள் மற்றும் எருமைகள் மேற்கு வங்கத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து வங்க தேசத்துக்குக் கடத்தப்படுவதைத் தடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்பதே அந்த வழக்கு.

இரண்டு வழக்குகளும் போடப்பட்டு ஓராண்டு கடந்தபிறகும் மத்திய அரசு விதிமுறைகள் எதையும் வகுக்கவில்லை. இதைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் முறையிட்டார் கௌரி மௌலேகி. ‘வரைவு விதிமுறைகள் தயாரிக்கப்பட்டுவிட்டன. மூன்று மாதத்தில் அறிவிப்பு வெளியிடப்படும்’ என்று மத்திய அரசு சொன்னது. அதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், ‘கால்நடைச் சந்தைகளை முறைப்படுத்துங்கள்’ என்று உத்தரவிட்டது. இதுமட்டுமே உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு. ‘‘சந்தைகளில் இறைச்சிக்காகக் கால்நடைகளை விற்கக் கூடாது’ என்று உச்ச நீதிமன்றம் சொல்லவில்லை. இது முழுக்க முழுக்க நேபாளம் மற்றும் வங்க தேசத்துக்குக் கால்நடைகள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்காக நீதிமன்றம் வழங்கிய அறிவுரை. ஆனால், இதை வைத்து, ‘இறைச்சித் தேவைக்காக கால்நடைகளை சந்தைகளில் விற்க நாடு முழுவதும் தடை’ என்கிற வகையில் பல கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்து அறிவிக்கை வெளியிட்டது பா.ஜ.க அரசின் திட்டமிட்ட அரசியல் நடவடிக்கை’’ என்கிறார்கள் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள்.
வழக்குப் போட்ட கௌரி மௌலேகி என்ன சொல்கிறார்? ‘‘இது எந்த வகையிலும் மக்களின் உணவு உரிமையில் தலையிடும் உத்தரவு அல்ல. இறைச்சிக்காக விலங்குகளை விற்கக் கூடாது என இந்த உத்தரவு தடை ஏதும் போடவில்லை. சந்தைகளில் விற்கக் கூடாது என்று மட்டுமே தடை போட்டுள்ளனர். வீடுகளிலோ, பண்ணைகளிலோ போய் விவசாயிகளிடம் நேரடியாகக் கால்நடைகளை வாங்குவதில் எந்தத் தடையும் இல்லை’’ என்கிறார் அவர்.
ஆனால், சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள், இதையெல்லாம் எங்கே காதில் வாங்குகிறார்கள்?
- டெல்லி பாலா