சமூகம்
தொடர்கள்
Published:Updated:

கத்தார் பிரச்னையின் பாதிப்புகள் என்ன?

கத்தார் பிரச்னையின் பாதிப்புகள் என்ன?
பிரீமியம் ஸ்டோரி
News
கத்தார் பிரச்னையின் பாதிப்புகள் என்ன?

6 லட்சம் இந்தியர்கள்... 4 லட்சம் கோடி ரூபாய்... காஸ் சிலிண்டர் எரிவாயு!

ளைகுடா நாடுகளில் எப்போது என்ன பிரச்னை எழுந்தாலும், அதன் முதல் பாதிப்பு இந்தியாவுக்குத்தான். இதற்கு இரண்டு காரணங்கள்... ஒன்று, வளைகுடா நாடுகளில் 60 லட்சம் இந்தியர்கள் வேலை பார்க்கிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் அவர்கள் இந்தியாவுக்கு அனுப்பும் தொகை 4 லட்சம் கோடி ரூபாய். இரண்டு, இந்தியாவின் பெட்ரோலியத் தேவையில் சரிபாதிக்கும் மேல் அங்கிருந்தே பூர்த்தியாகிறது. சின்ன விலை வித்தியாசம்கூட இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதாரத்துக்கும், தனிப்பட்ட குடும்பங்களின் பட்ஜெட்டுக்கும் பேரிடியாக அமைந்துவிடும். கத்தார் நாட்டை சவுதி அரேபியா தலைமையிலான மற்ற நாடுகள் இணைந்து ஒதுக்கி வைக்கும் முயற்சி, இப்படிப்பட்ட இடியாகத்தான் நமக்கு இருக்கிறது.

‘தீவிரவாத அமைப்புகளுக்கு, கத்தார் நாடு உதவி செய்கிறது’ என்று குற்றம் சாட்டி, அந்த நாட்டுடனான அனைத்து உறவுகளையும் துண்டித்துக்கொண்டுள்ளன சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், எகிப்து, ஏமன் ஆகிய நாடுகள். பணக்கார அரபு நாடுகளில் ஒன்று, கத்தார். உலகிலேயே இயற்கை எரிவாயுவை அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடு. இந்தியாவில் பாதி வீடுகளில் காஸ் சிலிண்டர் எரிவது, கத்தார் எரிவாயுவில்தான். ஒரு லட்சம் தமிழர்கள் உள்பட 6 லட்சம் இந்தியர்கள் அங்கு பணிபுரிகின்றனர். 

கத்தார் பிரச்னையின் பாதிப்புகள் என்ன?

இந்தத் தனிமைப் படுத்தலின் உடனடி விளைவாக, கத்தார் விமானங்கள் எதுவும் இந்தத் தடை போட்ட மற்ற நாடுகளின் வான்வழியில் பறக்க முடியாது. கத்தாருக்குப் பால், உணவுப் பொருள்கள் என எதுவுமே வரவில்லை. ஈரான் உதவிக்கரம் நீட்ட வில்லை என்றால், அங்கிருக்கும் எல்லோருமே பட்டினியில் தவித்திருப்பார்கள்.

பணக்கார அரபு நாடுகள் பலவுமே, கச்சா எண்ணெய் விற்றுக் கிடைக்கும் பணத்தில் தீவிரவாத நடவடிக்கைகளை நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆதரிப்பது வழக்கம்தான். சவுதி அரேபியா கூட இதில் விதிவிலக்கு இல்லை. அதேசமயத்தில் அமெரிக்க ராணுவத்தின் மேற்கு ஆசியத் தலைமை அலுவலகம் கத்தாரில்தான் இருக்கிறது. இப்படி தீவிரவாதிகளுக்கு ஒரு முகத்தையும், அமெரிக்காவுக்கு இன்னொரு முகத்தையும் காண்பிப்பது அரபு நாடுகளின் வழக்கமான தந்திரம்தான்.

கத்தார் பிரச்னையின் பாதிப்புகள் என்ன?

ஆனால், இப்போது பிரச்னை எழுந்ததற்குக் காரணம், ஈரானைக் கத்தார் ஆதரிப்பதுதான். ‘வளைகுடா நாடுகளுக்கு யார் தாதா’ என்பதில் சவுதிக்கும் ஈரானுக்கும் நீண்ட நாட்களாக மோதல். இதில் கத்தார் உறுதியாக ஈரான் பக்கம் நிற்கிறது. எகிப்தில் உருவாகி பல இஸ்லாமிய நாடுகளுக்குப் பரவிய ‘முஸ்லிம் பிரதர்ஹுட்’ அமைப்புக்கு, கத்தார் நேசக்கரம் நீட்டியது. இந்த அமைப்பை பணக்கார அரபு நாடுகள் அச்சத்தோடு பார்க்கின்றன. இதனால் கத்தாரைத் தட்டி வைக்க, கடந்த ஆறு ஆண்டுகளாகவே அவை முயல்கின்றன.

கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், சவுதி அரேபியாவுக்கு வந்தார். அப்போது நிகழ்ந்த சில சம்பவங்கள் கவனிக்கத்தக்கவை. சுமார் 7 லட்சம் கோடி ரூபாய்க்கு அமெரிக்காவிலிருந்து ஆயுதங்கள் வாங்குவதற்கு சவுதி அப்போது ஒப்பந்தம் போட்டது.  2 லட்சத்து 55 ஆயிரம் கோடி ரூபாய் கான்ட்ராக்ட்கள், அமெரிக்க நிறுவனங்களுக்குக் கொடுக்கப்பட்டன. இதுதவிர சுமார் 1 லட்சத்து 28 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டை அமெரிக்கா வில் சவுதி அரேபியா செய்யும். இதன்மூலம் 10 லட்சம் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இவ்வளவையும் வாங்கிக்கொண்டு, பதிலுக்கு சவுதியைப் புகழ்ந்துவிட்டும், ஈரானை எச்சரித்துவிட்டும் ட்ரம்ப் கிளம்பிப் போனார்.

கத்தார் பிரச்னையின் பாதிப்புகள் என்ன?

இதையெல்லாம் கத்தார் மன்னர் தமிம் பின் ஹமாத் அல் தானி கடுமையாக விமர்சனம் செய்ததாகவும், ட்ரம்பை அவர் கிண்டல் செய்ததாகவும் செய்திகள் வெளியாகின. இந்தச் சூழலில்தான் இப்படி ஒரு முடிவு. இந்த முடிவுக்குப் பிறகு சவுதியைப் பாராட்டி இருக்கிறார் ட்ரம்ப். அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகனோ, ‘எங்கள் படைகளுக்கு ஆதரவாக இருந்து, அரபு வட்டாரத்தின் பாதுகாப்புக்கு ஒத்துழைப்புத் தருகிறது’ என கத்தாரைப் பாராட்டி உள்ளது. கத்தாரும் பெருமளவு ராணுவ ஒப்பந்தங்களை அமெரிக்காவுடன்தான் செய்துள்ளது.

இப்போது குவைத் மன்னர் சமாதானத் தூதராகப் பேசி வருகிறார். இந்த முரண்பாடு தீவிரமானால், பெட்ரோல் விலை எகிறும். ஆனால், அமெரிக்காவுக்கு ஆயுத வியாபாரம் விறுவிறுப்பாக நடக்கும்.

- தி.முருகன்