மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஒரு வரி... ஒரு நெறி! - 19 - ‘எனது வாழ்க்கையே எனது செய்தி!’

ஒரு வரி... ஒரு நெறி! - 19 - ‘எனது வாழ்க்கையே எனது செய்தி!’
பிரீமியம் ஸ்டோரி
News
ஒரு வரி... ஒரு நெறி! - 19 - ‘எனது வாழ்க்கையே எனது செய்தி!’

ஜோதிமணி, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்

காத்மா காந்தியின் இந்த வரியே என்னை இன்றுவரை வழிநடத்துகிறது. இன்று பொதுவாழ்வுக்கு வரும் பலரின் மனநிலை இப்படியில்லை. தனிப்பட்ட வாழ்வில் எப்படியும் இருக்கலாம்; பொது வாழ்க்கையில் மற்றவர்களுக்கு என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் என்றே நினைக்கிறார்கள். ஆனால், வழிநடத்தும் தலைமைகளும், அரசியல் சித்தாந்தங்களைச் சொல்பவர்களும் அப்படி இருக்க முடியாது. பொது வாழ்க்கை, சொந்த வாழ்க்கை என இரண்டும் திறந்த புத்தகமாக இருக்க வேண்டும். இந்தப் புரிதலைத் தந்தது காந்திதான்.  அவரின் வாழ்க்கை அனுபவங்களே என்னைச் செதுக்கியுள்ளன.

தலைவர் என்பவர் தேர்தலில் ஜெயிப்பவர் மட்டுமல்ல; மக்களை வழிநடத்தக் கூடியவர். சுயபரிசோதனை செய்து கொள்ள முடியவில்லை என்றால், அவரால் மக்களை வழிநடத்த முடியாது. காந்தி தன்னையே தொடர்ந்து மாற்றிக்கொண்டதால், மக்கள் அவர் பின்னால் நின்றனர். ‘மக்கள் கூட்டம் என் பின்னால் உள்ளது’ என ஒருபோதும் அவர் கர்வம் கொண்டதில்லை. ஊழல் என்பது பணம் கொள்ளை அடிப்பது மட்டுமல்ல, அதிகாரத்தை அபகரிப்பதும் தான். அதிகாரத்தின் வழியாகத்தான் ஊழல் ஆரம்பிக்கிறது. 

ஒரு வரி... ஒரு நெறி! - 19 - ‘எனது வாழ்க்கையே எனது செய்தி!’

நான் மனதில் பட்டதை முகத்துக்கு நேராகச் சொல்லிவிடும் ஆள். பல இடங்களில் இதுவே எனக்குப் பிரச்னையாகி இருக்கிறது. அதற்காகக் கொள்கையை விட்டுத் தர முடியாது. இன்றைய அரசியல், பணக்காரர்களுக்கு மட்டுமானதாக மாறி வருகிறது. துடிப்புமிக்க இளைஞர்கள், சாதாரண மக்கள் அரசியல் களத்துக்கு வரவேண்டும் என ராகுல் காந்தி ஒரு சிஸ்டத்தை உருவாக்கினார். இதில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளைத் தேர்வு செய்யும் பொறுப்பாளராகப் பல மாநிலங்களுக்குச் சென்றிருக்கிறேன். இந்தத் தேர்வின்போது, மத்திய அமைச்சர்கள் தங்களின் ஆட்களைப் பதவியில் அமர்த்த முயற்சிப்பார்கள். ‘மாட்டேன்’ எனச் சொல்லி விடுவேன். ஓர் இடத்திலும் நான் சமரசம் செய்துகொண்டதில்லை. ஆந்திராவில் எந்த எம்.பி-யும் தந்த எம்.எல்.ஏ-க்கள் லிஸ்ட்டை நான் எடுத்துக்கொள்ளவில்லை. அவர்கள் சோனியா காந்தியிடம் புகார் செய்தார்கள். என்னிடம் விளக்கம் கேட்கப்பட்டது. ‘தேர்வு முறையாகவே நடந்துள்ளது. நான் யாரையும் மாற்ற முடியாது.  மாற்ற வேண்டுமென்றால் அந்தப் பொறுப்பில் இருந்து என்னை மாற்றிவிடுங்கள்’ என்று சொல்லிவிட்டேன். அதில் உண்மை இருந்ததால், நான் தேர்வு செய்த லிஸ்ட்டையே சோனியா அனுமதித்தார்.

எளிமையான வாழ்க்கைக்கு நான் பழகிக் கொண்டேன். ரயிலில் ஏ.சி. இல்லாத இரண்டாம் வகுப்பில் தலையணைகூட இல்லாமல் பயணிப்பேன். உடன் பயணிக்கும் மக்கள் ‘இது ஜோதிமணிதானா?’ எனச் சந்தேகப்படுவார்கள். டெல்லிக்கு அவசரமாகப் போவதென்றால் மட்டுமே விமானம். மற்றபடி ரயில்தான். பொதுப் போக்குவரத்தை அரசியல்வாதிகள் பயன் படுத்தினாலே, அது நம் ஊரில் செய்தியாகி விடுகிறது. அப்படித்தான் இங்கு அரசியல்வாதிகள் இருக்கிறார்கள்.

என்னிடம் சிபாரிசு கேட்டு யாரும் வரமாட்டார்கள். மணல் திருட்டு, தண்ணீர் பிரச்னை என்று போராட்டத்துக்குக் கூப்பிடத்தான் வருவார்கள். பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு ஓர் அறம் இருக்க வேண்டும். எனக்கான நல்லெண்ணம் என்பது, அதிருப்திகளைக் கடந்து வந்தது. சுனாமியின்போது நாகப்பட்டினம் மாவட்டத்தில் வெள்ளப்பள்ளம், வானமாதேவி முகாம்களுக்குச் சென்றேன். அங்கே நிறைய பிரச்னைகள். பால் வாங்க அரசு பணம் கொடுக்கிறது. ஆனால், அந்த கேம்புக்குப் பால் வரவில்லை. பாலுக்காகக் கொடுத்த பணத்தை லோக்கல் பஞ்சாயத்து ஆட்கள் எடுத்துக் கொண்டனர். இருந்த கொஞ்சம் பாலில் போட்ட டீயை குழந்தைகளுக்கும் கொடுத்தனர். அதைக் குடித்த ஒரு குழந்தை உடல்நலம் கெட்டு இறந்து போனது. நான் குழந்தையின் பிரேதத்தை எடுக்க விடவில்லை. மக்களைத் திரட்டிப் போராட்டம் நடத்தினேன். போலீஸ்வந்து, அந்தக் குழந்தையைக் கொன்றுவிட்டதாக என்னைக் கைது செய்ய முயன்றது. பொதுமக்கள் சுமார் 3,000 பேர் என்னைக் கைது செய்யவிடாமல் திரண்டு நின்று தடுத்தார்கள். நியாயம் என் பக்கம் இருந்ததால், என்னை எதுவும் செய்ய முடியவில்லை.

நெருக்கடியான நேரங்களில் காந்தியின் எழுத்துகளைப் படிப்பேன். ஆலோசனைகளும் நம்பிக்கையான வழிமுறைகளும் காந்தியிடம் இருக்கும். பொது வாழ்க்கையில் இருப்பவர்களின் முதல் கடமை, தன்னைத் தகுதிப்படுத்துவதுதான். எனக்கு முன்பு ஒருவர் அதை வாழ்ந்து காட்டியிருக்கிறார். அதையே எனக்கான கொள்கையாக்கினேன். இதுவே இந்தச் சமூகத்துக்கு நான் சொல்லும் செய்தி.’’

- யாழ் ஸ்ரீதேவி
படம்: அ.முத்துக்குமார்