சமூகம்
தொடர்கள்
Published:Updated:

குழந்தைகளை மூழ்கடிக்கும் மூல வைகை!

குழந்தைகளை மூழ்கடிக்கும் மூல வைகை!
பிரீமியம் ஸ்டோரி
News
குழந்தைகளை மூழ்கடிக்கும் மூல வைகை!

தண்ணீர் திருட்டும் மரணக் குழிகளும்...

ங்களின் கரன்சிப் பசிக்கு இரண்டு பிஞ்சுகளைப் பலி கொடுத்திருக்கிறார்கள் தண்ணீர் கொள்ளையர்கள்!

வைகை ஆறே வறண்டு போனாலும், தேனி வருசநாட்டில் உள்ள மூல வைகை ஆற்றில் சுவையான ஊற்றுத் தண்ணீர் சுரக்கும். இதைத் திருடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள குழிகளில் விழுந்து இரண்டு குழந்தைகள் இறந்து போய்விட்டதுதான் சோகம்.

மழை இல்லாததால், மூல வைகை வறண்டு கிடக்கிறது. கண்ணுக்கெட்டிய தூரம்வரை, ஆற்றில் ஆங்காங்கே 10 அடி முதல் 18 அடி வரையிலான ஆழத்துக்கு, சட்டவிரோதமாகக் குழிகள் தோண்டி வைத்துள்ளனர். அதில் இருந்து மோட்டார் பம்புகள் மூலம் தண்ணீர் திருடப்படுகிறது. ஒட்டணை, செங்குளம், தங்கம்மாள்புரம், தர்மராஜபுரம், வருசநாடு, ராயர்கோட்டை ஆகிய பகுதிகளில் சுமார் 250-க்கும் மேற்பட்ட குழிகள் இப்படி உள்ளன. அவை, இப்போது மரணக்குழிகளாக மாறியுள்ளன.

குழந்தைகளை மூழ்கடிக்கும் மூல வைகை!

இரண்டு வாரங்களுக்கு முன்பு, ராயர்கோட்டை கிராமத்தையொட்டிய மூல வைகையில் உள்ள மரணக்குழிக்குள் விழுந்து, மாலினி என்ற 12 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். மாலினியின் வீட்டுக்குச் சென்றபோது, “என் பேத்திக்கு அப்பா அம்மா இல்லை. அவளை நான்தான் வளர்த்தேன். குளிச்சுட்டு வர்றேன்னு போனவளை, பிணமாதான் தூக்கிட்டு வந்தாங்க” என அழுகையோடு சொன்னார் மாலினியின் பாட்டி நாகம்மாள்.

கடந்த வாரம் தர்மராஜபுரத்தில் அனுஷா என்ற நான்கு வயதுக் குழந்தை, மரணக்குழிக்குள் விழுந்து இறந்துள்ளது. “ரொம்ப நேரமா எம்புள்ளையைக் காணோம்னு தேட ஆரம்பிச்சேன். அப்போ, ‘உம் புள்ள தண்ணிக்குள்ள விழுந்துருச்சு’னு ரெண்டு, மூணு பேர் வந்து சொன்னாங்க.. ஓடிப்போய்ப் பார்த்தா, எம்புள்ள பேச்சுமூச்சு இல்லாம கெடந்துச்சு. அநியாயமா என் குழந்தையைப் பறிகொடுத்துட்டேன். என் குழந்தை மரணத்துல சந்தேகம் இருக்குன்னு கடமலைக்குண்டு போலீஸ் ஸ்டேஷன்ல என் கணவர் புகார் கொடுத்தார். இதுவரைக்கும் குற்றவாளிகளைப் பிடிக்கலை” என்று கதறுகிறார் அனுஷாவின் தாய் சுதா.

கடமலைக்குண்டு காவல் நிலையத்தில் விசாரித்தபோது, “நடந்தது விபத்துதான். ஆற்றில் குழி வெட்டியவர் மீது வழக்குப்  பதிவுசெய்து,  அந்த நபரைத் தேடிவருகிறோம்” என்றனர்.

குழந்தைகளை மூழ்கடிக்கும் மூல வைகை!

மூல வைகைத் தண்ணீர்த் திருட்டைத் தடுக்காமல், அரசுத் துறைகள் ஒவ்வொன்றும் இன்னொரு துறை மீது பழி போடுவதுதான் வேதனை. மூல வைகையைக் கண்காணிக்கும் பொதுப்பணித் துறையின் மஞ்சளாறு டிவிஷன் உதவி செயற்பொறியாளர் கணேசமூர்த்தியைச் சந்தித்தபோது, “அது வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி. பொதுப்பணித் துறையால் அங்கு எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. வருவாய்த் துறை, வனத்துறை, காவல்துறை உதவியுடன்தான் அங்கு நடைபெறும் தண்ணீர்த் திருட்டைத் தடுக்க முடியும்” என்றார்.

“சமீபத்தில் இந்த விவகாரம் எங்கள் கவனத்துக்கு வந்தது. மூல வைகையில் குழி வெட்டித் தண்ணீர் திருடுபவர்களுக்கு நோட்டீஸ் கொடுத்திருக்கிறோம். ஆனால், வேறு எந்தத் துறையும் இதில் அதிக அக்கறை காட்டவில்லை. நாங்கள் கடமையைச் செய்துவருகிறோம்” என்றார் மேகமலை வன உயிரினக் காப்பாளர் அனந்தகுமார்.

தண்ணீர் திருடுபவர்களுக்கு நோட்டீஸ் கொடுக்க முடிகிறது. ஆனால் அவர்களை போலீஸ் கண்டுபிடிக்க முடியவில்லையாம். இந்தக் கொடுமையை எங்கே போய் சொல்ல?

தேனி போலீஸ் எஸ்.பி பாஸ்கரனிடம் பேசினோம். பொதுப்பணித் துறை கேட்டுக்கொண்டபிறகு, அந்த இடத்தில் இருந்து ஆறு மோட்டார்களைக் கைப்பற்றியுள்ளோம். மேலும், அந்த இடத்தில் இருக்கும் மோட்டார்களை அகற்றுவதற்கு, பொதுப்பணித் துறையும் வனத்துறையும்  கேட்டுக்கொண்டால், முழுப்பாதுகாப்பு வழங்கத் தயாராக இருக்கிறோம்” என்றார்.

குழந்தைகளை மூழ்கடிக்கும் மூல வைகை!

இந்த மரணக்குழிகளின் பின்னணியில், பெரிய தலைகள் இருப்பதாகச் சொல்கிறார்கள் அந்தப் பகுதியினர். “2009-ம் ஆண்டில் மேகமலை வனப்பகுதி, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக மாற்றப்பட்டது. மேகமலையைச் சுற்றி பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. பெரிய பெரிய பண்ணைகள் உள்ளன. அங்கு தென்னை, கரும்பு, வாழை எனப் பயிர்செய்யப்படுகின்றன. அந்தப் பண்ணைகளுக்காகத்தான், ஆற்றில் மரணக்குழிகள் தோண்டி தண்ணீர் திருடப்படுகிறது. இந்தச் சட்டவிரோதச் செயலை யாரும் கண்டுகொள்ளவில்லை. ஏனெனில், அந்தப் பண்ணைகள் தேனி, மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த தொழில் அதிபர்களுக்குச் சொந்தமானவை. இதைப் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக மாற்றினால், தண்ணீர்த் திருட்டையும் மரணங்களையும் தடுக்க முடியும். ஆனால், ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ தங்க தமிழ்ச்செல்வன் இந்த முயற்சிக்கு எதிராக இருக்கிறார்” என்றார்கள் அவர்கள்.

தங்க தமிழ்ச்செல்வனைத் தொடர்புகொண்டோம். “குழந்தைகள் இறந்துபோனது என் கவனத்துக்கு வந்தது. இது வெறும் விபத்து. இதற்கு மேல் எதுவும் சொல்ல விரும்பவில்லை” எனத் தொடர்பைத் துண்டித்தார்.

அதிகாரப் பசி... கரன்சிப் பசி!

- எம்.கணேஷ்
படங்கள்: வீ.சக்தி அருணகிரி