
RTI அம்பலம்

‘ஜி.எஸ்.டி எனப்படும் சரக்குகள் மற்றும் சேவைகள் வரி அமலுக்கு வந்தால் சினிமா தொழிலே அழிந்துவிடும்’ என்று கமல்ஹாசன் பதறுகிறார். ஒட்டுமொத்தத் திரையுலகமே இந்தக் குரலை எதிரொலிக்கிறது. ஆனால், திரையரங்குகளில் ரசிகர்கள் மீது நிகழ்த்தப்படும் கட்டணக்கொள்ளைத் தாக்குதல் பற்றி இவர்களில் யாரும் பேசுவதில்லை.
படம் பார்க்கச் செல்லும் ரசிகர்களைக் கிட்டத்தட்ட வில்லன்களாகக் கருதிச் சோதனை செய்யும் நடைமுறை திரையரங்குகளில் பரவி வருகிறது. உணவுப் பொருள்கள் கொண்டுச் செல்வதைத் தடுப்பதற்காகவே இவ்வாறு சோதனை செய்கிறார்கள். தியேட்டர் கேன்டீனில் அதிக விலையில் விற்கும் பொருள்களை வாங்க வைக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாக இருக்கிறது. இது மட்டுமல்ல, புதிய படங்கள் வெளியாகும்போது, வழக்கமான கட்டணத்தைவிட அதிகமாக வசூலிக்கின்றனர். சினிமாவை வாழ வைக்கும் ரசிகர்களை மொட்டையடிக்கும் இந்தச் செயல், பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதுதவிர பார்க்கிங் கட்டணம் என்ற பெயரிலும் கொள்ளையடிக்கின்றனர். சென்னையில் உள்ள மால்களில் செயல்படும் தியேட்டர்களில் மீட்டர் வட்டி, ரன் வட்டி போல மணிக்கு மணி பார்க்கிங் கட்டணம் எகிறுகிறது. டிக்கெட் கட்டணத்தைவிட பார்க்கிங் கட்டணத்தை அதிகம் வசூலிக்கும் மால்களும் உள்ளன.
இந்த அநியாயங்களுக்கு விடிவு தேடும் வகையில், ‘தியேட்டர்களுக்கு உள்ள விதிமுறைகள் என்னென்ன’ என்பது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி தமிழக அரசிடம் தகவல்கள் கேட்டிருந்தோம். அவர்கள் அளித்த பதில்களைப் படித்தபோது, நமக்கு மயக்கம் வராத குறைதான். அரசு விதிமுறைகளில் உள்ள தகவல்களுக்கும், தியேட்டர்கள் உண்மையில் நடந்துகொள்வதற்கும் ஏணி வைத்தாலும் எட்டாத வித்தியாசங்கள் இருக்கின்றன. திரையரங்குகளில் விதிகளைக் கடைப்பிடிக்கிறார்களா என்று சென்னை, மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் உள்ள சில திரையரங்குகளுக்கு நேரில் சென்று, விகடன் ஆர்.டி.ஐ டீம் ஆய்வு செய்தது.

கட்டணக் கொள்ளை
‘புதிய படம் வெளி வந்த இரண்டு வாரங்களுக்கு அரசின் கட்டண நிர்ணயத்தைவிட தியேட்டர்கள் அதிகக் கட்டணம் வசூலிக்கலாம்’ என்பதைப் பயன்படுத்தி ‘கபாலி’, ‘பாகுபலி’ உள்ளிட்ட புதிய திரைப்படங்கள் வந்தபோது முதல் சில நாட்களுக்கு 500 ரூபாய், 1,000 ரூபாய் எனக் கட்டணம் வசூலிக்கப்பட்டது. அதிகக் கட்டணம் வசூலிக்க, உரிய அனுமதியெல்லாம் பெற வேண்டும். எதையும் அவர்கள் மதிப்பதில்லை.
மல்டிப்ளக்ஸ் அல்லாத தியேட்டர்களில் எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதையும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை உள்ளிட்ட மாநகராட்சி பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் டிக்கெட் கட்டணம், ஏ.சி வசதி உள்ள திரையரங்குகளில் குறைந்தபட்சம் 10 ரூபாய் வசூலிக்க வேண்டும். அதிகபட்சம் 50 ரூபாய் வசூலிக்க வேண்டும். ஏ.சி வசதி இல்லாத திரையரங்குகளில் குறைந்தபட்சம் 7 ரூபாயும், அதிகபட்சம் 30 ரூபாயும் கட்டணம் இருக்க வேண்டும். (முழுமையான கட்டண விகிதங்கள் இன்ஃபோகிராபில் உள்ளன.) ஆனால், டிக்கெட் கட்டணம் எவ்வளவு என்பது ஊரறிந்த உண்மை.

சென்னையில் பலரும் ஆன்லைனில் முன்பதிவு செய்துதான் படம் பார்க்கச் செல்கின்றனர். ஆன்லைனில் 100 ரூபாய், 120 ரூபாய் டிக்கெட்கள் மட்டுமே முன்பதிவு செய்யப்படுகின்றன. இந்த டிக்கெட்களுக்கு, இணையதளக் கையாளும் கட்டணம் 34 ரூபாய் முதல் 37 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. டிக்கெட் விலை 200 ரூபாய்க்கு அதிகம் என்றால், இணையதளக் கையாளும் கட்டணம் 41 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. அரசு உத்தரவுப்படி பல திரையரங்குகளில் குறைந்தபட்சக் கட்டணமான பத்து ரூபாய்க்கு டிக்கெட் இருக்கிறது. ஆனால், அதை யாருக்கு விற்கிறார்கள் என்பது ரகசியமாகவே உள்ளது.
பார்க்கிங் கொள்ளை
திரையரங்குகளில் வாகனங்களுக்கான பார்க்கிங் கட்டணம் எவ்வளவு தெரியுமா? மல்டிப்ளக்ஸ் அல்லாத சென்னை உள்ளிட்ட மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் கார்களுக்கு 3 ரூபாய் கட்டணம் வசூலிக்க வேண்டும். இரு சக்கர வாகனங்களுக்கு இரண்டு ரூபாயும், சைக்கிளுக்கு ஒரு ரூபாயும் வசூலிக்க வேண்டும். (முழுமையான கட்டண விகிதங்கள் இன்ஃபோகிராபில் உள்ளன.) ஆனால், நிஜத்தில் இப்படித்தான் வசூலிக்கிறார்களா?
அதிகக் கட்டணம் தவறுதான்
சென்னை திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தலைவர் அபிராமி ராமநாதனிடம் பேசினோம். “திரையரங்குகளில் அரசு நிர்ணயித்த கட்டணங்களைத்தான் வசூலிக்கின்றனர். நியாயமாகப் பார்த்தால், அதிகக் கட்டணங்கள் வசூலிக்கக் கூடாது. அப்படி வசூலித்தால் தவறுதான். கூடுதல் கட்டணம் வசூலிக்க வேண்டுமானால், சென்னையைப் பொறுத்தவரை போலீஸ் கமிஷனர், பிற மாவட்டங்களில் மாவட்டக் கலெக்டர்களுக்கு எழுதி, அவர்கள் அனுமதி கொடுத்தால் வசூலிக்கலாம். அரசு விதிகளில் கூறியிருப்பது, பரிந்துரைக்கப்பட்ட சராசரிக் கட்டணம்தான். காலத்துக்கு ஏற்ப இதில் மாற்றங்கள் செய்ய வேண்டும்” என்று தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்து வைத்தார்.
அரசின் நில நிர்வாக ஆணையகத்தின் உயர் அதிகாரியிடம் பேசினோம். ‘‘தியேட்டர்களுக்கான விதிமுறைகளை வெளியிடுவது மட்டும்தான் எங்களுடைய பணிகள். இதை முறையாகக் கடைப்பிடிக்கிறார்களா என்பதைக் கண்காணிப்பதும், நடவடிக்கை எடுப்பதும் எங்கள் கையில் இல்லை. சென்னை என்றால் போலீஸ் கமிஷனரும் பிற பகுதிகளில் கலெக்டர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும். டிக்கெட் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுகிறது என வரும் புகார்களை, சம்பந்தப்பட்ட கலெக்டர்களுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கச் சொல்கிறோம்” என முடித்துக்கொண்டார்.

‘வெளி உணவுப் பொருள்களை எடுத்துச் செல்லக் கூடாது’ எனத் தடுத்து, தியேட்டர்களில் நடக்கும் கூத்தைப் பற்றியும், திரையங்குகளின் சட்டமீறல்கள் தொடர்பாக அரசு அதிகாரிகளின் விளக்கங்களையும் அடுத்த வாரம் பார்க்கலாம்...
- வெ.நீலகண்டன், கே.பாலசுப்பிரமணி, செ.சல்மான், சி.ய.ஆனந்தகுமார்

நுகர்வோர் நீதிமன்றங்களை நாடலாம்!
அதிக டிக்கெட் கட்டணம் வசூல் செய்த திரையரங்கின் மீது வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றிருக்கிறார், கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த வழக்கறிஞர் மகாலிங்கம். அவரிடம் பேசினோம். “‘ரஜினி முருகன்’ படம் பார்ப்பதற்காக குரோம்பேட்டை வெற்றி திரையரங்குக்கு சென்றேன். டிக்கெட் விலை 100 ரூபாய் என்றார்கள். விலை அதிகம் என்பதால் இரண்டாம் வகுப்பு டிக்கெட் கேட்டேன். ‘இரண்டாம் வகுப்பு டிக்கெட் இங்கு கொடுப்பதில்லை’ என்றார்கள். வேறுவழியின்றி முதல் வகுப்பு டிக்கெட் வாங்கினேன். டிக்கெட்டில் விலை ஏதும் குறிப்பிடப்படவில்லை. தமிழக அரசின் அரசாணைப்படி நகராட்சி பகுதி ஏ.சி திரையரங்குகளில் குறைந்தபட்சக் கட்டணமாக 5 ரூபாயும், அதிகபட்ச கட்டணமாக 40 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், சட்டத்துக்குப் புறம்பாக குறைந்தபட்ச கட்டணமாக 100 ரூபாய் வசூலிக்கிறார்கள். முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது 300 முதல் 2,000 ரூபாய் வரை டிக்கெட் விலையைக் கூட்டி விற்பனை செய்கிறார்கள். சாதாரண நாட்களில்கூட குடும்பத்தோடு படம் பார்க்கச் செல்பவர்களுக்கு 2,000 ரூபாய் வரை செலவாகிறது.
ஆனால், இவர்கள் 5 ரூபாய் டிக்கெட்டும் விற்றது போல ஆவணங்களை ரெடி செய்கிறார்கள். கேளிக்கை வரி வசூலிக்க வேண்டிய படங்களுக்கு அதிகபட்ச டிக்கெட் கட்டணமான 40 ரூபாய்க்கு எவ்வளவு வரியோ, அதைத்தான் அரசுக்கு செலுத்துகிறார்கள். இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. அதிகக் கட்டணம் வசூல் செய்யும் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த டிக்கெட் விலை பிரச்னை பற்றி சென்னை உயர் நீதிமன்றம் பலமுறை கண்டனம் தெரிவித்திருக்கிறது. ஆனால், எந்த அரசு அதிகாரியும் இதைக் கண்டுகொள்வதில்லை.
‘ரஜினி முருகன்’ படத்துக்கு அதிக கட்டணம் வசூல் செய்ததாக செங்கல்பட்டில் உள்ள மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் 2016 ஏப்ரலில் வழக்கு தொடர்ந்தேன். எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக 25,000 ரூபாய் அபராதமும், வழக்கு செலவிற்காக 5,000 ரூபாயும் கொடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. டிக்கெட்டுக்கு அதிகக் கட்டணம் வசூலித்தால், யார் வேண்டுமானாலும் நுகர்வோர் நீதிமன்றங்களை நாடலாம்” என்கிறார் மகாலிங்கம்.
- பா.ஜெயவேல்