சமூகம்
தொடர்கள்
Published:Updated:

உயிரைக் குடிக்கும் ‘நிற’ போதை! - பச்சை கலர் பூரி... பிங்க் கலர் ரசகுல்லா...

உயிரைக் குடிக்கும் ‘நிற’ போதை! - பச்சை கலர் பூரி... பிங்க் கலர்  ரசகுல்லா...
பிரீமியம் ஸ்டோரி
News
உயிரைக் குடிக்கும் ‘நிற’ போதை! - பச்சை கலர் பூரி... பிங்க் கலர் ரசகுல்லா...

உயிரைக் குடிக்கும் ‘நிற’ போதை! - பச்சை கலர் பூரி... பிங்க் கலர் ரசகுல்லா...

சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் பிரபல துணிக்கடை ஒன்றின் வாசல்... பொறித்த பாப்கார்னை பாக்கெட்டுகளில் அடைத்து அடுக்கி வைத்திருந்தார்கள். இதுவரை மஞ்சள் நிறத்தை மட்டுமே தன் மேனியில் பூசிக்கொண்டிருந்த பாப்கார்ன், பச்சை, பிங்க் என விதவித வண்ணங்களில் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு இருந்ததைப் பார்க்க அதிர்ச்சியாக இருந்தது. 

அடுத்த சில நாள்களில் செங்கல்பட்டு நகரில் ஒரு திருமண விருந்தில் பச்சை, சிவப்பு என கலர் கலராக பூரிகள் பரிமாறப்பட்டன. விபரீதம் புரியாமல், உற்சாகத்தோடு எல்லோரும் அவற்றைச் சாப்பிட்டார்கள். போதாக்குறைக்கு, வெள்ளை நிறத்தில் இருக்கவேண்டிய ரசகுல்லாவை, கண்ணைப் பறிக்கும் பிங்க் நிறத்தில் கப்பில் வைத்துப் பரிமாறினார்கள். இந்தச் செயற்கை நிறங்களின் விபரீதம் புரியாமல் மக்கள் சாப்பிடுவதுதான் வேதனை.

சோளத்தைப் பொறித்து எடுக்கும்போது, அதில் ஏதாவது பூச்சிகள் இருந்து நமக்குக் கெடுதல் தந்துவிடக்கூடாது என்ற காரணத்துக்காகவே மஞ்சள் தூளை அதில் கலந்தார்கள். மஞ்சள் தூளில் மருத்துவக் குணங்கள் உண்டு. இப்படி அப்போது பயன்படுத்தப்பட்ட நிறங்களெல்லாம் உணவாகவும், மருந்தாகவும் மட்டுமே இருந்தன. உப்பும் மஞ்சளும் அடங்கிய நீர் மட்டுமே கலந்து பொறித்து விற்கப்பட்ட பாப்கார்னிலும் செயற்கை வண்ணங்கள் மெள்ள மெள்ள நுழைந்து விட்டன. 

உயிரைக் குடிக்கும் ‘நிற’ போதை! - பச்சை கலர் பூரி... பிங்க் கலர்  ரசகுல்லா...

இந்தச் செயற்கை வண்ணங்கள் தொடர்பாக விதிகள் உண்டு. உணவில் கலப்பதற்காக அனுமதிக்கப்பட்ட வண்ணங்களையே பயன்படுத்த வேண்டும். 200 பி.பி.எம் (PPM - Parts per million) அளவில் மட்டுமே இருக்க வேண்டும். ஒரு சில இனிப்பு வகைகளில் மட்டுமே வண்ணங்கள் கலக்க அனுமதி உண்டு. கண்ணைப் பறிக்கும் அளவில் வண்ணங்கள் கலக்கக் கூடாது. கார வகைகள் மற்றும் எண்ணெயில் பொறித்து எடுக்கும் உணவுப்பொருள்களில் செயற்கை நிறமிகளைக் (Colouring agents) கலக்கக் கூடாது. அதிக வெப்பம் காரணமாக செயற்கை நிறமிகளில் உள்ள ரசாயனப் பொருட்கள் வேதியியல் மாற்றமடைந்து உணவில் நச்சுத்தன்மையை ஏற்படுத்தும். இந்த விதிகளை மீறி கலப்படம் செய்பவர்களுக்கு இரண்டு லட்சம் ரூபாய் வரை அபராதம் உண்டு. ஆனால், கடைகளில் விற்கப்படும், விருந்துகளில் பரிமாறப்படும் உணவுகள் குறித்து யாரும் கவலைப்படுவதில்லை.

திருமண விருந்தில் கலர் பூரி பொறித்து பரிமாறிய செங்கல்பட்டைச் சேர்ந்த ‘பாபு கேட்டரிங்’ உரிமையாளர் பாபுவிடம் பேசினோம். “கல்யாண வீட்டுல மளிகைப் பொருள் வாங்கித் தந்தாங்க. சமையல் மட்டும்தான் எங்களோட வேலை. அவங்க எப்படிச் சொன்னாங்களோ அதுமாதிரிதான் செஞ்சு கொடுத்தோம். பூரி கலர் கலராய் இருக்குறதுக்காக பச்சைக் கலர் பவுடரும் கேசரிப் பவுடரும் கலந்தோம். வந்தவங்க அதை விரும்பிச் சாப்பிட்டாங்க. ரசகுல்லா போடுறதுக்கு சென்னை சௌகார்பேட்டையில இருந்து ஆட்கள் வந்திருந்தாங்க. அவங்கதான் கலர் ரசகுல்லா செஞ்சாங்க. என்னோட சமையல்ல பூரியில கலர் பவுடர் கலக்குறது இதுதான் முதல் தடவை. சென்னையில் சிந்து கேட்டரிங்கில் வேலை செஞ்சவங்கதான் கலர் பவுடர் கலக்குறதுக்கு ஐடியா கொடுத்து, பூரி செஞ்சுக் கொடுத்தாங்க. அவங்க ஏற்கெனவே பல திருமணங்கள்ல கலர் பூரி போட்டிருக்காங்க” என்றார்.

‘‘இந்த நிறங்கள் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும்’’ என எச்சரிக்கிறார், உணவியல் வல்லுநர் வேலாயுதம். ‘‘சிறுகுடலில் நுண் சத்துகளை உறிஞ்சக்கூடிய நுண்துளைகள் இருக்கின்றன. அந்தத் துளைகளில் இந்த செயற்கை நிறமிகள் அடைத்துக் கொள்ளும். அதன்பின் நல்ல உணவுகளைச் சாப்பிட்டாலும் குடல் எடுத்துக் கொள்ளாது. சத்தான உணவுப் பொருட்களை உறிஞ்சவேண்டிய குடல், சக்கைகளை வெளியேற்றும் குழாயாக மாறிவிடும். வயிற்று உபாதைகளில் தொடங்கி உயிரை மாய்க்கும் புற்றுநோய் வரை வரவழைக்கும் அபாயத்தை இது ஏற்படுத்திவிடும்” என்கிறார் அவர். 

உயிரைக் குடிக்கும் ‘நிற’ போதை! - பச்சை கலர் பூரி... பிங்க் கலர்  ரசகுல்லா...

குடல் இரைப்பை நிபுணர் பட்டா ராதாகிருஷ்ணன், “இந்த செயற்கை நிறமிகள், குடலில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்களைக் அழிக்கும். இதனால், சிறுநீரகத்தில் பாதிப்புகள் ஏற்படும். சிறுநீரகப்பையில் புற்றுநோய் ஏற்படும் அபாயமும் அதிகமாகும்” என்று அபாயமணி அடிக்கிறார்.

இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை நியமன அலுவலர் ராமகிருஷ்ணனிடம் பேசினோம். “கலர் பூரி விருந்து பற்றி அறிந்ததும், ஐந்து உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழுவினர் பாபு கேட்டரிங்கில் ஆய்வு செய்தனர். அங்கு செயற்கை வண்ணங்கள் ஏதும் கிடைக்கவில்லை. மாப்பிள்ளை வீட்டில் சென்னையிலிருந்து வாங்கிவந்து கொடுத்தது தெரிய வந்தது. இந்த விவரங்களைச் சென்னையில் உள்ள உணவுப் பாதுகாப்புப் பிரிவுக்குத் தெரிவித்திருக்கிறோம். அனுமதிக்கப்படாத கலர் பவுடரைப் பூரியில் கலந்தவர்கள்மீது விரைவில் வழக்குத் தொடர உள்ளோம்” என்றார் உறுதியான குரலில்.

மது போதை மட்டுமல்ல... நிற போதையும் உயிரைப் பறிக்கும்!

- பா.ஜெயவேல்