
பிரபஞ்சன் எழுத்தாளர்
மனிதர்கள், கைகளால் அடுத்தவர்களின் மனிதக்கழிவுகளை அள்ளும் இழிவு இன்னும் ஒழிக்கப்படாமல் நீடிப்பது குறித்து எந்தக் குற்ற உணர்வும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிக்கும் சமூகம் நம்முடையது. மலக்குழியில் இறங்கிய சுத்திகரிப்புத் தொழிலாளிகள் பிணமாக வெளிப்பட்டது மிகச்சிறிய பத்திரிகைச் செய்தி. ஆம்... அது வெறும் செய்திதான் நமக்கு. இன்று காலை வெளிவந்த செய்தித்தாளில், ‘ஒரு 15 வயது தலித் சிறுமியை மூன்று பேர் வல்லுறவு செய்திருக்கிறார்கள்’ என்பதை விடவும், ‘பிடி கொத்தமல்லிக் கட்டு 25 ரூபாய்’ என்பது பெரிய அதிர்ச்சியைத் தருகிறது பலருக்கு. நம் தலைமுறை, தமிழ் அன்னைக்குப் புதியதாகக் கண்டுபிடித்துச் சமர்ப்பணம் செய்த சொற்சேர்க்கை ‘கௌரவக் கொலை’.

என் அப்பாவில் ஆரம்பித்து, தமிழ் ஆசிரியர், தமிழ் அறிஞர்கள், பட்டிமன்ற வீரர்கள், எழுத்துக் கலைஞர்கள், அரங்கக் கலைஞர்கள் வரை அத்தனை பேரும் ‘தர்மம் வெல்லும்... அதர்மம் அழியும்!’ என்றே சொல்கிறார்கள். தர்மம் எப்போது வெல்லப் போகிறது என்றுதான் யாரும் சொல்லத் தயாராக இல்லை.
பள்ளிக்கூடக் கழிப்பறை நாற்றம் அடிக்கிறது. அதைப் பயன்படுத்தும் யார் சுத்தம் செய்தாலும், நாற்றம் போகும். ஆனால், ஆண் டீச்சரோ, பெண் டீச்சரோ... குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த சில மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, சுத்தம் செய்யுமாறு கட்டளை இடுகிறார்கள். இந்தத் தேர்ந்தெடுப்புப் புத்தியைக் கொடுத்தவர் யார், வகுத்தவர் யார்?
‘நாங்கள் வாழ்வது ஊர். அவர்கள் இருப்பது சேரி’ என்று ஒரு மூத்த எழுத்தாளர் எழுதியதைப் படித்தபோது, எப்படிப்பட்டவர்கள் எழுத வந்திருக்கிறார்கள் என்பது மட்டும் தெரிய வரவில்லை. எப்படிப்பட்டவர்கள் என்னவிதமாக எழுதி இச்சமூகத்தைக் கட்டமைத்தார்கள் என்பதும் புரிகிறது.
‘மூத்த தலைவர்’ என்று இன்னும் நம்பப்படும், ஏன்... ‘ஜனாதிபதி தேர்வுக்கு உரியவர்’ என்றும் சொல்லப்படும் தலைவர் ஒருவரின் முன்புதான் பாபர் மசூதி இடிக்கப்படுகிறது. அவர்மீது ஒரு சாதாரணக் குற்றப்பத்திரிகை பதிவு செய்யக்கூட ‘வேதம் தந்த’ இந்தியாவுக்கு 25 ஆண்டுகள் ஆகின்றது என்றால், அறம், தர்மம், லொட்டு, லொசுக்கு, தட்டு முட்டு எல்லாம் எப்போது வெல்லப்போகிறது?
அருந்ததியர்கள் தங்களுக்கு உரிய இட ஒதுக்கீடு கேட்டுப் போராட்டத்தை முன்னெடுக்கும்போது, ‘அவர்களுக்கு அந்த அளவு வேண்டாமே, இந்த அளவு போதும்’ என்று தீவிரமாகக் கருத்துரைத்தவர், தீர்ப்பளித்தவர், இன்னுமொரு ஒடுக்கப்பட்ட இனத்தின் தலைவர் என்பது போன்ற நிகழ்வுகள் இந்தத் தர்மப் பூமியில்தான் நடக்க முடியும்.
கீழடி ஆய்வுகள் ஏன் தள்ளாடுகின்றன? காரணம், மிகத்தெளிவு. தமிழர் என்னும் இனத்தின் பழமை, பண்பாட்டு வளம், அனைத்துக்கும் மேலாக ‘அந்த இனம் இந்து மதச் சாய்வு இல்லாமல், தனக்குரிய பிரத்யேக வழியில் இறை வழிபாடுகளைக் கொண்டிருந்தது’ என்ற உண்மை வெளிவந்து விடக்கூடாது என்று தேசத்தை ஆள்பவர்கள் நினைக்கிறார்கள். இதுவே இத்தேசத்துத் தர்மம் போலும்.
எல்லா ஆணும் - குறிப்பாக ஒடுக்கப்பட்ட ஆணும் கூட, தான் ஒடுக்க ஒரு உயிரை இணைத்துக் கொள்வதற்கு ஆசைப்படுகிறான். அந்த உயிரின் பெயர், பெண். ‘இந்தியா வாழ்தற்கு ஏற்ற தேசம் இல்லை’ என்று நான் வந்து சேர்ந்த முடிவுக்கு, இங்கு ‘பெண்ணின் இடம்’ ஒரு முக்கியக் காரணம். இந்தப் பூமியில் காலூன்ற முடியாமல் தத்தளித்து, பாதி பூமியும், பாதி வானமுமாகவே பெண் வாழ்கிறாள். இன்னும் பள்ளிக்கூடத்தில் பால் இரண்டு என்று சொல்லிக்கொடுக்கிறது மூடக் கல்வித்துறை. பால் மூன்று. ஒன்று பெண், இரண்டு திருநங்கையர் மற்றும் திருநம்பிகள், மூன்றாவது ஆண்.
இது அன்பைப் பற்றி அதிகம் பேசும் தேசம். அன்பைப் பேச்சிலும் எழுத்திலும் மட்டும் வைக்கும் தேசம். அன்பைக் கொண்டல்லவா இத்தனைப் பிரிவினைகளையும், மேல்கீழ்களையும் வைத்தீர்கள் நீங்கள். அன்பு தேவை இல்லை. இனி தேவைப்படுவது நியாயம்தான். ‘எல்லா மனிதரும் சமம்’ என்கிற நியாயம். நான் எதைச் சாப்பிடலாம் என்று எவரும் ஆணையிடாத நியாயம். ஒழிக்கப்பட வேண்டியவை சாதிகள். உடன் ஒழிக்கப்பட வேண்டியது தீண்டாமை. ஆளவேண்டியது என் தாய்மொழி. இன்னொரு மொழி இல்லை. குறிப்பாக, இந்தி இல்லவே இல்லை.
தர்மம் வெல்வது, இந்தச் சூழலில்தான். மனித தர்மமே அறம். மனிதரை மனிதராக ஏற்பதே தர்மம். அதுவே என் நெறி.
சந்திப்பு: வெ.நீலகண்டன்
படம்: மீ.நிவேதன்