மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஒரு வரி... ஒரு நெறி! - 21 - `உணவெனப்படுவது நிலத்தொடு நீரே!’

ஒரு வரி... ஒரு நெறி! - 21 - `உணவெனப்படுவது நிலத்தொடு நீரே!’
பிரீமியம் ஸ்டோரி
News
ஒரு வரி... ஒரு நெறி! - 21 - `உணவெனப்படுவது நிலத்தொடு நீரே!’

கு.சிவராமன், மருத்துவர்

ணவு என்பதற்கு உலகம் முழுவதும் பல விளக்கங்கள் உண்டு. `உணவு என்பது பசியைப் போக்குவது’, `உணவு என்பது ருசிக்கானது’, `உணவு என்பது இத்தனை கலோரிகளை உள்ளடக்கியது’, `இந்த வயதினருக்கு இந்த உணவு வேண்டும்’. இப்படிப் பல்வேறு விளக்கங்கள் இருக்கின்றன. ஆனால், சூழலுக்கும் உணவுக்குமான பந்தத்தை இவ்வளவு நுட்பமாகப் பதிவுசெய்தது `உணவெனப்படுவது நிலத்தொடு நீரே’ என்ற வரிதான்.

2003-ம் ஆண்டு பெரிய விபத்தில் சிக்கி, படுக்கையில் கிடந்தேன். வேளாண் பேரறிஞர் நம்மாழ்வார் அய்யா என்னைப் பார்க்க வந்தார். அப்போது அய்யா சொன்னார், `உணவெனப்படுவது நிலத்தொடு நீரே’ என்று. என்னைச் சூழலியலின் பக்கம் திருப்பியது, அய்யா சொன்ன அந்த வரிதான். `நீ ஒரு மருத்துவனாக, நோய்க்கு மருந்து கொடுப்பதோடு நிறுத்திக்கொள்ளக் கூடாது. உணவு அரசியலைப் புரிந்துகொள்ள வேண்டும்’ என்றார் அய்யா. அதன் பிறகுதான் உணவு அரசியல், சுற்றுச்சூழல் அரசியல் குறித்து தீவிரமாக வாசிக்கவும் தேடவும் ஆரம்பித்தேன்.

ஒரு வரி... ஒரு நெறி! - 21 - `உணவெனப்படுவது நிலத்தொடு நீரே!’

அரிசி, கரும்பு போன்ற வணிகப் பயிர்களுக்கு நிறையத் தண்ணீர் தேவை. ஆனால், சிறுதானியங்களைச் சாகுபடி செய்ய பெரிய அளவில் தண்ணீர் தேவையில்லை. இவற்றையெல்லாம் யோசிக்கும்போதுதான் தண்ணீருக்குப் பின்னால் இருக்கும் அரசியல் எனக்குப் புலப்பட ஆரம்பித்தது. ‘பணப்பயிர்களின் உற்பத்தியைப் பெருக்க, நிலத்தை எப்படி வேண்டுமானாலும் பாழ்படுத்தலாம்’ என்ற மனநிலைக்கு நம் விவசாயிகளைக் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது பசுமைப்புரட்சி. `நிலம் எப்படிப் போனாலும் பரவாயில்லை. பணம்தான் முக்கியம்’ என்ற எண்ணம் வளர்க்கப்பட்டிருக்கிறது.

‘நிலமும் கெடக் கூடாது... நீர் சார்ந்த விஷயங்களும் நம்மை அச்சுறுத்தக் கூடாது என்றால், சிறுதானியங்கள்தான் நம் பிரதான உணவாக மாற வேண்டும்’ என்ற புரிதல் எனக்கு வந்தது. காலம் காலமாக நாம் கடைப்பிடித்த வாழ்க்கைமுறையாகவும் அதுவே இருந்திருக்கிறது; இயற்கையான பயிர் சுழற்சிமுறைக்கு உகந்ததாகவும் அது இருக்கிறது.

அதன்பின் நான் சிறுதானிய உணவுகளையும் உடல் நலத்தையும் பற்றிப் பேசத் தொடங்கினேன். ‘சிறுதானியங்களை விளைவிப்பது நிலத்துக்கு நல்லது’ என்றபோது செவிசாய்க்காத மக்கள், `சிறுதானிய உணவுகளைச் சாப்பிட்டால், உடல் எடை அதிகரிக்காது; சர்க்கரை நோய் வராது’ என்றபோது முழுமையாகக் கவனித்தார்கள். இரண்டையும் சேர்த்துப் பேசும்போது அது நல்ல விளைவை ஏற்படுத்தியது. பலரை இயற்கையின் பக்கம் திருப்ப முடிந்தது.
`நீரையும் நிலத்தையும் பாதுகாக்காமல், நல்ல உணவை உற்பத்தி செய்ய முடியாது; நல்ல வாழ்க்கையை வாழ முடியாது’ என்ற விழிப்பு உணர்வு இன்று உலகம் முழுவதும் வந்துவிட்டது. ஆனால், பன்னெடுங்காலமாக அதையே வாழ்க்கைமுறையாகக் கொண்டிருந்த நாம், இன்று திசைமாறி விட்டோம். 

வளர்ந்த நாடுகள் அனைத்தும், நீரை மிகமிகப் பாதுகாப்பாகப் பார்த்துக்கொள்கின்றன. உதாரணத்துக்கு சுவிட்சர்லாந்தில் நடந்த ஒரு சம்பவத்தைக் குறிப்பிடலாம். அந்த நாட்டின் சில பகுதிகளில் குறிப்பிட்ட ஒரு பயிரினம் மட்டும் அழிந்துகொண்டே வந்தது. `ஏன்?’ என்று ஆய்வு செய்தார்கள். ஐரோப்பாவின் மிக நீளமான நதிகளில் ஒன்றாகிய ரைன் நதி, சுவிட்சர்லாந்தின் வழியே செல்கிறது. அந்த நதியின் பாதையில்தான் பிரச்னை. அந்தப் பகுதியில் இருக்கும் ஒரு மருந்து உற்பத்தி நிறுவனம், குறிப்பிட்ட ஒரு கழிவை அந்த நதியில் விடுவதே காரணம் எனக் கண்டுபிடித்தார்கள். உடனடியாக அந்த நிறுவனம் மூடப்பட்டது. இத்தனைக்கும் சுவிட்சர்லாந்து, மருந்து உற்பத்தி நிறுவனங்களின் ஆதிக்கத்தில் இருக்கும் நாடு. எதற்காகவும் அவர்கள் தங்கள் நிலத்தையோ, வேளாண்மையையோ விட்டுக் கொடுப்பதில்லை. ஆனால், இன்றும் நாம் நீரை மிக அலட்சியமாகக் கையாள்கிறோம்.

இந்தியா முழுவதும் உள்ள சிறு மற்றும் பெரு நகரங்களில் குறிப்பிட்ட காய்கறிகளை ‘மாதிரி’ எடுத்து நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் நியூட்ரிஷன்  நிறுவனம் ஓர் ஆய்வு செய்தது. நாம் அருந்தும் தேநீரிலிருந்து, சாப்பிடும் காய்கறிகள், இறைச்சிகள், மீன்கள் வரை அனைத்திலும் உலக நாடுகள் தடை செய்து வைத்திருக்கிற பல ரசாயனக்கூறுகள் இருப்பது தெரிய வந்திருக்கிறது. ஆனால், நாம் இதைப் பற்றிக் கவலைப்படாமல் மாசுகளை உருவாக்கிக்கொண்டே இருக்கிறோம்.

எவ்வளவோ தடுப்பூசிகள் வருகின்றன; எவ்வளவோ மருந்துகள் வருகின்றன; எவ்வளவோ மருத்துவமனைகள் வருகின்றன; எவ்வளவோ காப்பீடுகள் வருகின்றன. எதுவுமே நோய் வராமல் தடுப்பதில்லை. நோய் வராமல் தடுக்க ஒரே வழி, மாசில்லாத நல்ல உணவைச் சாப்பிடுவதுதான்.

பால் கலப்படம் ஆகட்டும்... பிளாஸ்டிக் அரிசி விவகாரமாக இருக்கட்டும்... எல்லா மாசுகளுக்கும் பின்னணியில் இருப்பது மனிதனின் லாப வெறிதான்.  எங்கோ ஓர் இடத்தில் நிலத்திலோ, நீரிலோ, பேக்கிங் செய்யப்படும் பொருளிலோ கலக்கப்படும் மாசு, வேறு எங்கோ ஓரிடத்தில் யாரோ ஒருவருக்கு நோயைத் தருகிறது. இதையெல்லாம் உணர்ந்துதான் நம் முன்னோர்கள் `நல்ல உணவு வேண்டுமென்றால் நீரையும் நிலத்தையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்’ என்பதை `உணவெனப்படுவது நிலத்தொடு நீரே’ என்ற வரி மூலம் சொல்லித் தந்திருக்கி றார்கள். இதை மந்திரமாகக் கொண்டால் மட்டுமே அடுத்த தலைமுறைக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துத் தர முடியும்.

சந்திப்பு: வெ.நீலகண்டன்
படம்: பா.காளிமுத்து