சென்னையில் வெவ்வேறு வயதுடைய 17 பேர் 11 வயதுச் சிறுமியைக் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய கொடூரம்தான், கடந்த சில நாள்களாகத் தமிழகத்தை உறையவைத்துக் கொண்டிருக்கும் செய்தி. இந்தச் சம்பவத்துக்கு முன், 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் குற்றவாளி தஷ்வந்துக்குத் தூக்குத் தண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது பெரிதும் விவாதிக்கப்பட்டது. பீகார் மாநிலம் முஸாபர்பூரில் உள்ள சிறுவர், சிறுமியர் காப்பகத்தில் அண்மையில் 29-க்கும் மேற்பட்ட சிறுமிகள் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்வோருக்கு மரண தண்டனை விதிக்க வகைசெய்யும் சட்ட வரைவுமசோதா, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஒரு பக்கம் சிறார் பாலியல் குற்றங்கள் தொடர்பாக அதிகரித்துவரும் செய்திகள், மற்றொரு பக்கம் குற்றங்களின் மீதான விவாதங்கள் மற்றும் சட்டப்பூர்வ நடவடிக்கைகள். உண்மையில், பாலியல் குற்றங்கள் நாட்டில் அதிகரித்துவிட்டதா அல்லது ஊடகங்கள் அவற்றைப் பற்றித் தொடர்ச்சியான செய்திகள் வெளியிடுவது அதிகரித்துவிட்டதா என்ற கேள்வி எழுகின்றது.
பாலியல் குற்றங்கள் தொடர்பாகக் கடந்த 2012-ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்தம் இப்படியாகச் சிறுவர், சிறுமிகள் மீது தொடுக்கப்படும் வன்முறைகள் வரையறுக்கப்பட்டு, அவை காவல்துறையினரால் குற்றமாகப் பதிவு செய்யப்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது. இந்தக் கட்டாயமாக்கல் 45% வரை குழந்தைகள் மற்றும் சிறுவர், சிறுமியர் மீதான பாலியல் வன்முறைகளைப் பதிவு செய்தது. 2012 முதல் 2016-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மட்டும் சிறுவர், சிறுமியர் மீதான பாலியல் வன்கொடுமைகள் தொடர்பான புகார்கள் இரட்டிப்பாகின. இப்படியான புகார்கள் போலீஸாரால் ஏற்றுக்கொள்ளப்படாமல் அல்லது பதிவுசெய்யப்படாமல் போனால் அதுவும் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படுவதும் இதற்கு ஒரு காரணம்.
அண்மையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சிறுமி ஆசிஃபா, கோயில் ஒன்றில் சில விஷமிகளால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட கொடூரச் சம்பவத்துக்குப் பிறகுதான் இந்தியாவில் நிலவும் பாலியல் வன்கொடுமைச் சிக்கல், சர்வதேச அளவில் கவனத்துக்கு வந்தது. அதன் தாக்கம்தான், நாடாளுமன்றத்தில் அத்தகைய குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கக்கூடிய வரைவு மசோதா கொண்டு வரப்பட்டதும்.
டெல்லியில் கடந்த 2012-ம் வருடம், ஓடும் பேருந்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, பேருந்திலிருந்து தூக்கி எறியப்பட்ட நிர்பயா, உங்கள் நினைவில் இருக்கலாம். நிர்பயாவின் மரணத்துக்குப் பிறகுதான், பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் பெண்களுக்கு ஆதரவாக இந்தியக் குற்றவியல் சட்டத்திருத்தம்-2013 அமலுக்கு வந்தது. 2007-ம் ஆண்டிலேயே இப்படியான குற்றங்கள் அதிகரித்து இருந்ததற்கான சான்றுகளை அரசுத் தரப்பே தருகின்றன. அந்த வருடத்தில் மட்டும் இந்தியாவில் 13 மாநிலங்களில் நடத்தப்பட்ட கருத்துக் கேட்பில் மொத்தம் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள், தாங்கள் பாலியல்ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளானதாகத் தெரிவித்திருந்தார்கள். பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக்கான அமைச்சகம் இதுதொடர்பான அறிக்கையை வெளியிட்டிருந்தது. ஆனால், இந்தக் குற்றங்களின் மீதான வலுவான சட்டங்கள் இருந்தும் 2012-ம் ஆண்டு தொடங்கி, அதன் சதவிகிதம் மட்டும் 28.2 என்கிற அளவிலேயே இருந்து வருகிறது. பொதுவாக இப்படியான குற்றங்களில் பெரும்பாலும் குழந்தைகளுக்குத் தெரிந்தவர்களே குற்றவாளிகளாக இருப்பதால் குடும்ப கௌரவம் கருதி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டாம் என்று சம்பந்தப்பட்ட பெற்றோர்களே சில நேரங்களில் கேட்டுக் கொள்கிறார்கள். பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகள் ஒரு வருடத்துக்குள் விசாரித்து முடிக்கப்பட வேண்டும் என்கிற சட்ட விதிமுறை இருக்கும் நிலையிலும், பெரும்பாலான வழக்குகள் காலதாமதமாகவே முடிக்கப்படுகின்றன.
குழந்தைகள் நல ஆர்வலர் `பாடம்' நாராயணன் கூறுகையில், `` ஏழு வயது சிறுமியின்வழக்கு மட்டுமே, தஷ்வந்தின் குற்றத்தின் வீரியம் காரணமாக விரைந்து ஒரு வருடத்துக்குள் முடிக்கப்பட்டது. இல்லையென்றால், இப்படியான வழக்குகள் முடிய கால தாமதமாகும்" என்கிறார்.
தூக்குத் தண்டனைச் சட்டத்தைக் கொண்டுவருவதற்கு முன்பு, ஏற்கெனவே இருக்கும் சட்டத்தில் நிலவும் இப்படியான குளறுபடிகளைச் சரிசெய்ய வேண்டியது தேவையாகிறது.