சினிமா
Published:Updated:

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்!

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்!
பிரீமியம் ஸ்டோரி
News
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்!

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்!

தீமையிலும்  நன்மை உண்டு என்பதற்கு உதாரணமாக இரண்டு நல்ல விஷயங்களை டெங்குக் கொசு நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது.

‘குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் வேலை மட்டுமே’ என்றிருந்த பொதுப்புத்தியை டெங்கு அகற்றியிருக்கிறது.  குப்பைத் தொட்டி வழிந்தால் அது கழிவுநீர்ப்பாதையை அடைக்கும்; அதன்மூலம் டெங்குக் கொசுக்கள் உற்பத்தியாகும். அதேபோல, டயர், தேங்காய் ஓடுகள், தண்ணீர்த் தொட்டிகள், உடைந்த பிளாஸ்டிக் பொருள்கள், உடைந்த வாகன உதிரிப்பாகங்கள், கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படும் இடங்கள் ஆகியவற்றில் மழை நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற உண்மை முன்னெப்போதையும்விட இப்போது அழுத்தமாக மக்களுக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறது.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்!


அடுத்ததாக, டெங்குக் கொசுவால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால், நம் வீட்டை மட்டும் சுத்தமாக வைத்திருந்தால் போதாது; நம் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பதும் மக்களுக்கு இப்போது புரிந்திருக்கிறது.
சென்னையில் பெருமழைவெள்ளம் வந்தபோது, இளைஞர்கள் தன்னெழுச்சியாக நிவாரணப் பொருள்களோடு, மக்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குப் போய் உதவி செய்தனர். இதே போன்றதொரு தன்னெழுச்சியை ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போதும் தமிழகம் கண்டது. இப்போதும் தமிழ்நாட்டுக்கு அதே போன்றதொரு தன்னெழுச்சி தேவைப்படுகிறது.

காய்ச்சல் என்று வந்தாலே அது டெங்குக் காய்ச்சலாக இருக்குமோ என்ற அச்சம் காரணமாக, அரசு மருத்துவமனைகளில் வழக்கத்துக்கும் அதிகமாக மக்கள் மருத்துவப் பரிசோதனைகளுக்காகக் குவிகிறார்கள். அதனால், அரசு மருத்துவமனை ஊழியர்களும், ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்களும் மிகப்பெரிய வேலை பளுவில் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

`அனைத்துக் காய்ச்சல்களும் டெங்குக் காய்ச்சல் அல்ல. டெங்குக் கொசு கடித்த நூற்றில் இரண்டு பேருக்குதான் டெங்குக் காய்ச்சல் வரும்.  அப்படி வந்தால், அவர்களையும் உரிய முறையில் சிகிச்சை அளித்துக் குணப்படுத்த முடியும்’ என்பதை மக்களுக்குப் புரிய வைக்க வேண்டும். இந்தச் சவாலான தருணத்தில், தனியார் மருத்துவமனைகளும், தன்னார்வத் தொண்டு அமைப்புகளும் நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு பொதுமக்களுக்குக் கைகொடுக்க வேண்டும்.

இனிப்புகளைப் பரிமாறிக்கொள்ளும் இந்த இனிய பண்டிகைக் காலத்தில் இந்த டெங்குக் காய்ச்சலிலிருந்து தமிழகத்தை விடுவிக்க, அரசு மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களோடு ஒன்றிணைந்து இளைஞர்கள் பெருமளவில் பணியாற்ற வேண்டும். இதுவே அவசர, அவசியத் தேவை.