
ட்விட்டரையும் வலைதளத்தையும் புரட்சிக்கு உதவாத திண்ணைபேசிகளின் ஊடகம் என்று ஒதுக்கிவிட முடியுமா?
`ட்விட்டர் அரசியல் செய்கிறார்’ என்று என்னைப்பற்றிச் சிறு கிண்டல் ஒன்று பரவலாக உள்ளது. 20-ம் நூற்றாண்டில் சர்வாதிகார மன்னர் ஆட்சியில் புரட்சிக் குரல்கள் எப்படிச் சிறு பத்திரிகைகள் மூலம் சேதி பரப்பி, பெரும் புரட்சிகள் உருவாயினவோ அவற்றுக்கு நிகரான, ஏன், அதையும்விட வலிமையான ஊடகமாக வலைதளம் விஸ்வரூபம் எடுத்துவிட்டது. இந்த உண்மையைப் பழைமைவாதிகள்கூடப் புரிந்துகொண்டுவிட்ட நேரம் இது.
அமெரிக்காவில் 29 வயது இளைஞர் கோடி ரட்லட்ஜ் வில்சன் (Cody Rutledge Wilson) என்பவர் இணையதளத்தில் 3டி பிரின்டரின்மூலம் யார் வேண்டுமானாலும் தயாரிக்கக்கூடிய, ஒரு தோட்டா மட்டுமே கொண்ட கைத்துப்பாக்கியைப் பிரசுரம் செய்தார். அமெரிக்க அரசு முயன்றும் தடுக்கவியலாமல் இன்றும் Pirate Bay-ல் நிலவுகிறது, உலவுகிறது `லிபரேட்டர்’ என்ற பெயர் கொண்ட அந்தக் கைத்துப்பாக்கி. தன்னை `ரகசிய அராஜகவாதி’ (Crypto Anarchist) என்று அழைத்துக்கொள்ளும் திரு. கோடி வில்சன் லட்சம் துப்பாக்கிகளுக்கான செயல்திட்டத்தை வலையில் விரித்து விவரித்துள்ளார். இது நடந்தது 2013-ல். தற்போது இயந்திரத் துப்பாக்கி ஒன்றையும் விற்றுக் கொண்டிருக்கிறார். அரசால் தடுக்க முடியவில்லை. இலட்சக்கணக்கில் விற்கும் கோடி வில்சனின் துப்பாக்கிகளின் எண்ணிக்கை கோடிகளை நெருங்க வெகுநாளாகாது.

இது நிலவரம். இப்போது சொல்லுங்கள், ட்விட்டரையும் வலைதளத்தையும் புரட்சிக்கு உதவாத திண்ணைபேசிகளின் ஊடகம் என்று ஒதுக்கிவிட முடியுமா?
ஒருசிலர் அதைத் திண்ணையாகவும், இன்னும் சிலர் கக்கூஸாகவும் பயன்படுத்துகின்றனர். புதிதாகக் கெட்டவார்த்தை கற்ற பள்ளி மாணவன் அதை யார்மீதாவது பிரயோகப்படுத்த முற்பட்டு முடியாமல், அதை கக்கூஸ் சுவரிலாவது எழுதி அழகு பார்ப்பான். முடிந்தால் ஆசிரியர்களது கழிப்பறையிலும் இன்னொரு பிரதியை ஏற்படுத்திப் புரட்சி செய்வான். அப்படிப்பட்ட ஆரம்பப் புரட்சியில் அறைகுறையாய் ஈடுபட்ட, கக்கூஸ் வீரர்களின் கரங்களுக்கு வலுச்சேர்த்த கரங்களில் எனதும் ஒன்று. இதை நான்தான் செய்தேன் என்று ஒப்புக்கொள்ள முடியாத அசட்டுப் புரட்சி. `இதைச் செய்திருக்க வேண்டாமே’ எனத் தோன்றும் வயது வருவதற்குள் பள்ளியில் படிப்பே முடிந்துவிட்டது.

கக்கூஸ் புரட்சியாளர்களின் சகோதரர்கள் ட்விட்டரிலும் முளைத்திருக்கிறார்கள். நான் விமர்சிப்பது அவர்களுடைய கருத்துகளையல்ல. முகமும் விலாசமும் தெரியாது என்ற காரணத்தினால் மட்டுமே தைரியமாய்ப் பேசும் தன்மை எத்தகையது? விலாசம் கண்டுபிடிக்க முடியாது என்பதனால் மட்டும் குற்றங்கள் புரியலாமா? இதற்குத் தன் முகத்தையும் விலாசத்தையும் பகிரங்கமாய் அறிவித்து அராஜகம் செய்யத்துணியும் திரு.கோடி வில்சனின் வீரம் மெச்சத்தக்கதே. அப்படிப்பட்ட ட்விட்டர் போராளி அல்லவா பல்க வேண்டும். அது தேவையும்கூட. முகநூல், ட்விட்டர் வீரர்கள் மொட்டைமாடியில் நின்றுகொண்டு கீழே தெருவில் போகும் பாதசாரிகளின் தலையில் துப்பிவிட்டு ஒளிந்துகொள்ளும் சிறுபிள்ளைத்தன மில்லாமல், தைரியமாய் அநீதிகளை விமர்சிக்கும் வீரர்களாக வேண்டும். அதுவே மெச்சப்படும்.
நேர்மையான என் விமர்சகர்கள் நிறைய பேர் என் நண்பர்களானதையும், நான் அவர்கள் விமர்சனத்தை ஏற்று என்னைத் திருத்திக் கொண்டபோது அவர்களே என் ரசிகர்களாக மாறியதையும் பார்த்திருக்கிறேன். உங்கள் விமர்சனத்தை எள்ளளவும் குறைக்கத் தேவையில்லை. தரம் குறையாமல் அதைச் செய்வது நல்லது. ரயில் நிலையத்தில் கத்திகளை வீசிப் பயணிகளை மிரட்டியவர்கள் கண்டிப்பாய் வீரர்கள் அல்ல. சுய சந்தோஷத்திற்காகப் பிறரை மிரட்டி விளையாடுவது சிறுபிள்ளைத்தனம் கூட இல்லை, பொறுப்பின்மை; மனிதநேயமின்மை. பிடிபட்டவுடன் அவர்கள் கதறிய கதறலே அவர்கள் மனோபலத்தின் சான்று.
30 வருடங்களுக்கு முன்னால் பாரதப் பிரதமரை நேரில் சந்திக்கச் சென்றேன். குறைகூறி அழ, சினிமாக்காரர்களுடன் நானும் சென்றிருந்தேன். அது ட்விட்டர் இல்லாத காலம். மும்பையில் மதக்கலவரம் வெடித்துக் கைமீறிப் போயிருந்த நேரம் அது. பிரதமர் திரு. நரசிம்மராவ் அவர்கள் சற்று பட்டும்படாமலும் பாரபட்சமாகவும் பேசியதாக, சந்திக்கச் சென்றிருந்த பலருக்கும் தோன்றியது. என் கேள்வியின் கூர்மையை மரியாதைக்குறைவு எனத் தவறாகப் புரிந்துகொண்ட பிரதமர், நான் கேள்வியை முடிப்பதற்குள் கோபத்தில் முகத்தைத் திருப்பிக்கொண்டார்.
மதியாத வாசலை மிதித்துவிட்ட சங்கடத்தில் கைகூப்பி, மதியா வீட்டை விட்டு விடைபெற்று வெளியேறினேன். அன்று பலருக்கும் நான் பிரதமரையே அவமானப்படுத்திவிட்டதாகத் தோன்றியது. உண்மையில் அன்று அவமானப்பட்டது நானோ அவரோகூட இல்லை, அவமானத்துக்கு உள்ளானது இந்தியாவின் பன்முகத்தன்மை. அன்று ட்விட்டர் இல்லாத குறையை, இந்தச் சம்பவம் குறித்து ஆனந்தவிகடனில் வெளியான கட்டுரை நீக்கியது.

மத்திய அரசு, மாநில அரசு என்ற பாகுபாடில்லாமல், இந்தியாவின் அற்புதப் பன்முகத்தன்மை பாதிக்கப்படும் போதெல்லாம் என் குரல் எழும் என்பதே உண்மை. ஆனால், சற்றும் கண்ணியம் குறையாத குரலாக அது இருக்கவேண்டும் என்று மெனக்கெடுபவன் நான். என்பால் பிழை இருப்பின் பகிரங்கமாக மன்னிப்பு கோரவும் நான் தயங்கியதில்லை.
சமீபத்திய உதாரணம் இதோ...
பணமதிப்பு நீக்கம் (Demonitisation) பற்றி மாண்புமிகு பிரதமர் மோடி அறிவித்தபோது, கட்சி வரையறைகள் கடந்து இச்செயல் பாராட்டப்படவேண்டும் என்று ட்விட்டரில் என் கருத்தை வெளியிட்டேன். கறுப்புப்பணத்தை ஒழிப்பதற்கான ஒரு வழி என்ற முறையில் முழு ஆதரவையும் அத்திட்டத்திற்குத் தருவது மட்டுமன்று, அதனால் விளையும் சிறு இடைஞ்சல்களையும் மக்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்றே நான் நினைத்தேன். ஆனால், என் சகாக்கள் பலரும், பொருளாதாரக் கல்வி பெற்ற சிலரும் அலைபேசியில் கூப்பிட்டு, என் ஆதரவுக்கு எதிராகத் தங்களின் கடும் விமர்சனங்களை முன்வைத்தார்கள்.
கொஞ்சநாள் கழித்து, டிமானிட்டைசேஷனை நடைமுறைப்படுத்திய விதம் பிழையானது; ஆனால், யோசனை நல்ல யோசனைதான் என்று மனதைத் தேற்றிக்கொண்டேன். அதற்கும் பிற்பாடு பொருளாதார வல்லுநர்களின் விமர்சனக்குரல்கள் வலுத்தன. சரி, சில திட்டங்கள் நல்ல எண்ணத்துடன் செய்யப்பட்டாலும் நடைமுறையில் தோல்வியுறும் என்று நினைத்துக் கொண்டேன்.
தற்போது `யோசனையே கபடமானது’ என்பது போன்ற உரத்த குரல்களுக்கு அரசிடமிருந்து பலவீனமான பதில்களே வரும்போது சந்தேகம் வலுக்கிறது. திட்டத்திற்குப் பாராட்டு சொன்னதில் சற்றே அவசரப்பட்டுவிட்டதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்கக் கடமைப்பட்டிருக்கிறேன். தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்தான் என்று அடம்பிடிக்காமல் தவற்றை ஒப்புக்கொண்டால், பிரதமருக்கு என்னுடைய இன்னொரு சலாம் காத்திருக்கிறது. தவறுகளைத் திருத்தி ஆவன செய்வதும், முக்கியமாக அதை ஒப்புக்கொள்வதும் பெருந்தலைவர்களுக்கான அடையாளம்.
திரு.காந்தியால் அதைச் செய்யமுடிந்தது. இன்றும் அது சாத்தியம்தான். சற்றே பொறுத்திருந்து பார்ப்போம். அதற்குள் முயலின் மூன்று கால் இரண்டு காலாகக் குறைந்தால்... யாரோ நம்மை மாட்டுக்கறி சாப்பிடத் தடை செய்துவிட்டுத் தாங்கள் முயல்கறி சாப்பிடுகிறார்கள் என்றுதான் புரிந்துகொள்ள வேண்டும்.
சமீபத்தில் சினிமா ஃபிலிம் பாதுகாப்புப் பயிலரங்கிற்காக நியூயார்க்கில் உள்ள `மியூஸியம் ஆஃப் மாடர்ன் ஆர்ட்’-டிலிருந்து தெல்மா ராஸ் என்பவர் சென்னைக்கு வந்திருந்தார். சென்னை விமானநிலையத்தில் விசா பேப்பர் சரியாக இல்லை என்று அதிகாரிகள் ராஸிடம் சொல்லியிருக்கிறார்கள். ‘பேப்பர்கள் சரியாகத்தானே இருக்கின்றன’ என ராஸ் வாதம் செய்ய, அனுமதி மறுப்பதற்கு அந்த இமிகிரேஷன் அதிகாரி வியத்தகு காரணம் ஒன்றும் சொன்னாராம்.

அம்மையார் தெல்மா ராஸ் அணிந்திருந்த ஆடை இந்தியக் கலாசாரப்படி ஆபாசமாக இருப்பதால் அனுமதி மறுக்கப்படுவதாகச் சொல்லியிருக்கிறார். தெல்மா ராஸ் டெல்லிக்கு அனுப்பப்பட்டு அல்லல்பட்டு, கடைசியாக மத்திய மந்திரியின் தலையீட்டால் திரும்ப வர யத்தனித்து, சென்னை வந்து சேர்ந்தார்.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களில் தாஜ்மஹால் பெயர் விடுபட்டதுபோல் இதுவும் ‘பன்முகத்தன்மை இழந்துவரும்’ நாட்டில் மக்களை பயமுறுத்தும் அறிகுறிதான். போன வாரக் கட்டுரையில் நான் சொன்ன `ஒரே குடையின் கீழ் ஒரே மொழி பேசும் ஒரே மதம் கொண்ட இந்தியா’ எனும் கனவு, அது கனவாகவே இருக்கும். நடைமுறையில் சாத்தியப்படாது.’ என் போன்ற பல கோடி இந்தியர்கள் அக்கொடும் கனவை நடைமுறைப்படுத்த விடமாட்டார்கள். மக்களின் தெய்வங்கள் இனியும் பல்கும்.
பாமரனின் ஆன்மிகத்திற்கு மதாச்சாரிகள் தேவையில்லை. அவனாச்சு அவன் தெய்வமாச்சு. நாத்திகர்கூட இந்தப் பாமரனைக் கடியாது கனிவாக மனம்மாறச் செய்ய முயன்று கொண்டிருக்கிறார்கள். ஆனால், நடந்தபாடில்லை. இந்தப் பாமரனின் பக்தி அவனது தனிப்பட்ட விஷயம். அவன் பக்தி அமைதியாக இடைத்தரகரின்றி நடக்கிறது. அவனையும் வழிப்பறி செய்து பணம் பறிக்கும் மட்டரக ஆன்மிகம் தெருத்தெருவாய் உலவத்தான் செய்கிறது. அதன் அடையாளம், கோயிலைவிடக் கொஞ்சமே சிறிதாக இருக்கும் உண்டியல். அதைப் பார்த்ததுமே புரிந்துகொள்ளலாம், அந்த ஆன்மிகத்தில் மூலப் பொருள் காசுதான் என்று. அதைவிட நாத்திகம் பேசுவதே மேல்.
இந்தக் குமட்டல் கோபம் எனக்கு சமீபத்தில் வந்ததன்று; பழையது. `ஹேராம்’ படத்தின் இறுதியில் ஜூனியர் சாகேத் ராம் பேசும் ஒரு வசனம் வரும். ``ரிலீஜியன் அண்ட் பாலிட்டிக்ஸ் ரொம்ப டேஞ்சரஸ் கலவை. செக்ஸ் வயலன்ஸ் மாதிரி’’ என்று.
`பாரத் தேஷ்’, விமர்சனங்களை மதியாது அக்கலவையை ஆர்வத்துடன் செய்துகொண்டிருக்கிறது. சாமானிய பாதசாரிகள், பாமரர்களை அதற்கு பலியாகாமல் பாதுகாக்கவேண்டியது பகுத்தறிவாளர்களின் கடமை மட்டுமல்ல, நேர்மையான பக்தன் என்று தன்னை அடையாளம் காட்டிக்கொள்பவர்களின் கடமையும்கூட!
- உங்கள் கரையை நோக்கி!
பரிந்துரைக்கிறேன்!
‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் இறுதிநாளன்று அனைத்துப் பங்கேற்பாளர்களுக்கும் என் சார்பில் மூன்று புத்தகங்களைப் பரிசளித்து மகிழ்ந்தேன். புத்தகங்களைப் பரிசாகத் தருவதும், பெறுவதும் எனக்கு எப்போதுமே பிடித்த ஒன்று. நானறிந்த சில நல்ல புத்தகங்களை என் சகோதர சகோதரிகளுக்குக் கொடுப்பதன்மூலம் பல கோடித் தமிழர்களால் கொண்டாடப்பட்ட அந்த நிகழ்ச்சியின் நிறைவன்று மனநிறைவோடு நான் செய்த விஷயம் இறுதித் தொகுப்பில் ஏனோ இடம் பெறவில்லை. ஆனந்த விகடன் மூலம் அந்த முக்கியமான புத்தகங்களை மீண்டும் பரிந்துரைக்கிறேன்.
முதல் புத்தகமான Yuval Noah Harari எழுதிய Seppiens பற்றி, சென்ற வாரம் சொல்லியிருந்தேன். அதுதவிர இன்னும் இரண்டு தமிழ்ப் புத்தகங்கள். என் ஆசான்களில் ஒருவராக நான் மதிக்கும் ஜெயகாந்தனின் ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’. புதினம் படிக்கும் தமிழ் வாசகர்கள் அனைவரும் தவறவிடக் கூடாத படைப்பு. ஏற்கெனவே படித்தோர் இன்றும் வியப்பதைக் கண்டிருக்கிறேன். இதுவரை படிக்காதோரும் அந்த வியப்பை அடைய விரும்புகிறேன்.

‘நதியும் கடலும் மட்டும்தான் முழுமையா என்ன? தண்ணீரின் ஒவ்வொரு துளியும் முழுமையானதேயாகும். நாடுகளும் கண்டங்களும்தான் உலகம் என்பதில்லை. ஒவ்வொரு மனிதனும் ஒரு உலகம்தான்.’

முன்னுரையில் மேற்கண்ட வரிகள் மூலம் முதிரா வயதிலும் என்னை ஈர்த்த ஜெயகாந்தன், புத்தகத்தின் உள்ளே படைக்கப்பட்ட `ஹென்றி என்னும் மனிதனாக மாறிவிட மாட்டேனோ’ என்று என்னை ஏங்கச் செய்தார். உங்களுக்கும் அந்த எண்ணம் தோன்றச் செய்வார்.
அடுத்து, நான் அன்றைக்குப் பரிசாக அளித்த மற்றொரு புத்தகம், நான் எழுதிய ‘ஹேராம்’ திரைக்கதைப் புத்தகம். அதை நான் எழுதியதால் மட்டும் வழங்கவில்லை. இன்றைய காலகட்டத்தில் படித்தே ஆக வேண்டிய புத்தகமாக அதைக் கருதியதால் தெரிவு செய்தேன். எழுதியவனும் நானாக இருப்பதால் எனக்கது பெருமைதான். அந்தப் பெருமையை எனக்களித்த அக்கதைக்கும், எனக்கும் நாயகனான மோகன்தாஸ் கரம்சந்த் காந்திக் கிழவனை இன்னும், வரவிருக்கும் தலைமுறையினருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே என் விருப்பம்.

இந்தத் தொடர் குறித்த உங்கள் கருத்துகளை என்னோடு பகிர்ந்துகொள்ள kamalhassan@vikatan.com-க்கு எழுதுங்கள்.
- கமல்ஹாசன் படங்கள்: ஜி.வெங்கட்ராம்