சினிமா
Published:Updated:

பயம் அல்ல பயங்கரம்!

பயம் அல்ல பயங்கரம்!
பிரீமியம் ஸ்டோரி
News
பயம் அல்ல பயங்கரம்!

ப.திருமாவேலன் - ஓவியங்கள்: ரமணன், கார்த்திகேயன் மேடி

வர்கள் பங்கு பிரிப்பதில் தீவிரமாக இருக்கும் போது நாட்டில் டெங்கு தலைவிரித்தாடத் தொடங்கி விட்டது. வண்டலூரில் பிறந்த சிங்கக்குட்டிக்கு, ‘விஷ்ணு’ என்று பெயர் சூட்டுவதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மகிழ்ச்சியில் திளைக்கும்போது  மருந்து இல்லாமல் அரசு மருத்துவமனையில் மனிதர்கள் இறக்கும் அவலம் தொடர்கிறது.

வயது வித்தியாசம் இல்லாமல் நாடு முழுவதும் மக்களைக் காவு வாங்கிக்கொண்டிருக்கிறது டெங்கு. சாதாரணக் காய்ச்சல் எனத் தூக்கிச் செல்லப்படுபவர்கள், அடுத்த சில நாள்களிலேயே டெங்கு பாதிப்புக்கு உள்ளாகி, மரணத்தின் வாசலைத் தொட்டுத் திரும்புகிறார்கள். பலருக்கு மரணமே இறுதி ஆகிறது. எத்தனை பேர் இறந்தார்கள் என்ற தகவலும் அரசிடம் இல்லை. எத்தனை பேர் பாதிக்கப்பட்டார்கள் என்ற தகவலும் இல்லை.

“டெங்கு பாதிப்பு இல்லை” என்கிறார் அமைச்சர் விஜயபாஸ்கர். ``டெங்கு பரவுகிறது என்ற பீதியை ஏற்படுத்த வேண்டாம்” என்று அவர் கேட்டுக்கொள்கிறார். அதே நேரத்தில், “டெங்குவால் பாதிக்கப்பட்ட 10 ஆயிரம் பேரைக் காப்பாற்றிவிட்டோம்” என்று தனக்குத் தானே தோளில் தட்டிக்கொள்கிறார். இல்லாத டெங்குவால், எப்படி பாதிக்கப்படுவார்கள்? டெங்கு பாதிப்பு இல்லாதவர்கள் எப்படிக் காப்பாற்றப்படுகிறார்கள்? கொசு உற்பத்தியைவிடக் கொடூரமானது இவர்களது பொய் உற்பத்தி. ஊரைச் சுத்தப்படுத்துவதற்கு முன்னால் இவர்களது வாயைச் சுத்தப்படுத்த வேண்டும்.

பயம் அல்ல பயங்கரம்!

தமிழ்நாட்டின் தவப்புதல்வரான துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ``டெங்குக் காய்ச்சல் கட்டுப்பாட்டில் உள்ளது” என்று சொல்லியிருக்கிறார். உண்மைதான். டெங்குக் காய்ச்சல், இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் அரசின் கட்டுப்பாட்டில் இல்லை; ஏடிஸ் கொசுவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதைக் கட்டுப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல. அவர்களுக்குப் புரியும் மொழியில் சொல்ல வேண்டுமானால் ‘உங்களைவிட மோசமானது.’

``டெங்குக் காய்ச்சல் குறித்துத் தவறான புள்ளி விவரங்கள் சொல்லிவருகிறார்கள்” என்றும் துணை முதல்வர் வருத்தப்பட்டுள்ளார். சரியான புள்ளிவிவரத்தை அவரோ, சுகாதாரத் துறை அமைச்சரோ சொல்லட்டுமே!

அக்டோபர் 12-ம் தேதிதான் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், டெங்கு மற்றும் பருவகாலங்களில் ஏற்படும் பல்வேறு காய்ச்சல்களைக் கட்டுப்படுத்துதல் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்துள்ளது. அதற்குப் பத்து நாள்கள் முன்னதாக ஓர் ஆய்வுக்கூட்டமும் நடந்தது. ஆனால், ஆகஸ்ட் மாதமே தீவிர காய்ச்சல் மற்றும் டெங்கு பாதிப்புகள் தமிழ்நாட்டில் பரவிவிட்டன.

ஆகஸ்ட் - செப்டம்பரில் 50 க்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டார்கள். அந்த இறப்பைப் பற்றிய எந்தக்கவலையும் முதலமைச்சருக்கோ, அமைச்சர்களுக்கோ இல்லை.

ஜெயலலிதாவின் சாவைப் பற்றியே கவலைப் படாதவர்களுக்கு போடி ராஜேஸ்வரியின் சாவும், ஓமலூர் நிவாஷினி சாவும் எப்படி சோகத்தை ஏற்படுத்தும்? ஜெயலலிதாவின் ‘உடல்’ அப்போலோவில் வைக்கப்பட்டிருக்கும் போது கிண்டி ராஜ்பவனில் ஒரு சொட்டுக் கண்ணீர் இல்லாமல் அமைச்சர்களாகப் பதவி ஏற்றுக் கொண்டவர்களாயிற்றே இவர்கள்!

தமிழ்நாட்டில் டெங்கு பரவுகிறது. சாவு விழுகிறது என்பது அக்டோபர் 12-ம் தேதிதான் தமிழக முதலமைச்சருக்குத் தெரியுமா? டெங்கு இதற்கு முன் வந்ததில்லையா?

கடந்த ஆறு ஆண்டுகளாக அச்சுறுத்திக் கொண்டிருக்கும் உயிர்க்கொல்லியாக டெங்கு மாறிவிட்டது. ஓராண்டல்ல, ஈராண்டல்ல, ஆறு ஆண்டுகள்.

2010-ம் ஆண்டில் 2,051 பேரும்,

2011-ம் ஆண்டில் 2,501 பேரும்,

2012-ம் ஆண்டில் 12,826 பேரும்,

2013-ம் ஆண்டில் 6,122 பேரும்,

2014-ம் ஆண்டில் 2,804 பேரும்,

2015-ம் ஆண்டில் 4,535 பேரும்,

2016-ம் ஆண்டில் 2,521 பேரும்

- டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்று புள்ளி விபரங்கள் சொல்கின்றன. இதில் அதிகபட்சமாக 2012-ம் ஆண்டு பாதிப்புகள் இருந்துள்ளது. 66  பேர்  மரணமடைந்துள்ளார்கள்.  இதை வைத்துப் பார்த்தாலே தமிழ்நாட்டின் மாநில நோயாக டெங்கு மாறிவருவது தெரியும். 2011-லிருந்து அ.தி.மு.க அரசு பதவியில் இருக்கிறது. இதனைக் கட்டுப்படுத்த என்ன செய்யப்பட்டது?

ஜெயலலிதாமீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை, தீர்ப்பு, கைது, பதவி இழப்பு, ஓ.பி.எஸ் பதவி ஏற்பு, சிறை, ஜாமீன், விடுதலை, உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு, ஜெயலலிதாவுக்கு உடல் நலம் பாதிப்பு, தலைமைச் செயலகம் வராமல் வீட்டிலேயே இருந்தது, சட்டமன்றப் பணிகளில் கலந்து கொள்ளாமை, கோட்டையில் இருந்தே காணொளி நிகழ்ச்சிகள், திடீரென அப்போலோவில் சேர்ப்பு, 75 நாள்கள் மர்மமாக வைத்திருப்பது, சசிகலா பொதுச்செயலாளர், ஓ.பி.எஸ் உடைசல், எடப்பாடி பதவியேற்பு, சசிகலா கைது, தினகரன் முன்னுக்கு வருவது, ஓ.பி.எஸ் - மோடி நடப்பு, தினகரன் பின்னடைவது, ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இணைப்பு, பிணைப்பு, மீண்டும் இப்போது கசப்பு... என்று ஆறு ஆண்டுகளாக இந்தக் கருமத்தைத்தானே தமிழ்நாடு பார்த்துவந்தது. தங்களைப் பற்றிக் கவலைப்படவே காலநேரம் இல்லாமல் முதலமைச்சரும் அமைச்சர்களும் இருக்கும்போது சுத்தம், சுகாதாரம், கொசுவைப் பற்றிக் கவலைப்பட இவர்களுக்கு எங்கே நேரம் காலம்?

இந்த ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான பத்து மாதகாலத்தில் தமிழகம் முழுவதும் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாகச் சொல்லப்படுகிறது. இதில் ஆகஸ்ட் வரை 6,919  பேர் வரை பாதிக்கப்பட்டதாகவும் மீதிப்பேர் ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் முதல் வாரம் வரை பாதிக்கப்பட்டதாகவும் சொல்கிறார்கள்.

பயம் அல்ல பயங்கரம்!

இன்று ஆய்வு நடத்துவது, விழிப்பு உணர்வுப் பிரசாரம் செல்வது, மருத்துவமனைகளில் மருந்தை அதிகப்படுத்துவது, வணிக நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்புவது, அபராதம் போடுவது எல்லாம் செய்யலாம். இவை அனைத்துமே நோய் வந்தவுடன் செய்வது. வரும் முன் என்ன செய்தார்கள் என்பதே கேள்வி. டெங்குவால் இறந்த போடி ராஜேஸ்வரி 8  மாத  கர்ப்பிணிப்பெண். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கை திடீரெனக் குறைந்து இறந்துபோய்விட்டார். அவருக்கு அருகில் கணவர் சிவக்குமார் மட்டுமே இருந்துள்ளார். அவர்தான், தன் மனைவி இறந்துபோய்விட்டார் என்று மருத்துவரிடம் போய்ச் சொல்கிறார். அதன்பிறகுதான் மருத்துவர்கள் வந்து உறுதிப்படுத்தியிருக் கிறார்கள். அரியலூர் மருத்துவமனையில், பாதிக்கப்பட்டு வந்த மக்களை,  ``ரொம்பப் பேசினால் வேற ஏதாவது ஒரு ஊசியைப் போட்டுடுவோம்” என்று மருத்துவமனை ஊழியர்களே மிரட்டியுள்ளார்கள். மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிக்கு குளுக்கோஸ் ஏற்ற ஊழியர் இல்லாத நிலையில் துப்புரவுப் பணியாளர் அந்த வேலையைச் செய்துள்ளார். நோய் முற்றிய பிறகும் எவ்வளவு பொறுப்பாய் நடந்துகொள்கிறது அரசு நிர்வாகம் என்பதற்கு உதாரணம் இது. வெறும் உதாரணமா இது. உயிர் அல்லவா?

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாமக்கல், சேலம், தஞ்சாவூர் ஆகிய ஆறு மாவட்டங்களும் டெங்கு தாண்டவம் ஆடும் மாவட்டங்களாக மாறிவிட்டன. இதிலிருந்து மற்ற மாவட்டங்களுக்கும் பரவலாம். தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னையில் - சிங்காரச் சென்னையில் டெங்குக் காய்ச்சல் அதிகமாம்.

தமிழ்நாட்டை ஆளும் முதலமைச்சராம் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்திலும் டெங்குக் காய்ச்சல் அதிகம். இது ஏதோ தர்மபுரியில், ராமநாத புரத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தி யிருந்தால்கூட இவ்வளவு கவனத்தை ஈர்த்திருக்காது.

விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் வனிதாமணி அளித்துள்ள பேட்டி பதற வைக்கிறது. ``செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 10 வரை 11 நாளில் மட்டும் விழுப்புரம் மருத்துவமனைக்கு 2,709 பேர் காய்ச்சல் காரணமாக வந்தனர். இதில், 509 பேருக்குத் தீவிர காய்ச்சல் இருந்தது. இதில் 12 பேருக்கு டெங்கு இருப்பது கண்டறியப்பட்டது” என்று சொல்லியிருக்கிறார். இது ஒரே ஒரு மருத்துவரின் விவரம் மட்டும்தான். தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் எனப் புள்ளிவிவரம் திரட்டப் பட்டால் 2012-ம் ஆண்டு எண்ணிக்கையை 2017 தாண்டக்கூடும். தாண்டாமல் தடுக்கும் பொறுப்பு தமிழக அரசுக்கு உண்டு. மக்கள் இருந்தால்தானே நீங்கள் ‘செய்ய நினைப்பதை’ செய்ய முடியும். மக்கள் இருந்தால்தானே அவர்கள் தலைக்கு ‘பில்’ போட முடியும். அதற்காகவாவது அக்கறையுடன் செயல்படுங்கள்.

இறுதிச்சடங்கு நேரத்தில் எல்லோரும் வருவதைப்போல மத்திய வல்லுநர் குழு வந்துள்ளது. வரவழைக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி முதல் எத்தனை தடவை எடப்பாடியும் பன்னீரும் டெல்லி போயிருப்பார்கள். ஒருமுறையாவது டெங்கு குறித்த அக்கறை இருந்திருக்குமா? தங்கள் பங்குக்குப் பாதகம் வந்துவிடக் கூடாது என்றே இருந்தார்கள். இதோ இப்போது வேறு வழியில்லாமல் வரவழைத்து விட்டார்கள். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் பொது மருத்துவத்துறைப் பேராசிரியர் அசுதோஷ் விஸ்வாஸ் தலைமை யிலான குழு இது. அவரது வாயிலிருந்து வந்துள்ள எண்ணிக்கையின் படியே, 12 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அநேகமாக இது தமிழக அரசு கொடுத்த புள்ளி விவரமாகத்தான் இருக்கும். பாதிப்பு இன்னும் கூடுதலாகத்தான் இருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

பேராசிரியர் அசுதோஷ் விஸ்வாஸ் பேசும்போது, “டெங்கு தடுப்பு மற்றும் சிகிச்சை மேலாண்மையில் தமிழக அரசு சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. இருந்தாலும் சில அம்சங்களில் தீவிர கவனம் செலுத்தத் தவறி விட்டது” என்று மண்டையில் குட்டியுள்ளார். இனிமேலாவது அந்த அம்சங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

இன்னொன்றையும் அவர் சொல்லியிருக் கிறார். “டெங்குக் காய்ச்சலை ஒழிப்பது அரசின் கைகளில் மட்டுமில்லை, பொது மக்களின் கைகளிலும் இருக்கிறது” என்று.

டெங்குவைக் கட்டுப்படுத்துவது மட்டுமன்று, செயல்படாத அரசாங்கத்தைச் செயல்பட வைக்க வேண்டிய பொறுப்பும் பொதுமக்களின் கைகளில்தான் இருக்கிறது. கொசுக்களைவிட நாங்கள் மோசமாகக் கடிப்போம் என்பதை மக்கள் காட்ட வேண்டும்!