
மருதன்
துருப்பிடித்துப்போன தனது இரும்புப் படுக்கையிலிருந்து ஒருமுறை தலையை மட்டும் உயர்த்திப் பார்த்தார் ஜேப்மங்கோ ஜூலியன். அவரால் எழுந்திருக்க முடியவில்லை. வயிற்றில் இருந்த பாரம் அவரை அழுத்திப் பின்னுக்குச் சாய்த்தது. குழந்தை என்றுதான் சொல்லவேண்டும். ஆனால், தற்சமயம் ஒரு பாரமாகத்தான் அதைக் கருதவேண்டியிருக்கிறது. இந்த முகாமில் நானே ஒரு பாரம்தான் என்னும்போது நான் பிரசவிக்கும் குழந்தையை யார் ஆனந்தத்துடன் அள்ளியெடுத்து அணைத்துக்கொள்ளப் போகிறார்கள்?
ஜேப்மங்கோவின் தலைக்குப் பின்னால் மெல்லிய திரைச்சீலை ஒன்று தொங்கிக்கொண்டிருந்தது. பெயரளவிலான ஒரு தடுப்பு அது. ஜேப்மங்கோவைப் போலவே வேறு பல கர்ப்பிணிகள் அந்தத் தடுப்புக்குப் பின்னால் அதே போன்ற துருப்பிடித்த கட்டில்களில் வரிசையாகப் படுக்க வைக்கப்பட்டிருந்தார்கள். சிலர் முனகிக் கொண்டிருந்தனர். சிலர் வலி பொறுக்கமாட்டாமல் வாய்விட்டு அலறிக்கொண்டிருந்தனர். உதவி, உதவி என்று சத்தம்போட்டுக் கத்திக்கொண்டிருந்தார்கள் இன்னும் சிலர். யாரும் பொருட்படுத்தி ஓடிவந்ததைப்போல் தெரியவில்லை. யாரும் எதையும் பொருட்படுத்தவேண்டிய அவசியமில்லை அங்கு. ஏற்கெனவே நடுங்கிக்கொண்டிருந்த ஜேப்மங்கோ கிலியுடன் தன் கண்களை மூடிக்கொண்டார். என் குழந்தை இந்தக் குழப்பங்களுக்கும் புறக்கணிப்புகளுக்கும் மத்தியிலா பிறக்கவேண்டும்?

அவர் தங்கியிருந்தது டான்சானியாவின் மேற்குப் பகுதியில் அமைந்திருந்த நியாருகூசு என்னும் அகதி முகாமில். முகாம் என்று அழைப்பதைவிட கூடாரங்களின் தொகுப்பு என்று அந்த இடத்தை அழைப்பது பொருத்தமாக இருக்கும். உண்மையில் அது ஒரு காட்டுப் பகுதி. காளான்களைப் போல் முளைத்திருந்த கணக்கற்ற கூடாரங்களில் 1,30,000 அகதிகள் எறும்புக் கூட்டங்களைப்போல் தங்கியிருந்தனர். அவர்களில் ஜேப்மங்கோவைப்போல் பிரசவசத்துக்குத் தயாராக இருப்பவர்களை மட்டும் தனியே பிரித்தெடுத்து ஒரு கூடாரத்தில் தொகுத்திருந்தார்கள். அந்தக் கூடாரத்தை மருத்துவமனை என்றும் அழைக்கலாம்.
ஜேப்மங்கோ பிறந்தது, வளர்ந்தது எல்லாம் ஆப்பிரிக்க நாடான புருண்டியில். உலகின் ஏழை நாடுகள் என்று பட்டியலிட்டால் அதில் புருண்டி நிச்சயம் அழுத்தந்திருத்தமாக இடம்பெற்றிருக்கும். முதல் உலகப் போரில் ஜெர்மனி தோற்கடிக்கப் படும்வரை அந்நாட்டின் காலனியாக இருந்தது புருண்டி. பின்னர் பெல்ஜியத்தின் ஆதிக்கத்தின்கீழ் வந்துசேர்ந்தது. ஆள்கள் மாறினார்களே தவிர, அடுக்குமுறை மாறவில்லை. மேலதிகம் வலுப்படவே செய்தது. உலகளவில் அதிக எண்ணிக்கையிலான அகதிகளைத் தோற்றுவித்த பெருமை காலனியாதிக்கத்துக்கு உண்டு. ஒரு நாட்டை ஆக்கிரமித்து அந்நாட்டின் வளங்களை உறிஞ்சும்போது தவிர்க்கவியலாதபடிக்கு அந்நாட்டு மக்கள் கடும் சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் ஆளாகிறார்கள். அப்போது தவிர்க்கவியலாதபடிக்கு பெரும் எண்ணிக்கையிலான மக்கள் தங்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். காலனியாதிக்கம் முடிவுக்குவந்து விடுதலை கிடைத்தபிறகும் பல நாடுகளில் வன்முறைப் போராட்டங் களும் குழு மோதல்களும் நடை பெறுவதையும் அவற்றின் காரணமாக அகதிகள் லட்சக்கணக்கில் பெருகுவதையும் நாம் பார்க்கிறோம். 1947 சுதந்திரத்துக்குப் பிறகு நடைபெற்ற இந்தியப் பிரிவினை என்பது ஓர் உதாரணம் மட்டுமே.
புருண்டியும் இதேபோன்ற வன்முறையைதான் சந்தித்தது. பெல்ஜியத்தின் பிடியில் கடும்

ஒடுக்குமுறையை அனுபவித்துவந்த புருண்டி மக்கள் 1962-ம் ஆண்டு விடுதலைபெற்றனர். ஆனால், இனக்குழு மோதல் வடிவில் இன்னொரு வன்முறை அத்தியாயம் அங்கே தொடங்கியது. அங்கே பெரும்பான்மையாக இருப்பவர்கள் ஹூட்டு இன மக்கள். சிறுபான் மையினர், டுட்ஸி இனத்தவர்கள். இருவருமே கறுப்பினத்தவர்கள். இருவருமே பண்டு மொழி பேசுபவர்கள். இருவருக்குமே பிரெஞ்சு மொழி நன்றாகத் தெரியும். இருவருமே கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்டவர்கள். ஒருவர் ஹூட்டுவா, டுட்ஸியா என்பதைக் கண்டறிவது அவ்வளவு சுலபமல்ல. அச்சு அசல் ஒன்றுபோலவே இருப்பார்கள். அந்நியர்களான நாம் மட்டுமல்ல, இந்த இரு குழுவினரின் மரபணுக்களையும் பரிசோதித்த மருத்துவ ஆய்வாளர்கள்கூட இந்த இருவருக்குமிடையிலான வேறு பாட்டைக் கண்டடைவது கடினம் என்னும் முடிவுக்கே வந்து சேர்ந்துள்ளனர். கண்டிப்பாக இருவரையும் வேறுபடுத்தியே ஆகவேண்டுமானால் ஓர் அம்சத்தைக் குறிப்பிடலாம். ஒரு ஹூட்டுவைவிட ஒரு டுட்ஸி சில அங்குலங்கள் உயரமாக இருப்பார், அவ்வளவுதான்.
ஆனால், இந்த இரு குழுக்களுக்கும் இடையிலான பகைமையும் அதன் காரணமாகப் பெருக்கெடுத்து ஓடிய ரத்த ஆறும் வரலாறு காணாதது. 1972-ம் ஆண்டு டுட்சி இனக்குழு மக்கள் கிட்டத்தட்ட 2 லட்சம் ஹூட்டுக்களைக் கொன்றுகுவித்தனர். இருபதாம் நூற்றாண்டு ஆப்பிரிக்கா சந்தித்த முதல் இன அழிப்புச் சம்பவம் இது. இரண்டாவது இனஅழிப்பு 1994-ம் ஆண்டு நடைபெற்றது. இந்த முறை ஹூட்டுக்கள் ஒன்றுதிரண்டு 10 லட்சம் டுட்ஸிக்களைக் கொன்று பழி தீர்த்துக்கொண்டனர். இரண்டு முறையும் லட்சக்கணக்கான ஹூட்டுக்களும் டுட்ஸிக்களும் புருண்டியிலிருந்து வெளியேறி, பக்கத்து ஆப்பிரிக்க நாடுகளில் அடைக்கலம் புகவேண்டியிருந்தது.

இனக்குழு மோதல் ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் அரசியல் சிக்கல்கள். தற்போது புருண்டியின் அதிபராக இருக்கும் பியரி குருன்ஸிஸா 2005 முதல் அந்தப் பதவியில் விடாப்பிடியாக அமர்ந்திருக்கிறார். அவரை வெளியேறச் சொல்லி அந்நாட்டு மக்கள் பலமுறை பலவிதமான முறைகளில் போராடிப் பார்த்துவிட்டார்கள். ஒவ்வொரு போராட்டத்தையும் மிருகத்தனமாக ஒடுக்கியது அரசு. மூன்றாவது முறையாக, 2015-ம் ஆண்டு குருன்ஸிஸா அதிபராக முன்னிறுத்தப்பட்டபோது மீண்டும் வலுவான எதிர்ப்புகள் கிளம்பின. ராணுவப் புரட்சியைக்கூட முயன்று பார்த்தார்கள். நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டார்களே தவிர ஆட்சி மாற்றம் ஏற்படவில்லை. அரசு ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்ததுதான் மிச்சம். இதன் காரணமாகவே லட்சக்கணக்கான புருண்டி மக்கள் தங்கள் நாட்டை விட்டு வெளியேறவேண்டியிருந்தது.

ஜேப்மங்கோ அவர்களில் ஒருவர். இனக்குழு மோதல் எப்போதும் மீண்டும் வெடிக்கலாம். அல்லது அரசு இயந்திரமே ஏதோ காரணத்தை முன்னிட்டு நேரடியாக வன்முறையில் இறங்கலாம். இரண்டில் ஒன்று அல்லது இரண்டுமே நடப்பதற்கான வாய்ப்புகள் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளுமே நீடித்த நிலையில் 1996-ம் ஆண்டு ஜேப்மங்கோ தன் கணவனுடன் இணைந்து புருண்டியிலிருந்து தப்பியோடினார். உயிர் பறிபோவதைவிட அவர் அதிகம் பயந்தது மானம் பறிபோய்விடக்கூடாது என்றுதான். ஒன்று, இரண்டு என்றல்ல, நூற்றுக்கணக்கான பெண்கள் கடத்திச்செல்லப்படுவதையும் கூட்டாகப் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதையும் பற்றிய செய்திகள் முடிவில்லாமல் பெருகிக்கொண்டே சென்றன.
போர், கலவரம், இனக்குழு மோதல் என்று எது நடைபெற்றாலும் முதல் தாக்குதல் ஒரு பெண்ணின் உடலின்மீதுதான் என்பது ஜேப்மங்கோவுக்குத் தெரியும். இப்படிப்பட்ட காரணங்கள் எதுவும் தேவையில்லாமலும் பாலியல் வன்முறை நடக்கத்தான் செய்கிறது என்றாலும், பெரிய அளவில் சமநிலை குலையும்போது அதுவரை தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்கும் ஆண்களும் வெறியுடன் பெண்கள்மீது பாய்வதை ஜேப்மங்கோ கண்டிருக்கிறார். ஏற்கெனவே பசியிலும் விதவிதமான நோய்களிலும் செத்து விழுந்துகொண்டிருக்கும் பெண்கள், ஆண் என்னும் நோய்க்கிருமியைக் கண்டு இன்னும் அஞ்சவேண்டியிருக்கிறது. வளர்ந்த பெரிய நாடுகளிலேயே இந்தக் கிருமி பல்கிப் பெருத்திருக்கிறது எனும்போது பெருமளவில் நிலவுடைமைச் சமூகமாகவே இருக்கும் ஓர் ஆப்பிரிக்க நாட்டில் பெண் எப்படிப் பாதுகாப்பாக இருந்துவிட முடியும்?
எங்கே போகிறோம் என்றுகூடத் தெரியாமல் ஜேப்மங்கோவும் அவர் கணவனும் ஓடிக்கொண்டிருந்தார்கள். புருண்டி அவர்களை விட்டுச் சிறிது சிறிதாக மறைந்துகொண்டிருந்தது. ஹூட்டு, டுட்ஸி ஆகியோரோடு துவா மக்களும் கிட்டத்தட்ட 500 ஆண்டுகளாக புருண்டியில் வாழ்ந்துவந்திருக்கிறார்கள். இருபதாம் நூற்றாண்டு வரை புருண்டி ஒரு சுதந்தர நாடாகவே இருந்தது. காலனியாதிக்கம் கொடியது, தெரியும். ஆனால், சொந்த மக்களால் ஆளப்படும்போதுகூட ஏன் புருண்டி இப்படியொரு சீரழிவைச் சந்திக்க வேண்டும் என்று ஜேப்மங்கோவுக்குப் புரியவில்லை. இது என் நிலம், என் மக்கள் என்று ஒரு தலைவர் கருதமாட்டாரா? என் நிலத்தில் வன்முறையை அனுமதிக்கமாட்டேன் என்று அவர் உறுதியாக நிற்கமாட்டாரா? பிறகெதற்கு அவருக்கு அதிகாரம் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது? காட்டாட்சிதான் எங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது என்றால் அதற்கு ஓர் அதிபர் எதற்கு? தேர்தல், குடியரசு, ஜனநாயகம் என்றெல்லாம் வீணாக ஏன் பேசிக் கொண்டிருக்க வேண்டும்? ராணுவ சர்வாதிகார ஆட்சியை வெளிப் படையாக அறிவித்துவிடலாமே?

எதிர் இனக்குழுவைச் சேர்ந்தவர் களால் மட்டும்தான் ஆபத்து வரும் என்றில்லை, அரசும்கூட நேரடியாகப் பெண்களை வேட்டையாடத் தயங்குவதில்லை. பல பகுதிகளில் தடி, கத்தி, துப்பாக்கி ஆகியவற்றை ஏந்தியபடி ஒரு பெரிய குழு எங்கிருந்தோ புறப்பட்டு வரும். மக்கள் குடியிருப் புகளில் புகுந்து இளம் பெண்களையும் சிறுமிகளையும் வெளியில் இழுத்துப்போட்டுக் கூட்டாகப் பாயும். கிளம்புதற்கு முன்னால் கொன்றுவிட்டு உடல்களை வீசியெறிவதும் வழக்கம்தான். ஆளுங்கட்சியின் இளைஞர் படையைச் சேர்ந்த வீரர்களை இந்தக் குழுவில் அடிக்கடி காணமுடியும். சில சமயம் அவர்களை மட்டுமே கொண்டிருக்கும் குழுக்களும் கிளம்பிவந்து பெண்களை பலாத்காரம் செய்வது வழக்கம்.
காவல்துறையினரிடம் புகார் கொடுக்க முடியாது. குற்றமிழைத் தவர்களைத் தெளிவாக அடையாளம் காட்ட முடியும் என்றாலும், பலனில்லை. நம் தலைவரின் செயல்வீரர்கள்மீதா அபாண்டமாகக் குற்றம் சுமத்துகிறாய் என்று, பாதிக்கப்பட்ட பெண்களையே வசைபாடும் காவலர்கள் அங்கே அநேகம் பேர். ஆம், பத்திரிகைகள் இருக்கின்றன. தனியார் தொலைக்காட்சிகள் இருக்கின்றன. ஆனால் அவை, இத்தகைய ‘நெருக்கடியளிக்கும் செய்திகளை’ வெளியிடுவதில்லை. செய்தி வெளியிட்ட மறுநிமிடமே ஒரு ஜீப் புழுதிபறக்க அலுவலகத்துக்கு முன்னால் வந்து நின்றால் உதவுவதற்கு யார் இருக்கிறார்கள்? அரசு தலையிடுவதற்கு முன்னால் சுயதணிக்கை செய்துகொள்வது பாதுகாப்பானதல்லவா?
டான்சானியாவில் உள்ள டபிலா என்னும் அகதி முகாமில் ஜேப்மங்கோ தஞ்சமடைந்தார். ஒரு முதலையைப் போல அந்த முகாம் அவர்களை உள்ளிழுத்துக்கொண்டது. முகாமின் விதிகள், கட்டுப்பாடுகள், சரி தவறுகள் அனைத்தையும் அவர் விரைவில் புரிந்துகொண்டார். அங்கே ஜேப்மங்கோவுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன. முகாமின் குழந்தைகள். 2005-ம் ஆண்டு புருண்டி அவர்களை அழைத்தது. எல்லாம் சரியாகிவிட்டது, நிறைய பேர் வீடு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள், நீயும் வந்துவிடேன் ஜேப்மங்கோ என்று நண்பர்களும் உறவினர்களும் அழைத்தபோது மனம் பொறுக்கவில்லை அவருக்கு. சொர்க்கத்தின் கதவுகள் தனக்காகத் திறக்கப்பட்டிருப்பதைப் போல் உணர்ந்தார். அடக்குமுறை, பலாத்காரம், கொலை, ரத்த ஆறு எல்லாம் நொடியில் மறந்துபோனது. என் தாய்நாட்டிலிருந்து வரும் குரலுக்கு என்னால் மரியாதை செலுத்தாமல் இருக்கமுடியுமா?

தவிரவும் என் குழந்தைகள் புருண்டியில் அல்லவா கால் பதித்து நடக்கவேண்டும்? ஆம் ஆயிரம் குறைகள் இருக்கின்றன, எங்குதான் பிரச்னை இல்லை? இதோ இந்த முகாம் என்ன அமைதிப் பூங்காவா? இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுத்த எனக்கு இங்குள்ள ஆயிரமாயிரம் பிரச்னைகள் தெரியாதா என்ன? என் கண்மணிகளே அம்மாவின் நாட்டை நீங்கள் விரைவில் பார்க்கப்போகிறீர்கள் என்று வழி முழுக்க ஆயிரம் முறை சொல்லியபடி, ஜேப்மங்கோ புருண்டி திரும்பினார். ஜேப்மங்கோவின் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை.
மேலும் இரு குழந்தைகள் பிறந்தன. ஆப்பிரிக்காவில் இது இயல்பானது. ஐந்து குழந்தைகளுக்கு மேல் பிரசவிக்கும் பெண்கள் பலரை ஆப்பிரிக்காவில் இயல்பாகக் காணமுடியும். குழந்தை பிறப்பைத் தடுப்பது இயற்கைக்கு விரோதமானது என்னும் நம்பிக்கை ஒரு காரணம். பிறக்கும் குழந்தைகளில் எத்தனை பேர் தாக்குப்பிடிப்பார்களோ தெரியாது என்னும் அச்சம் இன்னொரு காரணம். பிரசவத்தின்போது மரணமடையும் குழந்தைகளின் எண்ணிக்கை அங்கே அதிகம். மீறிப் பிழைப்பவர்கள் பெருகும் தொற்று நோய்களையும் ஆட்கொல்லிக் கிருமிகளையும் வென்றாகவேண்டும். அப்படியும் பிழைப்ப வர்களை இனக்குழு மோதல் இழுத்துக் கொண்டுவிடுகிறது. அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பதன்மூலம் அதிக குழந்தைகளைப் பிழைத்திருக்கச் செய்யமுடியும் அல்லவா?
இதற்கிடையில் ஜேப்மங்கோ எதிர்பாராததும் நடந்தது. புருண்டியின் நிலைமை மீண்டும் மோசமடைந்தது. அம்பையும் வில்லையும் தூக்கிக்கொண்டு வீதிகளில் மக்கள் திரண்டார்கள். கற்களும் கம்புகளும் காற்றில் பறந்தன. கலவரத்தை அடக்குகிறேன் என்று சொல்லி மேலும் தீயை அள்ளி வீசியது அரசுப் படை. அழுது வீங்கிய முகத்துடன் மீண்டும் ஓட ஆரம்பித்தார் ஜேப்மங்கோ. இந்த ஓட்டம் நிற்கப்போவதேயில்லையா? மீண்டும் அகதி முகாமா? அது மட்டும்தான் எனக்கு இனி நிரந்தரமா? இந்த முறை அதே டான்சானியாவில் நியாருகூசு முகாமில் இடம் கிடைத்தது. இந்தமுறை ஜேப்மங்கோவின் நம்பிக்கை தளர்ந்து போயிருந்தது. கனவில் மட்டுமே தோன்றக்கூடிய ஓரிடமாக புருண்டி மாறிப்போனது. காலம் உருண்டோடியது. ஜூலை 2016. இன்னொரு உயிரை முகாமின் கணக்குக்குச் சேர்க்கவேண்டிய நேரம் நெருங்கியது. அழுகுரல்களுக்கும் அலறல்களுக்கும் மத்தியில் அசைந்தாடும் திரைச்சீலையைக் கண்டபடி கண்களை மூடினார் ஜேப்மங்கோ. என் ஐந்தாவது குழந்தை மீண்டும் முகாமில்தான் பிறக்கப்போகிறதா?
இரு தலைகளும் இருபது விரல்களும் வெளியில் வந்தன. கண்விழித்தவுடன் ஜேப்மங்கோவுக்குத் தகவல் சொன்னார்கள். ‘நான் இரட்டைக் குழந்தைகளையா பெற்றிருக்கிறேன்?’ என்று சொல்லியபடி வெடித்து அழ ஆரம்பித்தார் ஜேப்மங்கோ. கொசு வலைக்குள் இரண்டு குழந்தைகளும் உறங்கிக்கொண்டிருந்தன. இரு சிறிய அகதிகள்.
-சொந்தங்கள் வருவார்கள்