Published:Updated:

அடல்ட்ஸ் ஒன்லி - 3

அடல்ட்ஸ் ஒன்லி - 3
பிரீமியம் ஸ்டோரி
News
அடல்ட்ஸ் ஒன்லி - 3

ஜெயராணி - படம்: குரூஸ்தனம்

னித வாழ்வின் அதி அற்புதமான விஷயங்களைச் சொல்லுங்கள் என நண்பர்கள் சிலரிடம் கேட்டேன். அவர்கள் ரொம்ப சீரியஸாகி, கீழ்க்காணும் விஷயங்களைச் சொன்னார்கள்.

 இசை, புத்தகம், சினிமா, பயணம், வீடு, நட்பு, நாய், மழை, கடல், காதல், அம்மா, செல்போன், பைக், பணம்...

 ஒரு பதிலை எதிர்பார்த்துதான் அந்தக் கேள்வியைக் கேட்டேன்.  எதை    எதிர்பார்த்தேனோ அது பதிலாக யாரிடமிருந்தும் வரவில்லை. மனித வாழ்வின் அதி அற்புதமான விஷயங்களில் முதன்மையானது எது தெரியுமா?

 உணவு.

 சிரிக்க வேண்டாம். நிஜமாகவே உணவுதான். உயிரைப் போல மிக மிக உன்னதமானது அதுவே. வேளாவேளைக்கு விதவிதமாகக் கிடைத்துவிடுவதால் நமக்கு அதன் மேன்மை புரிவதில்லை. மனித இனம் தோன்றிய காலந்தொட்டு ஒரு விஷயத்திற்காகத் தொடர்ந்து போராடி வருகிறதெனில், அது உணவுக்காக மட்டுமே. வாழ்க்கையில் எது இல்லையென்றாலும் பிழைத்திருக்க முடியும். உணவில்லையெனில்..? உணவில்லை எனில் மனித இனம் அழிந்துபோகும் எனும்போது அது ஏன் நமது அற்புதப் பட்டியலில் இடம்பிடிக்கவில்லை! ஏனென்றால், இன்றைய உணவுமீது நமக்கு அன்பில்லை. நேசிக்கப்படாத ஒன்றுக்கு எப்போதும் மதிப்பிருக்காது. மதிப்பற்ற எதுவும் வீணாக்கப்படும் என்பதே விதி. உணவுக்கும் நம் வாழ்வில் அந்த நிலையே.

அடல்ட்ஸ் ஒன்லி - 3

நம்நாட்டில் சுமார் 20 கோடிப் பேர் பசியால் எப்போதும் வதங்கிப்போயிருக்கின்றனர். சுமார் 47 சதவிகிதக் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறை பாட்டால் அவதிப்படுகின்றன. ஆனால், இந்தியாவில் வீணாகும் உணவின் மதிப்பு என்ன தெரியுமா? ரூ.58 ஆயிரம் கோடி. உணவுப் பொருள்கள் உற்பத்தியாகி, நம்மை வந்தடைவதற்குள் மூன்றில் ஒரு பங்கு வீணாகிவிடுகிறது. ஏழு மலைகள் கடந்து மூச்சு வாங்கி நம்மிடம் வந்து சேர்ந்த பின்னர் அது மேலும் நாசமடைகிறது.

 என் குழந்தையை எப்படிச் சிறப்பாக  வளர்ப்பது என யோசித்துக்கொண்டிருக்கும் எனக்கெதுக்கு இந்தத் தகவல் என்று கேட்கிறீர்களா? உணவின் மேன்மை குறித்த பிரக்ஞையே இல்லாத தலைமுறை இங்கே உருவாகிவிட்டதில் பெற்றவர்களுக்குப் பங்கில்லாமல் போகுமா? யாருக்கோ பசிக்கிறது,  எங்கோ உணவு பாழாகிறது, இதில் நானோ என் பிள்ளையோ எங்கே சம்பந்தப்படுகிறோம்?

 சம்பந்தம் இருக்கிறது நண்பர்களே! உணவு விஷயத்தில் மூன்று முக்கியமான பிரச்னைகளை இந்தியக் குழந்தைகள் எதிர்கொள்கின்றன.

முதலாவது...

முன்பு வசதியானவர்களிடம் மட்டுமே காணப்பட்ட, `காசு கொடுத்தால் கிடைக்கிறது’ என்ற உணவு குறித்த, அலட்சிய மனோபாவம் கீழிறங்கி இந்திய நடுத்தரக் குடும்பங்களை ஆட்டிப் படைக்கிறது. அதனால் காசிருப்பவர்கள், பார்க்கும் எல்லாவற்றையும் வயிற்றில் போட்டுக் கொள்ளத் துடிக்கிறார்கள். மார்க்கெட்டில் புதிதாக ஒரு ஊட்டச்சத்து பானம் அறிமுகமாகி அதை வாங்காமல் இருந்துவிட்டால், சத்துகள் அனைத்தையும் இழந்து விட்டதைப்போலச் சோர்வடைகின்றனர். உணவு பற்றிய நமது மதிப்பீடு மாறிப்போனதால் நிறைய விலை கொடுத்தால் தான் பசியாற முடியும்; நிறைய செலவழித்தால் மட்டுமே ஆரோக்கியம் கிடைக்கும் எனத் தவறான முடிவுக்கு வந்துவிட்டோம். அதீதம்தான் நமது பிரச்னையே! வாங்குவதும் அதிகம், வீணடிப்பதும் அதிகம்.

அடல்ட்ஸ் ஒன்லி - 3

 சென்ற தலைமுறைக் குழந்தைகளான நமக்கு உணவுடனான அனுபவம் எப்படிப்பட்டதாக இருந்தது? ஒரு சின்னஞ்சிறிய தேன்மிட்டாயை நாள் முழுவதும் நக்கிச் சுவைத்துத் திரிந்திருப்போம். மாங்காய் அடிப்பது, புளியம்பழம் உலுப்புவது என உணவைப் பெறுதல் ஒரு சுவாரஸ்யமான விளையாட்டாக இருந்தது. பள்ளி வாசலில் நெல்லிக்காய் விற்கும் பாட்டி, நம்மை மகிழ்விக்கப் பிறந்த தேவதை. காக்காய்க்கடி கடித்துப் பங்கிட்டு உண்ட இப்படியான பண்டங்களில் எதுவொன்றையும் வீணாக்கும் மன தைரியம் நமக்கு இருந்ததில்லை. தவறிக் கீழே விழுந்தால் சாம்ராஜ்ஜியமே சரிந்ததாகப் பதறி எடுத்து, கழுவித் தின்றோம். உணவு பரிமாறப்பட்ட தட்டில் முகம் பார்க்கிற அளவுக்கு ஒரு பருக்கை மிச்சம் வைக்காமல் உண்டே சுத்தமாக்குவதில் கில்லாடி நாம். சிக்கனம் எனும் வாழ்க்கைத் தத்துவம் உணவிலிருந்துதான் தொடங்கப் பட்டது. பணத்தைவிடவும் பன்மடங்கு உயர்வானதாக உணவே மதிக்கப் பட்டது. நமக்கு முந்தைய தலை முறைகள் பஞ்சத்திற்குச் செத்தவை என்பதால் அதன் பாதிப்புகள் அப்போதும் தொடர்ந்தன. அதனால், உணவை வீணாக்குவது என்பது பெரும் சமூகக்குற்றமாகவே கருதப்பட்டது.

 போதாமைதான் அன்றைய வாழ்க்கை என்றாலும், அதிலும் ஒரு நிறைவு இருந்ததுதானே? இன்று எல்லாமே கிடைக்கின்றன. நிறையவே கிடைக்கிறது. ஆனாலும், நிறைவடைய முடியவில்லை. விளம்பரங்களில் பார்க்கும் அத்தனை பொருள்களையும் வாங்கிப் பார்க்கிறோம். திறக்கப்படும் அத்தனை கடைகளிலும் தின்று தீர்க்கிறோம். ஆனாலும் திருப்தியில்லை. ஏன் சொல்லுங்கள்? நம் பசி தகித்துக் கிளம்புவது வயிற்றில் அல்ல, மனதில். அதனால் எல்லாவற்றையும் வாங்குகிறோம். அதே வேகத்தில் வீணடிக்கிறோம். 

 எனக்குக் கிடைக்காதது எல்லாம் என் பிள்ளைக்குக் கிடைக்க வேண்டும் எனப் பெற்ற மனம் துடிக்கக் கூடாதா? நான் காணாத சுகத்தை என் பிள்ளை பெற வேண்டுமென நினைக்கக் கூடாதா? தாராளமாகத் துடிக்கலாம், நினைக்கலாம். நிச்சயமாக நாம் பட்ட எந்தக் கஷ்டத்தையும் குழந்தைகள் படக் கூடாதுதான். ஆனால், அவற்றுக்குத் தன் தட்டில் இருக்கும் உணவின் மதிப்பு தெரிந்தாக வேண்டும். அதற்காக நாம் படும் பாட்டின் மதிப்பு தெரிந்தாக வேண்டும். இன்றைய பெற்றோர் இவ்விரண்டையுமே குழந்தைகளுக்குக் கற்பிக்கவில்லை. காரணம் இவ்விரண்டின் மதிப்பும் அவர் களுக்கே புரியவில்லை என்பதுதான்.

 ஒரு டிராலியை எடுத்துக்கொண்டு சூப்பர் மார்க்கெட்டை ஒரு முறை சுற்றி வந்தால், ஓர் ஊருக்கே சோறு போடுகிற அளவுக்கு மளிகைச் சாமான்களை அள்ளிப் போட்டு வீடு திரும்புகிறோம். ஃபிரிட்ஜில் அடுக்கி, சமையலறையின் டப்பாக்களை நிரப்பிய பின்னர்தான் மனம் அமைதியடைகிறது. ஒவ்வொரு பொருளாகக் கெட்டுப்போய், புழுத்துப்போய், தூக்கியெறியப்படும் சம்பவம் அடுத்தடுத்த நாள்களில் நடக்கிறது. இதை நம் குழந்தைகள் பார்க்கின்றன. அவையும் வீசியெறியப் பழகுகின்றன. அம்மா அப்பா ஒரு பக்கம் வீட்டுக்குத் தேவையான பொருளை எடுக்க, குழந்தை தனக்குத் தேவையான சாக்லெட்டுகள், நூடுல்ஸ், ஹெல்த் டிரிங்குகளை எடுத்து அடுக்குவதைப் பார்க்க முடிகிறது. பெரும்பாலான பெற்றோர் இதைத் தடுப்பதில்லை. இவற்றையெல்லாம் உண்டால்தானே குழந்தை ஆரோக்கியமாக, ஊட்டச்சத்துடன் இருக்கும் என்ற நல்லெண்ணத்தில் அவர்கள் விட்டுவிடுகின்றனர்.

 காலையில் எழுவதில் தொடங்கி, குழந்தையின் வாயில் ஏதேனும் உணவை அம்மாக்கள் திணித்துக்கொண்டே இருக்கின்றனர். அழுதாலும் துப்பினாலும் விடுவதில்லை. ஒல்லியாக இருந்தாலோ, உயரம் குறைவாக இருந்தாலோ விளம்பர அம்மாக்களைப்போலக் கவலைப்படத் தொடங்கிவிடுகின்றனர்.    

 ஹெல்த் டிரிங்க், காய்கறிகள், பழங்கள், நட்ஸ் என இன்றைய குழந்தைகளுக்கு `டூ மச் நியூட்ரிஷன்’ ஒரு வாழ்வியல் துயரமாக உருவெடுத்துவிட்டது. விளையாட்டு எனும் உடல் செயல்பாடு முற்றிலுமாகத் துடைத்தழிக்கப்பட்டுவிட்ட காலகட்டத்தில் இவ்வளவு உணவும் குழந்தையின் ஆரோக்கியத்திற்குக் கேடாக மாறுகிறது. எப்போதும் எதையாவது தின்றுகொண்டே இருப்பது நல்ல உணவுப் பழக்கமல்ல என்பதை அன்பிற்குரிய பெற்றோர் புரிந்துகொள்ள வேண்டும். உடல் பருமனோடும், மனச் சோர்வோடும் குழந்தைகள் அவதிப்பட அடிப்படைக் காரணம், பசிக்காமல் உண்பதே!

சில ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் உள்ள கிராமம் பற்றி ஒரு நிகழ்ச்சியைத் தயாரித்திருந்தோம். அவ்வூரின் சிறப்பு என்னவென்றால் 100 வயதைக் கடந்தவர்களை அங்கே சர்வசாதாரணமாகப் பார்க்க முடியும். சுறுசுறுப்பான கிழவிகள் தோட்டங்களில் வேலை செய்துகொண்டிருந்தனர். அவ்வூரிலேயே அதிக வயதான 108 வயதுப் பாட்டியைப் பேட்டி எடுத்திருந்தோம். முதுமை காரணமாக அவரால் நடமாட முடியவில்லை. ஆனால், கண் பார்வை நன்றாக இருந்தது. பற்கள் ஒன்றுகூட விழாமல் வரிசையாக இருந்தன. இவ்வளவு வயது வரை ஆரோக்கியமாக வாழும் அந்த மூதாட்டியின் உணவுமுறை என்ன தெரியுமா? பசியெடுக்கும்போது ஒரு கைப்பிடியளவு சோறும் ஒரு கைப்பிடியளவு கீரை மசியலும்தான். பொறுமையாக உணவை மென்று தின்னுங்கள் என்பதுதான் அவர் கொடுத்த ஒரே டிப்.

ஆனால், ஆரோக்கியமாக வாழ நாம் இன்று எவ்வளவு சிரத்தைகளை எடுக்கிறோம். என் மகளுடன் படிக்கும் குழந்தையின் அம்மாவிடம் அவர் பின்பற்றும்  ஃபுட் ஷெட்யூலைக் கேட்டேன். 

 காலை ஆறரை மணிக்கு ஒரு கிளாஸ் பால், ஏழரை மணிக்கு டிபன், 11 மணியளவில் ஸ்நாக்ஸ், 1 மணிக்கு லஞ்ச், 3 மணிக்கு மறுபடியும் ஸ்நாக்ஸ், 5 மணிக்குப் பால், எட்டு மணிக்கு டிபன், 10 மணிக்கு மறுபடியும் பால்.  

 

அடல்ட்ஸ் ஒன்லி - 3

அடேங்கப்பா! நிஜமாகவே எனக்குத் தலை சுற்றியது. இது உண்மையிலேயே ஒருவகையான வன்முறை. அந்தச் சிறுமி பத்து வயதிலேயே பருவமெய்தியதற்கும் இந்த உணவுப் பட்டியலுக்கும் தொடர்பில்லாமலிருக்காது. இப்படியான ராணுவ டயட்டில் குழந்தைகள் எவ்வாறு பசியை உணரும்? பசிக்காதபோது கொடுக்கப்பட்ட உணவின் மீது குழந்தைகளுக்கு வெறுப்பு உண்டாகிறது. கேட்காமலேயே கிடைத்துவிடும் பொருளின் மீது அவற்றுக்கு மரியாதையே வருவதில்லை. அதனாலேயே அவை வீசியெறியத் துணிகின்றன. பசி என்ற உணர்வே தெரியாத தலைமுறையால், வறுமையில் வாடுவோரின் துயரை எப்படிப் புரிந்துகொள்ள முடியும்?

உண்ணாமல் தூக்கியெறிவது மட்டுமல்ல, தேவையில்லாமல் உண்பதும்கூட உணவை வீணாக்குவதன் வேறொரு வடிவமே. நாம் அதிகம் சம்பாதிப்பதால் நமக்கு அதிகம் பசித்துவிடாது. எல்லோரின் வயிற்றின் அளவும் அவர்களது கையகலம் மட்டுமே. உணவை பசியாற்றும் அற்புதமாகக் கருதாமல், கொண்டாட்டமாகவும் கேளிக்கையாகவும் கௌரவமாகவும் கையாள்கிறோம். பிறந்த நாள் நிகழ்ச்சி, திருமண விருந்து இவற்றுக்கெல்லாம் சுமார் 50 வகையான உணவுகள் பறிமாறப்படுவது சர்வ சாதாரணமாகிவிட்டது. யாராலும் அவ்வளவு பண்டங்களைத் தின்ன முடியாது என்றாலும் கௌரவத்தைக் காப்பாற்ற இந்தக் கொடுமை தொடர்கிறது.

 அதுமட்டுமல்ல, காய்கறிகள், பழங்கள், பால் பொருள்கள் என ஒவ்வொரு வீட்டு குளிர்சாதனப் பெட்டியும் மூச்சு முட்டிப் பிதுங்கி வழிகிறது. கைநீட்டினால் கிடைக்கும் சிப்ஸுகளும் பிஸ்கெட்டுகளும் நமத்துப்போய் வீசியெறியப்படுகின்றன. ஒவ்வொரு நாள் இரவும் மிஞ்சும் உணவு தெருநாய்க்குக்கூடப் போட மனமில்லாமல் குப்பைத்தொட்டிக்குப் போகிறது. ஒருவேளை சமைக்கப்பட்ட உணவு அடுத்த வேளைக்குள் பழையதாகிவிடுகிறது.  வீட்டில் உணவிருந்தாலும் மனம் சொன்னால் ஹோட்டலுக்கு ஓடுகிறோம். அதே மனம் விரட்ட, பார்க்கிறதெல்லாம் பரபரவென்று ஆர்டர் செய்து, தின்ன முடியாமல் போட்டுவிட்டு வீடு திரும்புகிறோம். வெறுக்கத்தக்க ஒருவரைப்போல நம் கைகளில் உணவு என்னும் அற்புதம் சிதைபடுகிறது.

 உணவு ஒருபோதும் தனியுடைமை ஆக முடியாது. அதனால், சிறுவயதிலிருந்தே பகிர்ந்துண்ணப் பழக்குவோம். நாளை இந்த உணவு கிடைக்காமல் போனால் என்னாகும் என்ற பயம் ஒவ்வொரு உயிருக்கும் இருக்கிறது. எறும்புகள் அதனாலேயே பாடுபட்டுச் சேமிக்கின்றன. பசியின் கொடுமையையும் உணவின் அருமையையும் உணர்பவர்களே பட்டினிச் சாவில்லாத உலகை உருவாக்க முடியும்.

இரண்டாவது...

 உணவிலும் குழந்தைகளுக்கு உயர்வு தாழ்வை போதிக்கிறோம். உணவுப்பழக்கம் என்பது அந்தந்தப் பகுதியின் தட்பவெப்பம், விளைச்சல், உயிர் உற்பத்தி ஆகியவற்றாலேயே  பண்பாடாகத் தீர்மானிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியர்கள் கங்காருக் கறியை உண்கிறார்கள். மேற்கத்தியர் களின் டயட்டில் பன்றியும், மாட்டிறைச்சியும் அடிப்படை. சீனர்கள் பாம்பை உண்கிறார்கள்.

ஜப்பானியர்களுக்குப் பச்சை மீன் விருப்பத்திற்குரிய உணவு. பழங்குடி மக்கள் சிறு விலங்குகளையும் பறவைகளையும் சமைக்கின்றனர். நம் கிராமங்களில் நத்தை, வவ்வால், முயல், உடும்பு போன்றவை உண்ணப்படுகின்றன. வடகிழக்கு மாநிலங்களில் சந்தையில் நண்டைப் போல தவளைகளைக் கூறு கட்டி விற்கிறார்கள். ஓர் உணவை நான் உண்பதில்லை என்பதற்காக அது தாழ்வானது என எப்படிக் கருத முடியும்? ஆனால், அப்படித்தான் நம்புகிறோம். குழந்தைகளையும் நம்பச் செய்கிறோம்.     

 என் மகள் படிக்கும் பள்ளியில் அசைவ சாப்பாட்டிற்கு அனுமதி இல்லை. நிறைய தனியார் பள்ளிகளில் இப்படியொரு கட்டுப்பாட்டை வைத்திருக்கிறார்கள். ஒரு முறை ஒரு குழந்தை சிக்கன் குழம்பு எடுத்து வந்தபோது, எல்லோருமாகச் சேர்ந்து டீச்சரிடம் சொல்வோம் என மிரட்டி அழ வைத்திருக்கிறார்கள்.

 உலகில் எங்கேயுமே உணவை  வைத்து மனிதர்களுக்குள் பாகுபாடு பார்க்கும் கொடுமை இல்லை. `உனக்குப் பிடித்ததை நீ சாப்பிடு, அவருக்குப் பிடித்ததை அவர் சாப்பிடட்டும். உணவில் புனிதமும் இல்லை இழிவும் இல்லை’ என்ற ஜனநாயகப் பண்பை முதலில் பெற்றோர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

அடல்ட்ஸ் ஒன்லி - 3

மூன்றாவது...

 துரித உணவுக் கலாசாரம். பாக்கெட்டிலும், பாட்டிலிலும் எது அடைக்கப்பட்டு வந்தாலும் அதன்மீது எந்தக் கேள்வியும் நமக்கு வருவதில்லை. கவர்ச்சிகரமான பேக்கிங், பிரபலமானவர்களின் பரிந்துரை, விளம்பர உக்திகள் எனப் பலவும் நம்மைப் பித்துப்பிடிக்கச் செய்கின்றன. உணவு கெட்டுப்போகாமல் இருக்க, பல விதமான வேதிப்பொருள்கள் துரித உணவுகளில் கலக்கப்படுகின்றன. உள்ளடக்கப் பட்டியலைப் பார்த்து அதில் உள்ள பொருள்களின் உண்மைத் தன்மையை இணையத்தில் தேடினால் துரித உணவுகள் முழுக்கவே ரசாயனக் குப்பை என்பது புலப்படும்.

 இப்போதெல்லாம் பள்ளி கேண்டீனில் துரித உணவுகள் மற்றும் கார்பனேட்டட் குளிர்பானங்களின் விற்பனை கனஜோராக நடக்கிறது. பள்ளி நிர்வாகத்திடம், தலைமை ஆசிரியரிடம், ஆசிரியர்களிடம், உணவு விடுதி உரிமையாளரிடம்  பெற்றோர்கள் இது தொடர்பாகப் பேச வேண்டும். பழங்கள், பழச்சாறுகள், உலர்பழங்கள், பருப்பு வகை நொறுக்குத் தீனிகள், இளநீர், பால், மோர், லஸ்ஸி போன்ற ஆரோக்கியமான உணவுப் பொருள்களைப் பள்ளியில் விற்கும்படி செய்யலாம். குழந்தைகளின் மூளை வளர்ச்சியில் உணவின் பங்களிப்பு அதிகம் எனும்போது ஆரோக்கியமான உணவுப் பழக்கத்திற்கு முதலில் பெற்றோர் பழக வேண்டியிருக்கிறது.

உணவின் மீதான அலட்சியம், உணவை வைத்து பாகுபாடு, அடிமைப்படுத்தும் உணவுப் பழக்கம் என மூன்றிலிருந்தும் குழந்தைகளை விடுவிக்க வேண்டியது பெற்றோர் முன் இருக்கும் பெரிய சவால்கள். வாழ்வதற்காகத் தான் உண்கிறோம். அதனாலேயே அது உன்னதமாகிறது. எங்கே உண்டாலும் அதன் வேலை பசியாற்றுவதுதான். அதனால் பசித்து, ரசித்து, ருசிக்க குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுப்போம். வேட்டையாடிக் கொண்டு வந்தாலும், விவசாயம் செய்து விளைவித்தாலும் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்பட்டாலும் ஒவ்வொரு உணவுப் பொருளும் கடும் உழைப்பின் பின்னணியில்தான் உருவாகி வருகிறது. அதற்குரிய மரியாதையை அளிக்க குழந்தைகளுக்கு சொல்லித் தருவோம். எதிர்காலத் தலைமுறையின் ஆரோக்கியமும், எதிர்காலச் சமூகமும் மேம்பட்டிருக்க பெற்றோராகிய நம்மாலான சிறிய ஆனால் முக்கியமான பங்களிப்பு இது.

- நிறைய பேசுவோம்

  இருவருமே சமைக்கலாம்!

ஆரோக்கியமான உணவைத் தயாரிக்க ஆண் பெண் வித்தியாசமில்லாமல் அனைவரும் பங்கேற்க வேண்டும். சமையல் வேலையில் ஆண்-பெண் வித்தியாசமில்லாமல் குழந்தைகளை ஈடுபடுத்துவோம். உணவைத் தயாரிக்கும்போது அதன்மீது மதிப்பும் மரியாதையும் வரும். பெண்  குழந்தை குறைவாகவும், ஆண் குழந்தை அதிகமாகவும் உண்ணும் என்பது கட்டமைக்கப்பட்ட மூட நம்பிக்கை. எவ்வளவு பசிக்கிறதோ அவ்வளவு உணவைப் பாகுபாடில்லாமல் அளியுங்கள்.

இரவும் உணவும்

நாம் ராப்பட்சிகளாக வாழ்கிறோம். நம்மைப் போலவே குழந்தைகளும் இரவு உணவை மிகவும் தாமதாக உண்டு, முழு வயிற்றோடு உறங்கப் போகின்றன. இது தவறு. இரவு என்பது ஓய்வுக்கும் உறக்கத்திற்கும் ஆனது. அதனால், மாலை 7 மணிக்குள் இரவு உணவை முடித்துவிடுங்கள். பெற்றோர் பழகினால், குழந்தைகள் அதைப் பின்பற்றத் தொடங்கிவிடும். இரவு உணவை முன்னரே முடித்து, முன்னரே படுத்தால் ஆழமான உறக்கம் வரும். உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

நொறுங்கத் தின்றால் நூறு வயது!

இன்றைய அவசர வாழ்வில் உணவை நொறுங்கத் தின்ன ஏது நேரம்? சில அம்மாக்கள் உணவை வாயில் வைத்துவிட்டு அப்படியே தண்ணீரை ஊற்றி விழுங்கச் செய்வதைப் பார்க்க முடியும். உமிழ்நீர் சேராத உணவு விஷத்திற்குச் சமம். அதனால், பொறுமையாக உண்ண குழந்தைக்குக் சொல்லிக்கொடுப்போம். எந்த உணவாக இருந்தாலும் அது வாயில் நூறு சதவிகிதம் அரைபட்ட பின்னரே வயிற்றுக்குள் அனுப்பப்பட வேண்டும். உணவை அரைப்பதற்குத்தான் பற்களை இயற்கை நமக்கு வழங்கியிருக்கிறது. வயிற்றுக்குள் பற்கள் இல்லை என்பதை நினைவில் வைப்போம். உண்பதற்கு அரை மணி நேரம் முன்போ, பின்போ மட்டுமே நீரை அருந்தப் பழக்குவோம். உணவோடு தண்ணீரைச் சேர்த்து அனுப்பும்போது செரிமானம் தடைப்படுகிறது.