
வெ.நீலகண்டன் - படங்கள்: க.தனசேகரன்
கடந்த 15 நாள்களில் ஏகப்பட்ட துயரங்கள், மரணங்கள். தமிழ்நாடே மிகப்பெரும் பதற்றத்தில் ஆழ்ந்திருக்கிறது. லேசாக உடம்பில் வெப்பம் அதிகரித்தாலே, டெங்கு பீதி பீடித்துக்கொள்கிறது. டெங்கு என்று உறுதியானால், மரணபயம் வந்துவிடுகிறது. தமிழகத்தின் எல்லா மாவட்டங்களையும் ஒருசேரக் கவ்விப்பிடித்து வதைத்துக்கொண்டிருக்கிறது டெங்குக் காய்ச்சல்.
வழக்கமாக, ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் மாறும் தட்பவெப்பம் காரணமாகக் கொசுக்கள் அதிகரிக்கும். அக்காலகட்டத்தில் காய்ச்சல்கள் வருவது இயல்புதான். ஒரு காலத்தில் மலேரியா, யானைக்கால் போன்ற கொடூர நோய்கள் எல்லாம் வந்து வதைத்தன. கொத்துக் கொத்தாக மக்கள் மடிந்தார்கள். திட்டமிட்ட தீவிர நடவடிக்கைகள் காரணமாக அந்த நோய்கள் எல்லாம் கட்டுப்படுத்தப்பட்டன. 2006-ல் தமிழகத்தில் மிகப்பெரும் பீதியை உருவாக்கியது சிக்குன் குன்யா. ஒருங்கிணைந்த தீவிர நடவடிக்கைகளால் மூன்றே மாதத்தில் அதற்கு முடிவு கட்டப்பட்டது. ஆனால், இப்போது டெங்கு புதிய வரலாற்றைப் படைத்திருக்கிறது. தமிழகமே ஸ்தம்பிக்கும் வகையில் அதிவேகத்தில் பரவி மிரள வைத்துக்கொண்டிருக்கிறது.

டெங்கு மிகப் பழமையான நோய். 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் இக்காய்ச்சல் இருக்கிறது. 1996-ல் இந்நோய் டெல்லியில் பரவி ஏராளமானோரை பலி வாங்கியது. இந்தியா டெங்குவைக் கண்டு மிரண்டது அப்போதுதான். தமிழகத்தில் 2012-ல் மதுரை வட்டாரத்தில்தான் முதன்முதலில் டெங்கு நோயாளி அடையாளம் காணப்பட்டார். படிப்படியாகத் தமிழகம் முழுவதும் பரவியது. ஒருகட்டத்தில் குறைந்த டெங்கு, 2015-ல் மீண்டும் எட்டிப் பார்த்தது. இப்போது விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.
“டெங்கு என்பது ஒருவகை வைரஸால் ஏற்படும் காய்ச்சல். ‘எலும்பு முறிவுக் காய்ச்சல்’ என்று தமிழ்ப்படுத்தலாம். டெங்கு-1, 2, 3, 4 என நான்கு வகையான வைரஸ்கள் உண்டு. ஏடிஸ் எஜிப்ட் (Aedes Aegypti) எனப்படும் கொசுவே இந்த வைரஸை மனிதர்களுக்குப் பரப்புகிறது. டெங்குவைப் பற்றி நிறைய மூடநம்பிக்கைகள் நிலவுகின்றன. டெங்கு வந்தாலே மரணம் வந்துவிடும் என்று வதந்திகளைப் பரப்புகிறார்கள். உண்மையில், அதுவும் பிற காய்ச்சல்களைப் போல சாதாரணமானதுதான். வெகு சிலருக்கு சற்று கடுமையாகலாம். எனவே டெங்குக் காய்ச்சல் வந்தால் பதற்றமடையத் தேவையில்லை...” என்கிறார் பொது சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் கே.குழந்தைச்சாமி.
டெங்கு ஏடிஸ் கொசுக்கள் கடிப்பதன் மூலமாக மட்டுமே பரவும். ஏடிஸ் கொசுக்களுக்குச் சில தனித்தன்மைகள் உள்ளன. கறுப்பு நிறத்திலான இந்தக் கொசுவின் சிறகுகளில் வெள்ளை நிறப் புள்ளிகள் இருக்கும். இது தூயநீரில் மட்டுமே வாழும். பெண் கொசுக்கள் மட்டுமே நோய் பரப்பும். இனச்சேர்க்கைக்குப் பிறகு, முட்டை வளர்ச்சியடைய மனித ரத்தத்தில் உள்ள புரதம் தேவைப்படுகிறது. அதனால் வேட்கையோடு மனிதர்களை நாடி வருகின்றன இந்தக் கொசுக்கள். இவை பகலில் மட்டுமே கடிக்கும். முட்டையிலிருந்து முழு உருவெடுத்து வர 10 நாள்களாகும். 20 முதல் 25 நாள்கள் வரை உயிர்வாழும். அதற்குள் மிகப்பெரும் சந்ததியை உருவாக்கிவிட்டுவிடும். கடித்து ஒரு வாரம் கழித்துதான் டெங்குக் காய்ச்சல் ஏற்படும்.
ஏடிஸ் கொசுக்களை அழிப்பதில் உள்ள சவாலே. அவற்றின் பெருக்கம்தான். ஒரு ஏடிஸ் பெண் கொசு, தன் வாழ்நாளில் 1,500 முட்டைகள் இடும். அந்த இடத்தில் 40 நாள்களில் 5 லட்சம் பெண் கொசுக்கள் உற்பத்தியாகிவிடும். தன் வாழிடத்திலிருந்து 500 மீட்டர் வரை பறந்து சென்று கடிக்கும். டேபிள், சேர்களின் கீழ்ப்பகுதி நிழலில் அமர்ந்திருக்கும். செடி கொடிகளிலும் ஒட்டியிருக்கும். பெரும்பாலும் காலைக் குறிவைத்துக் கடிக்கும். அதற்காக காலில் மட்டுமே கடிக்கும் என்பதில்லை.

“டெங்குக் காய்ச்சலில் மூன்று நிலைகள் உண்டு. ஒன்று, சாதாரண டெங்கு. தகுந்த மாத்திரைகளையும், போதிய நீர் ஆகாரங்களையும் எடுத்துக்கொண்டால் இது ஒரு வாரத்தில் குணமாகிவிடும். 100 பேருக்கு டெங்கு வருகிறதென்றால் 75 பேருக்கு சாதாரண டெங்கு தான் இருக்கும்.
டெங்குவின் இரண்டாவது நிலை, ‘ஹேமரேஜிக் டெங்கு’. (Dengue hemorrhagic fever). பொதுவாக நம் ரத்தத்தில் ஒன்றரை லட்சம் முதல் 4 லட்சம் வரை தட்டணுக்கள் இருக்கும். ‘ஹேமரேஜிக் டெங்கு’ நிலை ஏற்படும்போது, ரத்தத்தில் உள்ள தட்டணுக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறையத் தொடங்கிவிடும். சிலருக்கு 10 ஆயிரம் என்ற அளவுக்குக்கூட குறையும். உடம்பில் புள்ளி புள்ளியாக ரத்தக்கட்டிகள் தோன்றும். பல இடங்களில் ரத்தம் கசியத் தொடங்கும். இது ஆபத்தான நிலை.
மூன்றாவது நிலைதான் அபாயகரமானது. இதை, ‘ஷாக் சிண்ட்ரோம்’ (Dengue Shock Syndrome) என்பார்கள். உடலில் திடீரென ஒரு அதிர்ச்சி நிலை தோன்றும். ரத்தநாளங்கள் தெறித்து, உடம்புக்குள்ளேயே ரத்தக்கசிவு ஏற்படும். கை, கால் குளிர்ந்து சில்லிட்டுப்போகும். சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். படிப்படியாக சுயநினைவை இழப்பார்கள். இந்த நிலைக்குச் செல்பவர்கள்தான் மரணமடைய நேர்கிறது.” என்கிறார் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு இயக்கத்தின் தலைவரும், குழந்தைகள் நல மருத்துவருமான ரெக்ஸ் சற்குணம்.
டெங்குவுக்குத் தடுப்பு மருந்துகள் என்று இதுவரை எதுவும் இந்தியாவில் அங்கீகரிக்கப் படவில்லை. பிரான்ஸைச் சேர்ந்த ‘சனோஃபி பாஸ்டியர்’ (Sanofi Pasteur) என்ற நிறுவனம், டெங்குக்கான தடுப்பூசியைக் கண்டுபிடித்துள்ளது. அதை உலக சுகாதார நிறுவனமும் அங்கீகரித் துள்ளது. மெக்ஸிகோ, பிலிப்பைன்ஸ், பிரேசில், எல் சல்வேடார், கோஸ்டாரிகா, கௌதமாலா, பெரு, இந்தோனேஷியா, தாய்லாந்து, சிங்கப்பூர் ஆகிய 10 நாடுகள் இந்தத் தடுப்பூசியை அங்கீகரித்து, தங்கள் நாடுகளில் பயன்படுத்தத் தொடங்கி விட்டன. இந்தியா அதை இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்தியாவைப் பொறுத்தவரை, தொற்றுநோய்த் தடுப்பு ஆராய்ச்சி மிகவும் பின்தங்கியே இருக்கிறது. ஆராய்ச்சி நிறுவனங்களில் தலைதூக்கியிருக்கும் அரசியலே இதற்குக் காரணம் என்கிறார்கள் மருத்துவ சமூகவிய லாளர்கள். இருக்கும் நிறுவனங் களுக்குள்ளும் ஒருங்கிணைப்பு இல்லை. தவிர, நிதி ஒதுக்கீடும் போதுமானதாக இருப்பதில்லை.

“டெங்கு கொசு சுத்தமான தண்ணீரில்தான் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும். டெங்குவைத் தடுப்பதற்கான முதல் செயல்பாடு, வீட்டுக்குள் வைத்திருக்கும் குடிநீரை நன்கு மூடி வைப்பது தான். குளிக்கவும் புழங்கவும் வீட்டுக்குள்ளேயோ, வெளியிலேயோ வைத்திருக்கும் தண்ணீரில்தான் பெரும்பாலும் ஏடிஸ் கொசுக்கள் முட்டையிடுகின்றன. முட்டை கொசுவாக மாற 10 நாள்கள் ஆகும். அதனால், வாரத்துக்கு ஒருமுறை, தொட்டிகள், பாத்திரங்களை பிளீச்சிங் பவுடர் அல்லது சுண்ணாம்பு சேர்த்து நன்கு தேய்த்துக் கழுவி விட்டால் முட்டைகள் அழிந்து விடும். கொசு உற்பத்தி தடுக்கப்படும். இது இரண்டாவது செயல்பாடு.
டயர், கொட்டாங்கச்சி, உடைந்த தொட்டிகள் போன்ற தண்ணீர் தேங்குவதற்கு வாய்ப்புள்ள தேவையற்ற பொருள்களை முற்றிலும் வெளியேற்றுவது மூன்றாவது செயல்பாடு. இந்த மூன்று செயல்பாடுகளையும் மக்கள் பொறுப்புணர்வோடு செய்தாலே கொசுக்களின் உற்பத்தியைத் தடுத்துவிட முடியும். கொசு மருந்து அடிப்பது என்பது நான்காவது செயல்பாடு. இது வெறும் சப்ளிமென்ட்ரிதான்.
வீடுகளில் அழகுக்காக வைத்திருக்கும் ஃபவுண்டன்ஸ், அருவிகள், சிறு குளங்களில் கம்பூசியா, ஹப்பி போன்ற மீன்களை விடலாம். அவை கொசுக்களை அழித்துவிடும்.
காய்ச்சல் வந்துவிட்டாலே டெங்குதான் என்று பதறத்தேவையில்லை. தற்போது பரவும் 90 சதவிகிதக் காய்ச்சல்கள் சாதாரண வைரஸ் காய்ச்சல்கள்தான். 10 சதவிகிதத்தில் டைஃபாய்டு, டெங்கு, எலிக்காய்ச்சல், மலேரியா போன்றவை இருக்கலாம். அதனால் அச்சமடையாமல், அருகில் உள்ள மருத்துவமனைகளுக்குச் செல்லலாம்.
காய்ச்சல் நேரத்தில் டயட் மிகவும் முக்கியம். சிலர் பட்டினி கிடப்பார்கள். சிலர் கடினமான உணவுகளைச் சாப்பிடுவார்கள். இரண்டுமே தவறு. நீரோட்டமாகக் கஞ்சி வைத்துச் சாப்பிடலாம். கார்போஹைட்ரேட், உப்பு, நீர்ச்சத்து அனைத்தும் கஞ்சி மூலம் கிடைக்கும். காய்ச்சல் நேரத்தில் நீர்ச்சத்து மிகவும் அவசியம். அதனால் பழச்சாறுகள் அருந்தலாம். மோர் சாதம், இட்லி போல வாய்க்கு ருசியான உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.
காய்ச்சல் நேரத்தில் வயிற்றுவலி, வாந்தி, உடல் சோர்வு இருந்தால் காலம் தாழ்த்தாமல் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறவேண்டும். ஊசி போடக்கூடாது. மருத்துவர் ஆலோசனை இல்லாமல் சுயமாக மாத்திரை வாங்கிச் சாப்பிடக்கூடாது. அடிப்படையான சுகாதார முறைகளைக் கடைப்பிடித்தால் டெங்குவைப் பற்றி அஞ்சவே தேவையில்லை...” என்கிறார் குழந்தைச்சாமி.
டெங்கு கொசுக்களை அரசு ஒழித்துவிடும் என்றால் ஏமாற்றமே மிஞ்சும். நம்மையும், நம் குழந்தைகளையும் பாதுகாக்க வேண்டிய கடமை நம்மிடமே இருக்கிறது. தண்ணீரைத் தேங்கவிடாமல் தடுத்தாலே டெங்குவை ஒழிக்கலாம்!