
தமிழ்ப்பிரபா, இரா.கலைச்செல்வன், படங்கள்: க.விக்னேஷ்வரன்
“இருபது வருஷத்துக்கு முன்னாடி ஆடு மேய்ச்சிட்டிருக்கும்போது அசதியாய்டுச்சுன்னு மோயாறு ஆத்துப்பக்கம் ஒரு தூக்கம் போட்டுட்டேங்க. என்னை மாதிரியே காட்டு வேலைங்க செஞ்சவங்க மூணு பேரு அங்கங்க படுத்த மாதிரி கதை பேசிட்டிருந்தாங்க. நா குப்புறப் படுத்துக் கேட்டுக்கிட்டிருந்தவன் தூங்கிட்டேன். திடீர்னு `டேய் ராமசாமி... ராமசாமி’ன்னு சத்தம். தூக்கம் கலைஞ்சி மல்லாக்கத் திரும்பிப் பாக்குறேன், ஏதோ மரநிழல்ல படுத்துட்டிருந்த மாதிரிதாங்க தெரிஞ்சிச்சு... நல்லா கண்ணு தெளிஞ்சு பாக்குறேன். ரெண்டு பெரிய காலுக்கு நடுவுல இருக்கேன். ஆனையோட காலடிக்குக் கீழ இருக்கேன்னு தெரிஞ்சதும், உடம்பு உதறல் எடுத்து, அழுகை வந்துடுச்சு.

ஆனை என் முகத்த பாக்கலைங்க. படுத்தவன் எழுந்துக்காம ரெண்டு கையைக் கூப்பிய மாதிரியே ஆனையோட அடி வயித்த பாத்துக் கும்பிட்டு, சத்தம் வராம அழுதுட்டிருந்தேன். ஆளுக எல்லாம் கத்திட்டிருக்காங்க. நா கூப்புன கையை எடுக்கல. ஆனை என்ன நெனச்சுதோ, என் உடம்புக்கு மேல ஒரு காலத் தூக்கி அந்தப் பக்கம் வெச்சு நடந்து போயிட்டே இருந்ததுங்க. அது போன திசையை நோக்கிக் கையைக் கூப்புனவன், ஆளுக வந்து என்னை எழுப்பி உக்கார வெச்சவரைக்கும் எடுக்கல. அன்னில இருந்து எந்த ஆனையை, எவ்ளோ தூரத்துல பாத்தாலும் தலைக்கு மேல கை வெச்சு ஒரு கும்பிடு போட்டுக்குவேன். ஆனைகள பாத்தா, நம்மள கொன்னுடும்கிற மரண பயம் போச்சு. அந்தத் தைரியம்தான் இத்தனை வருஷம் காட்டு ஆனைகளோட புழங்க வெச்சுச்சுங்க” என்ற ராமசாமி, தான் சந்தித்த ஆபத்துகளைப் பற்றிச் சொல்லும்போது அவர் முகத்தில் தப்பித்துவிட்ட சாகச உணர்வெல்லாம் இல்லை. பழைய காதலை நினைவுகூரும் பரவசத்துடனேயே தன் காட்டு வாழ்க்கை அனுபவங்களை விவரிக்கிறார்.

ஆராய்ச்சிக்காக வரும் கானக ஆர்வலர்கள் மற்றும் வனக்கல்வி மாணவர்களுடன் காட்டில் பயணித்து அதன் நுணுக்கங்களைப் பகிர்ந்துகொள்பவர் ராமசாமி. மேற்குத் தொடர்ச்சி மலைகளை ஒட்டியுள்ள வனப்பகுதிகளில் சுமார் இருபது ஆண்டுகளாக திசைகாட்டியாக இருந்துவருகிறார். அவரைச் சந்திப்பதற்காகச் சென்றோம். சத்தியமங்கலம் காட்டுப்பகுதிக்குள் நுழைந்து முப்பது கிலோமீட்டர் பயணம் செய்ததும், சலசலக்கிற நீரோடையைப் பரிசலில் தாண்டினால் தென்படுகிற சிறிய மலைக்கிராமமான தெங்குமரஹடாவில் அவர் வசித்துவருகிறார். பெரும்பாலும் காட்டிலேயே தங்க வேண்டும் என்பதால் வீட்டுக்கு வருவதென்பது அவருக்குத் தற்செயல் நிகழ்வு. நாங்கள் சென்ற நேரம் வீட்டில் இருந்தார். வயது அறுபதை நெருங்கும் சமிக்ஞைகள் முகத்தில் தெரிந்தாலும் அதற்கான சுவடுகள் உடம்பில் இல்லை.
“நா பிறந்தது வளர்ந்ததெல்லாம் இதே ஊருதான். சின்னவயசுல இருந்து அப்பாகூட இந்தக் காட்டுலயே சுத்திட்டிருப்பேனுங்க. எல்லா நெளிவுசுளிவுகளையும் கத்துக் கொடுத்தவர் அவருதான். அவர் இறந்துபோனது ஒரு சோகம், அப்புறம் இந்தக் காடும் ஒரு வகையில அழிஞ்சுபோறதப் பாத்துட்டுத் தனிமரமா நின்னுட்டிருந்தேன். அப்பதான் ஒரு அமைப்பு ‘உலகத்துல இருக்கிற எல்லாக் காட்டையும் நாங்க பாதுகாக்கிறோம். எங்களுக்குக் கூடமாட இருப்பியா’ன்னு கேட்டாங்க. சரின்னு ஒத்துக்கிட்டு அவங்ககூட ஒத்தாசையா இருந்துட்டுவர்றேன்” என்ற ராமசாமியின் உதவியால் வனத்துறை மற்றும் விலங்குகள் ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற்றவர்கள் கணக்கிலடங்காதவர்கள்.
பனி கொட்டும் மாலை நேரம் துவங்கியது. புஷ்டியான நாய்களின் நடமாட்டத்திற்கு இடையே, வீட்டுக் கூரைகளின் மேலிருந்து எழும்பும் புகையின் வாசனைகளை மோப்பம் பிடித்தபடி தெருக்களில் இறங்கி நடக்க ஆரம்பித்தோம். உள்ளங்கைகளைத் தேய்த்துச் சூடேற்றியபடியே யானைகளுக்கும் தனக்கும் உள்ள பிணைப்பைச் சொல்லத் துவங்கினார் ராமசாமி.
“ஒரு முறை ஆனை ஆராய்ச்சியாளர்களோட ஜீப்ல போய்க்கிட்டிருக்கோமுங்க. பாதையில கடந்து போன ஆனைக்கூட்டம் எங்களப்பாத்ததும் நின்னுட்டு அப்டியே ஜீப்பப் பாத்து நடந்து வருதுங்க. ஒரு முப்பது ஆனைங்க இருக்குமுங்க. சின்ன ரோடுதான், வண்டிய திருப்பியிருக்கலாம். ஆனா, வண்டிய ஓட்டிட்டிருந்தவருக்கு அந்த நேரத்துல என்ன பண்றதுன்னே தெரியல. கூட இருந்தவங்க எல்லாம் அழ ஆரம்பிச்சுட்டாங்க, எறங்கி ஓடத் தயாரா இருந்தாங்க. `ஐயா சாமி, எதுக்கும் பயப்படாதீங்க. நா சொல்றத மட்டும் கேளுங்க’ன்னு சொல்லி, வண்டி ஓட்டுறவர்கிட்ட சொன்னேன். ‘சார், எக்காரணத்தைக் கொண்டும் லைட்ட ஆஃப் பண்ணிடாதீங்க. நல்லா புகை வர்ற அளவுக்கு வண்டிய முறுக்கிட்டே இருங்க. வேகமா அதுங்கள முட்டுற மாதிரி போகாம மெள்ளமா வண்டிய உறுமவிட்டுக்கிட்டே போங்க’ன்னு சொன்னேன். சொன்ன மாதிரியே அவரும் செய்ய, டீசல் வாசத்துக்கும் புகைக்கும், வெளிச்சத்துக்கும் அப்டியே ஒரு ஆனை வழிய மாத்த, மத்ததுகளும் பின்னாடியே போச்சுங்க” நாங்கள் த்ரில்லர் படத்தைப் பார்ப்பதுபோல் அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தோம்.
“எல்லாக் காட்டு ஆனைகளும் மூர்க்கமா நடந்துக்காதுங்க. அப்டி அது நடந்துக்கத் துவங்கினதுமே சில விஷயங்கள வெச்சுக் கண்டுபுடிச்சிடலாமுங்க. காதை அடிக்கிறத நிப்பாட்டிட்டு தும்பிக்கைய மெதுவா தூக்குன மாதிரியே ஒரு கால வெச்சு, இன்னொரு காலை உரசுதுன்னாலே நாம கவனமாகிடணுங்க. அதுக்கு நாம வழிய விட்டுட்டு வேற பாதையில போயிடலாம். ஆனை நம்மள பாக்குதுன்னு நெனச்சுட்டிருப்போம். ஆனா, அது கண்ணுக்கு நாம தெரிய மாட்டோம். அப்டியே போயிட்டே இருக்க வேண்டியதுதான். அதை விட்டுட்டு, போட்டோ எடுக்கறதும், சத்தம் போடுறதெல்லாம் செஞ்சா அதுக்குக் கோபம் வந்துடுமுங்க.
`முப்பதாயிரம் தரேன், ஐம்பதாயிரம் தரேன். இந்தக் காட்டைச் சுத்திக்காட்டு, புலியைக் காட்டு, சிறுத்தையைக் காட்டு’ன்னு வந்து கேட்டிருக்காங்க. அவங்களுக்கு ஒருபோதும் துணைபோனதில்லைங்க. டூரிஸ்ட்டுக உள்ள வந்தா நாசம் பண்ணிடுவாங்க. ஆனா, ஸ்டூடன்ட்ஸ், ஆராய்ச்சியாளர்கள்னு முறையா பர்மிஷன் கேட்டு வந்தா அவங்களுக்குத் துணையா இருப்பேங்க. அவங்களால காட்டுக்கு ஏதோவொரு வகையில நன்மை கிடைக்கும்லங்க” என்கிறார் பெரிய நம்பிக்கையுடன்.

அடுத்த நாள் விடியற்காலையே ராமசாமியிடமிருந்து விடைபெற்றுச் சத்தியமங்கலம் காட்டுக்குள் கிளம்பினோம். மோயாற்றின் வேகம் கூடுதலாக இருந்ததால், பயத்துடனேயே பரிசலில் கரையை அடைந்தோம். எங்களைச் சந்திப்பதற்காக ஃபாரஸ்ட் செக்போஸ்டிலேயே காத்துக்கொண்டிருந்தார்கள் கனகராஜ், தங்கராஜ் மற்றும் ரங்கநாதன். இவர்கள் மூவருமே வனத்துறையின் கடைநிலை ஊழியர்களான வேட்டைத் தடுப்புக் காவலர்கள். சத்தியமங்கலம் காட்டிற்குச் சென்று, உள்ளே மிருகங்கள் ஏதேனும் அடிபட்டு அல்லது இறந்து போயிருந்தால் தகவல் தெரிவிப்பது, விலங்குகளின் கால்தடங்கள், அவற்றின் எச்சம், கழிவுகள் ஆகியவற்றைக் குறித்துக் கொண்டு வயர்லெஸ் கருவியின் வழியாக இலாகாவைச் சார்ந்தோரிடம் தகவல்களைத் தெரிவிப்பது, விலங்குகளுக்குத் தண்ணீர் கிடைக்கிறதா, வெளியாட்கள் நடமாட்டம் இருக்கிறதா...என நீளுகின்றன இவர்களின் தினசரி வேலைப்பட்டியல். இதற்காக இவர்கள் ஒரு நாளுக்குப் பதினைந்திலிருந்து இருபது கிலோமீட்டர் வரை காட்டுக்குள் நடக்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள அனைத்துக் காடுகளிலும் இதுபோன்று வேலைகள் செய்யும் ஆட்கள் இருக்கிறார்கள் என்றாலும், சத்தியமங்கலம் காட்டுக்குள் இந்த வேலையைச் செய்வது ஆபத்தானது என்கிறார்கள். காரணம், தமிழகத்தில் உள்ள மற்ற காடுகளைப் போல் சத்தியமங்கலம் பசுமையான மழைக்காடுகள் இல்லை. இவை முட்புதர்கள் அதிகமாகக் காணப்படுகிற உலர்வனக்காடுகள். ஆகவே, இங்குள்ள விலங்குகள் மிகவும் மூர்க்கமாக இருக்கும்.
பசுமையான இடங்களில் இனப்பெருக்கம் முடித்துவிட்டு, குட்டிகளைப் பாதுகாப்பதற்காக சத்தியமங்கலம் காடுகளை விலங்குகள் தேர்ந்தெடுக்கும். அதனால், அவை மிகுந்த எச்சரிக்கை உணர்வுடனும் பதற்றத்துடனும் இருக்கும். மிருகங்கள் இப்படி உள்ள நிலையில் இவற்றுக்கு நடுவில் வேலை செய்யும் ஆபத்தான ஒரு வேலையைத்தான் தினமும் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் மூவருடனும் சேர்ந்து சத்தியமங்கலம் காட்டுக்குள்ளே இன்னும் ஆழமாகச் செல்வதாகத் திட்டம். அதற்கு முன் கனகராஜ் எங்களைப் பார்த்துக் கேட்டார், “நீங்க சோப்பு, ஷாம்பூ போட்டுக் குளிச்சீங்களா, சென்ட் அடிச்சிருக்கீங்களா? அப்பன்னா கவனமா இருங்க, உங்களத்தான் விலங்குகள் குறிவைக்கும்” எனச் சொல்லி, சத்தம் வராமல் சிரித்தார்.
“முக்கியமா எதாச்சும் கேக்குறதா இருந்தா மட்டும் உள்ள பேசிக்கலாம். மத்தபடி அமைதியா நடந்து வரணும். காட்டுல நடமாடப் போறோம்னா கண்ணைவிடக் காதைத்தான் கூர்மையா வெச்சுட்டு நடந்து வரணும்” என்றார், இவர்களுள் அதிக அனுபவம் வாய்ந்த தங்கராஜ்.
அன்று வெயில் சற்றே கடுமையாக இருந்தது. தங்களிடமிருந்த ஜிபிஎஸ் கருவியின் மூலம் வேலையை ஆரம்பிக்கும் இடத்தின் பூகோளக் குறியீடுகளைப் பதிந்துகொண்டார்கள். உள்ளே நடக்கத் துவங்கியதும் `ர்ர்ரர்ர்’ என்ற பூச்சிகளின் சத்தங்களினூடே கும்மென்ற காட்டின் அமைதி எங்களை அச்சுறுத்தியது.
எங்களின் முகங்களைப் பார்த்தே புரிந்துகொண்ட கனகராஜ் சிரித்துக்கொண்டே சொன்னார், “சார். ஒண்ணும் பயப்படாதீங்க. ஒவ்வொரு விலங்குக்குன்னு ஒரு வாசனை இருக்குங்க. அதைப் பழகி வெச்சிருக்கோம். குறிப்பா, புலி, யானை. இந்த விலங்குகளோட வாசனையைக் குறைந்தபட்சம் ஒரு கிலோமீட்டர் தூரத்துலேயே ஒரு நல்ல வனவாசியால கண்டறிய முடிஞ்சிடும். அதுக்கேத்த மாதிரி நம்ம பாதையை மாத்திக் கிட்டோம்னா அதுக நமக்கு எந்தப் பிரச்னையும் கொடுக்காது” என்று நம்பிக்கை கொடுத்தார்.
கிழங்குகள் இருக்கிறதா எனப் பார்ப்பதற்காகக் காட்டுப்பன்றிகள் தோண்டிய குழிகள் பரவலாக இருந்த இடத்தைத் தாண்டி நடந்துவருகையில் “நண்பா... காலைக் கீழ வைக்காதீங்க, அப்டியே இந்தப் பக்கம் வைங்க” என ரங்கநாதன் சொன்னதும், கன்னிவெடியின் மீது கால் வைத்து விட்டோமோ எனப் பகீரென்றது. கையில் வைத்திருந்த ஒரு குச்சியை எடுத்து நான் கால் வைக்காத இடத்தைச் சுற்றி வட்டமிட்டு, ``இங்க பாருங்க, கால் தடம் தெரியுதா. இது புலியோட கால்தடம். இந்தப் பக்கம் நடந்து போயிருக்கு” என ரங்கநாதன் சொன்ன்னபோது ஆச்சர்யத்தைவிட பயத்தில் எங்கள் முகத்தில் வியர்வை அதிகம் படர ஆரம்பித்தது. ``பயப்படாதீங்க சார். புலிகளைப் பொறுத்தவரை நம்மளைவிட அதுங்களுக்குத்தான் பயம் அதிகமா இருக்கும். இருக்குற விலங்குகளிலேயே ரொம்பக் கூச்ச சுபாவம் உள்ள விலங்கு புலிதான். நாம எதாச்சும் அதைப் பண்ணிடுவோம்ங்கிற பயத்துலதான் அது நம்மள வந்து தாக்கும். அப்படி ஒரு மனநிலையிலதான் அது பயந்து எங்கள நோக்கி வர எழுந்தது. பிடிச்சோமே ஓட்டம். அந்த நாள மறக்கவே முடியாது சார்” என்று கனகராஜ் கதை சொல்ல ஆரம்பிக்க... “அடேய் கனகு, பேசாம வரமாட்டியா” எனக் கண்டிக்கிறார் தங்கராஜ்.

பயணத்தை மேற்கொண்டு தொடர்கையில் சிறுத்தையின் கால்தடம் பார்த்தோம். அவற்றையெல்லாம் குறித்துக்கொண்டு தகவல் சொல்கிறார்கள். அங்கிருந்த ஒரு நீரோடையைச் சுற்றிச் சேறும் சகதியுமாக இருந்த இடத்தில் யானைகள் கால் புதைத்த சிறுசிறு பள்ளங்களும், கழுதைப்புலிகளின் நகம் பதிந்த காற்தடங்களும் இருந்தன. மானின் எலும்புக்கூடு உறைந்துபோன ரத்தத்துடன் மரத்தின் ஓரத்தில் கிடந்தது. இவற்றையெல்லாம் தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறோம் என்றாலும், நேரில் அனுபவிப்பதற்குக் காட்டிலுள்ள ஒவ்வொரு விஷயமும் வியப்பாகவும் பயமாகவும் இருந்தது.
எங்களுடன் வந்த வேட்டைத் தடுப்புக் காவலர்களான மூவரும் இதில் பழக்கப்பட்டவர்கள் எனினும், எந்த வகையிலும் பாதுகாப்பில்லாத வேலையையே வாழ்க்கையாகக் கொண்டிருக்கிறார்கள் என்பதை, மிருகங்களிடமிருந்து அவர்கள் தப்பித்து வந்த சம்பவங்கள் சொல்லின. இத்தனைக்கும் ஒப்பந்தத் தொழிலாளர்களான இவர்களின் மாதச்சம்பளம் ஆறாயிரத்து எழுநூற்றைம்பது ரூபாய்தான். பல ஆண்டுகளாகப் பணிநிரந்தரம் இல்லாமலேயே தொடர்கிறார்கள். காட்டை நேசிப்பதால் இந்த வேலையைக் குறித்துப் பெரிய புகார்கள் இவர்களிடம் இல்லை. அவர்கள் மூவரும் அழுத்திச் சொல்வது `காட்டில் எங்களைப் பாதுகாத்துக்கொள்ள அரசாங்கம் ஆயுதம் கொடுத்து உள்ளே அனுப்ப வேண்டும்’ என்பதே.
“எனக்குத் தெரிஞ்சது இந்தக் காடு மட்டும்தாங்க. அதான் இதைக் காக்க வீட்டை விட்டுக் கெளம்பிட்டேன். கெளம்பி ஆறு வருஷம் ஆகுதுங்க. ஒவ்வொரு நாளும் ரொம்ப த்ரில்லிங்கா இருக்குமுங்க. அதுவும் மழைக்காலத்துல உள்ள எறங்கி நடக்கிறது அவ்ளோ சிரமம். கழிவுக்குட்டைல இருக்கிற தண்ணியெல்லாம் கூடப் பகிர்ந்து குடிக்க வேண்டிய சூழல் வரும். பூச்சிங்க நிறைய மேல ஏறும், சில விலங்குகளோட மனநிலைய புரிஞ்சிக்க முடியும். கரடி இதுல கொஞ்சம் ரிஸ்க்கானதுங்க. காட்டுப்பன்னின்னு நெனச்சுட்டுப் போவோம், பாத்தா கரடியா இருக்கும். அது துரத்தி முட்டி முகரையெல்லாம் எனக்குப் பேந்திருக்குங்க. எங்களுக்கு என்னன்னா, இவ்ளோ ஆபத்து இருக்கிற வேலையைச் செய்றோம், பாதுகாப்புக்கு எங்களுக்கு அரசாங்கம் ஆயுதம் எதாச்சும் கொடுக்கலாம். குறைந்தபட்சம் ஒரு பெப்பர் கன் கொடுத்தாலாவது அந்த நேரத்துல சமாளிக்க, வெடிச்சத்தத்தைப் போட்டுட்டு உயிரைக் காப்பாத்திட்டு ஓடி வந்துடலாம். என்னதான் காட்டு விலங்குக எங்களுக்கு முக்கியம்னாலும், பெத்த பிள்ளைக முன்னாடி நாங்க உயிரோடு போயி நிக்கணும் இல்லையா! போனவாரம்கூட எங்க டீம்ல சிவான்னு ஒருத்தரு பாறை வழியா இறங்கிட்டிருக்கும்போது, பாறையிடுக்குல கரடி குட்டி போட்டிருந்தது அவருக்குத் தெரியல, அது பயந்துகிட்டுக் கத்த, தாய்க்கரடி அவரத் துரத்திட்டு வர, கால் உடைஞ்சி பத்து நாளா வீட்லதான் கெடக்காரு” என்றார் ரங்கநாதன்.

“இந்தக் காட்டுலதான் நாங்க தலைமுறை தலைமுறையா வாழ்ந்தது. புளியங்காய், பூசக்காய், கடுக்காய், இன்னும் நிறைய காய்கனிகள ஊருக்குள்ள வித்து, அவங்க கொடுக்கிற அரிசி பருப்புகள சமைச்சி வாழ்ந்தவங்க; காசு பணமெல்லாம் தலைமுறை அறிஞ்சதில்லைங்க. எங்க குடும்பமெல்லாம் வெளியேத்தப் பட்டாலும் அவங்களோட பிள்ளைகளா ஒருவகையில இந்தக் காட்டைக் காப்பாத்துற வேலை செய்றதுல எனக்குப் பெருமைதாங்க. பத்து வருஷமா வேலை செய்றேங்க. வேட்டைத் தடுப்புக் காவலர்களாகிய எங்கள அரசாங்கம் பர்மனென்ட் பண்ணணும்” என்ற தங்கராஜ்தான் இவர்களின் வைத்தியர். காட்டிலுள்ள அத்தனை மூலிகைகளையும் அதன் குணநலன்களையும் விரல் நுனியில் வைத்திருக்கிறார்.
பகல் முழுக்கக் காட்டில் அலைந்து முடித்ததும், இரவு இவர்களுக்கென்று வாட்ச் டவருக்கு அருகே கொடுக்கப்பட்ட கூடார வீட்டுக்குச் செல்கிறார்கள். அதுவும் முழு ஓய்வுக்காக என்று சொல்வதற்கில்லை.
வயிற்றுவலிபோன்ற பாதிப்பால் விலங்குகள் ஏதேனும் இரவு முழுக்க ஓலமிடும். ஒன்றுக்கொன்று அடித்துக்கொண்டு கதறும். குட்டிகளுடன் யானை இருக்கும் இடத்தைப் புலி கடந்துசெல்லும்போது யானைக்கூட்டம் பிளிறும். இவைபோன்ற சத்தங்கள் கேட்டால் வாட்ச் டவரில் ஏறி நின்று அந்தத் திசைகளைக் குறித்து வைத்துக் கொண்டு, விடிந்தவுடன் அங்கே செல்ல வேண்டும். வயக்காட்டில், வீட்டுத் தோட்டங்களில் யானைகள் புகுந்தால் உடனே அங்கு சென்று யானைகளை விரட்டவேண்டும். இப்படி, இவர்களுக்கு ஓய்வு என்பதே இல்லை.
மாலை நெருங்கியது. காட்டிலிருந்து மண் பாதைக்கு வந்து சேர்ந்தோம். அவர்கள் மூவரும் காட்டினுள் இருக்கும் கேம்ப்பிற்குச் செல்ல வேண்டும். நாங்கள் இன்னும் சில மணி நேரத்தில் நகரை அடைந்துவிடலாம். எங்களுக்கான பரபரப்பான வாழ்க்கை எங்களை அணைத்துக்கொள்ளத் தயாராக இருந்தது. நடக்கத் தொடங்கினோம். திரும்பிப் பார்த்தபோது, அவர்கள் மூவரும் கையில் டார்ச் லைட்டோடும், சிறு அரிவாளோடும் காட்டை நோக்கிப் போய்க் கொண்டிருந்தார்கள்.