Published:Updated:

நான் அகதி! -7 - அகதிகளால் என்ன லாபம்?

நான் அகதி! -7 - அகதிகளால் என்ன லாபம்?
பிரீமியம் ஸ்டோரி
News
நான் அகதி! -7 - அகதிகளால் என்ன லாபம்?

மருதன்

கதிகளை ஏற்றுக்கொள்ள ஒரு நாடு தயங்குவதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் அவற்றில் பிரதானமானது பொருளாதாரம். சிறிய குழந்தைகளோடு, கண்கள் முழுக்கக் கவலையுடன், மூட்டை முடிச்சுகளுடன் வந்து நிற்கும் அகதிகளைப் பார்க்க உண்மையிலேயே பாவமாகத்தான் இருக்கும். சரி போகட்டும் என்று கதவைத் திறந்துவிடலாம்தான். ஆனால், அவர்களை வால் பிடித்தபடியே இன்னொரு கூட்டம் திரண்டுவரும். கதவை மேலும் திறந்தோம் என்று வையுங்கள், அலை அலையாக அகதிகள் பொங்கிவர ஆரம்பித்துவிடுவார்கள். கண்ணுக்கே தெரியாத சிறிய ஓட்டை என்று விட்டுவிட்டால் முழுக் கப்பலும் கவிழ்ந்துவிடும். பிறகு வருத்தப்பட்டு என்ன பலன்?

நான் அகதி! -7 - அகதிகளால் என்ன லாபம்?

சில முகாம்களில் அளிக்கப்படும் வசதிகளைப் பார்க்கும்போது நிஜமாகவே அகதிகள் அந்நாடுகளின் பொருளாதாரத்துக்குப் பெரும் சுமையாகவே இருக்கிறார்கள் என்றுதான் பலருக்குத் தோன்றும். சிரியாவிலிருந்தோ இராக்கிலிருந்தோ வந்துசேரும் அகதிகள் ஜெர்மனிக்கோ பிரிட்டனுக்கோ அமெரிக்காவுக்கோ சென்று குடியேறும்போது நிச்சயம் அவர்கள் இதுவரை வாழ்ந்த வாழ்வைவிடப் பல மடங்கு நல்ல, ஆடம்பரமான வாழ்வைத்தான் வாழப்போகிறார்கள். ஆம், அகதிகள் தங்கள் தாய்நாட்டில் பலவற்றை இழந்திருக்கிறார்கள், உண்மை. ஆனால் புது நாடு அவர்களுக்குக் குறைவாகவா அள்ளித் தந்திருக்கிறது? சுத்தமான சாலைகளையும் பளபளப்பான கட்டடங்களையும் அதிநவீன நாகரிக வாழ்வையும் அவர்கள் தங்கள் வாழ்நாளில் கண்டிருப்பார்களா? சற்றே குரூரமாகத் தோன்றக்கூடும் என்றாலும் போரும் வன்முறையும் ஒருவகையில் அகதிகளுக்கு நன்மையையே அளித்திருக்கிறது என்றுகூடச் சொல்லலாம் இல்லையா?

நான் அகதி! -7 - அகதிகளால் என்ன லாபம்?

அதனால்தான் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவின் கதவுகளை இறுக்கமாக மூடிக்கொள்ள விரும்புகிறார். அகதிகளை அனுமதிக்க முடியாதபடிக்குச் சட்டத்தை மாற்ற அவர் துடித்தார். அது முடியாது என்னும் நிலையில் இயன்றவரை அகதிகளின் நுழைவைக் குறைத்துக் கொண்டுவருகிறார். அகதிகளை அனுமதிப்பது உள்நாட்டுப் பாதுகாப்புக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலை அளிக்கும் என்பது ஒரு பக்கமிருக்க, அவர்களால் அமெரிக்காவின் வளம், வேலை வாய்ப்புகள் அனைத்துக்கும் அச்சுறுத்தல் ஏற்படும், தேசத்தின் பொருளாதாரத்தையே ஒரு கட்டத்தில் சீரழித்துவிடும் என்று வாதிடுகிறார் ட்ரம்ப். அகதிகளுக்காகச் செலவிடும் தொகை அதிகரித்துக்கொண்டே போகிறது. இன்னொரு பக்கம், அமெரிக்கர்களுக்காக அளிக்கப்படும் நலத்திட்டங்களை இந்த அகதிகளும் சட்டப்படி அனுபவிப்பதால் பண விரயம் அதிகரிக்கிறது என்கிறார் டிரம்ப்.
 
ஆனால் இது உண்மையல்ல. அகதிகளுக்காக ஒரு நாடு செலவிடும் தொகையை மட்டும் எடுத்துக் கையில் வைத்துக்கொண்டு அலறுவது அநீதியானது என்கிறார்கள் இத்துறையைச் சேர்ந்த ஆய்வாளர்கள். `நீ அகதிக்கு என்ன செய்திருக்கிறாய் என்று மட்டும் பார்க்காதே; அகதி உனக்கு என்ன செய்திருக்கிறார் என்றும் பார்’ என்பதுதான் அவர்களுடைய தர்க்கம். அகதிகள் அமெரிக்காவில் வாழ்கிறார்கள் என்றால் அவர்கள் மற்ற அமெரிக்கர்களைப் போல் அரசுக்கு வரி செலுத்துகிறார்கள் என்று பொருள். அதிக அகதிகள் என்றால் அரசுக்கு அதிக வரி வருமானம் என்று பொருள்.  உதாரணத்துக்கு செப்டம்பர் 2015-ல் வெளிவந்த ஓர் அறிக்கையை எடுத்துக்கொள்வோம். அதன்படி, பெரும்பாலான நாடுகளில் குடியேறியவர்கள் அதிக வருமான வரி செலுத்துபவர்களாக இருக்கிறார்கள். மேலும், அந்நாடுகளின் சமூக வளர்ச்சியில் அவர்களுடைய பங்களிப்பு கணிசமானதாக இருக்கிறது. இந்த அறிக்கையை வெளியிட்டிருப்பவர்கள் உலக வங்கி, சர்வதேசத் தொழிலாளர் ஆணையம் மற்றும் பணக்கார நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டிருக்கும் `OECD’ என்னும் கூட்டமைப்பு.

அகதிகளால் அமெரிக்காவுக்குச் செலவு அதிகமா அல்லது வருமானம் அதிகமா என்பதைக் கண்டறிய ஃப்ரெஞ்சு பல்கலைக்கழகமொன்றில் பணிபுரியும் வில்லியன் இவான்ஸ் என்னும் பொருளாதார ஆய்வாளர் தன் உதவியாளருடன் சேர்ந்து ஓர் ஆய்வைச் சமீபத்தில் நடத்தி முடித்திருக்கிறார். அமெரிக்க அரசின் அதிகாரபூர்வக் கணக்கெடுப்பின் அடிப்படையில் அமெரிக்காவில் குடியேறிய அகதிகளின் விவரங்களை அவர் எடுத்துக்கொண்டார். அதில் 18 முதல் 45 வயது வரையிலான அகதிகளுக்காக அரசு தோராயமாக எவ்வளவு செலவழித்திருக்கிறது என்று கணக்கிட்டார். கடந்த இருபது ஆண்டுகளாக ஓர் அகதியைக் குடியமர்த்த அரசு மேற்கொண்டுள்ள செலவு, சுமார் 15,000 டாலர். அகதி ஒருவருக்கான சமூக நலத் திட்டங்களுக்கு 92,000 டாலர். மொத்தச் செலவு 1,07,000 டாலர். இந்திய ரூபாய் மதிப்பில் ஓர் அகதிக்கு சுமார் 70 லட்சம் ரூபாய் செலவு செய்கிறது அமெரிக்க அரசு. குடியமர்த்தப்பட்ட பிறகு இந்த  அகதிகளால் அமெரிக்காவில் பணியாற்ற முடியும். அந்த வகையில் ஓர் அகதி மூலமாக எவ்வளவு வரி வருவாய் அரசுக்கு அதே இருபது ஆண்டுகளில் கிடைத்திருக்கிறது என்பதைக் கணக்கிட்டார். கிடைத்த தொகை, 1,30,000 டாலர். அதாவது செலவழித்தது போகக் கூடுதலாக இருபதாயிரம் டாலருக்கும் அதிகமான வருவாயை ஓர் அகதியிடம் இருந்து அமெரிக்கா ஈட்டியிருக்கிறது.

நான் அகதி! -7 - அகதிகளால் என்ன லாபம்?

மேலும் பல ஆச்சர்யமூட்டும் தகவல்கள் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளன. முதல் சில ஆண்டுகள் அகதிகளுக்கு வேலை கிடைப்பது கடினமானதாக இருந்திருக்கிறது. அப்படியே கிடைத்தாலும் குறைவான ஊதியமே கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஆறு ஆண்டுகளுக்குப் பிறந்த அதே அகதிகள் மிக நல்ல வருமானத்தை ஈட்ட ஆரம்பித்துள்ளனர். அதே வயதுள்ள அமெரிக்கர்களைக் காட்டிலும் திறமையாகவும் அதிகமாகவும் உழைத்து இந்த அகதிகள் சம்பாதித்திருக்கின்றனர். அரசு வழங்கும் நலத்திட்டங்களால் பயனடைவதையும் அவர்கள் ஒரு கட்டத்துக்கு மேல் நிறுத்திக்கொண்டுவிட்டனர். ஆனால், அதே வயதுகொண்ட அமெரிக்கர்களோ இன்னமும் நலத்திட்டங்களுக்கு அரசின் கையை எதிர்பார்த்துக் காத்துக்கிடந்தனர். இதில் கவனிக்கவேண்டிய விஷயம், ஓர் அகதிக்கும் ஓர் அமெரிக்கருக்கும் சராசரி வருமானம் ஒன்றுபோல் இருப்பதில்லை. ஒரே வேலையைச் செய்தாலும் ஓர் அகதி அமெரிக்கரைக் காட்டிலும் குறைவான வருமானமே பெறுகிறார்.

ஆனால், ட்ரம்ப் இத்தகைய ஆய்வுகளை மட்டுமல்ல, கள யதார்த்தங்களையும்கூட ஏற்பவர் அல்லர்.  அதனால்தான் அவர் பதவியேற்ற நாள் தொடங்கி அமெரிக்கா அனுமதிக்கும் அகதிகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. மிகச் சமீபத்திய கணக்கின்படி, அக்டோபர் 2016 வாக்கில் 9,945 அகதிகளை அமெரிக்கா அனுமதித்தது. ஏப்ரல் 2017-ல் இது 3,316 ஆகக் குறைந்துவிட்டது. டெக்சாஸ், கலிஃபோர்னியா, அரிசோனா என்று ஒவ்வொரு பகுதியும் அகதிகளை அனுமதிப்பதைக் குறைத்துக்கொண்டுவருகிறது.

நான் அகதி! -7 - அகதிகளால் என்ன லாபம்?

அகதிகளை அனுமதிப்பது குறித்த சட்டம் 1980-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டபோது அமெரிக்கா இரண்டு லட்சம் அகதிகளை வரவேற்று ஏற்றுக்கொண்டது. அதற்குப் பிறகு படிப்படியாக இந்த எண்ணிக்கை ஒவ்வோர் ஆண்டும் குறைய ஆரம்பித்தது. அதிகபட்சம் ஓர் ஆண்டுக்கு 76,000 அகதிகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று உச்ச வரம்பு விதித்தார் ஒபாமா. சிரியா சிதற ஆரம்பித்தபோது இந்த எண்ணிக்கையை ஒபாமா 1,10,000 ஆக உயர்த்தினார். ட்ரம்ப்பின் சமீபத்திய உச்சவரம்பு, 45,000. இதுவரை அமெரிக்கா விதித்த உச்ச வரம்பில் மிகக் குறைவானது இதுவே.

அகதிகளைக் குடியமர்த்துவதற்கு அமெரிக்கா மிகப் பெரும் விலையை ஒவ்வோர் ஆண்டும் கொடுத்துவருகிறது என்பதுதான் ட்ரம்ப்பின் வாதம். இந்த வாதத்துக்கு வலுச்சேர்க்கப் புள்ளிவிவரங்கள் தேவை என்று கடந்த மார்ச் மாதம் கேட்டிருந்தார் ட்ரம்ப். HHS அறிக்கை (ஹெல்த் அண்டு ஹியூமன் சர்வீசஸ் துறை) என்னும் பெயரில் அந்தப் புள்ளிவிவரங்கள் ட்ரம்ப்பிடம் ஒப்படைக்கப்பட்டன. ஆனால் ஒரு சிக்கல். அகதிகளுக்காக அமெரிக்க அரசு செய்யும் செலவைவிட அகதிகள்மூலம் அமெரிக்க அரசு அதிகம் சம்பாதிக்கிறது என்னும் உண்மையைப் போட்டுடைத்திருந்தது அந்த அறிக்கை. ஆதாரத்துக்கு விரிவான வரவு, செலவுக் கணக்கும் இருந்தது. செலவு போக, 63 பில்லியன் டாலர் வருமானத்தை அகதிகள்மூலம் அமெரிக்கா ஈட்டியிருக்கிறது. இதன் பொருள், டொனால்ட் ட்ரம்ப் கூறிவருவது பொய் என்பதே.

தடுத்து நிறுத்தியதோடு நில்லாமல் வழக்கமாகக் கூறிவரும் அதே பொய்களைச் சிறிதும் தயக்கமின்றி மீண்டும் சொல்லத் தொடங்கி விட்டார் ட்ரம்ப். அவரைப் பொறுத்தவரை புள்ளிவிவரங்கள் அநாவசியம். அகதிகள் பொருளாதாரச் சுமை என்று அவர் முடிவு செய்துவிட்டார். அந்த முடிவை எதன் பொருட்டும் மாற்றிக்கொள்ளத் தயாராக இல்லை அவர். ட்ரம்ப் மட்டுமல்ல, பலரும் இதே தவறான முன்முடிவுடன்தான் அகதிகளை அணுகிக்கொண்டிருக்கிறார்கள். அகதிகளை மட்டுமல்ல, ஆசியாவிலிருந்தும் பிற நாடுகளிலிருந்தும் முறைப்படி ஆவணங்களுடன் குடியேறுபவர்களைக்கூட ட்ரம்ப் தடுத்து நிறுத்தவே விரும்புகிறார். குடியேறிகளும் அகதிகளும் அமெரிக்கர்களின்  வேலை வாய்ப்புகளை, நலத் திட்டங்களை அபகரித்துக் கொள்கிறார்கள் என்று கூச்சலிடுவதுதான் அவருடைய அரசியலாக இருக்கிறது.

இத்தனைக்கும், அமெரிக்காவின் அடையாளமாக மாறிவிட்ட ஸ்டீவ் ஜாப்ஸ் ஒரு குடியேறியின் மகன் என்பதை அமெரிக்கா அவ்வப்போது ட்ரம்புக்கு நினைவுபடுத்திக் கொண்டுதான் இருக்கிறது. ஸ்டீவ் ஜாப்ஸின் தந்தை படிப்பதற்காக 1950களில் சிரியாவிலிருந்து அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தவர். பெயர், அப்துல் ஃபதா ஜண்டாலி. ‘மிஸ்டர் ட்ரம்ப், ஒருவேளை நீங்கள் அப்போது அதிபராக இருந்திருந்தால் ஸ்டீவ் ஜாப்ஸ் உருவாகியிருக்கமாட்டார்!’ என்கிறது ஒரு ட்வீட். ‘ஸ்டீவ் ஜாப்ஸின் அப்பா சிரியாவிலிருந்து வந்தவர். யாரைத் தடுத்துநிறுத்துவது என்று முடிவு செய்யும்போது கவனமாக இருங்கள்’ என்கிறது ட்ரம்ப்புக்கான இன்னொரு ட்வீட்.

அகதிகளால் லாபமே கிடைக்கும். எனவே கதவைத் திறங்கள் என்று கோருவது ட்ரம்ப் போன்றவர்களுக்கான ஒரு நல்ல பதிலடியாக மட்டுமே இருக்கும். அகதிகளை ஏற்றுக்கொள்வதற்கான தார்மிக நியாயம் என்பது முற்றிலும் வேறு. ஆயிரம் அகதிகளை உள்ளே அனுமதித்தால் பதிலுக்கு அவர்கள் எனக்கு என்ன தருவார்கள் என்னும் கேள்வியைக் கடந்துசென்றால் இந்த நியாயத்தை தரிசிக்க முடியும் என்கிறார், அமெரிக்காவிலுள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பொருளாதார நிபுணரான ஜெஃப்ரி சாக்ஸ்.

அகதிகள் என்பவர்கள் பிரச்னைக்குரிய இடங்களிலிருந்து தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காகத் தப்பியோடி வருபவர்கள். இந்த எளிய உண்மையை நாம் ஒருபோதும் மறக்கக்கூடாது. அவர்களைக் காப்பாற்றவேண்டியது நம் கடமை. சக மனிதர்கள் செத்து விழுந்தால் பரவாயில்லை, எனக்கு என் நாடும் என் மக்களும் மட்டும்தான் முக்கியம் என்று பொறுப்புள்ள ஓர் அரசாங்கம் சொல்லாது. மனிதர்களை அழிவிலிருந்து மீட்டு அவர்களுக்கு வாழ்வளிப்பது அரசாங்கங்களின் கடமை. உன் நாடு போரிட்டால் அதற்கு நான் என்ன செய்வது என்று சொல்லி அகதிகளைத் திருப்பியனுப்புவது அநீதியான செயல். அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரான ஒரு நடவடிக்கையும்கூட.

இருந்தும் அரசாங்கங்கள் இதைத்தான் உலகெங்கும் செய்துகொண்டிருக்கின்றன. அகதிகளை ஏற்கவேண்டுமா, வேண்டாமா என்பதை சம்பந்தப்பட்ட நாடுதான் முடிவு செய்கிறது. விருப்பமிருந்தால் கதவைத் திறக்கிறது. பிடிக்கவில்லையென்றால் விரட்டுகிறது. ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான சட்டம். `இந்த ஆண்டு இத்தனை அகதிகளை மட்டுமே ஏற்பேன்’ என்று ஒரு நாடு உச்ச வரம்பு விதிக்கலாம். அல்லது, `ஒரேயொரு அகதியைக்கூட ஏற்க மாட்டேன்’ என்று எல்லையில் பூட்டுப் போடலாம். மீறி உள்ளே வரத் துடிப்பவர்களைக் கைது செய்து சிறையில் தள்ளுவதற்கும் அந்நாட்டுக்கு உரிமை இருக்கிறது. அகதிகளை ஏற்க மறுப்பதற்குக் காரணங்களைச் சொல்லவேண்டும் என்ற அவசியம்கூட இல்லை. நாம் எல்லோருமே ஒருவரோடு ஒருவர் இணைக்கப்பட்டுள்ளோம் என்பதை நினைவுடுத்தவேண்டியிருக்கிறது என்கிறார் ஜெஃப்ரி சாக்ஸ். எபோலா பிரச்னையாக இருந்தாலும் சரி, புவி சூடேற்றமாக இருந்தாலும் சரி; எல்லோரும் ஒன்றுபட்டுதான் தீர்வு காணவேண்டியிருக்கிறது. பிரச்னைகளுக்கு எல்லைகள் கிடையாது. தீர்வுகள் காணவேண்டுமானால் எல்லைகளை நாம் கடந்தாக வேண்டும்.

நான் அகதி! -7 - அகதிகளால் என்ன லாபம்?

2005-ம் ஆண்டு ஷரீஃபா டா என்னும் பர்மியப் பெண் தன் குடும்பத்தினருடன் 9000 மைல் பயணம் செய்து அமெரிக்காவில் அகதியாகக் குடியேறினார். `‘நான் தற்சமயம் டெக்சாஸில் தங்கியிருக்கிறேன். நானும் என் கணவரும் எங்களுடைய மூன்று குழந்தைகளுடன் அகதிகளாக இங்கே வந்துசேர்ந்தோம். அமெரிக்காவில், எங்கள் வாழ்நாளிலேயே முதல்முறையாகப்  பாதுகாப்பாக உணர்ந்தோம்.’’

வன்முறையிலும் போரிலும் சிக்கிச் சீரழியும் குடும்பங்களுக்கு ஒரு நாடு அளிக்கும் அதிகபட்ச உதவி இதுவே. அகதிகள் கப்பலின் ஓட்டைகள் அல்ல. அவர்களைச் சேர்த்து அணைத்துக்கொண்டு செலுத்தும்போது கப்பல் மேலதிக வேகத்துடன் பயணம் செய்கிறது. மூழ்கட்டும் நமக்கென்ன என்று கருதுபவர்கள்தான் ஆபத்தான ஓட்டைகள். அவர்கள் செலுத்தும் கப்பல் நிறைய தள்ளாட்டங்களைச் சந்திக்க நேரிடும்.

ஷரீஃபா டா தொடர்கிறார், ‘`அதிபர் தேர்தல் பிரசாரத்தில் டொனால்ட் ட்ரம்ப் குதித்தபோது என்னுடைய பாதுகாப்பு உணர்வு அகன்று முதல்முறையாக நான் அச்சப்பட ஆரம்பித்தேன். இப்போது ட்ரம்ப் அதிபராகிவிட்டார். அமெரிக்கா எனக்கு இதுவரை அளித்துவந்த பாதுகாப்பு உணர்வு விலகிச் சென்றுவிட்டது போல் இருக்கிறது. ட்ரம்ப் வெறுப்பையும் அச்சத்தையும் விதைத்து ஆண்டு கொண்டிருக்கிறார். அக்கம்பக்கத்தினரும் அவரைப் பின்பற்ற ஆரம்பித்துவிடுவார்களோ என்று அஞ்சுகிறேன். அப்படி நடந்தால் என் குடும்பத்தின் நலன் பாதிக்கப்படும் என்று எனக்குத் தெரியும்.’’

`கவலைப்படாதீர்கள் அம்மா, அப்படியெல்லாம் நடக்காது, நாங்கள் இருக்கிறோம்’ என்று, ஷரீஃபா டாவின் நடுங்கும் கரங்களைப் பற்றி யார் ஆறுதல் அளிக்கப்போகிறார்கள்?

- சொந்தங்கள் வருவார்கள்