
வால்டர் ஒயிட்
17 ஆண்டுக்கால பாக்ஸிங் வாழ்க்கையில் மேரிகோமிடம் ஒரு வாக்கியம் இப்போதும் திரும்பத்திரும்பச் சொல்லப்படுகிறது.
“மேரி, இனிமே உன்னால ஜெயிக்க முடியாது!”
ஆனால், ஒவ்வொரு முறையும் எதிராளியின் குத்துகளைப்போல அதை அச்சமின்றி எதிர்கொள்கிறார். தன்னுடைய சாதனைகளால் மட்டும்தான் அந்தக் குரல்களுக்குப் பதில் சொல்கிறார் மேரிகோம். ஒப்பீட்டளவில் மேரிகோம் பாக்ஸிங் ரிங்கில் எதிர்கொண்ட சவால்கள் மிகவும் குறைவுதான்! கைகளில் கிளவுஸ் போட்ட நாள் தொடங்கி சமூகத்தில் எதிர்கொண்ட போராட்டங்கள்தான் அதிகம்.
பின்தங்கிய ஒரு மாநிலத்திலிருந்து சாதாரணக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து, கிரிக்கெட் அல்லாத ஒரு விளையாட்டைத் தேர்ந்தெடுத்து அதில் எட்டவே முடியாத சாதனைகளைச் செய்துகாட்டிய வீரசாகசக் கதை மேரியினுடையது.

அப்பாவுக்குத் தெரியாமல் பயிற்சி மேற்கொண்ட போது, திருமணம் செய்துகொண்ட போது, பிள்ளைகள் பெற்றுக்கொண்ட போது, வயது ஏற ஏற முதுமையை எட்டிப்பிடிக்கும் உடலோடு போராடியபோது எனத் தன் வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் அவர்மீது அவநம்பிக்கைமட்டும்தான் நிழல்போலத் துரத்தியது.
2012 ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற மேரிகோமிடம் அதற்குப்பிறகு, எப்படியும் 2000 முறையாவது ``எப்போது ஓய்வை அறிவிக்கப்போறீங்க?” என்கிற கேள்வியைக் கேட்டிருப்பார்கள். ஒவ்வொரு பிரஸ்மீட்டிலும் தவறாமல் இடம்பெறுகிற கேள்வி அது. ஒவ்வொரு முறையும் அதற்குச் சிரித்துக்கொண்டே இப்போதைக்கு இல்லை என்று விடாப்பிடியாகச் சொல்லிக்கொண்டே இருக்கிறார். இதோ இப்போது ஆசியப்போட்டிகளுக்குப் பிறகும் அதே கேள்வி... அதே புன்னகை. இங்கே இப்படித்தான் நம்முடைய விளையாட்டுத்துறை இயங்குகிறது. குறிப்பாக, பெண்களுக்கான விளையாட்டு வாழ்க்கை மிக மிக விரைவிலேயே முடியக்கூடிய ஒன்றாகத்தான் கருதப்படுகிறது. ஆனால், இந்தியாவின் `முகமது அலி’ அத்தனை எளிதில் நாக் அவுட் ஆகிற ஆள் கிடையாதே!
சரிவைச் சந்திக்கும்போதெல்லாம் இரண்டு மடங்குப் பயிற்சியும் முயற்சியுமாக இன்னும் அதிக வெற்றிகளோடு விஸ்வரூபமெடுத்து வளர்ந்தார். இதோ இப்போதும்... கடந்த ஒலிம்பிக் போட்டிக்குப்பிறகு மேரிகோமின் பாக்ஸிங் வாழ்க்கை முடிந்துவிட்டதாக எல்லோருமே நினைத்துக்கொண்டிருக்க, ஆசிய பாக்ஸிங் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்று இந்தியாவைத் தலைநிமிரச் செய்திருக்கிறார்.
ஆசியப்போட்டியில் மேரி வெல்லும் ஐந்தாவது பதக்கம் இது. முந்தைய பதக்கங்களைப் போல அல்ல இது. அது வெறும் பதக்கம் மட்டுமே அல்ல... ``வயசு ஆகிடுச்சு ஆன்ட்டி, நீங்க ஓய்வெடுங்க” என்று கேலி செய்தவர்களுக்கான பதிலும்தான்!
ஆசியப்போட்டிகள் எப்போதுமே மேரிகோமிற்கு ரொம்பவே ஸ்பெஷலானது. காரணம், மேரிகோமின் பாக்ஸிங் வாழ்வு தொடங்கியது அங்கிருந்துதான்!

சிறுமியாக ஜாவலின் த்ரோவிலும் இன்னபிற தடகள விளையாட்டுகளிலும் ஈடுபட்டிருந்த மேரியை பாக்ஸிங் பக்கம் இழுத்துவந்தது 1998-ல் நடந்த ஆசிய பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டிகள்தான். அந்தப்போட்டியில் மணிப்பூரைச் சேர்ந்த டின்கோ சிங் தங்கம் வென்று ஊர் திரும்பியிருந்தார். அவருக்கு ஊரில் கிடைத்த வரவேற்பு மேரிகோமுக்குச் சிலிர்ப்பூட்டியது. தனக்கும் அப்படி ஒரு வரவேற்பு கிடைக்கவேண்டும் என்று கனவு கண்டார். அதே ஆசியப்போட்டிகளில் இதோ இப்போதுவரை ஐந்து தங்கப்பதக்கங்களை வென்றுவிட்டார். இன்று இந்தியாவே மேரியைக் கொண்டாடுகிறது. ஆனால், இந்த ஐந்தாவது பதக்கம்கூட அவருக்குச் சுலபத்தில் கிடைத்துவிடவில்லை.
2012க்கு முன்புவரை 48 கிலோ எடைப் பிரிவில் விளையாடிக்கொண்டிருந்தவர், ஒலிம்பிக் போட்டிகளுக்காக எடைப்பிரிவை மாற்றிக்கொள்ள வேண்டியிருந்தது. அது அவருடைய பாக்ஸிங் வாழ்க்கையில் பெரிய சரிவை உண்டாக்கிய தொடக்கப்புள்ளி. ஒலிம்பிக் தங்கக்கனவுகூடத் தவறிப்போனது. 2014 ஆசியப்போட்டிகளுக்குப் பிறகு அவர் தொடர்ச்சியாகத் தோல்விகளையே சந்தித்தார். எடை கூடியதால் காயங்களும் தொடர்ச்சியாக விரட்டின.


கடந்த ஜூலையில் கிட்டத்தட்ட ஓராண்டுக்குப் பிறகு சர்வதேசப் போட்டி ஒன்றில் கலந்துகொண்டார் மேரிகோம். மங்கோலியாவில் நடந்த உலான் பத்தார் கோப்பைப் போட்டி அது. முதல் போட்டியிலேயே அவருக்கு முதுகில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. அது எதிரணி வீராங்கனை கொடுத்த குத்துகளாலோ தீவிரப் பயிற்சியினாலோ வந்தது அல்ல, பல மணிநேரம் தொடர்ச்சியாக அமர்ந்திருந்ததால் வந்தது. மேரிகோமிற்கு வயதாகிறது!
மேரிகோமிற்கு வயது 34 ஆகிவிட்டது. 17 ஆண்டுக்காலத் தொடர்ச்சியான ஓய்வே இல்லாத பயிற்சிகள் அவருடைய உடலை வாட்டி வதைத்திருக்கின்றன. அதன் பின்விளைவுகள் இப்போதுதான் தெரிய ஆரம்பித்திருக்கின்றன. இத்தனை நாளும் தன்னைச் சுற்றி இருந்தவர்களோடு எப்படிப் போராடினாரோ அப்படியே இப்போதும் தன் உடலோடு போராடுகிறார் மேரிகோம். இந்த அசாம்பாவிதமான சம்பவத்திற்குப் பிறகு மீண்டும் அவநம்பிக்கையின் நிழல் மேரியின் மீது படரத்தொடங்கியது. மேரிகோம் மீண்டும் பாக்ஸிங் ரிங்கில் கால் வைப்பது சாத்தியமா என்றெல்லாம் கேட்கத் தொடங்கினர். ஆனால், மேரிகோம் திரும்பி வந்தார். ஆசியப்போட்டிகளுக்கான தேர்வுகளில் கலந்துகொண்டார். முன்பைவிட அவர் ஃபிட்டாக இருந்தார்.
அணித் தேர்வுக்கான ட்ரையல்ஸில் மேரிகோம் தன்னைவிட உடல் அளவில் வலுவான இளமைத் துடிப்புள்ள ஆறு இந்திய வீராங்கனைகளோடு மோதினார். மேரி எதிர்கொண்ட பெண்களுடைய சராசரி வயது இருபத்தைந்துகூட இல்லை. கடந்த ஆண்டுகளில் மேரிகோமின் குத்துகிற ஆற்றலும் வேகமும்கூடக் குறைந்துவிட்டதாக வல்லுநர்கள் குற்றஞ்சாட்டத் தொடங்கியிருந்தனர். இந்த ஆறுபேரில் சர்ஜூபாலா தேவியும் ஒருவர். உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப்பதக்கம் வென்ற இளம் பாக்ஸிங் வீராங்கனை சர்ஜூபாலா. மேரி கோம் ட்ரையல்ஸிலேயே வெளியேறிவிடுவார் என்றுதான் எல்லோருமே நினைத்தனர். ரியோ ஒலிம்பிக்கில் நிஜமாகவே அதுதான் நடந்தது. மேரிகோமின் விளையாட்டு வாழ்க்கை அத்தோடு முடிந்துவிட்டதாகத்தான் நினைத்தனர். ஆனால், அவர் ஆசியப்போட்டிக்கான ட்ரையல்ஸில் ஆறுபேரையும் வீழ்த்தினார்.
அவருடைய வேகமும் டெக்னிக்கும் முன்பு எப்போதையும்விட அதிகமான முன்னேற்றத்தை வெளிப்படுத்தியது. எல்லோருமே மலைத்துப்போனார்கள். குறிப்பாக, வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த நாளைய இந்தியாவின் சாம்பியன் பாக்ஸர்கள். மீண்டும் தன்னுடைய 48 கிலோ எடைப்பிரிவில் போட்டியிட ஆசியப்போட்டிகளில் களம்கண்டார்!

ட்ரையல்ஸில் தொடங்கிய வெற்றிப்பயணம் ஆசியப்போட்டியிலும் தொடர்ந்தது. அடுத்தடுத்த போட்டிகளில் சிரமமே இல்லாமல் அவர் வென்றார். இறுதிப்போட்டியில் வடகொரியாவின் க்யாங் மி கிம்மை 5-0 என்ற கணக்கில் தோற்கடித்துத் தங்கம் வென்றார்!
மேரிகோமின் தாக்கம் பாக்ஸிங் ரிங்கினைத் தாண்டியும் படரக்கூடியது. மேரியின் ஒவ்வொரு வெற்றியும் இந்தியாவின் ஏதோ ஒரு மூலையில் இருக்கிற ஒடுக்கப்பட்ட ஒவ்வொரு பெண்ணுக்குமான நம்பிக்கையாகத்தான் இருந்திருக்கிறது. மேரியின் பாதையில் பாக்ஸிங்கைத் தேர்ந்தெடுத்த பெண்கள் இங்கே ஏராளம். சவால்களைக் கண்டு ஒதுங்கிவிடாத மனமும் கொண்டவர் மேரி. அதனால்தான் குத்துச்சண்டை போடுகிற பெண்களுக்கு மட்டுமல்லாமல், வாழ்க்கையின் சவால்களோடு ஒவ்வொரு நாளும் போராடுகிற ஒவ்வொரு பெண்ணுக்குமான முன்னுதாரணமாக இருக்கிறார்.
வெற்றி என்பது வெறும் பதக்கங்கள் மட்டுமன்று, வீழும்போதெல்லாம் எழுந்து நிற்கிற மனதில்தான் அது இருக்கிறது. மேரிகோமின் அத்தகைய மனம்தான் அவரைத் தனித்துவம் மிக்கவராக மாற்றியிருக்கிறது.