Published:Updated:

“அப்பா இனி நீங்க என்னை பட்டர்ஃப்ளைன்னு கூப்பிடலாம்!”

“அப்பா இனி நீங்க என்னை பட்டர்ஃப்ளைன்னு கூப்பிடலாம்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“அப்பா இனி நீங்க என்னை பட்டர்ஃப்ளைன்னு கூப்பிடலாம்!”

ரமணி மோகனகிருஷ்ணன்

``உலகத்துல இருக்கிற எல்லாக் கஷ்டமும் நமக்கு மட்டுமே வருதே’’ எனப் புலம்புவர்கள்தான் நாம். ஆனால், பக்கத்தில் இருக்கும் ஒருவர் அவருடைய பிரச்னைகளைச்  சொல்ல ஆரம்பிக்கும்போதுதான், எல்லோருமே பிரச்னையோடுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது புரியும்.

ஆம். உலகமே `சர்வைவா’தான். இங்கு எல்லோருமே சர்வைவர்கள் என்பது மற்றவர்கள் தங்களின் கதையைச் சொல்லும்போதுதான் நமக்குப் புரிகிறது. அதுவே நமக்கு ஆறுதலையும், எழுந்து ஓடவைக்கும் ஆற்றலையும், வாழ்வின் மீதான நம்பிக்கையையும் கொடுக்கிறது. இதை அடிப்படையாக வைத்து உலகமெங்கும் உள்ள நகரங்களில் உருவாகிவருவதுதான் `ஹியூமன்ஸ் ஆஃப்’ என்கிற ஐடியா.

“அப்பா இனி நீங்க என்னை பட்டர்ஃப்ளைன்னு கூப்பிடலாம்!”

2010-ல் ப்ராண்டன் ஸ்டன்டன்ட் என்கிற புகைப்படக் கலைஞர் நியூயார்க் நகரில் வாழும் மக்களுடைய வாழ்க்கையை 10,000 புகைப்படங்களின் மூலம் வரைபடம் போல  உருவாக்க நினைத்தார். ‘ஹியூமன்ஸ் ஆஃப் நியூயார்க்’ என்கிற வலைப்பூவைத் தொடங்கி அவர் சந்தித்த, புகைப்படம் எடுத்த நபர்களின் வாழ்க்கை குறித்துப் பதிவு செய்யத்தொடங்கினார். இன்றைக்கு ‘ஹியூமன்ஸ் ஆஃப் நியூயார்க்’ பக்கத்திற்குக் கிட்டத்தட்ட 2 கோடி லைக்குகள். வெளி நாடுகளிலிருந்து குடிபெயர்ந்தும், அகதியாகவும் வந்து வசிக்கும் மக்களுடைய வாழ்க்கையைப் பதிவு செய்ததில் இந்தப் பக்கத்தின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. தீவிரமான பாதிப்புக்கு உள்ளான சிலருடைய பிரச்னைகளை முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் கவனத்திற்குக் கொண்டு சென்றதுவரை, இந்தப் பக்கத்தின் செல்வாக்கு நம்ப முடியாத அளவிற்கு வளர்ந்தது.

இந்தியாவிலும் பல்வேறு ‘ஹியூமன்ஸ் ஆஃப்’ பக்கங்கள் இருந்தாலும், ஆக்டிவாக இருப்பது ‘ஹியூமன்ஸ் ஆஃப் பாம்பே’ பக்கம்தான்.

“அப்பா இனி நீங்க என்னை பட்டர்ஃப்ளைன்னு கூப்பிடலாம்!”

``என் அப்பா, என் அம்மா மேல ஆசிட் ஊத்தினப்போ நான் அவங்க மடில உக்காந்துட்டிருந்தேன். ஆசிட் ஊத்தினதால எங்கம்மா இறந்துட்டாங்க. என் மேலயும் அந்த ஆசிட் விழுந்தது. இந்தக் கதைகூட எனக்கா நியாபகம் இல்ல. எனக்கு மருத்துவம் பாக்குற மருத்துவர் சொல்லித்தான் தெரியும். எனக்கு இப்படி ஆனதும், என்னோட உறவினர்கள் எல்லோரும் கைவிட்டுட்டாங்க. என்னோட அப்பா ஊரை விட்டே ஓடிப்போயிட்டார். நான் ஒரு அனாதை ஆசிரமத்துலதான் வளர்ந்தேன். அங்க நான் பெருசா கஷ்டம்லாம் படல. என் மேல அன்பு செலுத்த அவ்வளவு பேர் இருந்தாங்க. அவ்வளவு மகிழ்ச்சியா அங்க இருந்தேன். ஆனா, இதெல்லாம் நான் கல்லூரி படிக்குற வரைதான். கல்லூரில முதல்ல சேரும்போது என்கிட்ட யாருமே பேசல. தனியாவேதான் உக்காந்திருப்பேன். ஆனா, இந்த மும்பை நகரத்துல எனக்கு நிறைய நல்ல நண்பர்கள் கிடைச்சாங்க.

இதுல ஒரு நகைச்சுவையான அனுபவம்கூட இருக்கு. ஒரு முறை நண்பர்கள் ஒரே வீட்டுல தங்கினோம். ஆசிட் வீச்சில என் கண்ணு பாதிக்கப்பட்டதால நான் தூங்கினாக்கூடத் தெரியாது. நான் தூங்குறது தெரியாம என் நண்பர்கள் என்கிட்ட பேசிக்கிட்டே இருந்திருக்காங்க.

“அப்பா இனி நீங்க என்னை பட்டர்ஃப்ளைன்னு கூப்பிடலாம்!”

எல்லோரும் நான் என் அப்பாவை வெறுக்கி றேனான்னு கேப்பாங்க. ஆனா இல்ல. என்னோட மனசுல வெறுப்புக்கான இடமே இல்ல. நான் வெறுக்குற ஒரே விஷயம், என்னை எல்லோரும் இன்னும் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணாவே பாக்குறாங்க. நான் பாதிக்கப்பட்ட பெண்ணெல்லாம் இல்ல. நான் எல்லோரையும் மாதிரி ஒரு பொண்ணு அவ்வளவுதான். அதையும் தாண்டிய நிறைய அடையாளங்களை எனக்கு உருவாக்க நினைக்கிறேன்” இப்படிச் சிரித்துக்கொண்டே சொல்லும் ஷாபுவின் வாழ்க்கை அவ்வளவு இன்ஸ்பயரிங்!

“நான் ஒரு குடிசைப்பகுதியில்தான் வளர்ந்தேன். அப்பா சரியில்ல. அம்மாதான் வேலைக்குப் போய் என்னைப் பாத்துக்கிட்டாங்க. அம்மா கடுமையான உழைப்பாளி. நேரம் காலம் பாக்காம உழைக்கக்கூடியவங்க. ஆனா, அவங்க ரொம்ப நேரம் கழிச்சி வீட்டுக்கு வர்றதப் பாத்து நெறைய பேர் அம்மாவைத் தப்பா பேசினாங்க. இந்தப் பேச்சுகள் எல்லாமே என் அம்மா மேல நான் வெச்சிருந்த மரியாதையை இன்னும் அதிகப்படுத்தவே செஞ்சது. அம்மாவுடைய சுமையைக் குறைக்க படிப்ப விட்டுட்டு 16 வயசுலயே ஒரு ஆபீஸ் பாயா என்னோட வேலையை ஆரம்பிச்சேன். ரொம்பக் கடுமையா உழைச்சேன். ஆபீஸ்ல முதல் ஆளா நுழைஞ்சு கடைசி ஆளா வெளியே வருவேன். என்னோட உழைப்புனால விற்பனைத்துறைல வேலை கிடைச்சது. அதன் பிறகு ஒரு விளம்பர நிறுவனத்துல  வேலைக்குச் சேர்ந்தேன். அங்க தான் என் வாழ்க்கையே தொடங்குச்சு. நான் ஒவ்வொரு நாளும் ட்ரெய்ன்லதான் அலுவலகம் போவேன். அப்படிப் போகும்போது, கூட்ட நெரிசலில் பெண்கள்மீது நிறைய பாலியல் அத்துமீறல்கள் நடக்கும்.  இது என்னை ரொம்பவும் பாதிச்சது. வேலைக்குப் போற என் அம்மாவுக்கும் இதேதானே நடக்கும்னு யோசிப்ப என்னால தூங்க முடியல.

நானும் என் நண்பரும் சேர்ந்து இது பத்தி ஆராய்ஞ்சப்போ கிட்டத்தட்ட 85 சதவிகித பெண்கள் பாலியல் சீண்டல்களுக்கு ட்ரையின்ல  ஆளாகுறது தெரிஞ்சது. அதனால ஸ்பை கேமரா இருக்குற கண்ணாடி வாங்கி, அதை வெச்சு பாலியல் சீண்டல்களைப் படம் பிடிச்சு காவல்துறைகிட்ட காமிச்சோம். பிறகு 40 காவல்துறையினர் எங்களோட கைகோத்தாங்க. நாங்க இணைஞ்சு இதுவரை, பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 140 பேரைச் சிறையில் அடைச்சிருக்கோம். பெண்களை மதிக்குற இந்தப் பழக்கம் என் அம்மாகிட்ட இருந்துதான் எனக்கு வந்தது” இது இன்னொரு தங்க மகனின் வாழ்க்கை.

“அப்பா இனி நீங்க என்னை பட்டர்ஃப்ளைன்னு கூப்பிடலாம்!”

“நான் பிறந்தது, வளர்ந்தது, வாழ்றது எல்லாமே குடிசை வீட்டுக்குள்ளதான். ஒரு பிடிப்பே இல்லாமல் சும்மாவே சுற்றிக்கொண்டிருந்த என் வாழ்க்கை, என் மகள் பிறந்த உடனேயே மாறிப்போனது. என்னோட மகளுக்காக நான்  நிறைய உழைக்கணும்னு முடிவு செஞ்சேன். அவளுக்கு நல்ல கல்வியைக் கொடுக்கணும்னு ஆசைப்பட்டேன். அவளை நான் டிட்லினு தான் கூப்புடுவேன். என்னோட வாழ்க்கையின் ஆகச்சிறந்த நாள் எது தெரியுமா? ஒரு நாள் என் பொண்ணு, ‘அப்பா, இனி நீங்க என்னை பட்டர்ஃப்ளைன்னு கூப்பிடலாம். டிட்லின்னா இங்கிலீஷ்ல பட்டர்ஃப்ளைன்னு அர்த்தமாம். இன்னைக்கு என்னோட வகுப்புல கத்துக்கிட்டேன்’ ன்னு சொன்னதுதான்!” என்கிறார் ஆசியாவின் மிகப்பெரிய சேரிப்பகுதியான தாராவியில் வாழும் ஒரு தெய்வத்திருமகளின் தந்தை.

“அப்பா இனி நீங்க என்னை பட்டர்ஃப்ளைன்னு கூப்பிடலாம்!”
“அப்பா இனி நீங்க என்னை பட்டர்ஃப்ளைன்னு கூப்பிடலாம்!”

“டாடா இன்ஸ்டிட்யூட்ல பல வருஷமா வேலை பார்த்து ரிட்டையர் ஆகிட்டேன். நானும் என் சகோதரரும் இணைபிரியாத தோழர்கள். அதே மாதிரி இணைபிரியாத சகோதரிகளைத் திருமணம் செஞ்சிகிட்டோம். இப்போ என் பையன் இங்கிலாந்துல வேலை பாக்குறான். அதுனால நானும் என் மனைவியும் அடிக்கடி அவனைப் போய்ப் பாப்போம். நிறைய பயணம் பண்ணுவோம். சின்ன வயசுல இருந்து போட்டோகிராபி ரொம்பப் பிடிக்கும். இப்போ கொஞ்சம் படங்கள் எடுக்க ஆரம்பிச்சிருக்கேன். எனக்கும் என் மனைவிக்கும் ஏதாவது புதுசா கத்துக்கிட்டே இருக்கணும். ஒரு நாள் திடீர்ன்னு ஏதாவது மொழி கத்துக்கலாம்னு தோணிச்சு. உடனே ஆன்லைன்ல அப்ளை செஞ்சு நாங்களே சேர்ந்துட்டோம். கல்லூரில மொதல்ல பசங்க என்னை வாத்தியார்னு நெனச்சாங்க. ஆனா, இப்போ நாங்க எல்லாம் நண்பர்கள் ஆகிட்டோம். உங்க வாழ்க்கைய இளமையா வச்சிக்க எப்போவும் ஏதாவது ஒண்ண புதுசா கத்துக்கிட்டே இருங்க!” இது ஹியூமன்ஸ் ஆஃப் பாம்பே பக்கத்தில், 75 வயது நிரம்பிய முதியவர் ஒருவரின் அட்வைஸ்.

“அப்பா இனி நீங்க என்னை பட்டர்ஃப்ளைன்னு கூப்பிடலாம்!”

இப்படிக் கலவையான வாழ்க்கைமுறையை, அவர்களுடைய கதையை நம்முடைய கைப்பேசியில் இருநூறு வார்த்தைகளில் சொல்கிறது ‘ஹியூமன்ஸ் ஆஃப் மும்பை’ பக்கம். உலகின் மூன்றாவது மிகப்பெரிய குடிசைப் பகுதி, உலகின் மிக முக்கியமான பிசினஸ் நகரம் என்று வெவ்வேறான இரண்டு வாழ்க்கையைக் கொண்ட மும்பை மக்களின் வாழ்க்கை இயல்பிலேயே ஈர்க்கக்கூடியதாக இருக்கிறது.

இந்த ‘ஹியூமன்ஸ் ஆஃப்’ பக்கங்கள் அனைத்துமே பெரும்பாலும் மெட்ரோ  நகரங்களில்தான் இயங்குகின்றன. இவற்றில் வரும் கதைகள் நகரமயமாதல், உலகமயமாக்கல் மக்களை எப்படி ஏதிலிகளாய் அலைய வைக்கிறது என்பதை உண்மைகளுடன் சொல்கிறது. 

முகவரி இல்லா எளிய மனிதர்களின் வாழ்க்கையை இந்த உலகத்துக்குச் சொல்வதில்தான் இந்தப் பக்கங்கள் வெற்றியடைகின்றன.