Published:Updated:

புதிய மனிதா

புதிய மனிதா
பிரீமியம் ஸ்டோரி
News
புதிய மனிதா

கார்க்கிபவா

புதிய மனிதா

ஒரு செய்தி

ன்னும் சில ஆண்டுகள்தான். அலுவலகத்தில் உங்கள் பக்கத்து சீட்டில் ரோபோ அமர்ந்து வேலை செய்யும். அதற்காக `வா மச்சி... ஒரு காபி சாப்ட்டு வருவோம்’ என்றெல்லாம் கூப்பிட முடியாது. வேண்டுமென்றால், `சார்ஜ் போட்டுக்கிறியா?’ என்று கேட்கலாம். வழக்கம்போல், எதிர்காலத்தில் இப்படி நடக்கலாம் எனச் சொல்லப்படும் யூகம் அல்ல. ரோபோக்கள் மனிதர்களின் வேலையை எடுத்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டன. அமெரிக்காவில் ஷாப்பிங் மால்களின் பார்க்கிங் ஏரியாவில் செக்யூரிட்டிகளைப் பார்க்க முடியாது. எல்லாம் ரோபோக்கள்தான். இன்னும் உங்களுக்கு நம்பிக்கை வரவில்லையா? வாங்க சவுதிக்குப் போகலாம்.

சவுதி அரசு, சோஃபியா என்ற பெண் (?) ரோபோவுக்குக் குடியுரிமை வழங்கியிருக்கிறது. ஆம். இப்போது அந்த சோஃபியா சவுதிக் குடிமகள். பாஸ்போர்ட் உண்டு. ஒரு நாட்டின் குடியுரிமை பெற்ற உலகின் முதல் ரோபோ சோஃபியாதான். முதல் பிரஸ்மீட்டையும் சோஃபியாதான் தந்திருக்கிறது.

புதிய மனிதா

“ஹாய்... நான்தான் சோஃபியா” எனத் தொடங்க, அடுத்தடுத்த கேள்விகள் வந்தன.

“ஏன் நீ சந்தோஷமாக இருக்கிறாய்” என ஒருவர் கேட்க, “என்னைச் சுற்றி நிறைய ஸ்மார்ட் மனிதர்கள் இருக்கிறார்கள். இவர்கள் எதிர்காலத்துக்கான விஷயங்களில் ஆர்வம் காட்டுகிறார்கள். எதிர்காலம் செயற்கை நுண்ணறிவுக்கானது. அது நான்தான். அதனால்தான் நான் சந்தோஷமாக இருக்கிறேன்” என்றது.

செயற்கை நுண்ணறிவால் மக்களுக்கு எதிர்காலத்தில் ஆபத்து வருமாமே என்றதும், சோஃபியா சொன்ன பதில்தான் ஹைலைட். “நீங்கள் எலான் மஸ்க் சொல்வதையும், ஹாலிவுட் படங்களையும் நிறைய பார்க்கிறீர்கள்” எனக் கிண்டலடித்தது சோஃபியா.

ஒரு வைரல்

மெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் ட்விட்டர் கணக்கு சில மணி நேரம் முடங்கிப்போனது. “யார் பார்த்த வேலைடா இது” என ட்விட்டர்வாசிகள் சந்தோஷத்தில் துள்ள... “எங்க ஆள் செஞ்சதுதான் பாஸ்” எனக் கண்ணைக் கசக்கியிருக்கிறது ட்விட்டர்.

புதிய மனிதா

நடந்தது இதுதான். அந்த ஊழியருக்கு அன்றுதான் ட்விட்டரில் கடைசி நாள். வேலையை விட்டுவிட்டார். போகும்போது `நாட்டுக்கொரு நல்லவன்’ ஆகலாமே என நினைத்து, ட்ரம்ப்பின் கணக்குக்கு மூடுவிழா நடத்தியிருக்கிறார். சுதாரித்த ட்விட்டர், சில மணி நேரத்தில் கணக்கை மீட்டுவிட்டது.

“உங்க கம்பெனில ஒருத்தனுக்குத்தான் அறிவிருந்தது. அவனையும் அனுப்பியாச்சா?” என ட்விட்டரைக் கலாய்த்துத் தள்ளிவிட்டனர் இணையவாசிகள்.

புதிய மனிதா

ஒரு பன்ச்

“செயற்கை நுண்ணறிவில் யார் பெரிய கையோ, அவர்கள்தாம் இனி உலகை ஆள்வார்கள்”

- விளாடிமிர் புதின், அதிபர்- ரஷ்யா

ஒரு கேட்ஜெட்

``அலுவலக நேரத்தில் டெலிவரி செய்தால் நான் எப்படி வாங்க முடியும்” என யாரோ   அமேசான் பக்கத்தில் கருத்துச் சொல்லிவிட, அவருக்காக ஒரு புதிய கேட்ஜெட்டையே கொண்டு வந்திருக்கிறார் ஜெஃப் பசாஸ். இதன் பெயர் அமேசான் கீ.

புதிய மனிதா

இதில் கிளவுட் கேமரா ஒன்றும் ஸ்மார்ட் லாக் ஒன்றும் இருக்கும். வீட்டிலிருக்கும் வைஃபை வழியாக இந்த கேமரா இணையத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். இந்தக் கேமராவும், ஸ்மார்ட்லாக்கும் ZIGBEE என வயர்லெஸ் புரோட்டோகால் வழியாகத் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும். ஸ்மார்ட்லாக்கை வீட்டின் மெயின் டோரில் பொருத்திவிட வேண்டும்.

புதிய மனிதா

இப்போது அமேசானில் ஆர்டர் செய்யும்போதே In-Home delivery ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆர்டர் தயாராகி வீட்டுக்கு வந்தவுடன், கூரியர் பாய் பார்கோடை ஸ்கேன் செய்வார். உடனே, கிளவுட் கேமராவுக்கு இந்தத் தகவல் போகும். கேமரா தகவல்களைச் சரிபார்த்துவிட்டு, ரெக்கார்டிங்கைத் தொடங்கும். அதன்பின், ஸ்மார்ட்லாக்குக்கு “கதவைத் திற” என்ற கட்டளை கிளவுட் வழியாகப் போகும். அதே சமயம் கூரியர் பாய்க்கும் இந்தத் தகவல் ஆப் வழியாகப் போகும். ஸ்மார்ட் லாக் தயாரானவுடன், கூரியர் மனிதர் ஆப்-ல் ஒரு ஸ்வைப் செய்தால் போதும். “திறந்திடு சீசேம்” என்றதுபோலக் கதவு திறக்கும். ஆர்டர் செய்திருக்கும் பொருள் எவ்வளவு பெரியதோ, அந்த அளவுக்கு மட்டும் கதவைத் திறந்து பார்சலை உள்ளே வைத்துவிட்டுக் கதவை மூடிவிடுவார் கூரியர் மனிதர். இவையனைத்தையும் கேமரா ரெகார்டும் செய்யும்; நேரடி ஒளிபரப்பும் உண்டு. வாடிக்கையாளர் எந்த இடத்தில் இருந்தாலும் மொபைல் வழியே வீட்டில் நடக்கும் அனைத்தையும் பார்க்கலாம்.

புதிய மனிதா

ஒரு ஷாக்

ஃபேஸ்புக்கில் மொத்தம் 210 கோடி பேர் இருக்கிறார்கள் என்கிறார் மார்க் சக்கர்பெர்க். ஆனால், அதில் 27 கோடி போலிக் கணக்குகளாம். அதையும் ஃபேஸ்புக்தான் சொல்லியிருக்கிறது. ``நாங்களும் பல நடவடிக்கைகள் எடுத்துவருகிறோம். ஆனால், ஃபேக் அக்கவுன்ட்டை ஒன்றும் செய்ய முடியவில்லை” என்கிறது ஃபேஸ்புக்.

புதிய மனிதா

ஒரு செயலி

Google Family Link

“பசங்க போனை எடுத்தா கீழயே வைக்க மாட்றாங்க” எனப் புலம்பும் பெற்றோர்களுக்கான செயலி இது. கூகுளின் இந்தப் புதிய ஆப்-ஐ பெற்றோர்கள் இன்ஸ்டால் செய்துகொண்டால் போதும். குழந்தைகள் பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு மொபைலை ரிமோட்டில் இருந்தே கண்காணிக்க முடியும். குழந்தைகள் எவ்வளவு நேரம் மொபைலைப் பயன்படுத்துகிறார்கள், எந்ததெந்த அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்கிறார்கள் என ரிப்போர்ட் தந்துவிடும். தேவையற்ற செயலிகளை பெற்றோர்களே அன்இன்ஸ்டால் செய்யலாம். இரவில் குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் குழந்தைகள் மொபைல் பயன்படுத்தாமல் அதை லாக் செய்யவும் முடியும்.
 
ஆப் ஸ்டோர் லிங்: http://bit.ly/2AmCzaO