Published:Updated:

தொடரும் திட்டமிட்ட கொலைகள்!

தொடரும் திட்டமிட்ட கொலைகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
தொடரும் திட்டமிட்ட கொலைகள்!

தொடரும் திட்டமிட்ட கொலைகள்!

லகிலேயே சாலை விபத்துகளால் அதிகமான உயிரிழப்புகள் ஏற்படுவது நம் நாட்டில்தான். மத்திய அரசின்

தொடரும் திட்டமிட்ட கொலைகள்!

சாலைப்போக்குவரத்துத்துறை அமைச்சகப் புள்ளிவிவரங்களின்படி தமிழகம்தான் சாலை விபத்துகளில் முதலிடத்தில் இருக்கிறது. அதிலும், சென்னைதான் முன்னணியில் இருக்கிறது. இந்தப் பட்டியல் நம் பொறுப்பு உணர்வின்மீது விழுந்த  அழுத்தமான கரும்புள்ளி. நியாயமாகப் பார்த்தால், சாலை விபத்துகள் அடிக்கடி நடப்பதால் அதீத முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். கடுமையான சட்டதிட்டங்களும்  உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இதுகுறித்த தன்னுணர்வே இல்லாமல் சாலை விபத்துகளும் அதன் காரணமாக உயிர்ப்பலிகளும் நாளுக்கு நாள் அதிகரிப்பது, மிகப்பெரிய அவலம்.

சமீபத்தில் ஒரு விபத்து. சென்னையின் மையப்பகுதியான ராதாகிருஷ்ணன் சாலையில்  சனிக்கிழமை நள்ளிரவு, மிகவேகமாக வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோக்கள்மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. இதில் ஆட்டோ டிரைவர் ஒருவர் உயிரிழந்தார். பலர் காயமடைந்திருக்கின்றனர். பலரின் ஆட்டோக்கள் நொறுங்கிப்போயின. மோதிய காருக்குள் இருந்தவர்கள் கல்லூரி மாணவர்கள். அதில் காரை ஓட்டியவர் உள்பட மூவர் குடிபோதையில் இருந்திருக்கின்றனர். சுமார் ஓராண்டுக்கு முன்னர், இதே சாலையில், இதேபோன்றதொரு விபத்து நடந்தது. அப்போதும், இதேபோல் ஓர் இளம் ஆட்டோ ஓட்டுநர் பலியானார். அந்தக் கொடூர விபத்தை நடத்தியதும் குடிபோதையில் இருந்த ஒருவர்தான்.

உணவு, உடை, ஒப்பனை சாதனங்கள் என எது எதற்கெல்லாமோ மேற்கத்திய நாடுகளைப் பின்பற்றும் நாம், சாலை விபத்துகளைத் தடுப்பதில் மட்டும் அந்த நாடுகளை முன்மாதிரியாகக் கொண்டு பின்பற்றுவதில்லை.  அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் ஓட்டுநர் உரிமம் எடுப்பது மருத்துவக் கல்லூரியில் சீட்டு கிடைப்பது போன்று கடினமானது. போக்குவரத்து விதிமுறைகளையும் நெறிமுறைகளையும் கவனமாகப் படித்து எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு, ஓட்டுநர் தேர்வு ஆகியவற்றை வெற்றிகரமாக முடித்தால்தான் ஓட்டுநர் உரிமம் கிடைக்கும்.

புகழ்பெற்ற விளையாட்டு வீரராக இருந்தாலும் சரி, ஆட்சிப் பீடத்தில் இருக்கும் தலைவரின் வாரிசாக இருந்தாலும் சரி... சட்டம் அங்கே யாருக்கும் சலுகை காட்டுவதில்லை.  தங்களுக்கு இருக்கும் அதிகாரத்தைக் காவலர்களும் துஷ்பிரயோகம் செய்வதில்லை. குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது என்பது அங்கே மிகப்பெரிய குற்றமாகப் பார்க்கப்படுகிறது.

ஆனால், நம் நாட்டிலோ நிலைமை தலைகீழ். இங்கே பணமும் அதிகாரமும் இருந்தால் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்குச் செல்லாமலேயே, வாகனத்தை ஓட்டிக்காட்டாமலேயே ஓட்டுநர் உரிமம் வாங்க முடிகிறது. சோதனை செய்ய வேண்டிய காவல்துறையோ, பல இடங்களில் கையூட்டு பெற்றுக்கொண்டு குற்றங்கள் தொடர அனுமதிக்கிறது.

 கடுமையான சாலை விதிமுறைகள் அடங்கிய சட்டமுன்வரைவுகள் நம்நாட்டில் விவாதிக்கப்பட்டன என்றாலும், அவை பல்வேறு காரணங்களால் சட்டமாக்கப்படவில்லை. மாநில அரசுகள் மத்திய அரசோடு கலந்துபேசி இந்தச் சட்டமுன்வரைவுகளில் இருக்கும் ஆட்சேபனைக்குரிய பிரிவுகளை மட்டும் விவாதித்து நீக்கிவிட்டு, கடுமையான சட்டங்களைக் கொண்டுவர வேண்டும்.

 எதிர்பாராமல் நடப்பதற்குப் பெயர்தான் விபத்து. குடிகார ஓட்டுநர்களும், ‘இந்தச் சாலையில் தினமும் இரண்டு விபத்துகள் நிச்சயம்’ என்று கணிக்கும் அளவுக்கான சாலைகளும், சாலை விதிகளும், விதிகளின் அமலாக்கமும் இருந்தால் அதன் பெயர் விபத்தல்ல; அலட்சியத்தின் காரணமாக நடக்கும் திட்டமிட்ட கொலை!