Published:Updated:

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
பிரீமியம் ஸ்டோரி
News
மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?

ப.திருமாவேலன், படங்கள்: மீ.நிவேதன்

“நான் காந்தியின் பேரன் அல்ல. எங்களைக் குற்றம் சொல்பவர்கள் காந்தியின் பேரன், பேத்திகளா என்பதையும் பார்க்க வேண்டும்” - என்று திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார் தினகரன்.

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?

இன்னொன்றையும் தினகரன் சொல்லியிருக்கிறார். ``அரசியல்வாதி என்றால் கோவணத்துடன்தான் அலைய வேண்டும் என ஆசைப்படுகின்றனரா?” என்று. அரசியல்வாதிகள் கோவணத்துடன்தான் அலைய வேண்டும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. சில்க் ஜிப்பா, சிங்கப்பூர் காலர், சஃபாரி சூட் அணியலாம். தவறு இல்லை. தலைமுதல் கால்வரை நகை அணிந்து... நடமாடும் நகைக்கடையாக ஜெயலலிதாவும் சசிகலாவும் வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணத்தில் நடந்து வந்தது முதல் தான் சர்ச்சை தொடங்குகிறது. சசிகலா குடும்பத்தின் உண்மை முகமும் வெளியே தெரியத் தொடங்கியது. காந்தியைப் போல் அரையணாப் பைசாவுக்கும் கணக்கு எழுதத் தேவையில்லைதான். ஆயிரம் பட்டுப்புடவை இருந்தால் கணக்கு வைத்திருக்க வேண்டும் அல்லவா? 10 லட்சம் ரூபாய் மதிப்பில் கோட் தைத்தாலும் கணக்கு இருக்க வேண்டும் அல்லவா?

``1989 முதல் தொழில் செய்கிறேன்” என்று தனது முப்பதாண்டுக் கால வர்த்தக வாழ்க்கையை தினகரன் விவரித்திருந்தால் பாராட்டலாம். ஆனால், காந்தி பொம்மையைக் கையில் எடுத்திருப்பது காந்திக்கு அல்ல, தமிழ்நாட்டு மக்களுக்குத்தான் அவமானம்.

இப்படியெல்லாம் சொன்னால் நீங்கள் நம்புவீர்கள் என்று தினகரன்கள் நினைப்பதைப் போலக் கேவலம், தமிழ்நாட்டு மக்களுக்கு வேறு வேண்டுமா?

தினகரனின் சித்தி சசிகலா சிறையில் இருக்கிறார். அத்தை இளவரசி சிறையில் இருக்கிறார். தம்பி வி.என்.சுதாகரன் சிறையில் இருக்கிறார். தினகரன் ஜாமீனில்தான் இருக்கிறார். இரட்டை இலை வழக்கில் தினகரன் பேரம் பேசியதாகச் சொல்லப்படும் சுகேஷ் சிறையில் இருக்கிறார். தினகரனேகூடச் சொத்துக்குவிப்பு வழக்கில் லாகவமாய்த் தப்பியவர்தான். சொத்துக்குவிப்பு வழக்கோடு லண்டன் ஹோட்டல் வழக்கும் சேர்ந்திருந்தது. லண்டன் ஹோட்டல் வழக்கில் தினகரன் பெயரும் இருந்தது. “இரண்டையும் சேர்த்து நடத்தினால் மொத்தமாக வழக்கை இழுக்கலாம். லண்டன் ஹோட்டல் வழக்கில் யாரையுமே கைது செய்ய முடியாது” என்பது வழக்கறிஞர் ஜோதியின் வாதம். “இல்லை. ஹோட்டல் வழக்கைப் பிரித்தால்தான் நாம் தப்பிக்கலாம். சொத்துக்குவிப்பு வழக்கோடு இருந்தால் அவர்களோடு சேர்ந்து மாட்ட வேண்டியதுதான்” என்பது தினகரனின் முன் யோசனை. இந்தச் சதி தெரியாத ஜெயலலிதா தலையாட்ட... இரண்டு வழக்கும் பிரிக்கப்பட்டதால் தினகரன் தப்பினார். ஜெயலலிதா மாட்டிக்கொண்டார். இறந்தும்போனார். சசிகலா மாட்டிக் கொண்டார். இளவரசியும் சுதாகரனும் மாட்டிக்கொண்டனர். அவர்கள் ‘நிம்மதியாக’ சிறையில் இருக்க, தினகரனை ‘சதுக்கப் பூதம்’ துரத்துகிறது.

வருமானவரித்துறை அதிகாரிகள் 1800 பேர் சசிகலாவின் உறவுகளுக்குச் சொந்தமான வீடுகள், நிறுவனங்கள் என 200 இடங்களில் நவம்பர் 9-ம் தேதி காலையில் தொடங்கிய சோதனை என்பது காலங்கடந்ததாக இருந்தாலும் வரவேற்கப்பட வேண்டியது.

பெங்களூர், சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா `வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்திருக்கிறார்கள்’ என்று தீர்ப்பு தந்தபோதே வருமானவரித்துறை உஷார் ஆகியிருக்க வேண்டும். 1991-96ம் ஆண்டுகளில் என்ன மாதிரியான முறைகேடுகள் நடந்ததாக குன்ஹா சொன்னாரோ, அதே முறைகேட்டுக்காகத்தான் 2017-லும் வருமானவரித்துறை ரெய்டு நடத்துகிறது என்றால் சசிகலா குடும்பத்தைக் குறை சொல்லி என்ன பயன்?

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?

‘`முதலமைச்சராவதற்கு முன்னால் ஜெயலலிதா காட்டிய வருமானம் 2 கோடி ரூபாய். 91-96 காலகட்டத்தில் 69 கோடியாக உயர்ந்துள்ளது. ஜெயலலிதா இப்படிச் சொத்துகளை வாங்குவதற்கு மற்றவர்கள் உதவியுள்ளனர். புதிது புதிதாக நிறுவனங்களைத் தொடங்கியும், செயல்படாத நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தியும் ஜெயலலிதா சொத்துகளைச் சேர்க்க மற்றவர்கள் கூட்டு சதி செய்துள்ளனர். அந்த நிறுவனங்களில் யாரும் எந்த முதலீடும் செய்யவில்லை. அவற்றின் பங்குகளை வாங்கவில்லை. அதில் எந்த வர்த்தகமும் நடக்கவில்லை. ஆனால், நிறுவனம் இவர்களுக்குச் சொந்தமாக உள்ளது. அவற்றின் வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தி, சம்பாதித்த சொத்துகளை அந்தக் கணக்கில் சேமித்து வைக்கவும், அவற்றைத் தங்களுக்கு உரியதாக்கிக்கொள்ளவும் மட்டுமே செய்துள்ளனர்” என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்டார் நீதிபதி குன்ஹா.

சொத்துக்குவிப்பு வழக்கில் மொத்தமாக உள்ளே போகப் போவதே தெரியாமல் 2001க்குப் பிறகும் பல நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு இதே போலப் பணம் போடப்பட்டதாக எழுந்த சந்தேகங்கள் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில்தான் வருமான வரித்துறை இப்போது விசாரணைகளைத் தொடங்கியுள்ளன.

வருமானவரித்துறை சசிகலா குடும்பத்தினர் வீடுகளில் இன்று புகுந்து புறப்படுவதற்குக் காரணம், அரசியல்தான். அதில் சந்தேகம் இல்லை. லஞ்சம் வாங்கும் போலீஸ் பிடிப்பதாலேயே, திருடர்கள் யோக்கியர்கள் ஆகிவிட மாட்டார்கள். வருமானவரித் துறையின் நடவடிக்கையைக் கண்டித்த தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள், சசிகலா குடும்பத்தின் யோக்கியதையைக் கேள்வி எழுப்பவில்லை. அரசியல் ‘அறம்’ எங்கே போய் நிற்கிறது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?

இதுபோன்ற ரெய்டுகள் நடந்தால், பொதுவாக ரெய்டில் சிக்கியவர்கள் தான் அதிக விமர்சனத்தை எதிர்கொள்வார்கள். ஆனால், இதில் ரெய்டு நடத்தியவர்கள் அதிக விமர்சனத்தை எதிர்கொள்கிறார்கள். காரணம், ரெய்டின் நோக்கம் தூய்மையானது அல்ல. அரசியல் உள்நோக்கம் கொண்டது. சென்னை, ராதாகிருஷ்ணன் நகர் இடைத் தேர்தலின்போது வேட்பாளர் டி.டி.வி. தினகரனை வெற்றி பெற வைப்பதற்காக 89 கோடி ரூபாய் பங்கு பிரிக்கப்பட்டதாகவும், அதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உட்பட 8 அமைச்சர்களின் பெயர் இருந்ததாகவும், அதற்கான ஆவணம் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சிக்கியதாகவும் இதே வருமானவரித் துறையின் ரெய்டில் தெரியவந்ததாகப் புகார் கிளம்பியது. இது தேர்தல் ஆணையத்தின் மூலமாகத் தமிழக அரசுக்குப் புகாராகத் தரப்பட்டது. சென்னை அபிராமபுரம் காவல் நிலையத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. அன்றைய தேதியில் மத்திய அரசு, அ.தி.மு.க.வில் ஓ. பன்னீர் செல்வம் அணியை ஆதரித்தது. இப்போது பன்னீர் செல்வமும் - எடப்பாடி பழனி சாமியும் ஒன்றாகச் சேர்ந்து மத்திய அரசை ஆதரிப்பதால் ஆர்.கே.நகர் 89 கோடி ரூபாய் வழக்கு சத்தம் இல்லாமல் ஊற்றி மூடப்பட்டது.

சேகர் ரெட்டி வீட்டில் சுமார் 400 கோடி ரூபாய் பணமும், 350 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டன. சாமான்யர்களுக்கு இரண்டே இரண்டு, இரண்டாயிரம் ரூபாய்தான் தருவோம் என்று கறுப்புப் பணத்தை நரேந்திர மோடி ஒழித்துக் கொண்டிருந்த நேரத்தில் 7 கோடி ரூபாய் மதிப்பில் புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக் கட்டுகளை வைத்திருந்தார் சேகர்ரெட்டி. அவர் அ.தி.மு.க. அமைச்சர்களின் அறிவிக்கப்படாத வளர்ப்பு மகன் என்பது கரன்சிகாரர்கள் அனைவருக்கும் தெரியும். அன்றைய கணக்குப் பிள்ளையான, தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் வீட்டிலும், ‘வரலாற்றில் இல்லாத அவமானமாக’ தமிழ்நாட்டின் தலைமைச் செயலகத்திலும் ரெய்டு நடந்தது. அன்று பன்னீர்செல்வம் மட்டும் மகிழ்ச்சியில் இருந்தார். எடப்பாடி வருத்தத்தில் இருந்தார். இருவரும் ஒன்று சேர்ந்ததும் தினகரனைச் சுற்றி ரெய்டு நடக்கிறது. பன்னீரும் எடப்பாடியும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இந்த ரெய்டுகள் எல்லாம் இவர்களை மகிழ்ச்சிப்படுத்த மட்டுமே நடக்கின்றன.

அ.தி.மு.க என்ற கட்சியை மொத்தமாகக் கபளீகரம் செய்யவே இவை நடத்தப்படுகின்றன. பொம்மைகளான எடப்பாடி - பன்னீர் வசம் கட்சியும் ஆட்சியும் வந்தால் தாங்கள் நினைப்பதைச் செய்யலாம் என்று மோடியும் - அமித்ஷாவும் நினைத்தார்கள். ஆனால், கட்சித் தொண்டர்களைத் திரட்டும் செல்வாக்கு தினகரனுக்கு இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. ஒரு வழக்கு போட்டால் தினகரனும் முடங்கிப் போவார் என்று நினைத்தார்கள். தப்பிக்கும் பாதை தெரிந்தவர் தினகரன். அதனால், எத்தனை வழக்குகள் பாய்ந்தாலும் நெளித்து வளைத்துவிட்டு வெளியேறுகிறார். அதைச் சமாளிக்கும் நாக்குத் தந்திரமும் தினகரனுக்கு இருக்கிறது. ஆடிக் கறக்கவும் தெரியும், பாடிக் கறக்கவும் தெரியும். அதனால்தான் தன்னைச் சுற்றி ரெய்டு நடக்கும் போது தைரியமாகக்  கோ பூஜை செய்ய முடிகிறது. ‘`புதுச்சேரிப் பண்ணை வீட்டுக்கு ஏன் போனார்கள்? அங்கு மாடுதான் இருக்கிறது; சாணிதான் கிடைக்கும்” என்று கமென்ட் அடிக்க முடிகிறது. “புரட்சித் தலைவி அம்மாவின் வழித் தோன்றல் நாங்கள். எத்தகைய சோதனைகளையும் சந்திக்கத் தயார்” என்று  உத்தமர்போலச் சொல்ல முடிகிறது.

“இது கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கை” என்று தமிழகப் பா.ஜ.க தலைவர் தமிழிசை சொல்கிறார். ஜெயலலிதா உயிரோடிருந்தபோது கொடநாட்டு பங்களாவுக்குள்ளோ, ஜாஸ் சினிமா அலுவலகத்துக்கோ போகும் தைரியம் உங்களுக்கு இருந்ததா? நான்கு ஆண்டுச் சிறைத் தண்டனை பெற்ற ஜெயலலிதாவைச் சந்திக்கத்தான் வீடு தேடி வந்தார் நரேந்திரமோடி. நேர்மையாளர்கள், நடுநிலையாளர்கள்போல் பேசும் பலரும், ‘சசிகலாதான் அனைத்துத் தவற்றுக்கும் காரணம், ஜெயலலிதா சொக்கத் தங்கம்’ என்று சொல்லி வருகிறார்கள். இதைப் போன்ற அபத்தம் எதுவும் இருக்க முடியாது. ஜெயலலிதாவுக்குத் தெரியாமல் சசிகலா குடும்பம் எதுவும் செய்திருக்க முடியாது. செய்தது என்றால், ஜெயலலிதாவை ஆளுமைத் திறன் கொண்ட இரும்பு மனுஷி என்று சொல்வது பொய். தனக்குப் பக்கத்தில் இருப்பவர் என்ன செய்கிறார் என்பதே தெரியாமல் இருந்த ஒருவரை தலைமைக்கான எந்தத் தகுதியும் அற்றவராகத்தான் சொல்ல முடியும். “ஜெயலலிதாவுக்குத் தெரிந்தே அனைத்து முறைகேடுகளும் நடந்தன” என்று நீதிபதி குன்ஹா பல்வேறு ஆதாரங்களுடன் எழுதியுள்ளார்.

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?

இன்னும் சொன்னால், எடப்பாடி பழனிசாமி, பன்னீர் செல்வம், வைத்தியலிங்கம், வேலுமணி, தங்கமணி வகையறாக்கள் இல்லாமல் சசிகலா குடும்பமும் இவ்வளவு வளர்ந்திருக்க முடியாது. இவர்களும் முன்பு கமிஷன் ஏஜென்ட்டுகளாகச் செயல்பட்டவர்கள்தான். அந்தக் குடும்பத்தின் மூலமாகத் தங்களை வளப்படுத்திக் கொண்டவர்கள் தான். இன்று சசிகலா குடும்பத்தின் மீது பாயும் அஸ்திரம், இவர்கள்மீது பாயும் காலம் தூரத்தில் இல்லை. சசிகலா குடும்பத்தை அச்சுறுத்துவது என்பது அ.தி.மு.க என்ற கட்டமைப்பை அசைப்பது தான். அதற்காகத்தான் இந்த ரெய்டு நடத்தப்படுகிறது. தினகரன் போகும் இடமெல்லாம் கூடும் கூட்டமே இதற்குக் காரணம். இந்தக் கூட்டத்தைத் தினகரனிடமிருந்து கலைப்பதுதான் நோக்கம். அதாவது அ.தி.மு.க-வுக்கு அக்கட்சியின் தொண்டர் செல்வாக்கு உள்ள ஒரு தலைமை இருக்கக் கூடாது என்பதும் இதன் அடிநாதம். இந்த ஆபத்தை எடப்பாடியோ பன்னீர் செல்வமோ உணர மாட்டார்கள்.

இப்படி ஒரு ‘பப்ளிசிட்டி’யைத்தான் தினகரன் எதிர்பார்த்தார். இன்று அவர் எந்தப் பதவியிலும் இல்லை. ஆனால், அவரைச் சுற்றியே அரசியல் நடக்கிறது. தினகரனை நினைத்தால் எடப்பாடிக்கும் பன்னீருக்கும் தூக்கம் வரவில்லை. மோடிக்கும் அமித்ஷாவுக்கும் கண்ணை உறுத்துகிறது. தவிர்க்க முடியாத ‘ஆன்டி ஹீரோ’வாகத் தமிழ்நாட்டுக்குக் கிடைத்துவிட்டார் தினகரன். ஆன்டி ஹீரோக்களைத்தான் மக்களுக்கும் பிடிக்கிறது.