
ச.ஸ்ரீராம்

நானும் நல்ல அதிபர்தான்
வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபருக்கு தேங்க்ஸ் கிவ்விங்காக வான்கோழி வழங்கப்படும் பழக்கம் 70 ஆண்டுகளாக இருந்துவருகிறது. இந்தமுறை ட்ரம்ப்புக்கும் ட்ரம்ஸ்டிக் மற்றும் விஷ்போன் என இரண்டு வான்கோழிகள் வழங்கப்பட்டன. அதை, சென்ற ஆண்டு ஒபாமா மன்னித்ததைப் போலவே மன்னித்துவிடுகிறேன். ஏனென்றால், நானும் நல்ல அதிபர்தான் எனக் கூறியுள்ளார். வான்கோழிகளை மன்னிக்கும் பழக்கத்தை 25 ஆண்டுகளுக்குமுன் ஜார்ஜ் புஷ் சீனியர் தொடக்கிவைத்தார். அதற்குமுன், அவை அமெரிக்க அதிபர் குடும்பத்துக்கு உணவாகிக்கொண்டிருந்தன.

‘மாடர்ன் சச்சின்’ தான் கோலி!
இலங்கைக்கு எதிரான டெஸ்ட்டில் பரிதாபமான நிலையிலிருந்து மீண்டு, இந்திய அணி ஒரு கட்டத்தில் இலங்கைக்கே டஃப் கொடுத்தது. காரணம், இந்திய கேப்டன் விராட் கோலி அடித்த சதம்தான். இவருக்கு இது சர்வதேசப் போட்டிகளில் 50-வது சதம். இதன்மூலம் இந்திய வீரர்களில் சச்சினுக்கு அடுத்த இடத்தைப் பிடித்துள்ளார் கோலி. மேலும், ஒரே டெஸ்ட்டில் டக் மற்றும் சதம் அடித்த முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

செவ்வாயில் தண்ணீர் இல்லை!
‘நாசா’ ஆராய்ச்சியாளர்கள், செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் உள்ளது என்ற அறிவிப்பை சில காலங்களுக்கு முன்பு வெளியிட்டனர். தொடர்ந்து நடைபெற்ற ஆராய்ச்சியில், செவ்வாய் கிரகத்தில் இருப்பது தண்ணீர் அல்ல மணல் என்று கூறியுள்ளனர். மணற்பரப்பின் நகர்வைக்கொண்டு இந்த முடிவுகள் அறியப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். மேலும், ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெறும். உயிர்ச் சூழல் குறித்த புதிய தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளனர்.

சுதந்திரம் வேண்டாம். மாற்று வழி சொல்லும் தலாய்லாமா
திபெத்தியர், சீனாவிலிருந்து சுதந்திரம் வேண்டும் என நெடு நாள்களாகப் போராடி வந்தனர். ஆனால், தற்போது திபெத்தின் முக்கியத் தலைவரான தலாய்லாமா எங்களுக்கு சீனாவிடமிருந்து சுதந்திரம் வேண்டாம். ஆனால், எங்கள் கலாசாரம் வேறு... மொழி வேறு... அதனால், எங்கள் மேம்பாட்டுக்கான வழிவகைகளைச் செய்தாலே போதும் என்று கூறியுள்ளார்.

இரவை இழக்கும் உலகம்!
செயற்கை விளக்குகளால் இரவை உலகம் இழக்கிறது. வெளிச்சமற்ற இரவு, சுற்றுச்சூழலுக்கு உகந்தது. செயற்கை விளக்குகளால் ஐரோப்பா மற்றும் அமெரிக்கப் பகுதிகளும் ஆசியாவில் இந்தியா, சீனா போன்ற பகுதிகளும் இரவை வேகமாக இழந்துவருகின்றன. இது, மனிதர்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் கெடுதல் என்று லெய்ப்னிஸ் இன்ஸ்டிட்யூட் நடத்திய ஆய்வு எச்சரித்துள்ளது. ஆண்டுதோறும் உலக அளவில் 3 சதவிகிதம் செயற்கை ஒளியின் அளவு அதிகரித்துவருகிறதாம்.

தெரியுமா?
* 2007-ம் ஆண்டு கிரிக்கெட்டின் டி20 உலகக் கோப்பையில் யுவராஜ் சிங் ஆறு பந்துகளிலும் சிக்ஸர் விளாசினார்.